சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,Varalakshmi Vratham

போன வாரம் முழுக்க பிசியோ பிசி… ஏகப்பட்ட வேலை. பிசியோ பிசின்னு அலுத்துக்கிற அளவுக்கு அப்படி என்ன பெருசா வேலைன்னு கேக்கறீங்களா? போன வாரத்துக்கும் முந்தின வாரம் வரலக்ஷ்மி விரதம், ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம்.. இப்படி ஏகப்பட்ட பண்டிகைகள். அதனால எக்கசக்கமான வேலை! பண்டிகையின்போது செய்த வேலைக்கெல்லாம் சேர்த்து வைத்து போன வாரம் முழுக்க வேலை எதுவும் செய்யாம வாரம் முழுக்க ஓய்வு எடுத்தேன். அதுதான் பிசியோ பிசி! ஹூம்… என்னுடைய ஓய்வைப் பற்றி சொல்லப் போய், நீங்க எல்லோரும் எப்படியிருக்கீங்கன்னு கேக்க மறந்துட்டேன். எல்லோரும் நலமாயிருக்கீங்கதானே?

விஜய் டீவியின் ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர் – 3’யின் கால் இறுதியில் போட்டியாளர்கள் 4 பேருமே நம்ம ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி அவர்களுடைய அற்புதமான சில மெல்லிசை பாடல்களை அழகாப் பாடினாங்க. அதிலும் சாய் சரண் பாடிய ‘அதிசய ராகம்…’ பாட்டும், சத்ய ப்ரகாஷ் பாடிய ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்…’ பாட்டும் ரசிச்சு கேக்கும்படியா இருந்தது. ராகத்தோட கலந்து, இசையோட கரைஞ்சு தன்னை மறந்து அனுபவித்து பாடும் போது, கேட்கறதுக்கு இனிமையாக மட்டுமில்லாம சுகமாகவும் இருந்தது. உங்கள்ல யாராவது மிஸ் பண்ணியிருந்தீங்கன்னா கீழேயிருக்கும் சுட்டிகள்ல கேட்டு ரசிக்கலாம்.

http://youtu.be/e4wCVRV0Vrw
http://youtu.be/cHvtF3f8kvg

தங்கும் விடுதிகள் (ஹோட்டல்கள்) எப்படி எல்லாம் இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்கன்னு உங்களை யாராவது கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க? நல்ல தரமானதாவும், சுத்தமானதாவும், சகல வசதிகளோட இருக்கணும்னு சொல்லுவீங்க இல்லையா? ஆனால் ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்ட தங்கும் விடுதி வேணும்னு உங்கள்ல யாராவது ஆசைப்பட்டதுண்டா? அப்போ இது உங்களுக்கான செய்தி.

Ice Hotelஸ்வீடனில் உள்ள கிருனா(Kiruna)விலிருந்து 17கி.மீ. தூரத்தின் இருக்கு யுகஸ்யார்வே (Jukkasjärvi) கிராமம். 1990ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி மற்றும் ஐஸ் கட்டிகளாலான இந்த ‘ஐஸ் ஹோட்டல் (ICEHOTEL)’ உருவாக்கப்படுகிறது. டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த ஐஸ் ஹோட்டல் உபயோகத்தில் இருக்குமாம். உலகத்தின் முதல் ஐஸ் ஹோட்டல் என்ற பெருமை இதற்கு உண்டு. ஒரு முறை ஐஸ் ஹோட்டலை உருவாக்கிட 10,000 டன்கள் ஐஸும், 30,000 டன்கள் பனியும் தேவைப்படுகிறதாம். எதுக்கு இவ்வளவுன்னு நினைக்கறீங்க இல்லையா? ஹோட்டலின் அறைகள் வடிவமைப்புக்கு மட்டுமில்லாம, ஹோட்டலுக்குள் இருக்கும் தூண்கள், சிற்பங்கள், அலங்கார விளக்குகள், அலங்காரப் பொருட்கள், படுக்கைகள், இருக்கைகள் இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே ஐஸ்மயமாயிருக்குமாம். எங்கிருந்து கிடைக்குது இவ்வளவு ஐஸ் கட்டிகள்ன்னு யோசிச்சா, அந்த கிராமத்திலிருக்கும் டோர்னே (Torne) நதியிலிருந்து ஹோட்டல் கட்டத் தேவையான ஐஸ் கட்டிகள் கிடைக்குதாம்.

