சிபி (25)

காலையில், செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்த போது, ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ஊழலுக்காக க்ரிக்கெட் ஆட்டக்காரர்கள் நான்கு பேர் மேலே நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாய்க் கடைசிப் பக்கத்தில் பிரசுரமாகியிருந்த செய்தி கண்ணில் பட்டது.

ஐ பி எல் என்கிற பெயரில், க்ரிக்கெட் என்பது இந்தியாவில் இப்போது அரசு அங்கீகாரத்தோடு நடக்கிற flesh trade. அஃறிணைகளை ஏலம் விடுவது போல க்ரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏலம் விடுகிறார்கள்.

ஏலம் போகிற ஆட்டக்காரர்களுக்கு ஆகாய விமானங்களில் பிஸினஸ் க்லாஸ் பறப்பு, அஞ்சு நட்சத்திர ஹோட்டேல் வாசம், ஹீரோ அந்தஸ்து, மேட்ச் ஃபிக்ஸிங் வசதிகள்.

மாட்டிக் கொள்ளாதவரை ஹீரோ, மாட்டிக் கொண்டால் ஸீரோ.

ஏலம் போகிற ஆட்டக்காரர்கள் மில்லியன் மில்லியனாய் சம்பாதிப்பார்கள். அவர்களை ஏலம் எடுத்துத் தொழில் செய்கிற க்ரிக்கெட் முதலாளிகள் பில்லியன் பில்லியனாய்க் குவிப்பார்கள்.

நம்ம ஏமாளியன்கள் கள்ள மார்க்கெட்டில் டிக்கட் வாங்கி, வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பார்கள். அல்லது, டி வி முன்னால் நாட்கணக்கில் உட்கார்ந்து மேட்ச்களையும், மேட்ச் ஃபிக்ஸிங்களையும் பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிப்பார்கள்.

இந்தியா, இலங்கை போன்ற வறுமைக்கோட்டு நாடுகளுக்கு எதுக்கு க்ரிக்கெட் என்று கோபப்படுகிறார் நம்ம யாழ்ப்பாணத்து நண்பர் சாந்தன்.

குளிர்ப் பிரதேசங்களில் வசிக்கிற வெள்ளைக்காரனுக்கு உஷ்ணம் தேவை. அவன் வெயில் காய்வதற்காக இந்த க்ரிக்கெட்டைக் கண்டு பிடித்தான். வெள்ளைக்காரனின் ஆட்சிக்குக் கீழிருந்த காலனி நாடுகளில் க்ரிக்கெட் புகுத்தப்பட்டது. வெள்ளைக்காரன் போய்விட்டான், க்ரிக்கெட் இங்கே தங்கிவிட்டது என்கிறார், க்ரிக்கெட்டைத் திட்டி ஆங்கிலத்தில் கவிதையெழுதியிருக்கிற சாந்தன்.

நம்ம பங்குக்கு, நானும் எழுதினேன் ஒரு க்ரிக்கெட் விழிப்புணர்ச்சிச் சிறுகதை, சமநிலைச் சமுதாயம் மாத இதழில்.

உலகத்தில் எத்தனை நாடுகள் க்ரிக்கெட் விளையாடுகின்றன?

ஒரு பதினெட்டு நாடுகள் இருக்குமா? அவ்வளவுதான் இருக்கும்.

இந்தப் பதினெட்டு நாடுகள் சேர்ந்து எப்படியெல்லாம் கூத்தடிக்கின்றன!

இந்தப் பதினெட்டு நாடுகளிலுமே கால்பந்து அணிகளும் இருக்கின்றன.

கால்பந்து உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுக்கு இந்த நாடுகளும் தங்கள் அணிகளை அனுப்பும். ஆனால், இங்கிலாந்தைத் தவிர, வேறு ஓர் அணியுமே தேறாது.

கால்பந்தெல்லாம் உடம்பை வருத்துகிற விளையாட்டு. சுறுசுறுப்பான விளையாட்டு. அதெல்லாம் நமக்கு எதுக்கு?

