சென்னையில் ஆக்ஸஸ் வகுப்புகள் – ஓர் அனுபவம்

சென்ற டிசம்பர் ஜனவரிக்குப் பின், ஆக்ஸஸ் வகுப்புகளை நடத்துவதற்காக மீண்டும் ஏப்ரலில் வந்திருக்கிறார் நிலா. மே மாதம் வரை வகுப்புகள் எடுக்கிறார். நிலாவுடனான ஜெயா டிவி நேர்காணலும், லண்டன் தீபம் டிவி நேர்காணலும் மக்கள் மத்தியில் ஆக்ஸஸ் பற்றிய விழிப்புணர்வை நன்கு ஏற்படுத்தியிருந்தது. நேயர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க வருகை தந்திருக்கும் நிலா, ஆக்ஸஸ் தொடர்பான சில அறிமுக வகுப்புகளும், பார்ஸ் வகுப்புகளும், சில மேல்நிலை வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

பயணத்தின் ஆரம்ப வகுப்பு நிலாவுக்கு மிகவும் பிடித்த, அவரது இதயத்திற்கு நெருக்கமான உட்கருவைக் கொண்டது. "Empowering babies" எனும் தலைப்பிலான கட்டணமில்லா இவ்வகுப்பு ஏப்ரல் 17 அன்று மாலை நுங்கம்பாக்கம் ஆஷா நிவாஸ் சமூக மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இது பெற்றோர்களுக்கெனவே தனிச்சிறப்பான வகுப்பாகும். மிகவும் நெருக்கமான உரையாடலாக இது அமைந்திருந்தது.

Access workshopகுழந்தைகளின் உலகம் என்றுமே அலாதியானது. அவர்களிடம் முன்முடிவுகளோ, மனத்தடைகளோ கிடையாது. இவ்வுலகத்தை அவர்கள் பார்க்கும் பார்வையே வித்தியாசமானது. நம்மைப் பெற்றோர்களாக அக்குழந்தைகள் தேர்ந்தெடுத்திருக்கின்றன என்றால் அவர்களது வாழ்க்கையில் நமது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும். இவ்வாறாக பல விஷயங்களையும் ஆழ்ந்து நோக்கிய வகுப்பாக அமைந்திருந்தது. வேறு பணிகள் காரணமாக வகுப்பினைத் தவறவிட்ட மகப்பேறு மருத்துவர் சாந்தி தம் பகுதி மக்களுக்காக மீண்டும் இதே தலைப்பில் வகுப்பு நடத்தித்தர வேண்டும் என்று கேட்டது நெகிழ்வைத் தந்தது.

அதே நாளன்று மாலை "ஆக்ஸஸ் அறிமுக பயிற்சி முகாம்" (Access Consciousness Introductory Workshop) நடந்தது. ஹீலிங் என்றால் என்ன, ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் என்றால் என்ன, உடல்நலம் மற்றும் மனநலம் உட்பட ஒரு ஒருங்கிணைந்த வாழ்வுநலத்திற்கு அதன் பயன்பாடு என்ன, வாழ்வின் சிக்கலான தருணங்களைக் கையாளுவதற்கு ஆக்ஸஸ் அளிக்கும் உத்திகள் என்னென்ன, வாழ்வுநலத்திற்காக ஏற்கெனவே நாம் உருவாக்கி வைத்திருக்கும் செயல்முறைகள் பலனளிக்காமல் போவது ஏன், என்பது உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிய தொகுப்பாகவும், சில உத்திகளை செய்து பார்த்து மேலும் அறிந்து கொள்வதாகவும் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. எளிமையான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆக்ஸஸ் பற்றி விளக்கிய நிலா, பலரது சுவையான கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஒன்றரை மணி நேரங்களுக்கும் மேலாக நிகழ்ந்த இந்த அறிமுக முகாம் இதுபோல மீண்டுமொரு நிகழுமா என வியக்கும்வகையில் நிறைவுற்றது.

Access workshopபின்னர் ஏப்ரல் 19 அன்றும் அதே நிகழ்விடத்தில், மூன்று வகுப்புகள் நடந்தன. "Expand your happiness with ease" மற்றும் "Expand your health with ease" ஆகிய தலைப்பிலான வகுப்புகள் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்பட்டன. பலரும் ஆர்வமுடன் பங்கேற்று, வாழ்வில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் விரிவாக்குவது பற்றியும், ஆரோக்கியமான உடல்நல மேம்பாட்டைப் பற்றியும் அறிந்து கொண்டனர். ஆக்ஸஸ் இதனை எவ்வாறு எளிமைப்படுத்துகிறது என்பது பற்றியும் நிலா விளக்கினார். பிரீத்தி, ராஜி, லக்ஷ்மி, ஜெயகுமார் உட்பட மற்றும் பலர் பங்கேற்றனர். ஜெயகுமார் அனைத்து வகுப்புகளிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டதோடு ஆக்ஸஸ் பார்ஸ் பாடங்களையும் கற்றுக்கொண்டு அசத்தினார். சந்தோஷம் பற்றிய பார்வையே ஒவ்வொரிடமும் ஒவ்வொரு விதமாக இருந்ததைக் காண முடிந்தது. அந்தப் பார்வைகள் எல்லாக் காலத்திலும் எல்லா நேரங்களிலும் ஒரே விதமான பலனைத் தருவதில்லை என்ற உண்மையையும் அறிய முடிந்தது. ஆக்ஸஸின் பார்வை வேறுவிதமான தளத்தில் இருப்பதையும் காண முடிந்தது.

