சிபி (35)

"பஷீர், சீனிவாசன் வந்திருக்காண்டா."

"சீனிவாசனா! எதுக்கு வந்திருக்கான்?"

"நாந்தான் கூட்டிட்டு வந்தேன்."

"நீயா! எதுக்குக் கூட்டிட்டு வந்த?"

"என்னடா எதுக்குன்ற! நீ தானடா கூட்டிட்டு வரச் சொன்ன?"

"நானா! எதுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னேன்?"

"விஸாவச்சிருக்கன்னு சொன்னேல்ல?"

“விஸாவா! ஓ, விஸாவா? டேய், நா சும்மால்லடா சொன்னேன்.”

"சும்மா சொன்னியா? பஷீர், நீயாத்தான் சொன்ன, விஸா வச்சிருக்கேன் யாருக்காவது வேணும்னா சொல்லுன்ன. நா சீனிவாசன் பேரச் சொன்னேன், நீ கூட்டிட்டு வாடான்னே,

இதோ கூட்டிட்டு வந்திருக்கேன், இப்ப நீ சும்மா சொன்னேங்கற?"

"ஆமாண்டா, சும்மா தான் சொன்னேன். விஸாஎதுவும் எங்கிட்ட இல்ல."

சீனிவாசன் சோர்ந்து போனான். அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. அவனை சமாதானப்படுத்த முடியாது. இந்தப் பயலுக்கு வேண்டுமானால் கொடுக்கலாம் ஒரு சவுக்கடி.

"பஷீர், நீ பொய் சொல்லுவன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீ சொல்றதெல்லாம் பொய்யாயிருக்கும்னு இப்பத்தாண்டா தெரிஞ்சிக்கிட்டேன்."

ஆனால் இந்த சவுக்குச் சொடுக்குக்கெல்லாம் அசருகிறவனில்லை அவன்.

கேரளாவில், ஓர் ஏரியில் உல்லாசப் படகில் போய்க் கொண்டிருந்த போது, "இந்தத் தண்ணில முதலையெல்லாம் இருக்கு. பஷீரத் தூக்கி உள்ள போட்ருவோமா” என்று ஒரு நண்பன் தூண்டி விட, "வேண்டாம்டா, முதலையெல்லாம் பாவம் food poisoning ல செத்துப் போயிரும்" என்று நான் சீண்டியதற்கே அசரவில்லை அவன்.

அப்போதெல்லாம் நண்பனாய்த் தானிருந்தான்.

பிறகு எப்போது மாஜியானான்?

பிஸினஸில் நஷ்டமடைந்து நான் கடையை மூட நேர்ந்த பிறகு.

பிஸினஸில் நஷ்டமடைந்திருந்த என்னுடைய கஷ்ட காலத்தை அவனிஷ்டம் போல அவனுக்கு அனுகூலமாக்கிக் கொண்டு, கள்ளக் கையெழுத்துப் போட்டு எனக்கெதிராய்ச் செக் மோசடி செய்த துஷ்டனொருவனோடு பஷீர் கூட்டணி போட்ட பிறகு.

செக் மோசடி செய்ததோடு திருப்தியடையாத அந்த வில்லன், நள்ளிரவில் வீடு புகுந்து ரவுடித்தனத்தில் கூட ஈடுபட்டான்.

அந்த வில்லாதி வில்லனுடைய விவகாரத்தை விவரமாய்ச் சொல்லப் போனால், இந்த அரசியல் நாவல் ஒரு க்ரைம்

நாவலாய்த் தரம் தாழ்ந்து விடும். ஆகையால் இப்போது வேண்டாம்.

"ஒரு ஃப்ராடு கூட சேந்துக்கிட்டு என்னக் கால வாரி விடறியேடா" என்று நான் வயிறெரிந்ததற்கு, "ஃப்ராடு பண்ணாத்தான் தம்பி பிஸினஸ் பண்ண முடியும்" என்றொரு க்ரிமினல் தத்துவத்தை எடுத்து விட்டான் பஷீர்.

"ஃப்ராடு பண்ணாத்தான் பணம் பண்ண முடியும். நீயும் ஒழுங்கா ஃப்ராடு வேல பாத்திருந்தா பிஸினஸ மூடியிருக்க மாட்ட. நல்லாப் பணம் பண்ணியிருப்ப. கோடீஸ்வரனாயிருப்ப."

