சிபி (27)

"சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவருடைய மனக்குறைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. பதில் சொல்வதைவிட, மறுப்புச் சொல்லத்தான் எனக்குத் தோன்றுகிறது. நம்முடைய இயக்கத்தில் எல்லோருமே அவரவருக்குரிய இடத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் நம்மில் சிலர் அளவுக்கு மீறிய சுறுசுறுப்புடன் இயங்குவதால்தான் சின்னதாய்க் கொஞ்சம் சஞ்சலங்கள். கம்யூனிஸ்ட் சிந்தாந்தத்தைப் பற்றி வேடிக்கையான கூற்று ஒன்று வழக்கத்திலுண்டு. ‘சட்டத்தின் முன்னே அனைவரும் சமம். சிலர் மற்றவர்களை விட அதிக சமம்!’ நம்முடைய இயக்கத்திலும் சிலர் மற்றவர்களை விட அதிக சமம் என்று நினைத்துக் கொண்டு செயல்படுவதுதான் கோளாறு. தலைமைப் பதவியை உங்களில் சிலர் விரும்புகிறீர்கள். தலைவராக வேண்டுமென்று விரும்புவதில் தப்பேயில்லை. இந்த மாநிலத் தலைவர் நாற்காலி என்னுடைய பூர்வீகச் சொத்து அல்ல. என்னுடைய ஏகபோக உரிமை அல்ல. யார் வேண்டுமானாலும் தலைவராகலாம், தகுதியிருந்தால். தலைவராக நினைப்பவர்கள் தகுதியை வளர்த்துக் கொண்டு உரிமையைக்கோர வேண்டுமேயொழிய குறுக்கு வழியில் தட்டிப்பறிக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. இன்றைக்கு இங்கே நிகழ்ந்த சிறிய சச்சரவுகள் எதிர்வரும் கூட்டங்களில் நிகழாது என்று நம்புகிறேன். சரி, இந்த விஷயத்தை இத்தோடு விட்டுவிட்டு, நம்முடைய எதிர்காலச் செயல்பாடுகளைப் பற்றி சிந்திப்போம்.

மதுக்கடை மறியலைப்பற்றி உங்களில் சிலரோடு நான் பேசியிருக்கிறேன். அடுத்த மாதம் பத்தாந்தேதி நம்முடைய இயக்கத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளின் முன்னே மறியல் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஊருக்கு நூறு கடைகள் இருக்கின்றன. சென்னை மாநகரத்தில் ஆயிரக்கணக்கான கடைகள் இருக்கின்றன. இத்தனைக் கடைகள் முன்னாலும் மறியல் செய்யவா என்று மலைத்துப் போக வேண்டாம். நம்முடைய மறியல் ஓர் அடையாள மறியல் தான். ஊருக்கு ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து மறியல் நடத்துவோம். சென்னையில் மறியலுக்கான ஏற்பாடுகளைப் பொதுச் செயலாளர் தங்க தேவனும் சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவரும் செய்வார்கள். எல்லோரும் பூரண ஒத்துழைப்புத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய மறியலுக்குப் போலீஸ் அனுமதி கிடைக்காது. கைது செய்து காவல் நிலையத்துக்குக் கூட்டிப் கொண்டு போவார்கள். எல்லோரும் கைதாவதற்குத் தயாராக வரவேண்டும். தேசப்பிதா மஹாத்மா காந்தியுடைய, பெருந்தலைவர் காமராஜருடைய, மனிதப் புனிதர் மொரார்ஜி தேசாயுடைய கொள்கை பூரண மதுவிலக்கு. நம்முடைய இயக்கத்தின் கொள்கையும் அதுதான். நம்முடைய புனிதமான கொள்கையை இந்த நாடறியச் செய்வோம் நாம்."

கூட்டம் முடிந்ததும் மதிய உணவுக்கு வழக்கம்போல புஹாரி.

மவுன்ட் ரோடு புஹாரியா?

இல்லை. புதியதாய்த் திறந்திருக்கிற தி நகர் புஹாரி.

நம்மக் காரில், தலைவரோடு, மோத்திலால், சந்தான கிருஷ்ணன் மற்றும் அருளானந்தம்.

அருளானந்தத்தை நினைவிருக்கிறதோ? கன்யாகுமரி மாவட்டத் தலைவர்.

எட்டாவது அத்தியாயத்தில் எட்டிப் பார்த்துவிட்டுப்போனவர், அடுத்து இப்போதுதான், பதினெட்டாவது அத்தியாயத்துக்குக் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

மதிய உணவு முடிந்து, மோத்திலாலை அவருடைய ஹோட்டேலில் இறக்கி விட்டு விட்டு, அவருடைய இருக்கையில் தங்க தேவனை ஏற்றிக் கொண்டு, போளூருக்குப் பயணம். திருவண்ணாமலைக்குப் பக்கத்திலிருக்கிற போளூர்.

