சூர்யா (2)

இளைஞர் நற்பணி மன்றம் என்றது வாசலில் இருந்த தட்டி. கீற்றுக் கொட்டகையினுள் தினசரிகளைப் படித்தபடி சில பெரியவர்கள். மேஜை, நாற்காலி என்று மூலையாக அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.

"வாடா பாலு… வாங்க ஸார்…"

"என்ன கணேஷ்… போஸ்டர் ரெடியா…"

"என்ன எழுதணும்னு… நீ சொல்றேன்னு சொன்னே… அதுக்குள்ளே… உங்க வீட்டுல இப்படி…"

"…ப்ச்… அதை விடு… நீயே ஏதாவது டிரை பண்ண வேண்டியதுதானே! பிரச்னை என்னன்னு தெரியும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிங்க மனசுல பதிய வைக்கணும். பொது மக்கள் கவனத்தையும் கவரணும். யாரையும் தூண்டி விடாமே… மனசு புண்படாதபடி… எழுத வேண்டியதுதானே…"

"இதோ பாரு… ஒண்ணு எழுதி வைச்சிருக்கேன்…" என்று ஒரு காகிதத்தை நீட்டினான்.

படித்துவிட்டு பாலு திருப்பிக் கொடுத்தான்.

"இது வேணாம். இந்த வரியை மட்டும் மாத்தி எழுதச் சொல்லிரு. ஈவினிங் மறுபடி வரேன்… மணி, சுந்தர் எல்லாம் போயிட்டாங்களா…"

"…ம்… நேத்து பாதிதான் கிளீன் பண்ண முடிஞ்சுது… அந்தத் தெரு ஆட்களும்
சேர்ந்துக்கிட்டாங்க… குப்பைத் தொட்டி ஐடியாவை அவங்களும் ஏத்துக்கிட்டாங்க…"

"யெஸ்… எல்லோருக்கும் அந்த அவர்னஸ் வந்திருச்சுன்னா போதும்…"

சிறுவன் ஒருவன் வேகமாய் ஓடிவந்தான்.

"…அண்ணே… ஒரு குழந்தையை யாரோ குப்பைத் தொட்டில போட்டுட்டுப் போயிட்டாங்க…"

"…எங்கேடா…"

"…நேதாஜி தெருவுல…"

பாலு சைக்கிளை வேகமாய் அழுத்தினான். பின் சீட்டில் ராஜன். இந்த ஒரு மணி நேரத்தில் சுய துக்கம் மறந்து ஒருவித பரபரப்பு ஆட்கொண்டிருந்தது. இடையிடையேதான் மெல்லிய முனகல் மனசுக்குள் கேட்டது.

தொட்டியைச் சுற்றி இருபது, முப்பது நபர்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய். எல்லோர் முகத்திலும் அரவம்…

பாலு அவசரமாய்க் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போனான்.

பிறந்த சிசு. கண் மூடிப் படுத்திருந்தது. வாழை இலை ஒன்றின் மேல் விடப்பட்டிருந்தது. சுள்ளெரும்புகள் மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தன. அவசரமாய் வாரித் தூக்கினான். மேலே ஒட்டியிருந்த குப்பைகளைத் தட்டிவிட்டான்.

"…குழந்தை யாருதுங்க…"

கூட்டம் மொத்தமும் தெரியாதென்று தலையாட்டியது.

"…ஏம்மா… நீயும் புள்ளையப் பெத்தவதானே… அட… புள்ளை யாருதுன்னு தெரியாட்டியும் போவுது… எடுத்து நிழல்ல வச்சிருக்கலாமில்ல…" என்றான் பாலு ஆற்றாமையுடன்.

"…நல்லா இருக்கே… நீ சொல்ற நியாயம்! எவ பேட்ட புள்ளையோ… கண்ட சிறுக்கிக்கு பிறந்ததை எல்லாம் எங்க ஊட்டுல சேர்க்க முடியாதுப்பா…"

"உங்களை என்ன… எடுத்தா வளர்க்கக் சொன்னேன்… கொஞ்சம் பத்திரமா வச்சிருக்கக் கூடாதுன்னுதானே கேட்டேன்…"

"…யோவ்… எங்கேய்யா போனான் எம் புருசன்… இந்தாளு என்ன கேட்கிறான் பார்த்தியா… கேட்டுக்கிட்டு கம்முனு இருக்கியே…"

அந்தப் பெண்மணி ஆவேசமானாள். பாலு மனசுக்குள் கொஞ்சம் நொறுங்கிப் போனான். குழந்தை மெல்லக் கண் திறந்து சிணுங்கியது.

கணேசன் பாலுவின் தோளைத் தொட்டான். "போலிசுக்குச் சொல்லிரலாமா…"

"…ம்… அதுக்கு முன்னால… இதன் பசிக்கு எதாவது…"

"இங்கே என்ன கொடுக்கறது…"

ராஜன் இதுவரை மெளனமாக நின்றவன் கை நீட்டினான். "என்கிட்டே கொடு பாலு”
புரிந்தது பாலுவுக்கு. "…எ…என்ன ராஜன்…"

"…அனு கொடுப்பா… வா சீக்கிரம் போகலாம்… அப்புறம் மத்த விவரமெல்லாம் பார்த்துக்கலாம்…"

பாலுவும் ராஜனும் குழந்தையுடன் கிளம்பிப் போனார்கள்.

"…எம்மா… குழந்தையை விட்டுட்டுப் போயிட்டா… குப்பை தொட்டில… யாரு செஞ்சாங்க…" சிறுமி .

"எவளோ செஞ்சா… நீ பேசாமே போடி…" என்றாள் அதன் தாய் எரிச்சலுடன்.

"…இவங்க எடுத்துக்கிட்டு போறாங்களே… என்ன செய்வாங்க…" என்றது
மறுபடியும்.

"…சனியனே… வாயை மூடிக்கிட்டு… இருக்க மாட்டே…” சைக்கிளில் ஏறப் போனவன் கீழே இறங்கினான் கணேசன்.

"…பாப்பா… இங்கே… வா…" தயங்கி அருகில் வந்தது.

"உனக்கு அம்மா… அப்பா இருக்காங்க… அவங்க உன்னைப் பார்த்துப்பாங்க… இல்லையா… பாவம்… அந்தக் குழந்தைக்கு யாரும் இல்லே… அதனால தான்… நாங்க எடுத்துக்கிட்டுப் போய்… வளர்க்கப் போறோம்…"
புரிந்தவள் போல தலையாட்டியது.

"…ஏய்… இங்க வாடி… அங்கெ என்ன பேச்சு. இவனுகளுக்கு வேற வேலை இல்லை… எடுத்து வளர்க்கிறானுவளாம்… அப்புறம்… அவ… அவ பெத்துப் போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பா…"

கணேசன் சிரித்துக் கொண்டான். மெல்ல… மெல்லத்தான் மனமாற்றங்கள் நிகழும். அது வரை இம்மாதிரி இயக்கங்கள் தேவைப்படத்தான் செய்யும். அதை இப்போது இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.

"என்ன குழந்தை அது…" என்றது கூட்டத்தில் ஒரு குரல்.

"என்ன…"

"இல்லே… ஆம்பளைப் புள்ளையா… பொட்டைப் புள்ளையான்னு கேட்டேன்…"

"சூர்யா" என்றான் ராஜன்.

குழந்தையை அனு அருகே படுக்க வைத்திருந்தாள்!

About The Author

1 Comment

Comments are closed.