சில்லுனு ஒரு அரட்டை

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

எல்லோரும் நலமாயிருக்கீங்கதானே?

கையில சுடச்சுட (நானே செய்த!!) பால்கோவாவோட உங்களுடனான அரட்டைக்கு நான் ரெடி, நீங்க ரெடியா?

இந்த வாரம் என்னுடைய அரட்டை கொஞ்சம் நீளமா இருக்கப்போகுது. இப்பவே முன்னெச்செரிக்கை செய்துடறேன். இதைப் படிச்சுட்டு ஒவ்வொருத்தரும் தங்களுடைய பள்ளி நாட்களுக்கு போயிட்டு திரும்பி வர முடியலைன்னு கம்ப்ளையிண்ட் பண்ணா அதுக்கு நான் கண்டிப்பாக பொறுப்பில்லை.. சொல்லிட்டேன். ஏகத்துக்கு பில்டப் குடுத்தாச்சு, இதுக்கு மேலே விஷயத்தை சொல்லலேன்னா முட்டை, தக்காளி எல்லாம் வர வாய்ப்பிருக்கு.

இந்தியாவின் இந்த வார ஸ்பெஷல் ‘ஆசிரியர்கள் தினம்’. பல்வேறு நாடுகளிலேயும் வெவ்வேறு தினங்களிலே ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து செப்டம்பர் மாதம் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடும் நாடுகள் – அர்ஜென்டீனா (செப். 11), புருனே டருஸ்ஸலாம் (செப். 23), சீனா (செப். 10), ஹாங்காங் (செப். 10), சிங்கப்பூர் (செப். மாதத்தின் முதல் வெள்ளி), தைவான் (செப். 28). அதேபோல் ‘உலக ஆசிரியர் தினம்’ அக்டோபர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

எப்படி நம்முடைய கல்லூரி நாட்களை மறக்க முடியாதோ அதே மாதிரி நம்முடைய பள்ளி நாட்களையும் மறக்க முடியாது. பள்ளி நாட்கள்ல நடந்த அத்தனையும் நினைவில் இல்லேன்னாலும் சில விஷயங்கள் மனசுல பசுமையா அப்படியே பதிவாகியிருக்கும். பள்ளி நாட்கள் பற்றி நினைத்தாலே என்னுடைய நினைவில் தோன்றும் முதல் பெயர் வசந்த கோகிலம் டீச்சர். இப்பவும் வசந்த கோகிலம் ஆசிரியை என்னை பார்க்கும்போதெல்லாம் "என்ன யஷ், அடுத்த அறைக்கு வாசல் வழியாப் போறியா இல்லை.. முன்ன மாதிரி தாவித்தாவிதான் போறியா?"ன்னு கேலி செய்யறதுண்டு.

விஷயம் இதுதான். நான் எல்.கே.ஜி படிக்கும் போது வகுப்புகளுக்கிடையே மூங்கில் மரத்தட்டிகளின் உதவியுடன் தடுப்புகள் வச்சிருந்தாங்க. வகுப்பிலே நான் ஒரு இடத்தில் அமைதியா, சமத்தா இருக்கிற ஆள் கிடையாதாம். நிறைய குறும்புகள் செய்ததுண்டாம். அடுத்து நான் செய்த ஒரு விஷயத்துலதான் வசந்த கோகிலம் டீச்சர் பயந்துட்டாங்க. என்னுடைய வகுப்பறையிலிருந்து அடுத்த வகுப்பறைக்கு மரத்தட்டி மேலே ஏறிப்போனா யாருதான் பயப்படமாட்டாங்க. (நம்முடைய மூதாதையர்களின் பாதிப்பு ரொம்பவே இருந்திருக்கு போல!) இந்த விஷயத்தை டீச்சர் எங்க அம்மாவிடம் போட்டுக் கொடுத்திட்டாங்க. அப்புறமென்ன வீட்டுக்கு வந்து ஏகப்பட்ட அர்ச்சனை, அறிவுரை!! இது நடந்தென்னவோ பல வருஷங்களாச்சு. இப்பவும் அக்கம்பக்கமிருக்கும் குழந்தைகள் யாராவது ரொம்ப ரகளை செய்யறதா என்னோட அம்மாகிட்டே புகார் செய்தா உடனே என்னுடைய புராணத்தைப் பாட ஆரம்பிச்சுடறாங்க.