ஒவ்வொரு வருடமும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைஞர்களை வரவழைத்து அழகான, கலை நயத்துடன் கூடிய ஹோட்டலை வடிவமைக்கிறாங்க. இரவில் தூங்கும் போது அங்கே நிலவும் வெப்பநிலையின் அளவு என்ன தெரியுமோ? -5 டிகிரி செல்ஸியஸ். எல்லாம் சரி! எதுக்காக இந்த ஐஸ் ஹோட்டலை உருவாக்கணும்? ஸ்வீடனில் கோடை காலத்தில மட்டுமே காணப்படும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குளிர் காலத்தில் சுவாரஸியமாக பொழுதுபோக்கும் வகையில் உங்களுடைய கிராமத்தில் என்ன இருக்கு என்ற கேள்விக்கு விடையாகவும் இந்த ஐஸ் ஹோட்டலை உருவாக்கினேன் என்கிறார் இந்த ஹோட்டலின் ஸ்தாபகர் Yngve Bergqvist. இப்போ சில வருஷங்களாக தங்கும் அறைகள் மட்டுமில்லாம தேவாலயம், கடை, பொருட்காட்சிகளையும் ஐஸ் கட்டிகளால உருவாக்கிக்கிட்டிருக்காங்க.

http://www.icehotel.com/uk/

சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக ‘யுத்தம் செய்’ படத்தை டீவில பார்த்தேன். ஏற்கனவே அந்த படத்தோட விமர்சனங்களை பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் படிச்சுப் படம் பார்க்கும் வாய்ப்புக்காக காத்துட்டிருந்தேன். படத்தில் நிறைய வன்முறை இருந்தாலும் இயக்குனர் மிஷ்கின் கதை சொல்லும் விதத்தையும், இயக்கிய விதத்தையும் பாராட்டாம இருக்க முடியலை. படத்தில் நடிச்ச எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவா செய்திருந்தாலும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட நடிப்பு என்னை ரொம்பவே கவர்ந்தது. இத்தனைக்கும் அரை மணிக்கும் குறைவான நேரம்தான் அவங்க திரையில வராங்க. தன்னுடைய இறந்துபோன மகளைத் தேடும் தாயா தன்னுடைய நடிப்பை நல்லா வெளிப்படுத்தியிருக்காங்க லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

நிலா தன்னோட முந்தைய ‘மடை திறந்து’ல ராதாவும், சூரியகலாவும் அவங்க மேற்கொண்டுள்ள பயிற்சியில தேர்ச்சியடைஞ்சு நல்ல வேலை வாங்கி மற்ற பெண்களுக்கு ஊக்கம் தரணும்னு சொல்லியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன். தான் மேற்கொண்டுள்ள பயிற்சி பற்றி சூரியா தன்னுடைய தோழி சத்யாவிடம் சொல்லி அவளையும் பயிற்சியை மேற்கொள்ள ஊக்கம் அளிச்சிருக்கா. சத்யாவின் விருப்பம் தெரிஞ்ச பிறகு திரு. சுரேஷ் அவர்கள் சத்யாவிற்கான தொலைபேசி மூலமான நேர்காணலை நடத்தி, அதில் சத்யா தேர்ச்சி அடைஞ்சு, போன வாரத்திலிருந்து சூர்யா, ராதாவுடன் இணைந்து பயிற்சி பெற ஆரம்பிச்சுட்டாங்க. தாமரை இல்லப் பெண்கள் கிட்டே பேசும்போது, அவங்களுக்கான படிப்பு, வேலை வாய்ப்பு பற்றிய போதுமான விழிப்புணர்வு அவங்களுக்கு இல்லையோன்னு பல முறை நினைத்து வருத்தப்பட்டதுண்டு. ஆனால் இந்த நிகழ்வுக்குப்பிறகு, இன்னும் கொஞ்ச நாட்கள்ல விழிப்புணர்வு பெரிய அளவுல ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திடுச்சு.