வாங்க, நாம நம்ம சோம்பேறி விளையாட்டில் மட்டையடித்தே முக்தி பெறுவோம்.

கால்பந்தைப் போலவே சுறுசுறுப்பான ஒரு விளையாட்டுத்தான் ஹாக்கி கூட.

இந்தியாவின் தேசியப் பறவை மயில் என்றும், தேசிய விலங்கு புலி என்றும் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் இருப்பது போல, இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்கிற ரகசியம் பள்ளிப் பிள்ளைகளுக்கு பகிரங்கப் படுத்தப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

லண்டன் 2012 ஒலிம்ப்பிக்ஸில் ஹாக்கியில் இந்தியாவுக்குக் கடைசி இடம்.

ஹாக்கியில் நம்ம நாடு உலகத்திலேயே நம்பர் ஒன்னாய் இருந்த காலம் ஒன்று இருந்தது.

க்ரிக்கெட்டுக்கு ரெண்டே ரெண்டு மட்டைகள், ஹாக்கிக்குப் பதினோரு மட்டைகள். வெட்டியாய் இத்தனை மட்டைகள் தேவையில்லை என்று ஒரு மரணக்குழி தோண்டி, ஹாக்கி ஸ்டிக்களையெல்லாம் போட்டுப் புதைத்து விட்டார்கள்.

பெண்கள் ஹாக்கி அணி என்று ஒன்று அமைத்துக் கொஞ்ச காலம் அழகு பார்த்தார்கள். பிறகு, இதெல்லாம் பாரதப் பெண்களுக்குத் தேவையில்லையென்று ஹாக்கி ஸ்டிக்ளை யெல்லாம் பறிமுதல் செய்து கொண்டு பெண்களையெல்லாம் கும்மியடிக்க அனுப்பி விட்டார்கள். ஜெர்மனி, ந்யூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, கொரியா, அர்ஜென்ட்டினா, அவுஸ்திரேலியா, ஜப்பான், நெதர்லாண்ட்ஸ் நாடுகளிலெல்லாம் இப்போது மகளிர் ஹாக்கி அணிகள் ஓஹோவென்று இருக்கின்றன. நம்ம நாட்டில் இப்போது இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. திஹார் சிறையிலிருந்து ஜாமீனில் வந்திருக்கிற சுரேஷ் கல்மாடியைக் கேட்டுப் பார்க்கலாமென்றால், லண்டன் 2012 ஒலிம்ப்பிக்ஸுக்குப் போய் பாரதத்தின் புகழைப் பரப்பிவிட்டு வருகிறேனென்று அவர் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டு விட்ட மஹாத் துயரத்திலிருந்து மீண்ட கையோடு, நாடாளுமன்றக் கமிட்டி ஒன்றில் நியமனம் பெற்றிருக்கிறவர், அடுத்தக் கட்ட ஊழலுக்கு அஸ்திவாரம் போடுவதில் பிஸியாயிருப்பார் பாவம்.

கடைசி கடைசியாய் இந்தியா ஹாக்கியில் உலகக் கோப்பையை வென்றது எந்த வருஷம்?

1968டாயிருக்கலாம். இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் தலைப்புச் செய்தி வந்ததே,
‘INDIA ON TOP OF THE WORLD. ANNEXE WORLD CUP‘ என்று! எவ்வளவு சந்தோஷமான தருணம் அது!

அதேபோல ஒரு சந்தோஷமான தருணம் வாய்த்தது. சில வருஷங்கள் கழித்து, தினத்தந்தியில் ஒரு தலைப்புச் செய்தியை வாசித்தபோது

இந்திரா காந்தி தோல்வி!
சஞ்ஜய் காந்தி தோல்வி!!

எமர்ஜன்ஸி கொடுங்கோன்மைக் காலத்தில் INDIRA IS INDIA, INDIA IS INDIRA என்ற பாவகரமான வாசகத்தைத் துப்பிய டி கே பருவாவும் கூடத் தோற்றுப் போனார். டில்லி, உத்திரப் பிரதேசம் எல்லாம் சுத்தமாய் இ கா காலி.

