சிபி (24)

முன்னொரு காலத்தில் செக்ஸ் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது கல்லூரிகள் கட்டி, கல்வி வள்ளல்களாகிக் கோடி கோடியாய்க் குவித்துக் கொண்டிருக்கும்போது, சத்தங்காட்டாமல், ஆர்ப்பாட்ட மில்லாமல், இளைஞர்களுக்கு இலவசக் கல்வி சேவையை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிற, மெய்யான கல்வி வள்ளலான நம்ம மேயர், சைதை துரைசாமி.

காமராஜர் முதலமைச்சராயிருந்து செய்த கல்வித் தொண்டை, மேயராவதற்கு முன்பே சொந்தச் செலவில் செய்ய ஆரம்பித்து விட்டவர், காமராஜரின் மேல் மரியாதை கொண்டவராய்த் தானிருப்பார்.

காமராஜரின் மேல் நிறைய மரியாதை கொண்டிருந்த திரைப்பட நடிகரொருவர் கூட போன நூற்றாண்டில் இருந்தார். காமராஜரின் மேலிருந்த மரியாதையோடு, இந்திய நாட்டின் மேலும் பக்தி கொண்டிருந்த தேசிய நடிகர்.

ஒரு தீ விபத்தில் உடல் வெந்துபோய், ஆஸ்பத்திரியில் அகால மரணமடைந்த போது, "ஜெய்ஹிந்த்" என்று உயிரை விட்டவர்.

இப்போது மறக்கப்பட்டு விட்டவர்.

கேப்டன் சசிகுமார்.

நிஜமான கேப்டன்.

இந்திய ராணுவத்தில் கேப்டனாய்ப் பணியாற்றி, பிற்காலத்தில் சினிமாவில் சேர்ந்தவர்.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது?

கிச்சனிலிருந்த மனைவியின் புடவை தீப்பற்றியெரிய, மனைவியைக் காப்பாற்றப்போய், அவளை அணைத்தபடி அவளோடு சேர்ந்து இவரும் கருகிப் போனார்.

கேப்டன் ஜோடியின் அந்நியோன்னியம் பற்றி நிறைய பேசப்பட்டது.

அவர்களுடைய புகைப்பட ஆல்பத்தைக் குமுதம் பிரசுரித்தது.

அந்த ஆல்பத்தில் ஓர் அற்புதமான படம்.

கேப்டன் சசி குமார், புடவையணிந்து, தலையில் முக்காடிட்டிருக்கிறார். மனைவியுடைய புடவை. அவருக்கு அருகில் நிற்கிற மனைவி, கணவனுடைய ராணுவச் சீருடையை அணிந்திருக்கிறார். படத்துக்குக் கீழே குமுதம் தந்திருந்த வாசகம் பொருத்தமாகவும் உருக்கமாகவும் இருந்தது:

மனைவியில் கணவனும், கணவனில் மனைவியும் உடையில் மட்டுமல்ல. உயிரிலும் கூட.

கேப்டன் தம்பதியின் ரெண்டு குழந்தைகளும் சிவாஜி கணேசனுடைய பராமரிப்பில் இருப்பதாக செய்திகள் வந்தன.

ஒரு பையன், ஒரு பெண்.

அந்த ரெண்டு குழந்தைகளும் இப்போது ரொம்பப் பெரியவர்களாய் ஆகியிருப்பார்கள். இந்தப் பரந்த உலகத்தின் ஏதோவொரு பகுதியில் சந்தோஷமாய்ப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

லட்சியத் தம்பதியின் குழந்தைகள் பெருவாழ்வுதான் வாழ முடியும். வாழ்க.

கேப்டன் சசி குமாரின் குழந்தைகளை வாழ்த்தியபடிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தபோது, “வாழ்க” என்றொரு சுவர் விளம்பரம் கண்ணில் பட்டது.

கேப்டனை வாழ்த்துகிற சுவர் விளம்பரம்.

கேப்டன் சசி குமார் அல்ல. நம்ம எதிர்க் கட்சித் தலைவரான கேப்டன்.

"நாளைய முதல்வரே" என்று அழைத்து, கேப்டனை வாழ்த்தியிருந்தது விளம்பரம்.

"ரொம்ப சந்தோஷம் கேப்டன். ஆனா, ஒரு சின்ன விண்ணப்பம்."

"யார் அது?"

"நா சிறுபான்மையர்ப் பிரிவு மாநிலத் தலைவர், கேப்டன். செல்லமா சிபின்னு கூப்புடுவாங்க. எந்தக் கட்சின்னு நீங்க கேக்கலியே."