நம்மக் கட்சிப் பிரமுகர் ஜெகந்நாதனின் பொண்ணுக்குப் போளூரில் கல்யாணம்.

ஜெகந்நாதன் ரொம்ப விஸ்வாசமான, அதே சமயம் வேகமான இயக்கத் தோழர். மூவரணியின் நல்ல நேரம், அவர் பொதுக்குழுவுக்கு வர முடியாமப் போச்சு.

வந்திருந்தால், தலைவரை எதிர்த்துக் கூச்சல் போடுகிறவர்களைச் கடித்துக் காயப்படுத்திக் குற்றுயிராக்கியிருப்பார். அப்புறம், ஆம்புலன்ஸில் தான் அள்ளிகொண்டு போக வேண்டும்.

போளூருக்குப் போய்ச் சேருகிற போது, இருட்டி ரொம்ப நேரம் ஆகிவிட்டிருந்தது. அந்தச் சின்ன ஊரிலிருக்கிற ஒரே பிரதான சாலையில், ரெண்டு பக்கமும் கல்யாண மண்டபங்கள்.

எல்லாக் கல்யாண மண்டபங்களிலும் கல்யாணங்கள்.

எல்லாக் கல்யாணங்களிலும் கச்சேரிகள். எல்லாக் கச்சேரிகளிலும் பழைய பாடல்கள்.

அந்தச் சிற்றூரில், வர்த்தக ரீதியான இசைக் குழுக்கள் எத்தனை இருக்கின்றனவோ.
போதவில்லையென்று பக்கத்து கிராமங்களிலிருந்து பாடகர்களை வரவழைத்திருப்பார்கள்.

பாவம். அவர்களுக்குத் தெரிந்ததைத்தான் அவர்கள் பாடுவார்கள்.

கிராமஃபோன் என்றொரு இசைப் பெட்டி இருந்தது, ஆதிகாலத்தில். கிராமங்களிலல்ல, நகரங்களில். நகரங்களிலிருந்தாலும் அது கிராமஃபோன் என்று தான்
அழைக்கப்பட்டது.

சாவி கொடுக்கிற கிராமஃபோன்.

ஹெச் எம் வி அல்லது கொலம்பியா இசைத்தட்டை அதில் வைத்து, மேலே ஊசியை வைத்துச் சூழல விடுவார்கள்.

இசைத்தட்டு சுழல்வதற்கு, பக்கவாட்டுக் கைப்பிடியைப் பிடித்து சுழற்றிச் சுழற்றிச் சாவி கொடுக்க வேண்டும்.

"கொஞ்சும் புறாவே, நெஞ்சோடு நெஞ்சம்" என்று எம் எல் வசந்த குமாரியின் குரலில் இனிமையாய்ப் பாடிக் கொண்டிருக்கும். சாவி லூஸ் ஆகிவிட்டால், இசைத்தட்டு சுழலுகிற வேகம் குறையக்குறைய, சுருதி குறைந்து, எம் எல் வசந்த குமாரியின் குரல், திருச்சி லோகநாதன் குரலாய் ஆண்மையடைந்து விடும்.

பிறகு, கைப்பிடியைச் சுழற்றி சுருதியேற்ற வேண்டும்.

போளூர் திருமண மண்டபங்களிலும், சாவி லூஸôன இசைத்தட்டுக்கள் போலத்தான் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஜெகந்நாதன் வீட்டுக் கல்யாணத்துக் கச்சேரி கச்சிதமாயிருந்தது.

"விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே" என்று பிரதானப் பாடகர் ஆண் குரலிலும் பெண் குரலிலும் மாறி மாறிப் பாடித் தூள் பரத்திக் கொண்டிருந்தார்.

"ஒரே ஒரு பாட்டு நா பாடலாமா ஜெகந்நாதன்" என்று நான் ஒரு கோரிக்கை வைத்தபோது, மைக்கை வாங்கி என் கையில் கொடுத்து விட்டார்.

"என்ன செய்யப் போறீங்க!" என்று பதறிய மாநிலத் தலைவரிடம், "ஒரேயொரு பாட்டு தலைவர். நீங்க தான் பொறுமைசாலியாச்சே, ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எம்மேல எடுக்க மாட்டீங்கன்னு தெரியும். சந்திரபாபு பாட்டு. கேட்டுப்பாருங்க" என்று சிரித்துவிட்டு, இசையோடு பாடினேன்.

