சுப்ரமணியபுரம் முகவரி சொல்லும்” – இயக்குனர் சசிகுமாருடன் ஒரு நேர்முகம்”

"சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி; உலக சினிமாவில் இடம்பெறும் முயற்சி; ஆஸ்கார் விருது" இப்படி எந்த அறிமுகமும் தேவை இல்லை இயக்குனர் சசிகுமாருக்கு. ரசிகனை மட்டுமே இலக்காக்கி தனது முதல் படம் சுப்ரமணியபுரம் மூலம் படு யதார்த்தமாய் கிராமத்து வாழ்க்கையில் வாழ்ந்திருக்கிறார் இயக்குனர்.

சினிமாக் கனவை சுமந்து கொண்டு மதுரையிலிருந்து பஸ் ஏறிய இயக்குனர் பாலா மற்றும் அமீர் வரிசையில் இப்போது சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார். தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் மனசுக்குள் சந்தோஷம், துக்கம், பாசம் இப்படி ஆயிரம் மத்தாப்புச் சிதறல்களாய் உணர்வுகள் எல்லோருக்கும் வந்து போகும். ‘சிட்டியில வளர்ந்தவங்க கிராமத்து வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டோமேனும், கிராமத்துல உள்ளவங்க இவ்வளவு அழகான வாழ்க்கையையா வாழ்ந்துகிட்டிருக்கோம்னு’ யோசிக்க வைக்கிற படம் சுப்ரமணியபுரம்.

சுப்ரமணியபுரம் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் சுப்ரமணியபுரம் உருவான கதையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

உங்க முகவரி?

மதுரை என்னோட ஊர். படித்ததெல்லாம் கொடைக்கானலில். அப்பதான் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு நண்பரானார். 8 வது படிக்கும் போதே நான் சினிமாவுக்கு வரணும்னு முடிவு பண்ணிட்டேன். நான் சினிமா டைரக்ட் பண்ணுற படத்துக்கு ஜேம்ஸ் வசந்தன்தான் மியுசிக் டைரக்டர்னு ஜேம்ஸ் வசந்தனும், நானும் ஸ்கூல்லயே ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம்.

ஸ்கூல் முடிச்சிட்டு தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா எங்க வீட்டில கண்டிப்பா நீ பிபிஏ தான் படிக்கணும்னு மதுரை ஏசியன் காலேஜ்ல சேர்த்து விட்டாங்க.. புடிக்காத பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன சந்தோஷம் இருக்கும்? அப்படித்தான் போனது என்னோட கல்லூரி காலம்.

எங்களுக்கு மதுரையில ஜவுளிக் கடை, புத்தகக் கடை எல்லாம் இருக்கு. அதனால் புள்ளை படிச்சிட்டு பிசினஸ் பக்கம் போவான்னு படிக்கச் சொன்னாங்க. எனக்கு நினைப்பெல்லாம் சினிமாதான். காலேஜ் முடிக்கும் போது எங்க சொந்தக்காரர் கந்தசாமி ‘சேது’ படத்தைத் தயாரிச்சார். அவர் சொல்லி பாலா அண்ணன்கிட்ட என்னை சேர்த்து விட்டார். அப்போதான் பாலா அண்ணன்கிட்ட அமீர் அண்ணன் அசிஸ்டென்டா வேலை பார்த்தார். அமீர் அண்ணன் ‘மௌனம் பேசியதே’ பண்ணும் போது நானும் அமீர் அண்ணன் கூடவே வந்துட்டேன். அடுத்து ராம் படத்துலயும் நான் அவர் கூடதான் வேலை செஞ்சேன். பிறகு தனியா படம் பண்ணலாம்னு யோசிச்ச போதுதான் ‘சுப்ரமணியபுரம்’ கதை ரெடியானது.

இந்தக் கதை பண்ணுறதுக்கான காரணம்?

இந்த கதையை முதலில் அமீர் அண்ணன் கிட்ட சொன்னேன். எல்லோருமே ரவுடியிசம் கதைதான் பண்றாங்க. நீ வேற கதை பண்ணுனு சொன்னார். ஆனா நான் உறுதியா இருந்தேன். பண்ணினா இந்த கதைதான் பண்ணனும். அதுல எது கிடைச்சாலும் ஓகே. அதுக்கப்புறம் என்னோட முடிவை மாத்திக்கிறேனு ரொம்ப உறுதியா இருந்தேன்.

