செந்தூரம்

"செந்தூரம் உங்ககிட்டே பேசணும்னு சொன்னாள்" என்றாள் என் மனைவி.

ஆபீசிலிருந்து அப்போதுதான் வருகிறேன்.

"வேலைக்கு வந்துட்டாளா?" என்றேன் ஆச்சர்யமாய்.

"நாளைலேர்ந்து வருவாளாம். வந்து சொல்லிட்டு உங்ககிட்டேயும் பேசணும்னா."

எங்கள் அபார்ட்மெண்ட்ஸின் பொது வேலைக்காரி செந்தூரம். அவள் கணவன் தவறிப்போய் பதினைந்து நாட்களாகின்றன. அவனும் இங்குதான் வேலை பார்த்தான். பெரிய குடிகாரன். அவனை இரவு வாட்ச்மேனாக வேலையில் சேர்த்துவிட்டதே செந்தூரம்தான்.

"அய்யா… வாட்ச்மேன் வேலைக்கு ஆள் தேடறீங்கன்னு கேள்விப்பட்டேனுங்க" என்றாள் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒருநாள்.

"ஆமா. சரியா ஆள் அமையலே."

"எங்க வூட்டுக்காரர்கூட சும்மாதான் இருக்காருங்க"

"அவனா…" என்றேன் என்னையும் மீறி.

செந்தூரத்தைப் பொது வேலைக்கு வைத்துக் கொண்டதும் ஒருநாள் மருதையன் வந்தான்.

"அய்யா… அம்பது ரூபா கொடுங்க. செந்துவோட சம்பளத்துல முன்பணமா" என்றான்.

"முன்பணம் கொடுக்கற வழக்கம்லாம் கிடையாது" என்றேன்.

"குழந்தைக்கு காயுதுங்க. அவதான் கேட்டு வாங்கியாரச் சொன்னா."

கொடுத்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது. பொய் சொல்லி வாங்கிப் போயிருக்கிறான். குடிக்கத்தான் அந்தப் பணம்.

"அவரு கேட்டா இனிமேல கொடுக்காதீங்க" என்றான்.

அதற்குப் பின் ஒருமுறை குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்தான்.

"செந்து… வெளியே வாடி"

செந்தூரம்மறைந்து நின்று எப்போதோ அவள் வீட்டுக்குப் போய்விட்டதாகச் சொல்லச் சொன்னாள்.

சொன்னதும் அதற்கும் ஒரு இரைச்சல்.

"வூட்டுல போய்ப் பார்ப்பேன். இல்லேன்னா திரும்ப வருவேன் "

மிரட்டிவிட்டுப் போனவன் பாதி வழியிலேயே தடுமாறிச் சாய்ந்து விட்டானாம். போதை.

அவனையா? இரவுக் காவலுக்கா?

"இல்லீங்க. இப்ப ரொம்ப பொறுப்பா மாறிட்டாருங்க" என்று கெஞ்சியவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
.
இரவுக் காவலுக்கு வைத்துக் கொண்டோம்.

முதல் மாதச் சம்பளம் கணிசமாய்க் கையில் வாங்கியதும் போனவன்தான். ஒரு வாரம் ஆளையே காணோம்.

எட்டாவது நாள் திரும்பி வந்தான்.

"மன்னிச்சுருங்கய்யா. இனிமேல குடிக்க மாட்டேன்."

செந்தூரத்தின் கெஞ்சல் வேறு.

‘இனிமேல் சம்பளப் பணத்தை ஒங்கையில் தரமாட்டேன். செந்தூரம் கையிலதான் தருவேன்’ என்றேன்.

தலையாட்டினான். அடுத்த மாதச் சம்பளம் செந்தூரத்திடம் தரப்பட்டது. அவனை மிரட்டி பாதிப் பணம் பறித்துக்கொண்டானாம். செந்தூரம் சொன்னதாக என் மனைவி சொன்னாள்.

"அதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும். அவ தலையெழுத்து" என்றேன் எரிச்சலாக.

விநோதமாய் அதன் பிறகு தவறாமல் வேலைக்கு வந்தான். பகலில் குடித்துவிட்டுக் கிடப்பானாம். கணவனாய், குடும்பத் தலைவனாய் எந்தப் பங்கும் செய்யாத மனிதனை வைத்துக் கொண்டு செந்தூரம் என்ன பாடுபட்டாளோ!

இப்போது அவனும் குடல் எரிந்து போய்விட்டான். குடி குடலை அரித்தேவிட்டது.

செந்தூரம் எதிரில் வந்து நின்றாள்.

"என்ன செந்தூரம் பாக்கணும்னு சொன்னியாமே…"

"அய்யா… வந்து…"

சும்மா தயங்காம சொல்லு" என்றேன்.

நல்ல வேலைக்காரி. மனசாட்சி விரோதம் இன்றி வேலை பார்க்கிறவள். கீழே தவறுதலாகப் ஏதேனும் போட்டுவிட்டால் கூட நாணயமாய் எடுத்துத் தருபவள். சொல்கிற வேலையோடு சொல்லாத கோணத்தையும் யோசித்துச் செயல்படுபவள்.

அவள் மீதிருந்த மதிப்புடன் கேட்டேன்.

"ராத்திரி காவலுக்கு ஆள் பார்த்திடீங்களா?"

"இல்லை. இதுவரை அமையலே. அதுவே பெரிய பிரச்னையா இருக்குது. இப்ப தினசரி ஒரு வீடா கேட்டு திறந்து மூடிகிட்டு இருக்கோம்."

"உங்களுக்கு மறுப்பு இல்லேன்னா. நான் பார்க்கிறேன்யா."

"என்னது…?"

திடுக்கிட்டுப் பொய் அவளைப் பார்த்தேன்.

"நீயா..? இல்லே செந்தூரம் – ராத்திரில காவல்னா அதுல என்ன மாதிரி பிரச்னை வருமோ? ஒரு ஆம்பளை ஆளுன்னா… சமாளிச்சு…"

நான் திணறினேன்.

செந்தூரம் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

"எங்க வூட்டு ஆம்பளை என்ன சமாளிச்சு குடும்பம் நடத்திச்சு? நாதாங்க மூண பொட்டப் புள்ளைகளையும் வச்சுகிட்டு அல்லாடறேன். ஒரு மாசம் பாருங்க. என் வேலைல எதாச்சும் குறை இருந்திச்சுன்னா சொல்லுங்க. அப்ப வேற ஆளு பார்த்துக்குங்க . நீங்க மனசு வச்சா நானும் மானத்தோடு எங்குடும்பத்தை வச்சுக் கப்பாத்திருவேங்க. புருஷன் நேரா அமையாம போனா பொட்டச்சி மனசுல தெகிரியம் வந்துருங்க. அவளே ஆம்பளையாகி எதையும் ஈடு கொடுத்து நிப்பா. அப்படித்தாங்க இப்ப நானும் மாறிட்டேன். எம்மேல நம்பிக்கை இருந்தா ஒரு தடவை கொடுத்துப் பாருங்கய்யா…"

மூச்சு விடாமல் பேசினாள்.

வாஸ்தவம்தான். ஆணென்ன, பெண்ணென்ன  திறன் கொண்டவரிடையே ஏது பேதம்?

சம்மதமாய்த் தலையாசைத்தேன்.

About The Author