சிபி (33)

"வாங்க கவிஞரே, மூணு வருஷத்துக்கு முன்னால நாலஞ்சி தடவ நம்ம ஆஃபீஸ்க்கு அலஞ்சீங்க. அப்ப ஒங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியல. ஆனா ஒங்க விடாமுயற்சி எனக்குப் புடிச்சிருந்தது. அதனால தான் இப்ப ஒங்கள வரச் சொன்னேன்."

"ரொம்ப சந்தோஷம் சார்."

"ஒங்க சிறுகதைத் தொகுதில ரெண்டு கதைகள வாசிச்சிப் பாத்தேன். ஒங்க பாணி ரொம்ப நல்லாயிருக்கு. அதே டைப்ல பாட்டெழுதினா நல்லா வரும். இப்ப வர்ற மாதிரி இங்லீஷ் வார்த்தைகளப் போட்டு உப்புச்சப்பில்லாத பாட்டு எனக்கு வேண்டாம். பழைய காலத்துப் பாட்டு மாதிரி நச்சுன்னு இருக்கணும்."

"சீறி வரும் புலியதனை முறத்தினாலே, சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளேங்கற மாதிரி வேணுங்கறீங்க"

“ஒரேயடியா சங்க காலத்துக்குப் போய்ட்டீங்க. கொஞ்சம் முன்னேறி வாங்க. அறுபது எழுபதுகள்ள இருந்த தத்துவப் பாட்டு மாதிரி.”

"உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் குறையாது  உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது."

"இது ஏற்கனவே உள்ள பாட்டு தானே கவிஞரே."

"இதுக்குப் பிற்சேர்க்கை ஒண்ணு சொல்றேன் கேளுங்க."

"கோடீஸ்வரர்கள் கொடை கொடுப்பதிலே புதுமை கிடையாது கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் முதுமை கிடையாது."

"முதல் வரி சரி. ரெண்டாவது வரி புரியலியே. கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் முதுமை கிடையாதுன்னா எப்டி?"

"கோழிகளயும் ஆடுகளயும் மனுஷங்க நாம முதுமையடைய விடறதில்லியே சார், இளமையிலயே கசாப்புப் போட்டு முழுங்கிர்றோமே!"

"நல்லாத்தான் இருக்கு. இப்ப, பழமையையும் புதுமையையும் இணைச்சு ஒரு தத்துவம் சொல்லுங்க பாப்போம்."

"மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்.
அமர்ந்தால் மடி, எழுந்தால் தொடை
நீ எதிலே தலை வைத்துத் தூங்குவாய்?"

"அமர்ந்தால் மடி, எழுந்தால் தொடை! அடடா, அசத்திட்டீங்க கவிஞரே! நம்மப் படத்ல அஞ்சு பாட்டு. அத்தனையும் நீங்க தான் எழுதறீங்க. ம்யூஸிக் டைரக்டர் இப்ப வருவார். வந்து ட்யூன் சொல்லுவார். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. நா பக்கத்துக் கடை வரக்யும் போய்ட்டு இதோ வந்துர்றேன்."

தத்துவங்களை அள்ளி விட்டதில் தண்ணீர்த் தாகம் எடுத்தது. தண்ணீர் எங்கேயிருக்குமென்று தெரியவில்லை என்றிருந்த போது ஆஃபீஸ் பையன் உள்ளே நுழைந்தான். அவனிடம், தண்ணீர் கேட்க நான் வாயைத்திறக்குமுன் டைரக்டரும் வந்து விட்டார்.

"கவிஞரே, இவர்தான் நம்மப் படத்துக்கு இசையமைப்பாளர்" என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

முந்தின வினாடியில் ஆஃபீஸ் பையனாயிருந்து, இந்த வினாடியில் இசையமைப்பாளராய் விஸ்வரூபமெடுத்துவிட்ட

அந்த நபருக்கு எழுந்து வணக்கம் சொன்னேன். நல்ல வேளை, ஒரு மஹாப்பெரிய தப்பிலிருந்து தப்பித்தேன்.