பள்ளியில் எனக்கு ஹிந்தி, சமஸ்க்ருதம் (பாடத்திட்டங்கள்ல இருந்ததால) மொழிகளின் அறிமுகம் கிடைச்சுது. பள்ளியின் தொடர்பு விட்டுப்போனாலும் இன்றைக்கும் நான் கற்ற ஹிந்தி, சமஸ்கிருத மொழிகள் நினைவிலிருக்கு. மொழி தெரியாத மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது நான் கற்ற ஹிந்தி மொழி கைகொடுக்கும்போது, ஹிந்தி கற்று தந்த கீதா டீச்சர் கட்டாயம் நினைவுக்கு வருவாங்க.

10ஆம் வகுப்பு வரை எங்களுக்கு அறிவியல் சொல்லிக்கொடுத்த விஜயலக்ஷ்மி டீச்சரை சில மாதங்களுக்கு முன்பு சாலையில் எதேச்சையா சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. பிள்ளைகளின் மனநிலைக்கேற்ப பாடம் நடத்துவது எப்படீன்னு விஜயலக்ஷ்மி டீச்சர் டாக்டரேட் பட்டம் வாங்கியிருப்பாங்களோன்னு நான் பலமுறை யோசித்ததுண்டு. அதுவரை கணிதம் மட்டுமே என்னுடைய விருப்பப்பாடமாயிருந்தது. விஜயலக்ஷ்மி டீச்சரால் அறிவியலும் என்னுடைய விருப்பப்பாடமானது.

தீபாவளி விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு இஷ்டமேயில்லாம போகும்போது மற்ற டீச்சர்களெல்லாம் பாடங்கள் நடத்துவாங்க. ஆனால் எங்கள்ல ஒருத்தருக்குக்கூட பாடத்துல கவனமிருக்காது. டீச்சர் யாருக்கோ பாடம் நடத்துவது போலிருக்கும். ஆனால் அறிவியல் பாட நேரத்தின்போது ஏக ஜாலியாயிருப்போம். ஏன்னா விஜயலக்ஷ்மி டீச்சர் பாடம் நடத்தமாட்டாங்க. என்ன மாதிரியான பட்டாசுகள் வெடிச்சோம், எப்படியெல்லாம் கொண்டாடினோம்னு எங்க எல்லோரையும் கேட்பாங்க. எங்க எல்லோருக்கும் ஏகப்பட்ட குஷியாகிடும். ஒவ்வொருத்தரும் நான் இந்த பட்டாசு வெடிச்சேன், அந்த பட்டாசு வெடிச்சேன், இந்த திரைப்படம் பார்த்தேன்னு எங்களுடைய புராணத்தை ஆரம்பிச்சுடுவோம். இந்த மாதிரியான நேரங்கள்ல மட்டுமில்லாம படிப்பு சொல்லித்தரும் நேரங்கள்லேயும் அன்பான தோழியா விஜயலக்ஷ்மி டீச்சர் இருந்தாங்க.

11ஆம், 12ஆம் வகுப்புகளில் கணிதத்தில் எனக்கிருக்கும் ஆர்வமறிந்து ஊக்குவித்த குணசேகரன் சார் மற்றும் பேச்சியம்மாள் டீச்சர், ‘எல்லாப்பாடங்களையும் நல்ல மதிப்பெண் வாங்க முடியும்போது என்னுடைய பாடத்தில் மட்டும் மதிப்பெண் குறையக் காரணமென்ன?’ என்று அக்கறையுடன் விசாரித்து வழி நடத்திய தாவரவியல் வசந்தி டீச்சர் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

இங்கு குறிப்பிட்ட ஆசிரியைகள் மட்டுமில்லாமல் என்னுடைய பள்ளி நாட்களை என்னுடைய வாழ்நாளின் மிகச் சிறந்த நாட்களாக மாற்றிய அனைத்து ஆசிரியைகளுக்கும் என்னுடைய நன்றியையும், ‘ஆசிரியர் தின’ வாழ்த்தையும் தெரிவிச்சுக்குறேன்.

