சிபி (34)

இயக்குநரின் மேஜை மேலே என்னுடைய புத்தகம் கிடந்தது.

புத்தகம் அல்ல. புத்தகங்கள். ஆறு பிரதிகள் மேஜையில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன, வரிசையாய்.

சிரிக்கும் நாளே திருநாள்

நம்மப் புகை மறுப்புப் புதினம்.

"என்ன சார் அப்டிப் பாக்கறீங்க?" என்று சிரித்தார் ராஜ் குமார்.

"ஒங்க நாவல் தான். சஸ்பென்ஸ ஒடக்யட்டுமா? அதுக்கு முன்னால, என்ன சாப்புடறீங்க? காஃபியா, டீயா?"

"காஃபி, டீ நா சாப்புடறதில்ல சார். கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு" என்று நான் சிரிக்க, தம்ஸ் அப் வரவழைக்கப்பட்டது.

கருப்புக் கலரை உறிஞ்சிய படியே சஸ்பென்ஸ் உடையக் காத்திருந்தேன்.

உடைத்தார்.

அது உடைய உடைய, நான் உயர உயரப் போய்க் கொண்டிருந்தேன்.

"சார், ஒங்கச் சிறுகதைகள இலக்கியப் பத்திரிகைகள்ள வாசிச்சிருக்கேன். ஒங்கக் கதைகள வாசிச்சி ஒங்களோட விசிறியா ஆனவன் நா. தி நகர் ந்யூ புக் லேண்ட்ல போய்ப் புஸ்தகங்களப் பொரட்டிட்டிருந்தப்ப ஒங்க நாவல் கண்ல பட்டுச்சி. ஒடனே வாங்கிட்டு வந்து வாசிக்க ஆரம்பிச்சேன். படிக்கப் படிக்கப் பிரமிப்பு. முப்பத்தஞ்சி அத்தியாயத்தையும் மூணே ஸிட்டிங்ல வாசிச்சி முடிச்சேன். கடைசிச் சாப்ட்டர மட்டும் ஒரு எட்டு வாட்டி வாசிச்சேன். எப்டி விர்ர்ர்னு ஓடுது சார்! என்ன ரியலிஸ்ட்டிக் டச், என்ன ஸ்டைல், என்ன லாங்வேஜ்! எல்லாத்துக்கும் மேலா, நீங்க எடுத்துட்டிருக்கிற சப்ஜெக்ட். ஆன்ட்டி – ஸ்மோக்கிங். ஒரு உன்னதமான காதல் கதைல பின்னிப் பிணைந்த புகை மறுப்புக் கதை. இலக்கியத்திலயோ சினிமாலயோ இது வரக்யும் யாருமே தொட்டுப் பாக்காத சப்ஜெக்ட். யாருமே நெனச்சிக் கூடப் பாக்காத சப்ஜெக்ட். ஒங்க நாவல்ல மூணாவதுச் சாப்டர்ல, ஹீரோ சிகரட்டத் தியாகம் பண்றான். அந்தச் சாப்ட்டர்ல நானும் எங்கைல இருந்த சிகரட்டக் கீழ போட்டு நசுக்கினேன். அதுக்கப்புறம் இன்னிக்கி வரக்யும் சிகரட்டப் பத்த வக்யல. இனியும் பத்த வக்ய மாட்டேன், நாவல வாசிச்சி முடிச்சதுக்கு அடுத்த நாள், சந்தியா பதிப்பகத்ல போய்ப் பத்துக் காப்பி வாங்கிட்டு வந்தேன். சிகரெட் குடிச்சி நாசமாப் போய்ட்டிருந்த என்னோட மூணு ஃப்ரண்ஸ்க்கு ஆளுக்கொரு புஸ்தகம் குடுத்துப் படிக்க வச்சேன். இந்த ஆறு காப்பியும் நம்ம யூனிட்ல இருக்கிற ஆறு உதவியாளர்களுக்கு. நாவல வாசிச்சி முடிச்சிட்டுத்தான் அவங்க வேலக்கி வரணும். அதுமட்டுமில்ல, ஒரு பயலும் இனிமே சிகரெட்டத் தொடக்கூடாது. சரி, இதையெல்லாம் ஏன் ஒங்கள ஒக்காத்தி வச்சிச் சொல்லிட்டிருக்கேன்னு ஒங்களுக்கு ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்."

"புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு."

"புரியிற மாதிரியே சொல்லிர்றேன். அதுக்கு முன்னாடி, அது சம்மந்தப்பட்ட ஒரு கேள்வி. பத்துக் காப்பி வாங்கினேன். ஒம்போது காப்பிக்கிக் கணக்கு சொன்னேன். அந்தப் பத்தாவது காப்பி யாருக்குன்னு நீங்கக் கேக்கலியே?”