இந்தியாவில் ஜனதா அலை.

டில்லியில் ஜனதாக் கட்சி ஆட்சி.

மனிதப் புனிதர் மொரார்ஜி தேசாய் பிரதமர்.

எமர்ஜன்ஸி காலத்தில் கைதாகி சிறையில் அடைபட்டுக் கிடக்கையில், இந்திரா காந்தியின் தூதுவனாகத் தன்னிடம் "பேச்சு வார்த்தை’நடத்த வந்த எடுபிடி மந்திரி பன்ஸிலாலை, "இந்திராவுடைய குப்பைக் கூடையோடு பேச நான் விரும்பவில்லை" என்று சொல்லி விரட்டியடித்த, நெஞ்சுரம் மிக்க நேர்மையாளர் மொரார்ஜி தேசாய், இப்போது பிரதமர்!

நம்மப் பேனாவுக்கு ஒரு கெட்ட பழக்கம். இந்த மாதிரிப் புளகாங்கிதமான கட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டு உடனே ஒரு பேப்பரில் கிறுக்கித் தள்ளிவடும்.

அன்றைக்கு நம்மப் பேனா கிறுக்கியது, ஒரு கவிதையாய் மலர்ந்து, கணையாழியில் பிரசுரம் பெற்றது.

டிஸம்பர் 1977.

அட்டையில் மொரார்ஜி தேசாய்.

உள்ளே நம்ம வெற்றிக் கவிதை.

அந்தக் கவிதைக் காகிதம் நம்ம ஃபைலிலிருந்து எப்படிக் காணாமற் போயிற்று என்பது ஒரு புதிராயிருக்கிறது.

கணையாழியின் கவர் மட்டும் இருக்கிறது, கவிதையைக் காணவில்லை.

திட்டமிட்ட திரைமறைவு வேலை என்னமோ நடந்திருக்கிறது.

அயல் நாட்டு சதியாய்க் கூட இருக்கலாம்.

மாலன், மா வே சிவகுமார், யுகமாயினி சித்தன் போன்ற, கணையாழி மேல் காதல் கொண்டிருந்த இலக்கியவாதிகளிடம் கேட்டுப் பார்த்தும் அந்தக் கணையாழி இதழ் கிடைக்க வில்லையென்பது வருத்தமாயிருக்கிறது. எதிர்காலத்தில், எங்கிருந்தாவது அந்த இதழ் கிடைக்கலாம்.

இந்த அரசியல் நாவல், அடுத்த பதிப்பு வெளியாகிற போது அந்த ஜனதா – கணையாழிக் கவிதை அதில் இடம் பெறலாம்.

ஜனதாக் கட்சி உச்சத்திலிருந்த காலத்தில், நம்முடைய இன்றைய மாநிலத் தலைவர், அன்றைய பரந்து விரிந்த ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவராயிருந்தார்.

ஜனதாக் கட்சி உடைந்து, பிறகு வி பி சிங் தலைமையில் ஜனதா தளமாய் இணைந்து, மறுபடியும் சிதறிச் சிதறி இப்போது ஒரு தென்னிந்தியக் கட்சியாய் நம்முடைய அருமையான கட்சி குறுகிப் போய்விட்டது.

இன்னும் கொஞ்ச நாளைக்கு.

பிறகு, நம்ம மாநிலத்தலைவர், நாளைய முதல்வர், இன்றைய முதல்வராய் ஆன பின்னால்!

ஆஹா!

ஆஹா, நம்மத் தலைவரிடம்… ஃபோனில் பேசி ரொம்ப நாள் ஆச்சே, டாஸ்மாக் மறியலுக்கு அவர் இன்னும் தேதி தரவில்லையே என்று ஸெல்லை எடுத்தேன்.

(தொடர்வேன்)

About The Author