என்னோட தோஸ்த் பிறந்த நாளை செம ஜாலியா கொண்டாடினோம். நீங்களும் கொண்டாடினீங்களா? என்னுடைய தோஸ்த்துனு நம்ம பிள்ளையாரைத்தாங்க சொல்றேன். ‘பிள்ளையார் சதுர்த்தி’க்கு முந்தின நாள் பிள்ளையார் வாங்குவதற்காக கடைவீதிக்கு போயிருந்தப்போ அங்கேயிருந்த விதவிதமான பிள்ளையார்களை (எப்பவும்போல) படமெடுத்திட்டிருந்தேன். (எங்கம்மா பாஷையில சொன்னா ‘__________ கெட்டா குட்டிச்சுவரு’!) அப்போ அந்தக் கடையில் இருந்தவங்க இந்த விக்ரஹங்களோட எங்களையும் படமெடுப்பீங்களான்னு கேட்டாங்க. அவங்க அவ்வளவு ஆசையா கேட்கும்போது என்னாலே மறுக்க முடியலை. தாய், தந்தை, மகள்ன்னு மூணு பேரும் எவ்வளவு நல்லா போஸ் குடுக்கிறாங்க பாருங்க.

கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வரலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு அம்சங்களில் விளம்பரப் படங்களுக்கென்று ஒரு தனி ஈர்ப்பு எப்போதுமே உண்டு. ஒரு நிமிடத்தைவிட குறைவான நேரமே வரும் இந்த விளம்பரப் படங்களை உருவாக்கிடும் விளம்பரக் குழுவினரின் உழைப்பை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும். (அதுக்காக திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் சமயத்தில் ஒரே மாதிரியான விளம்பரப்படங்கள் திரும்ப திரும்ப வரும் சமயங்களில் மற்றவர்களைப் போல எனக்கும் எரிச்சல் ஏற்படுவதுண்டு!) சமீபத்துல ஒளிபரப்பான கேட்பரி நிறுவனத்தின் ‘பார்ன்வில்லே’ சாக்லேட்டின் விளம்பரத்தை ரசிச்சுப் பார்த்தேன். ‘பார்ன்வில்லே’ சாக்லேட்டின் உற்பத்தியில் பங்கு பெறமுடியாத ஒரு கொக்கோவின் வருத்தத்தை கிராபிக்ஸின் உதவியுடன் அருமையா படம்பிடிச்சிருக்காங்க. மொத்தம் 46 விநாடிகளே வரும் இந்த விளம்பரப் படத்தை பார்க்கும்போது கண்டிப்பா உங்களுடைய டென்ஷன் குறைந்து உங்களுடைய முகத்தில் ஒரு புன்முறுவல் வரும்.

http://www.youtube.com/watch?v=ak_yDVFqRwk

சரிங்க.. நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

12 Comments

 1. Yash

  எங்கடா ரொம்ப நாளா ஆளைக் காணலியேன்னு பார்த்தேன். வாங்க… வாங்க…

 2. யாகவா

  நல்ல விளம்பரம், ஆனா எனக்குதான் சரியா புரியவில்லை. கொஞ்சம் பிகுபண்ணாம மொழிபெயர்க்குறது…!

 3. Yash

  இதுல பிகு செய்ய எதுவுமே இல்லை. சரியா சொன்னீங்க”ன்னு மாலீக் சொன்னதுக்கு நான் ” நன்றி மாலீக்”ன்னு சொல்லியிருக்கேன். அவ்வளவு தான் விஷயம்.”

 4. யாகவா

  இல்லை, நான் கேட்டது அந்த கடைசில இருந்த யு-டியுப் விளம்பரத்தப் பற்றி….ஒக், ளெஅவெ இட்!

 5. Yash

  ஓ அதுவா… வரும் வார அரட்டையில மொழிபெயர்த்து சொல்லிடறேன்.

 6. கீதா

  ஆசிரியர் தினத்தின்போது அழகா உங்க மலரும் நினைவுகளைப் பகிர்ந்து எல்லா ஆசிரியர்களுக்கும் நன்ரி சொல்லியிருக்கீங்க. உங்கள் தயவால் நானும் கொஞ்சநேரம் என்னுடைய பள்ளி வாழ்க்கைக்கு சென்று திரும்பி வந்தேன். என்னுடைய ஆசிரியர்களுக்கும் மனதார நன்றி செலுத்தினேன். நன்றி யஷ்.

Comments are closed.