"ம்யூஸிக் டைரக்டர் சார், இவர் தான் நா சொன்ன கவிஞர். நீங்க ட்யூனச் சொல்லுங்க, நா ஸிச்சுவேஷனச் சொல்றேன். இவர் பாட்டெழுதட்டும்."

"கவிஞரே, நீங்க சந்தத்துக்கு எழுதுவீங்களா, சொந்தத்துக்கு எழுதுவீங்களா?" என்று இசையமைப்பாளர் எகத்தாளமாய்க் கேட்க, "எந்தத்துக்கும் எழுதுவேன்" என்று நான் ஏறியடித்தேன்.

லாலா லலல்லா‘ என்று மொட்டையாய் ஒரு மெட்டை அவர் வாய் மொழியாய் உதிர்க்க, சந்தம் பிடிபட ரொம்ப சங்கடமாயிருந்தது.

"சார், இப்டி செய்வோமா"என்று நான் ஒரு யோசனையைத் தெரிவித்தேன்.

"ட்ல ஒரு சின்ன டேப்ரிக்கார்டர் இருக்கு. நா விருட்னு போய் அத எடுத்துட்டு வந்துர்றேன். ஒங்க ட்யூன நா அதுல ரிக்கார்ட் பண்ணிட்டேன்னா, திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டுக்குவேன். எனக்குப் பாட்டெழுத ஈஸியாயிருக்கும்."

"ஆனா, நாங்க ரெண்டு பேருமே இப்ப வெளிய கௌம்பறோமே கவிஞர், நாளக்கிக் காலைல ஃபோன் பண்ணிட்டு வர்றீங்களா?"

அடுத்த நாள் காலையில் ஃபோன் பண்ணியபோது இயக்குநர், "நா இப்ப பிஸியா இருக்கேனே கவிஞர், நாளக்கிப் பேசறீங்களா" என்றார்.

மறுநாள் பேசியபோது "நா ஃப்ரீயாத்தான் இருக்கேன், ம்யூஸிக் டைரக்டர் இன்னிக்கி பிஸியாயிருக்கார். நாளக்கி நாங்க ரெண்டு பேருமே ஃப்ரீயாயிருப்போம்" என்று இன்னொரு நாள் தள்ளிப் போனார்.

சொன்ன மாதிரியே, "ரெண்டு பேரும் ஃப்ரீயாத் தானிருக்கோம் இன்னிக்கி" என்று ஒப்புக் கொண்டார், அடுத்த நாள்.

"ஆனா கவிஞரே, நீங்கக் கௌம்புறதுக்கு முந்தி ஒரு சந்தேகத்தத் தெளிவு படுத்திக்கணும். அப்புறம் நீங்க வந்து வேஸ்ட் ஆயிரக் கூடாது."

"என்ன சார் சந்தேகம்? மடி, தொடை சம்மந்தமாவா?"

"அதில்லீங்க, வந்து… நீங்க ஃபைனான்ஸ் பண்ண முடியுமா?"

"ஃபைனான்ஸ்? நா? நா ஃபில்ம் ஃபைனான்ஷியர் இல்ல சார், நா கவிஞன்."

"அது தெரியும். பாட்டெழுத நீங்கப் பணம் தர முடியுமான்னு கேட்டேன்."

"அதாவது, ஒங்கப் படத்ல பாட்டெழுத நீங்க எனக்குப் பணம் தரமாட்டீங்க, நா ஒங்களுக்குப் பணம் தரணும்ங்கறீங்க."

"ஃபைனான்ஸ் பண்றவங்களத்தான் நாங்க அறிமுகப்படுத்தறோம்."

"அப்ப, தாவூத் இப்ராஹீம் ஒங்கப் படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணினா அவரக் கவிஞரா அறிமுகப் படுத்திருவீங்க."

"தாவூத் இப்ராஹீம்க்குத் தமிழ் தெரியுமான்னு தெரியல. ஆனா, இப்பத் தமிழ்ப் படத்ல பாட்டெழுதறதுக்குத் தமிழ் தெரியணும்னு அவசியங்கூட இல்ல. கொல வெறி மாதிரிப் பாட்டு தான் இப்ப எடுபடும்னு ம்யூஸிக் டைரக்டர் சொல்றார். எனக்கும் அது தான் சரின்னு படுது."

