செய்திகள் அலசல்

நெல் விவசாயிகளுக்கு குவின்டாலுக்கு ரூபாய் ஆயிரம் கொடுக்க வேண்டுமென ஆளும் கட்சியும் மற்ற கட்சிகளும் மத்திய அரசைக் கேட்டு வருகின்றன. நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அரசாங்கம் கொள்முதல் செய்வதும் அதுவே விலையை நிர்ணயிப்பதும் ஒரு வேடிக்கை. உலகில் எல்லா நுகர்வோர் பெருட்களுக்கும், ஏன் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்திற்கும் அதை உற்பத்தியாவதற்கான செலவைக் கணக்கிட்டு, அதோடு லாபம் சேர்த்து விலையை நிர்ணயிப்பதுதான் வழக்கம். தனியார் நிறுவனங்கள் நாளுக்கு நாள் விலையை ஏற்றும்போது அதற்கு எந்த அரசும் கட்டுப்பாடு விதிக்க முடிவதில்லை. விவசாயிகளுக்குக் கடன் தருகிறோம், இலவச மின்சாரம் தருகிறோம் என்ற அரசியல் கோஷங்களை விட்டு, அவர்களும் மற்றவர்களைப் போலவே எந்த இலவச சலுகைகளையும் பெறாமல், தங்கள் உற்பத்திக்கான நியாய விலையைப் பெற வேண்டியது அவசியம். விவசாயமும் ஒரு உற்பத்தித் தொழிற்சாலையாகக் கருதப்பட வேண்டும். அரசாங்கம் எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கிறது என்பதையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.

***

நெஞ்சு பொறுக்குதில்லையே!

பழைய மன்னர் காலத்தில் இளம் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி அவர்களைக் கோவிலுக்கு அர்ப்பணிப்பதுண்டாம். இது போல இப்போது கூட 8ஆம் வகுப்பு படிக்கும் கிருஷ்ண வேணி என்னும் 13 வயதுச் சிறுமிக்குப் பொட்டுக் கட்டும் சடங்கு செய்து மாரியம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்த சம்பவம் விழுப்புரம் அருகேயுள்ள கொள்ளூர் கிராமத்தில் நடந்திருக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்ட பல பிரச்னைகள் ஒரு பெண்ணுக்குப் பொட்டுக் கட்டினால் தீர்ந்துவிடும் எனக் கோவில் பூசாரி சொன்னதால் பெற்றொர்கள் இந்த சடங்கைச் செய்திருக்கிறார்கள்.

‘மந்திரவாதியென்பார், சொன்ன மாத்திரத்திலே மனக் கிலி பிடிப்பார், யந்திர சூனியங்கள், இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள், நெஞ்சு பொறுக்குதில்லையே!’ என்ற பாரதியின் ரவுத்ரம்தான் நினைவுக்கு வருகிறது.

***

"சிறைச்சாலையில் உழைத்து உன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடு" இது மீரட் நகரிலுள்ள ஒரு குடும்ப நலக் கோர்ட் வழங்கிய தீர்ப்பு. ஜீவனாம்சம் வழங்க மறுத்த கணவனைப் பற்றி அவனது மாஜி மனைவி கோர்ட்டில் வழக்குப் போட்ட போதுதான் ஜெயிலில் தினம் பத்து ரூபாய்க்கு வேலை பார்த்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்கச் சொல்லியது. திஜஹான் என்ற பெண்ணை மணந்த சலீம் தனது மனைவி குழந்தகளை கவனிக்காததோடு வேறு மணமும் புரிந்து கொண்டான். 2001ல் கோர்ட் சலீம் தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மாதம் 1500 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் சலீமோ தனக்கு வேலை எதுவும் இல்லை, சொத்தும் கிடையாது என ஜீவனாம்சத்தை மறுக்க, மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதி கொடுத்த தீர்ப்புதான் இது. அதோடு விடாமல் திஜஹான் இது வரை பணம் கொடுக்காததற்காக, தன் கணவர் 1,18500 ரூபாய் பாக்கியையும் தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். ‘சபாஷ், சரியான தீர்ப்பு!’ என்று பாராட்டத் தோன்றுகிறது.