"ரமேஷ் ரமேஷ்னு வடபழனில கொலவெறி டைரக்டர் ஒருத்தர் இருக்காரே, அந்த ஆளுக்கா?"

"இல்ல. நம்ம ப்ரடியூஸருக்கு. அவரும் நாவல வாசிச்சி முடிச்சிட்டார். அவருக்கும் கதயும் சப்ஜெக்ட்டும் ரொம்பப் புடிச்சிப் போச்சி. அவரப் பாக்கத்தான் இப்ப நாம போறோம். ஒங்களுக்கு இப்ப வேற முக்கியமான வேல எதுவும் இல்லியே?"

"இத விட இப்ப என்ன பெரிய முக்கியமான வேல! ப்ரடியூஸரப் பாக்க வர்றேன். சார், இப்ப எனக்கு முக்கால் வாசி புரியுது, இன்னும் கால் வாசி புரியாமத்தான் இருக்குது. அதையும் புரிய வச்சிட்டீங்கன்னா…"

"புரிய வச்சிர்றேன். நம்ம அடுத்த படத்தோட கத ஒங்க நாவல்தான்னு ப்ரடியூஸர் சொல்லிட்டார். அதாவது, ஒங்களுக்கு ஓக்கேன்னா."

"நேக்கு டபுள் ஓக்கே சார்."

"அப்ப வாங்க. ப்ரடியூஸரப் பாத்துட்டு வந்துருவோம். சார் எப்டி வந்தீங்க?"

"ட்டூ வீலர்."

"அத இங்கயே விட்டுட்டு வாங்க. நம்ம வண்டில போய்ட்டு வந்துருவோம்."

இயக்குனருக்கு இணையான உற்சாகத்தில் படத்தயாரிப்பாளரும் இருந்தார்.

"டைரக்டர் சார் ஒங்க நாவலக் குடுத்து வாசிச்சிப் பாருங்கன்னு சொன்னப்ப, ஒப்புக்குத்தான் வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, முதல் அத்தியாயம் முடியறதுக்கு முன்னாலேயே இதுல வித்யாசமா என்னமோ இருக்குன்னு புரிஞ்சி போச்சி. கைல எடுத்த புஸ்தகத்தக் கீழ வக்யவே மனசாகல. வாசிச்சி முடிச்சதும் ஒடனே டைரக்டர் சாருக்கு ஃபோன் போட்டு, இதான் நம்ம அடுத்த ப்ராஜக்ட்னு சொல்லிட்டேன். இப்டி ஒரு அற்புதமான நாவலப் படச்ச ஒங்களப்பத்தி இத்தன நாளா தெரியாம இருந்தது துரதிருஷ்டம். இன்னிக்கி ஒங்கள சந்திக்க முடிஞ்சது அதிர்ஷ்டம். சார், சொல்லுங்க, எப்டி ஒங்களுக்கு இப்டி ஒரு சப்ஜெக்ட் தோணிச்சி?"

"எல்லாருக்கும் தெரிஞ்ச சப்ஜெக்ட் தான் சார் இது. நா டைரக்டர் சார்ட்ட சொல்லணும்னு நெனச்சத, அவரே என்ட்ட சொன்னார். ஒங்கட்டயும் சொல்லியிருப்பார். இந்த சப்ஜெக்ட்ட யாருமே இதுவரக்யும் அட்டெம்ப்ட்பண்ணலங்கறது துரதிருஷ்டம். என்னால அட்டெம்ப்ட் பண்ண முடிஞ்சதுங்கறது என்னோட அதிர்ஷ்டம்."

"எங்களோட அதிர்ஷ்டமும் கூட. மேல சொல்லுங்க."

"சார், இந்த நாவல்ல நா சொல்லியிருக்கிற மாதிரி, குடிய விடப் பெரிய உயிர்க்கொல்லி புகை. குடிக்கிறவன் தனக்கு மட்டுந்தான் தீங்கு செய்றான். ஆனா சிகரெட் குடிக்கிறவன் வெளியே விடற புகை, பாஸிவ் ஸ்மோக்கிங் முறையில அடுத்தவனுக்கும் கெடுதல் செய்யுது. லிக்கர் குடிக்கிறவன் வீட்லயோ, பார்லயோ வச்சித்தான் குடிக்கிறான். ஆனா சிகரெட் குடிக்கிறவன் ரோட்ல குடிச்சிட்டுப் போறான், பஸ் ஸ்டாண்ட்ல குடிக்கிறான், ஸ்டேஷன்ல குடிக்கிறான், எல்லாப் பொது இடங்கள்ளயும் புகைய ஊதறான். அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சரா இருந்தப்ப, பொது இடங்கள்ள சிகரெட் குடிக்கக் கூடாதுன்னு தடை பண்ணினார்.. Hats off to him.