சரி.. எப்பவும் போல கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோமா? கோகுலாஷ்டமி ஞாயிற்றுக்கிழமையா இல்லை திங்கட்கிழமையான்னு ஏகப்பட்ட குழப்பத்துக்கப்புறம் ஒரு வழியா ஞாயிற்றுக்கிழமைதான் கோகுலாஷ்டமி பண்டிகைன்னு முடிவு செய்தாச்சு. எப்பவும் போல பண்டிகைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துட்டு இருக்கும்போது எனக்கு சில சந்தேகங்கள் வந்தது. (வேறென்ன எல்லாம் சாப்பாடு சம்பந்தமான சந்தேகங்கள்தான்!). ஏன் கிருஷ்ணருக்கு உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்கு எல்லாம் நிவேதனம் செய்யறோம்? கோகுலாஷ்டமி அன்று பிறக்கும் கிருஷ்ணரோ குழந்தை. பல்லில்லாத அவரால எப்படி இதெல்லாம் சாப்பிட முடியும்? என்னுடைய கேள்விகளுக்கு எங்க அம்மா சொன்ன பதில்:

Gokulashtami"கிருஷ்ணர் பிறந்தநாள்தான் கோகுலாஷ்டமின்னாலும், சின்னப் பையனா வளர்ந்தப்புறம் சாப்பிட்டதுதான் இந்த வெல்லச்சீடை, உப்புச்சீடை, முறுக்கு இதெல்லாம். நாள் முழுக்க மற்ற குழந்தைகளோட விளையாடி முடிச்சு வரும் குட்டி கிருஷ்ணருக்கு எளிதாக ஜீரணமாகும் வகையில் அரிசி மாவுடன் வெண்ணெய் (அ) நெய் சேர்த்த திண்பண்டங்களான உப்புச் சீடை, வெல்லச்சீடை, முறுக்கெல்லாம் யசோதா செய்து வைப்பாங்களாம். கிருஷ்ணரும் அதை எல்லாம் விரும்பி சாப்பிடுவாராம். (அதைத்தவிர பால், தயிர், மோர், வெண்ணெய் மற்றும் நெய்யையும் ஒரு கை பார்ப்பாராம்!) கோகுலாஷ்டமி அன்று பிறப்பது சின்ன குழந்தையானலும் அவருக்கு பிடிச்சதுனால இந்த திண்பண்டங்களை செய்து வைத்து நிவேதனம் செய்யறோம்"ன்னு சொன்னாங்க.

சரிங்க.. நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

3 Comments

 1. M RADHAKRISHNAN

  Thanks for writing about LOTUS girls. Another good news from LOTUS, which you
  can write in the next issue. ALL THE 12 B.,Ed girls pass the exam. and scored
  more than 70% (two girls scored more than 80%)applied for MAand awaiting
  for admission. 100% result in B.Ed for the past three years -Hatrick achieved
  by these visually challenged girl students.

 2. கீதா

  ஐஸ் ஹோட்டலா? ஃப்ரிட்ஜைத் திறந்தாலே தொடர்தும்மல் வரும் என்னைப் போன்றவர்கள் கனவிலும் நினைக்கக் கூடாத இடம் அது. ஆனாலும் அதை உருவாக்கியவர்களுடைய ரசனையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அழகும், அற்புதமும் ஒருங்கே உருவான கலைப்படைப்பு.

  தாமரை இல்லப்பெண்களுக்குண்டான விழிப்புணர்வு பற்றி அறிந்து நானும் மகிழ்ந்தேன், யஷ். பி.எட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்குப் பாராட்டும் மகிழ்வான செய்தியை நம்மிடம் பகிர்ந்துகொண்ட திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றியும்.

Comments are closed.