***

வரதட்சிணைக் கொடுமை, பெண் சிசுக்கள் கொலை என்று பெண்களுக்கெதிரான நிகழ்வுகள் நாடெங்கும் நடந்து வரும் நிலையில் உத்தரப்பிரதேசம், ஷாஜன்பூர் மாவட்டத்தில் ஆண்கள் தங்கள் மனைவிகளை ஏழாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை அடுத்த மாகாணங்களிலிருந்து விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஆண்கள் பெண்கள் விகிதாசாரம் ஆயிரத்திற்கு 535 என்ற நிலையிலேயே உள்ளதால்தான் இந்த நிலை. அதோடு மட்டுமில்லை. மணமகன்கள் மனைவியோடு மாமியார் மாமனாரையும் அழைத்து உடன் தங்க வைத்துச் சோறு போட வேண்டுமாம். கணவன்மார்கள், மனைவிமார்களோடு பேசக்கூட முடிவதில்லையாம், மொழிப் பிரச்சினையால் (எவ்வளவு சவுகரியம்? என்கிறீர்களா?). மீரா என்ற பெண்ணை ரூபாய் எட்டாயிரம் கொடுத்து வாங்கியவர் இரண்டாண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் ‘கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டோமோ?’ என்று கவலைப் படுகிறாராம், இது எப்படியிருக்கு?

***

தீபாவளி முடிந்து ஆரவாரங்கள் ஓய்ந்திருக்கும் வேளையில் தீபாவளிப் பட்டாசுகள் பற்றிய செய்தி.1879ல் லண்டன் கிரிஸ்டன் அரண்மனையின் அருகே 35 ஆயிரம் சிறிய வண்ண ஒளிக்குச்சிகள் மூலம் பிரம்மாண்டமான பட்டாசு வெடிக் கொண்டாட்டத்தை பட்டாசுக் கலையின் தந்தை எனப்படும் சார்லஸ் தாமஸ் பிராக் என்பவர் நடத்திக் காட்டினார். இது ஒரு கின்னஸ் சாதனை. இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராய்லாரி என்பவர் 55000 ராக்கெட் பட்டாசுகளை இணைத்து ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்தார். இதுவும் ஒரு கின்னஸ் சாதனை. இந்தப் பட்டாசு வெடித்தபோது பிளைமவுத் நகரமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது.  (நன்றி – தினமலர்)

***

அமெரிக்காவின் ஒரு பல்கலைக் கழகம் நடத்திய ஒரு ஆய்வின்படி பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும்போது மது குடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவு குறைவாக இருப்பதோடு முரட்டுத்தன்மையுடனும் இருப்பார்களாம்!

***

நாலு கால்கள் நாலு கைகளோடு பிறந்த லட்சுமி என்ற இரண்டு வயதுக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அதிகப்படியான கால் கைகளை அகற்றி சாதனை செய்திருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த 30 டாக்டர்கள் குழு. இந்த அறுவைச் சிகிச்சைக்கு அவர்கள் எடுத்துக்கொண்டது 27 மணி நேரம் (40 மணி நேரம் ஆகும் என்று கணக்கிட்டிருந்தாகள்). லட்சுமி உடல்நிலை தேறிவருகிறாள். ‘வேண்டாத பாகங்களை வெட்டி எடுத்து வேண்டிய பாகங்களின் எலும்புகள் சேதமடையாமல் சேர்த்து மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியிருந்த அறுவை சிகிச்சை இது’ என்று அந்த மருத்துவமனை டாக்டர் சிவராஜ் பாடில் கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் தடவையாக இத்தகைய அறுவை சிகிச்சை நடை பெறுகிறது. நல்ல தரமுள்ள டாக்டர்களும் மருத்துவர்களும் இருப்பதால் வெளிநாட்டிலிருந்து பல நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் செய்தி. சிறுநீரகங்களைத் திருடுபவர்கள், பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று டாக்டர்கள்மேல் மக்களின் குற்றச்சாட்டுக்ள் பெருகிவரும் நேரத்தில் மருத்துவ சேவைக்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்திதானே! 