"நா என்னமோ ஒங்களுக்குக் கலை வெறி இருக்குன்னு தப்பா நெனச்சிட்டேன். ஆனா, நீங்களும் கொலை வெறிக் கேஸ் தாம் போல. ஓக்கே சார், என்ன ஆள வுடுங்க. ஃபோன வச்சிருங்க."

மூணு நாள் ஓர் எதிர்பார்ப்பில் வைத்திருந்து, தடாலென்று கீழே தள்ளிக் குழிபறித்தவனை தயவு தாட்சண்யமின்றி அறம் பாடி சபித்து விடலாமா என்று யோசனையாயிருந்தபோது மொபைல் ஃபோன் மணியடித்தது. அறிமுகமில்லாத ஒரு நம்பர். ஆகையால், அறிமுகமில்லாத நபர். வெறுப்போடு எடுத்து ஹலோ சொன்னேன்.

"சார், எழுத்தாளர் தானே பேசறீங்க?"

"ஆமா."

"சார், நா ஒரு சினிமா டைரக்டர்."

"ஸாரி, ராங் நம்பர்."

அடுத்த அரையாவது நிமிடத்தில் திரும்பவும் மொபைல் மணி. அதே நம்பர். அதே நபர். ஆறேழு முறை மணியடிக்க விட்டு சாவகாசமாய் ஹலோ சொன்னேன். என்னுடைய பேரைச் சொல்லி, அவர் தானே என்றது மறுமுனை.

"என்ன சார், ராங் நம்பர்னு கட் பண்ணிட்டீங்க! சார், எம்ப் பேர் ராஜ் குமார், நா ஒரு சினிமா டைரக்டர். நா ஒங்கள அவசியம் பாக்கணும். இன்னிக்கே பாக்கணும்."

"சினிமா டைரக்டர்களையெல்லாம் நா வந்து பாக்கறத நிறுத்தி இருவத்தஞ்சு நிமிஷம் ஆச்சி சார்."

"நீங்க வந்து பாக்க வேண்டாம். நா வந்து ஒங்களப் பாக்றேன். ஒங்க அட்ரஸ் எங்கிட்ட இருக்கு. நீங்க எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க, நா கௌம்பி வர்றேன்."

"என்ன விஷயமா என்னப் பாக்கணும்னு சொல்றீங்க சார்? சினிமாவுக்கெல்லாம் நா பாட்டு எழுதறதில்ல."

"பாட்டு இல்ல சார், இது வேற ஒரு கத. நேர்ல தான் பேசணும். எப்ப வரலாம் சொல்லுங்க."

"என்னமோ சஸ்பென்ஸ் வக்கிறீங்க."

"சஸ்பென்ஸ் ஒடையும் போது நீங்க சந்தோஷப்படுவீங்க. இப்பவே வந்துரவா? நீங்க வீட்ல தான இருக்கீங்க?"

"நீங்க சிரமப்பட வேண்டாம் சார், நானே வர்றேன். ஒங்க அட்ரஸக் குடுங்க"

அட்ரஸைக் கொடுத்து விட்டு, "எப்ப வர்றீங்க" என்றார்.

"லேட் பண்ணிராம சீக்கிரமா வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்."

"சாலிக்கிராமம் தானே? இதோ, இப்பவே கௌம்பி வர்றேன். பதினோரு மணிக்கி அங்க இருப்பேன்."

ஸ்கூட்டரின் பின் ஸீட்டில் சஸ்பென்ஸை ஏற்றிக்கொண்டு சாலிக்கிராமத்தில் முகவரியைக் கண்டுபிடித்துப் பத்து அம்பத்தஞ்சுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அழைப்பு மணியை அழுத்தியதும், டைரக்டரே வந்து கதவைத் திறந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனக்கு வணக்கம் வைத்து, கை குலுக்கி வரவேற்று, உள்ளே கூட்டிக் கொண்டு போய், ஏஸி அறையில் உட்கார்த்தி வைத்தார்.

அறைக்குள்ளே ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.

(தொடர்வேன்)

About The Author