எல்லோருமே ரவுடியிசம் படம் பண்றாங்க… அது எல்லாமே ஸ்டீரியோ டைப்பா, மாஸ் மட்டும்தான் அந்த ரவுடியிசத்துல இருக்கும். ஆனா கிராமத்துல வளர்ந்து வர்ற ஒருத்தன் எப்படி ரவுடியா இருப்பானு அவன் சூழ்நிலைக்கு ஏற்பதான் சொல்லணும். அவனுக்குப் போய் கூட பத்து ஆள், மாஸ் கெட்டப், டயலாக்னு வச்சா நல்லாயிருக்காது. கிராமத்துல ஒருத்தன் ரவுடியானால் லைவ்வா இப்படித்தான் இருப்பான்னு சொன்னதுதான் இந்தக் கதையோட பிளஸ். இல்லைனா ஒரு கொலையை எழுந்து நின்னு கைதட்டி ரசிக்க மாட்டான் ஒரு ரசிகன். நான் ரசிகனை மட்டும்தான் நினைச்சு படம் பண்ணேன். நம்பிக்கை துரோகத்தின் ஆழத்தைத் தொட்ட திருப்தி ஒவ்வொரு சீன்லயும் ரசிகனின் கைதட்டலில் தெரிந்தது.

படம் பார்த்துட்டு உங்க குருநாதர்கள் என்ன சொன்னாங்க?

பாலா அண்ணன் படம் பார்த்துட்டு வெளில வந்தாரு… நான் அவர் பேரை காப்பாத்திரணும்; கெடுத்துரக் கூடாதுனு பயத்தோட நின்னேன். என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தார் பாலா அண்ணன். ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு நல்ல சினிமா பார்த்த திருப்தி இருக்குன்னார். "நல்லா வருவடா"னு சொன்னது அவர் மனசிலேர்ந்து வந்த வார்த்தைங்கிறது எனக்குத் தெரிஞ்சது. எனக்குப் பிழைச்சுடுவோங்கிற தைரியம் வந்தது.

அமீர் அண்ணன் வந்தார். ஏற்கெனவே எங்க ஒளிப்பதிவாளர் கதிர் சார்கிட்ட ‘அமீர் அண்ணன் படம் பார்த்துட்டு உங்களைப் பார்த்துப் பேசினா படம் நல்லாயிருக்கு புடிச்சிருக்குனு அர்த்தம். என்னைப் பார்த்து பேசினா படத்துல ஏதோ குறையிருக்குனு அர்த்தம்’னு சொன்னேன். அதே மாதிரி படம் பார்த்துட்டு அமீர் அண்ணன் எங்க ஒளிப்பதிவாளரப் பார்த்துத்தான் படம் நல்லாயிருக்குனு சொன்னார். எங்க என்னைப் பார்த்துப் பேசிடுவாரோனு ஒரு பயம் இருந்தது. கிராமத்துப் பக்கம் அண்ணன் தம்பி நேருக்கு நேர் பாராட்டிக்க மாட்டாங்க. மற்றவங்க கிட்ட போய்தான் என் தம்பி நல்லா செஞ்சிருக்கானு சொல்வாங்க. அந்த மாதிரியான புரிதல்தான் எனக்கும் அமீர் அண்ணனுக்கும்.

படத்துல உங்களுக்கு ரொம்ப பிடித்த சீன்?

ஹீரோயின் அழுகிறத லாங் ஷாட் வச்சிருப்பேன். இவ்ளோ நேரம் அழுகிற சீன் வச்சா எல்லோரும் டென்ஷன் ஆயிடுவாங்கனு எல்லோரும் சொன்னாங்க. டென்ஷன் ஆகணும்; தியேட்டர்ல வெறுப்புல நிறைய கமண்ட்ஸ் வரணும்னுதான் அந்த சீன் வச்சேன். ஏன்னா அப்பதான் அடுத்த சீன்ல ஹீரோயின் கொடுக்கிற ஷாக் ரசிகர்களுக்குக் கொடுத்த மாதிரி அப்படியே உட்கார வைக்கும். அந்த சீன்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச சீன். அந்த சீன்ல ஹீரோ, ஹீரோயின், சமுத்திரக்கனி மூணு பேரும் சரியா பண்ணிட்டாங்க. அடுத்து நான் பண்ற சீன்… டைரக்டர் கோட்டை விட்டுட்டாருனு சொல்லிடக் கூடாதுல. ஏன்னா அந்தளவுக்கு சூப்பரா அவங்க மூணு பேரும் பண்ணியிருப்பாங்க. அடுத்து என்னோட சீன் பண்ணும் போது அந்த பயம் இருந்தது.

ஆர்டிஸ்ட வேலை வாங்குறதுக்கு ஒவ்வொரு டைரக்டரும் ஒரு பார்மூலா வச்சிருப்பாங்க? நீங்க…?