அன்புமணி போனப்புறம் அந்தத் தடையத் தகர்த்துட்டாங்க. அன்புமணி இன்னும் கொஞ்சநாள் அமைச்சரா இருந்திருந்தா, புகை அரக்கனப் பத்தின விழிப்புணர்ச்சி மக்கள் மத்தில வந்திருக்கும். பரவாயில்ல, அந்த விழிப்புணர்ச்சிக்கான முயற்சிய நம்ம லெவல்ல நாம எடுப்போம்னுதான் நா இந்த நாவல எழுத ஆரம்பிச்சேன். ஆனா, இந்த நாவலோட மெஸேஜ் போய்ச் சேர வேண்டிய மக்களுக்குப் போய்ச் சேரல. ஹிண்டுவுக்கு நாவல அனுப்ச்சி வச்சேன். அனுப்ச்சிப் பத்து நாள்ளயே விமர்சனம் வந்துருச்சு. உற்சாகமா இருந்தது. அப்பறம் அது ஆவியாப் போச்சு. போன வருஷம் நா கொழும்புக்குப் போயிருந்தப்ப, கலாநிதி கைலாசபதியோட மனைவி, சர்வ மங்களம் மேடம் என்னோட நாவல ரொம்பப் பாராட்டிப் பேசினாங்க. ஆனா, பெண்கள் இதப் பாராட்டறது பத்தாது. ஆண் வாசகர்கள் மத்தியில நா எதிர்பாத்த வரவேற்பு இந்த நாவலுக்குக் கெடக்யல. எதிர்பாத்த விழிப்புணர்ச்சி ஏற்படல."

"கவலையேப் படாதீங்க சார், இந்த மெஸேஜ் மக்களுக்குப் போய்ச் சேரத்தான் போகுது, நீங்க எதிர்பாத்தத விடப் பல மடங்கு பெரிய விழிப்புணர்ச்சி ஏற்படத்தான் போகுது. இந்த வேலைய இனி எங்கக் கைல விடுங்க. ஒங்கக் கதையத் தமிழ்லயும் ஹிந்திலயும் ஒரே நேரத்ல படமாக்கற திட்டம் இருக்கு. இது ஒரு ட்ரெண்ட் ஸெட்டர் படமாயிருக்கும். கமர்ஷியலாவும் பெரிய வெற்றி பெறும். வரிவிலக்குக் கூட கெடக்யும்."

"கேக்க சந்தோஷமாயிருக்கு சார்."

"பாக்கவும் சந்தோஷமாயிருக்கும். இந்தக் கவரப் பிரிச்சிப் பாத்தீங்கன்னா இன்னும் சந்தோஷப்படுவீங்க" என்று, கவர் ஒன்றைக் கொடுத்தார் தயாரிப்பாளர்.

பிரித்துப் பார்த்தால், ஒரு செக் இருந்தது. செக்கைப் பார்த்ததும் பக்கென்றிருந்தது.
என்னுடைய பெயருக்கான செக்.

ஒண்ணுக்குப் பின்னால், ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, எழு ஸைஃஃபர்கள் இருந்தன.

"சார், ரெண்டு ஸைஃபரோ மூணு ஸைஃபரோஅஜாக்ரதையா அதிகமாப் போட்டுட்டீங்கன்னு நெனக்கிறேன்."

"அஜாக்ரதையாவும் போடல, அதிகமாவும் போடல. எழுத்துல அமவுன்ட் எழுதியிருக்கு பாருங்க."

எழுதியிருந்தது.

எழுத்தில் எழுதியிருந்தது.

ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.

One crore என்று எழுதியிருந்தது.

"சார், ஒரு கோடியா!" என்று கண்ணிமைகளையும், உதடுகளையும் அகலமாய்த் திறந்தேன்.

"இது அட்வான்ஸ் தான்" என்று சிரித்தார் தயாரிப்பாளர்.

"படப் பூஜையன்னிக்கி இன்னொரு கோடிக்கி இன்னொரு செக் வரும், படம் நல்லா வியாபாரம் ஆச்சின்னா பின்னாலயும் ஒரு அமவுன்ட் வரும். ஒரு கதக்கி ரெண்டு கோடி ப்ளஸ் வாங்கின கதாசிரியர் கோலிவுட்ல யாருமே கெடையாது. இந்தியாலயே இது ஒரு ரிக்கார்ட்! கங்ராட்ஸ்."

(தொடர்வேன்)

About The Author