"அது தேவையில்ல. என்னமோ விண்ணப்பம்னீங்களே அது என்னதுன்னு சட்டு புட்டுன்னு சொல்லிப்புட்டு எடத்தக் காலி பண்ணுங்க. மீட்டிங் முடிச்சிட்டு நா ஷூட்டிங் போகணும்."

"ஒண்ணுமில்ல கேப்டன், ஒங்கப் பேரப் போட்டு, நாளைய முதல்வர்னு போட்ருந்தாங்க."

"கரெக்ட். இன்னிக்கில்ல. நாளக்கித்தான் நா முதல்வர். நாளக்கி நாந்தான் முதல்வர். அதுக்கப்புறம், நா வெறும் கேப்டன் இல்ல. நானே ராஜா, நானே மந்திரி. யாராவது மறுக்கப் பாத்தா, நறுக்னு மண்டைல குட்டுவேன்."

"பரவாயில்ல கேப்டன், நா ஹெல்மட் மாட்டியிருக்கேன்."

"பேச்ச வளத்தாம மேட்டருக்கு வாங்க."

"மேட்டருக்கு வர்றேன் கேப்டன். எங்கக் கட்சியோட மாநிலத் தலைவர், தங்கமான தலைவர் கேப்டன். காமராஜரோட உண்மையான வாரிசு அவர்தான்."

"சரி, அவருக்கென்ன?"

"அரசியல்ல ஒங்களுக்கு ரொம்ப ஸீனியர் அவர். நீங்க அரசியலுக்கு வர்றதுக்கு முந்தியே எம் எல் ஏ ஆனவர். அதனால முதல்வராகறதுக்கு ஒங்கள விட அவருக்குத் தான் முன்னுரிமை இருக்கு."

"முன்னுரிமை பின்னுரிமைன்னுல்லாம் அரசியல்ல எதுவும் கெடையாது. முடிஞ்சா ஒங்கத் தலைவர் முதல்வராய்க்கிரட்டும்."

"அதுக்கு நீங்க கொஞ்சம் ஒத்துழைப்புக் குடுக்கணும் கேப்டன்."

"நானா?"

“நீங்க தான். நாளைய முதல்வர்ங்கறத கொஞ்சம் ஒத்திவச்சி நீங்க நாளக் கழிச்சி முதல்வராக சம்மதிச்சீங்கன்னா போதும், எங்கத் தலைவர் நாளைய முதல்வர் ஆயிருவார்.”

“என்ன, கிண்டல் பண்றீங்களா?”

"இல்லவே இல்ல கேப்டன், ஸீரியஸ். எங்க மாநிலத் தலைவரச் சீஃப் மினிஸ்டர் ஆக்கத்தான் எங்கக் கட்சிக்காரங்க எல்லாரும் ஒத்துமையாக் கனவு கண்டுட்டிருக்கோம்."

"எந்தக் கட்சி நீங்க?"

"அது தேவையில்லன்னு சொன்னீங்களே கேப்டன்?"

"இப்ப தேவப்படுது. சொல்லுங்க."

சொன்னேன்.

கட்சியின் பெயரைக் கேட்டதும் கேப்டன் அட்டகாசமாய் சிரித்தார்.

"நீங்க என்னமோ ஒங்கக் கட்சிக்காரங்க எல்லாரும் ஒத்துமையாக் கனவு காண்றதாச் சொல்றீங்க, ஆனா, ஒங்கக் கட்சில ஒத்துமையே இல்லன்னுல்ல கோடம்பாக்கத்லயும், கோயம்பேட்லயும் பேசிக்கிறாங்க! ஒங்கக் கட்சில ரெண்டு கோஷ்டி இருக்காமே?"

"இந்திராக் காங்கிரஸ்ல இருபத்திச் சொச்சம் கோஷ்டி இருக்கறப்ப, எங்கக் கட்சில ரெண்டே ரெண்டு கோஷ்டி இருக்கப்படாதா கேப்டன்? இதெல்லாம் ஒரு சில்லறைச் சீர்குலைவு தான். சரி பண்ணிரலாம். எங்க மாநிலத் தலைவர் ஒரு ஒளி விளக்கு. எந்த கோஷ்டியும் அவர இருட்டடிப்பு செய்ய முடியாது. சபரிமலை ஜோதியக் கைய வச்சி மறக்ய முடியுமா கேப்டன்!"

"ஒங்க மாநிலத் தலைவர், அதாவது ஒங்க நாளைய முதல்வர், சபரிமலை ஜோதியாக்கும்?"

"யெஸ் கேப்டன்."

"அப்ப, அவருக்கு எதிர் கோஷ்டி?"

"பரங்கிமலை ஜோதி."

(தொடர்வேன்)

About The Author