இப்படிப்பட்ட ஒரு வக்கிர புத்திக்காரனைக் கட்டிக்கொண்டு சினேகங் கொண்டாட முடியுமோ? கழட்டி விட்டாச்சு.

கழட்டி விட்டாச்சு சரி, இப்போது கஞ்சிக்கு என்ன வழி, யாரைப் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு ஃபோன் வந்தது.

"யார் பேசறேன்னு தெரியுதா? என் நம்பரயெல்லாம் டிலிட் பண்ணிருப்ப நீ."

"எப்பவோ கேட்ட கொரலாத் தான் இருக்கு. யார் பேசறது."

"பஷீர் பேசறேண்டா."

"ம். சொல்லு."

"எம்மேல இன்னும் கோவமாத்தான் இருக்க."

"நா பிஸியா இருக்கேன். என்ன விஷயம் சொல்லு."

"பேப்பர்ல பாத்தேன். ஒன்னோட கத ரெண்டு கோடிக்கிப் போயிருக்குன்னு பாத்தேன்."

"ஃப்ராடு பண்ணாம நா பணம் பண்ணினது அது."

"ஒத்துக்கறேன். ஒன்னோட நேர்மை நாணயத்துக்கு, தர்ம ஞாயத்துக்கு, நல்ல மனசுக்கு ஆண்டவன் ரிவார்டு குடுத்துருக்கான். லேட்டாக் குடுத்தாலும், அள்ளியள்ளிக் குடுத்துருக்கான்."

"லேட் ஆனாலும், நா வழிதவறிப் போகாமப் பொறுமையா இருந்ததுக்குக் கெடச்ச பரிசு. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்னு பகவத் கீதைல இருக்குடா. சோ இத அடிக்கடி சொல்லுவார். மஹாதேவி படத்ல எம்.ஜி.ஆர். சொல்லுவார். ஒனக்கு இப்பத்தான் புரிஞ்சிருக்கு."

"புரிஞ்சிருச்சிடா. ஒம் மனச ரொம்ப நோகப்பண்ணியிருக்கேன். அதுக்கு ஒரு ப்ராயச்சித்தம் பண்ண இந்த ரம்ஜான் மாசத்ல எனக்கொருச் சான்ஸ் குடு."

"என்னச் சான்ஸ் கேக்கற?"

"நீ இஃப்தார் பார்ட்டி குடுப்பியே?"

"யார் சொன்னா?"

"கெஸ் பண்ணினேன். நீ கோடீஸ்வரனான சந்தோஷத்த இப்டித்தான் கொண்டாடுவன்னு கெஸ் பண்ணினேன்."

"மினி கோடீஸ்வரன்."

"இதுக்கு மேலயும் நீ போவ. போன தடவ நீ இஃப்தார் விருந்து குடுத்தப்ப நாந்தான் கஞ்சி சப்ளை பண்ணினேன். ஆனா அதுக்குப் பேமன்ட் வாங்கிக்கிட்டேன். இந்த தடவயும் நானே பண்றேன். ஆனாக் காசு வாங்கிக்க மாட்டேன். எத்தன பேர் வர்றாங்கன்னு மட்டும் நீ சொல்லு."

சங்கடமில்லாமல் முடிவுக்கு வந்து விட்டது கஞ்சிப் பிரச்சனை.

இஃப்தார் பார்ட்டிக்கு நம்ம மாநிலத் தலைவரிடம் தொலைபேசியில் தேதி வாங்கியாகி விட்டது.

"இஃப்தார் பார்ட்டி இப்பத் தேவை தானா தம்பி" என்று தயங்கினார் தலைவர், விஷயத்தை அவரிடம் சொன்னபோது.

"இப்ப, ரம்ஜான் மாசத்ல தான் இஃப்தார் பார்ட்டி நடத்த முடியும் தலைவர், அப்புறம் முடியாது" என்று நான் சிரித்த போது, அவரும் சிரித்தார்.

"நீங்க மாநிலத் தலைவரான பிறகு கட்சிக்கின்னு நா எதுவுமே செய்யல தலைவர். இது எனக்கு முதல் வாய்ப்பு. தவிரவும், அன்னக்கி நா நடத்தின இஃப்தார் பார்ட்டி மாதிரித் திரும்பவும் நடத்தணும், அதே தாஜ் கோரமண்டல் ஹோட்டேல்ல நடத்தணும், அருள்புரி ஆண்டவனேன்னு இத்தன வருஷமா நா ஆண்டவன வேண்டினதுக்கு இப்பத்தான் பலன் கெடச்சிருக்கு தலைவர்."