***

பெருமை!

இங்கிலாந்தில் உள்ள லண்டன் இண்டர்நேஷனல் மருத்துவமனையின் தலைமை நிர்வாகியான இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் லார்டு கலீத் ஹமீது சுகாதார சேவைக்கான 2007 ஆண்டின் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

***

பழமை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள புத்தூர் மலையில் 1500 பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

***

தேசிய உணர்வு

2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் சைனாவில் பீஜிங்கில் நடக்க விருக்கிறது. இதை அவர்கள் மிகவும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள். ஒரு தேசிய உணர்வோடு 2000 ஆண்டு, அதன் பிறகும் பிறந்த சுமார் 3500 குழந்தைகளுக்கு ஒலிம்பிக்ஸ் என்னும் பொருள் தரும்படியான Aoyun என்ற பெயர் சூட்டி இருக்கிறார்களாம்.

***

முன்னேற்றம்

உலக நாடுகளின் மக்கள் தொகையில் இந்தியா 113 கோடியே 80 லட்சம் பேர் என்ற கணக்கில் இரண்டாவது இடம் வகிக்கிறது. சீனா முதலிடம், 131 கொடியே 80 லட்சம். சராசரி ஆயுள் விகிதத்தில் ஜப்பானியர்கள் முதலிடம், 82 வய்து, இந்தியாவில் ஆண்களுக்கு 63 வயது, பெண்களுக்கு 64 வயது. 2050 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 175 கோடியுடன் முதலிடம் பெறுமாம்.

***

கவலை

இந்தியாவில் 53 சதவிகித குழந்தைகள் பல்வேறு பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். இதில் சென்னையில் மட்டும் 43 சதவிகிதமாமே! 

***

தேசீயக் குற்ற ஆவணத்தின் 2005க்கான அறிக்கை ஒன்று 15 வயதிலிருந்து 29 வயது வரையிலான இளைஞர்கள் (35.3 சதவிகிதம்) மற்றும் 30 வய்திலிருந்து 44 வயதானவர்கள் (33.5 சதவிகிதம்) தற்கொலை எண்ணத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கிறது. காதல் தோல்வி, கடன் தொல்லை,தேர்வில் தோல்வி, குடும்பப் பிரச்னைகள், தீராத நோய்கள் ஆகியவை பெரும்பாலான காரணங்கள்.

இளம் வயதிலிருந்தே குழந்தைகள் மீது திணிக்கப்படும் போட்டி மனப்பான்மைகளும், நெருக்கடியை சமாளிக்கும் ஆற்றலுக்குப் பயிற்சிகள் இன்மையுமே பிற்காலத்தில் தற்கொலை செய்யத் தூண்டுகோலாகி விடுகின்றனவாம். (எத்தனை ஊழல், லஞ்சம், ஏமாற்றுக் குற்றங்கள் வந்தாலும் அதைப்பற்றிக் கவலையே படாமல் சிரித்துக்கொண்டே (தியாகியைப் போல) சிறைக்குச் செல்லும் சில அரசியல்வாதிகளைப் பார்த்து பிரச்னைகளை சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதுதானே?)

***

அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு ஜுலை மாதங்களில் நடக்கவிருக்கும் உலக இளம் தலைவர்கள் மகாநாட்டில் இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் 10 மாணவ மாணவிகளில் ப்ளஸ் 2 படிக்கும் பார்வையற்ற செனோசெபீனும் இருக்கிறாள். படிப்பு, கவிதை, பேச்சு, பாடல் என பன்முகத் திறன் படைத்த செனோ பிறவியிலேயே பார்வை இழந்தவர். உற்சாகமும் நம்பிக்கையும் பொங்கப் பேசும் செனோ ஐ.ஏ. எஸ். படித்து அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என உறுதியோடு கூறுகிறாள்.

About The Author

1 Comment

Comments are closed.