நான் ஆர்டிஸ்ட்கிட்ட முழு கதையையும் சொல்ல மாட்டேன். அடுத்த சீன் என்னனு சொல்ல மாட்டேன். ஷாட் வைக்கும் போது மட்டும்தான் சொல்லுவேன். ஹீரோயின்தான் ஹீரோவ காட்டிக் கொடுக்கப் போறானு சொன்னதும் அந்தப் பொண்ணு மிரண்டுச்சு… ஆனா அதை அந்த சீன் வைக்கும் போதுதான் சொன்னேன். கதையை முன்னாடியே சொல்லியிருந்தா… ஆரம்பத்துல அவங்க இரண்டு பேருக்கும் இருந்த காதல் அவ்வளவு லைவ்வா கிடைச்சிருக்காது. கண்டிப்பா நம்மளை காட்டிக் கொடுக்கப் போறாங்கிற நினைப்போடுதான் அந்த சீன் பண்ணியிருப்பார் ஹீரோ.

முதல் படத்துலயே தயாரிப்பாளர், டைரக்டர், ஆக்டர்னு இத்தனை அவதாரம்?

இயக்குனராகனுங்கிறது மட்டும்தான் என்னோட திட்டம். 80ல் உள்ள கதையில கதாபாத்திரம்னு சொன்ன போது யாரும் முன்வரலை. ஒரு ஹீரோகிட்ட சொன்னேன். அவர் ஹீரோவா நடிச்ச படம் வெளிவந்ததும் இந்த படம் பண்ணலாம்னு அவர் அப்பா சொன்னார். எனக்கு அவ்வளவு நாள் காத்திருக்க முடியாதுனு நானே பண்றதா முடிவு பண்ணிட்டேன். முதல் படம் சுட்டாலும் நமக்குத்தான்; யாருக்கும் பதில் சொல்லத் தேவை இல்லை. நம்ம பணத்தை தொலைக்கிறதை விட அடுத்தவங்க பணத்தை தொலைச்சா டபுள் வலி. அதனாலதான் நானே தயாரிப்பாளரா இறங்கிட்டேன். இந்த படம் தோல்வி அடைஞ்சா எவ்வளவு இழப்பு; அதை எப்படி சரி செய்வேன்; இப்படி எல்லாமே யோசிச்சு லிஸ்ட் ரெடி பண்ணிட்டுதான் படமே எடுத்தேன்.

முதல் படம் ஹிட் கொடுத்தாச்சு.. அடுத்த முயற்சி?

நிறைய பேர் என்னை நடிக்க கூப்பிடறாங்க… ஆனா எனக்கு நடிக்க விருப்பமில்லை. சமுத்திரக்கனிக்கு மட்டும் ஒரு படம் பண்றேன். அடுத்து நானே அடுத்த படம் பண்ணப் போறேன். ஆனா இப்பதான் பயமா இருக்கு. இன்னொரு முறை சுப்ரமணியபுரம் எடுக்க முடியாது. ஆனா தியேட்டருக்கு வர்ரவங்க இந்த பிம்பத்தைத்தான் தூக்கிட்டு வருவாங்க. அதான் என்னோட பயம்.

இப்பவே வெற்றினு போஸ்டர் அடிச்சு எல்லோரும் ஒட்டச் சொன்னாங்க. நான் செய்யல. வெறும் பட போஸ்டர் மட்டும்தான் எங்கயும் இருக்கும். நாளைக்கு படம் எடுக்கும் போது சுப்ரமணியபுரம் புகழ்னு போட விரும்பல. இதோட இந்த வெற்றியும் முடிஞ்சிடுச்சு. ஏன் மக்கள் எனக்கு இவ்வளவு வரவேற்பு கொடுத்தாங்கனு வேற உதறல் உள்ள இருந்துகிட்டே இருக்கு. என் குடும்பத்தோட ஒத்துழைப்புதான் என்னை இந்த இடத்துல கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு.

அதென்ன சுப்ரமணியபுரம்… உங்க ஊரா?

மதுரையில நிறைய ஊர் பேர் இருக்கு. அந்த ஊர் எதையாவது நான் வச்சா அது மதுரை சார்ந்த விஷயமாயிடும். சுப்ரமணியபுரம் என்ற பேர்ல எல்லா மாவட்டத்துலயும் ஒரு ஊர் இருக்கு. அதனாலதான் இந்தப் பேர் வச்சேன்.

(நன்றி : தினமலர்)

About The Author

7 Comments

  1. karthikeyan

    மதுரை மண்ணிற்க்கு கிடைத்த வெற்றி

  2. chithra

    சுப்ரமனிஅபுரம் இச் வெர்ய் சுபெர் வெர்ய் fஅன்டச்டிc தன்க்ச் fஒர் டிரெcடொர் சசி குமர்

  3. anbalagan

    பேட்டி மிக அருமை. ஒரு போட்டோ இடம் பெற்றிறுந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Comments are closed.