மாலை ஆறரை மணிக்கு "Expand your talents, abilities and performance" எனும் தலைப்பில் நடந்த ஒன்றரை மணி நேர கட்டண வகுப்பில் பங்கேற்ற பலரும் மனதின் சிக்கல்கள் அவிழ்ந்த சந்தோஷத்துடன் விடை பெற்றனர். வகுப்பு போல அன்றி சுவையான உரையாடல் வடிவில் நிகழ்ந்த அந்த கணங்கள் மிகவும் அடர்த்தியாக அமைந்திருந்தன. சற்றும் இடைவெளியின்றி தொடர்ந்த இந்த வகுப்பு மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்தியது. மனதில் நாம் கட்டமைத்து வைத்திருக்கும் வாழ்வின் திறன்களைப் பற்றிய நமது கண்ணோட்டமும், அதனை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்களைப் பற்றிய நமது பார்வையும் கட்டுடையும் வகையில் உணர்வு பொங்க நடந்தது.

மனிதர்கள் தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட சிக்கலான முடிச்சுகள் மூலம் வாழ்வில் தமது திறன்களையும், சாத்தியங்களையும் முடக்கிக் கொண்டு வருகிறோம் என்பதை வகுப்பின் முடிவில் அனைவரும் உணர்ந்து கொண்டனர். நிகில், சபரீஷ் மற்றும் டாக்டர் சாந்தி ஆகியோரது சிறப்பான பங்களிப்பு, திறமைகள் மற்றும் திறன்களைப் பற்றிய புதிய கதவுகளைத் திறந்து விட்டன. நிகில் தனக்கேயுரிய நகைச்சுவை இழையோடும் பாணியில் மாற்றுக் கருத்துகளை முன் வைத்தார். அத்தனைக்கும் ஆக்ஸஸில் பதில் இருந்ததை தொடர்ந்த உரையாடலில் உணர முடிந்தது.

ஏப்ரல் 18 மற்றும் 21ம் தேதிகளில் சென்னை முகப்பேர் பகுதியிலும், நுங்கம்பாக்கத்திலும் ஆக்ஸஸ் பார்ஸ் ஒரு நாள் வகுப்புகள் நடைபெற்றன. சென்னையின் பல பகுதிகளில் இருந்தும், வேலூர், காட்பாடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இதர பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்றனர்.

ஏப்ரல் 22ல் சென்னை சேவாலயாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளிச்சிறார்கள் மத்தியில் உரையாற்றிய நிலா, ஆக்ஸஸ் வழங்கும் செய்தியை எடுத்துரைத்தார். ஆச்சரியப்படத்தக்க வகையில் எட்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் அதிகமாகக் கேள்விகளைக் கேட்டு அசத்தினர்.

தொடர்ச்சியாக, மேலும் சில பயிற்சி முகாம்களை நடத்தவிருக்கும் நிலா, தென்காசிப் பக்கத்தில் ஆயிக்குடியில் உள்ள அமர்சேவா மையத்திலும் ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்பு மற்றும் ஆக்ஸஸ் கான்சியஸ்னெஸ் அறிமுக பயிற்சி முகாமினை செயற்படுத்துகிறார். ஏப்ரல் 27ல் நடக்கவிருக்கும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடையநல்லூர் மற்றும் புளியங்குடிப் பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொள்கின்றனர்.

ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதிகளன்று, பெங்களூரில் அறிமுக வகுப்பினையும், பார்ஸ் வகுப்பினையும், ஓரிரு விரிவாக்க வகுப்புகளையும் நடத்துகிறார் நிலா. அதன்பின்னர் சென்னையில் மே 4 முதல் 7 வரை ஆக்ஸஸின் மேல்நிலைப் பாடங்கள் நடத்தப்படவிருக்கின்றன. வாழ்வின் சகல அம்சங்களையும் நாம் விரும்பும் வகையில் உருவாக்குவதற்கேற்ற வகையில் பல வியக்கத்தக்க உத்திகளைக் கொண்டிருக்கின்றன இம்மேல்நிலை வகுப்புகள். ஆக்ஸஸ் பார்ஸ் கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இம்மேல்நிலை வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற முடியும். நிலாவின் பயணம் இத்துடன் நிறைவு பெறுகிறது.

About The Author

1 Comment

  1. narayanaswamy

    It is really good to face some unorthodox questions on various aspects of our life and in the process of answering ,we get new insights a sense of freedom and relief

Comments are closed.