"சரி தம்பி, ஜோரா செய்யுங்க. யாரையெல்லாம் இன்வைட் பண்ணப் போறீங்க?"

"எல்லாம் நம்மக் கட்சி முக்கியஸ்தர்கள் தான் தலைவர்."

"அறிவரசன், பீட்டர், கோவை சண்முகம்?"

"மூவரணி நிச்சயமா உண்டு."

"சந்தோஷம். நம்மக் கட்சிக்கி வெளிய?"

"ரெண்டே பேர் தான். ஒருத்தர் எக்ஸ் எம் பி, டி எஸ் ஏ சிவப்பிரகாசம். மத்தவர் தோழர் நல்லகண்ணு. அப்புறம் நம்ம சொந்தக்காரங்க, நண்பர்கள், முஸ்லிம் பெரியவர்கள். இந்த எந்த லிஸ்ட்லயுமே வராத ஒரேயொரு வி வி ஐ பி."

"யார் தம்பி அவர்?"

"சகாயம் ஐ ஏ எஸ்."

"அவரால வர முடியுமா? இந்த மாதிரி நேர்மையான அதிகாரிகளக் கண்டாலே அதிரடி அரசியல்வாதிகளுக்குப் புடிக்காது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பந்தாடப் படறவங்க இவங்க தான்."

"கூப்ட்டுப் பாப்போம். வர முடிஞ்சா வரவேற்போம், வற்புறுத்த மாட்டோம். சகாயம் சார சங்கடப்படுத்த மாட்டோம்."

ராத்திரி உட்கார்ந்து அழைப்பிதழை வடிவமைத்துக் கொண்டிருந்தபோது விளக்குகள் போய்விட்டன.

பவர்கட்.

பகலில் பவர்கட்டானால் அறிவிக்கப்பட்ட மின் வெட்டு.

ராத்திரி கட்டானால் அறிவிக்கப்படாத மின் வெட்டு.

இருட்டில் உட்கார்ந்து ஒரு கவிதை யோசித்தேன். ஒரு மணி நேரம் கழித்துக் கரன்ட் வந்த போது, அழைப்பிதழை ஒத்தி வைத்துவிட்டுக் கவிதையை எழுதி முடித்தேன்.

மின் வெட்டுக் கவிதை.

ஃப்ரிட்ஜ் ஒண்ணு வாங்கினால்
எலக்ட்ரிக் குக்கர் இலவசம் என்றார்கள்
ரெண்டையும் வாங்கிப் போட்டாச்சு

வாஷிங் மெஷின் வாங்கினால்
இஸ்திரிப் பெட்டி இலவசமாம்
அதுகளையும் வாங்கியாச்சு

ஏஸி ஒண்ணு வாங்குங்க
ஓஸியில் மின் விசிறி என்றார்கள்
அதையும் வாங்கிப் பொருத்தியாச்சு

இலவசங்களை வாங்கிப்போட்டு என்ன செய்ய
எல்லாத்தையும் இயக்க மின்சாரம் வேண்டுமாமே

ஓஸியிலே வேண்டவே வேண்டாம்
காசு நான் எண்ணித் தருகிறேன்
கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும்
கடன் வாங்கியாவது கப்பம் கட்டுகிறேன்
அலங்காரத்துக்கிருக்கிற மின் சாதனங்களையும்
ஒட்டிக் கொண்டு வந்த இலவசங்களையும்
ஓட்டிப் பார்க்கிற பேராசை இருக்கிறது

கரன்ட் கொஞ்சம் போடுங்க அம்மா

பொன் குமாருடைய பத்திரிகைக்குக் கவிதையை அனுப்பி வைத்தேன். அதோடு விட்டேனா? சிங்கிள் பிட் போஸ்டரில் கவிதையை அச்சடித்து, ஊரெல்லாம் ஒட்ட ஏற்பாடு செய்தேன்.

அடுத்த நாள் தொலைபேசியில் பல பாராட்டுக்கள்.

முக்கியமான பாராட்டு தேவநேசனிடமிருந்து.

அச்சச்சோ, இந்தப் பயலை மறந்தே போனேனே!

(தொடர்வேன்)

About The Author