பம்பரக் கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்கச்சிலை போல் வந்து மனதைத்
தவிக்க விட்டாளே

மணமகன் தேவை படத்துக்காகக் கே டி சந்தானம் இயற்றிய பாடல்.

காதலியின் கண்களை, மான் விழி, மீன் விழி, வாள் விழி, வேல் விழி, கயல் விழி, புயல் விழி, நயாகரா விழி, வயாகரா விழி என்றெல்லாம் கவிஞர்கள் சாதாரணமாய் வர்ணிப்பார்கள்.
வண்ணக்கிளி என்கிற கருப்பு வெள்ளைப் படத்தில், சித்தாட கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு, மத்தாப்பு சுந்தரியொருத்தி மயிலாட வந்தாளாம் என்றொரு சுறுசுறுப்பான பாட்டு இருக்கிறது. எஸ் ஸி கிருஷ்ணனும், பி சுசீலாவும் பாடின fast number. எம் சரோஜாவும் கள்ளபார்ட் நடராஜனும் தலைமையேற்று குரூப் டான்ஸ் ஆடி அசத்துவார்கள்.

குமுதம் படத்தில், "மாமா மாமா மாமா" பாடலுக்கு ஆடிக் கலக்கிய அதே கள்ளபார்ட் நடராஜன்.

சித்தாட கட்டிக்கிட்டு பாடலில், குண்டூசி போலே ரெண்டு கண்ணும் உள்ளவளாம் என்றொரு வரி வரும்.

ஒரு பெண்ணின் கண்கள், ‘குண்டூசிக் கண்கள்’ என்பது ஓர் அற்புதமான கற்பனை என்றாலும், குண்டூசிக் கண்ணுக்கும், பம்பரக் கண்ணுக்கும் போட்டி வைத்தால், பம்பரக் கண் ஜெயித்து விடும், ஃபோட்டோ ஃபினிஷில்.

அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஒரு கவிஞருக்கு ஒரு பெண்ணின் கண்களை பம்பரக்கண் என்று வர்ணிக்கத் தோன்றியிருக்கிறதே, அமேஸிங், அல்லது awesome என்று வியந்து கொண்டே பாடினேன் நான்.

மாநிலத் தலைவரும் மற்றவர்களும் மெய்ம்மறந்து ரசித்தார்கள்.

பின்னிரவில், காரில் தலைநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது மாநிலத் தலைவர் வெளிப்படையாகவே ஆச்சர்யப்பட்டார்.

"பிரம்மாதமாப் பாடறீங்களே தம்பி, நீங்க இவ்ளோ அழகாப் பாடுவீங்கன்னு தெரியாதே!"

"தெரிஞ்சிருந்தா பொதுக் குழுவுல பாடச் சொல்லியிருப்பீங்க தலைவர்!"

"ஆமாமா, பாடச் சொல்லியிருக்கலாமே. டென்ஷன் கொஞ்சம் கொறஞ்சிருக்கும். எல்லாப் பாட்டும் பாடுவீங்களா?"

"இனிமையான பழைய பாட்டு எல்லாம் பாடுவேன் தலைவர். டி எம் எஸ் பாட்டு, ஏ எம் ராஜா பாட்டு, சந்திரபாபு பாட்டு…"

"பம்பரக் கண்ணாலே ஒங்களுக்கு ரொம்ப நல்லாப் பாட வருது"

வராதா பின்னே? நம்ம சிநேகிதியோட மந்திரக் கண்ணை நினைத்துக் கொண்டல்லவா பாடுகிறேன் என்று தலைவரிடம் சொல்ல முடியுமோ?

"எனக்கு ரொம்பப் புடிச்சப் பாட்டு தலைவர்" என்று சொல்லி வைத்தேன்.

"எல்லா வேலையும் செய்றீங்களே தம்பி" என்று தலைவர் அடுத்த ஆச்சர்யத்தை அவிழ்த்து விட்டார்.

"கதை எழுதறீங்க, கவிதை எழுதறீங்க, ரோட்டரி க்ளப்ல சமூக சேவை செய்றீங்க, அரசியல்ல இருக்கீங்க…."

"காரும் ஓட்றாரு" என்று தங்க தேவன் அடியெடுத்துக் கொடுக்க, தலைவர் தொடர்ந்தார்.

"ஆமா. நடு ராத்திரில கூடக் கார் ஓட்றீங்க, மேடைல பாடறீங்க."

ஆமா தலைவர், எல்லா வேலையும் செய்வேன் நா” என்று சிரித்தேன்.

"எல்லா வேலையும் தெரியும். காசு சம்பாதிக்கிற வேலையத் தவிர."

(தொடர்வேன்)

About The Author