சோலைமலை இளவரசி (6)-மாலை வருகிறேன்

நீண்ட நேரம் வரையில் மாறனேந்தல் இளவரசன் பிரக்ஞையேயில்லாமல் தூங்கினான். நேரமாக ஆகத் தூக்கத்தில் கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. சில சமயம் இன்பக் கனவுகள் கண்டபோது தூங்குகின்ற முகத்தில் புன்னகை மலர்ந்தது. வேறு சில சமயம் பயங்கரமான கனவுகள் தோன்றி அவன் சுந்தர முகத்தை விகாரப்படுத்தின. கடைசியில், வேட்டை நாய் ஒன்று தன்னுடைய மூக்கைக் கடிப்பதாகக் கனவு கண்டு உலகநாதத்தேவன் உளறி அடித்துக் கொண்டு எழுந்தான். பார்த்தால் அவன் எதிரே வேட்டை நாய் எதுவும் இல்லை. சோலைமலை இளவரசிதான் நின்று கொண்டிருந்தாள். நின்றதோடல்லாமல் முல்லை மொட்டுக்களையொத்த அவளுடைய அழகிய பற்கள் வெளியே தெரியும்படிச் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டும் இருந்தாள். சற்று நிதானித்து யோசித்ததும் இளவரசனுக்குத் தன்னுடைய நிலைமை இன்னதென்று ஞாபகம் வந்தது. இளவரசியின் தோற்றத்தையும் அவளுடைய கையில் வைத்திருந்த பூச்செடியின் காம்பையும் கவனித்துவிட்டு அவள் அந்தச் செடியின் காம்பினால் தன் மூக்கை நெருடி உறக்கத்திலிருந்து எழுப்பியிருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்டான்.

"ஐயா! கும்பகர்ணன் என்று இராமாயணக் கதையிலே கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன்முதலாக நேரிலே பார்த்தேன். உம்மைப்போல் தூங்குமூஞ்சியை நான் இத்தனை நாளும் கண்டதேயில்லை! எத்தனை நேரம் உம்மை எழுப்புவது? அதுவும் பட்டப் பகலில் இப்படியா தூங்குவார்கள்!" என்றாள் இளவரசி.

"அம்மணி! நேற்று இரவு முப்பது நாழிகை நேரத்தில் ஒரு கண நேரங்கூட நான் கண்ணைக் கொட்டவில்லை. அதை நினைவில் வைத்துக் கொண்டால் என்னை இப்படி நீ ஏசமாட்டாய். போனால் போகட்டும், எதற்காக என்னை எழுப்பினாய்? ஏதாவது விசேஷம் உண்டா? இப்பொழுதே நான் போய்விட வேண்டுமா? சூரியன் மலை வாயில் விழுந்ததும் கிளம்பலாம் என்று பார்த்தேன்" என்றான் உலகநாதன்.

"இப்போதே உம்மைப் புறப்படச் சொல்லவில்லை நான். இருட்டிய பிறகு புறப்பட்டாலே போதும். காலையில் கூட ஒன்றும் நீர் சாப்பிடவில்லையே, நேரம் ரொம்ப ஆகிவிட்டதே என்று எழுப்பினேன். உமக்குப் பசிக்கவில்லையா? ஒருவேளை பசியா வரம் வாங்கி வந்திருக்கிறீரோ" என்றாள் மாணிக்கவல்லி. அப்போதுதான் உலகநாதத் தேவனுக்குத் தன்னுடைய வயிற்றின் நிலைமை நன்றாக ஞாபகத்துக்கு வந்தது. வயிற்றுக்குள்ளே ஏதோ ஒரு பெரிய பள்ளம் இருப்பது போலவும் அதை மேலும் மேலும் ஆழமாக யாரோ தோண்டி எடுத்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றியது.

"பசியாவரம் வாங்கிய பாக்கியசாலி அல்ல நான். அசாத்தியமாகப் பசிக்கத்தான் செய்கிறது. தூங்குகிறவனை எழுப்பிப் பசியை நினைவூட்டியதனால் ஆவது என்ன? சாப்பாட்டுக்கு ஏதாவது வழி சொன்னால் அல்லவா தேவலை? இன்னும் சற்றுநேரம் இப்படியே பசிக்கு ஒன்றும் கிடைக்காமலிருந்தால் உன்னையே சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடுவேன். கும்பகர்ணன் அப்படித்தான் தூங்கி எழுந்ததும் மனிதர்களையும் மிருகங்களையும் அப்படியே விழுங்கிப் பசி தீர்த்தானாம். தெரியுமல்லவா?" என்றான் உலகநாதன்.

மாணிக்கவல்லி அதைக் கேட்டு இளநகை புரிந்து கொண்டே "அப்படியெல்லாம் நீர் செய்ய வேண்டியதில்லை. உமக்குச் சாப்பாடு வந்திருக்கிறது" என்றாள். இளவரசி நோக்கிய திசையை உலகநாதத்தேவனும் நோக்கியபோது மண்டபத்தின் தூணுக்குப் பக்கத்தில் கூஜாவில் தண்ணீரும் தட்டிலே சாப்பாடும் வைத்திருப்பது தெரிந்தது. அவ்வளவுதான்; இளவரசன் ஒரு கணத்தில் குதித்து எழுந்து முகத்தையும் கழுவிக்கொண்டு சாப்பாட்டுத் தட்டைத் தனக்கு அருகில் இழுத்துக் கொண்டான். அதில் இருந்த அரைப்படி அரிசிச்சோறு, கறி வகைகள், அதிரசம், பணியாரம் முதலியவற்றையெல்லாம் அரைக்கால் நாழிகை நேரத்தில் தீர்த்துத் தட்டையும் காலி செய்தான். இடையிடையே தனக்கு இத்தகைய பேருதவி செய்த பெண் தெய்வத்தை நன்றியுடன் பார்த்துக் கொண்டே உணவை விழுங்கினான்.

இளவரசியோ அவன் ஆர்வத்துடன் உணவருந்தும் காட்சியை அடங்காத உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியில் அதற்குமுன் என்றும் அறியாத மகிழ்ச்சி அவளுக்கு உண்டாகிக் கொண்டிருந்தது. மாணிக்கவல்லிக்கு நினைவு தெரிந்த காலம் முதல் இன்று வரையில் அவளுக்கு மற்றவர்கள் பணிவிடை செய்வதுதான் வழக்கமாயிருந்தது. தான் இன்னொருவருக்கு ஏதேனும் உதவி செய்வதில் எத்தகைய இன்பம் இருக்கிறது என்பதை நாளதுவரை அவள் அறிந்ததில்லை. இன்றுதான் முதன்முதலாக அவள் பிறருக்குத் தொண்டுபுரிந்து அவர்களுடைய கஷ்டத்தைப் போக்குவதில் ஏற்படும் சந்தோஷத்தை அறிந்து அநுபவித்தாள். இந்த உள்ளக்கிளர்ச்சி அவளுடைய முகத்துக்கு ஒரு புதிய சோபையைக் கொடுத்திருந்தது. இளவரசன் உணவருந்திவிட்டுக் கை கழுவி முடிந்ததும், "போதுமா? இன்னும் ஏதாவது வேண்டுமா" என்று மாணிக்கவல்லி கேட்டாள்.

"இனிமேல் வேண்டியது உன்னுடைய தயவு ஒன்று மட்டுந்தான். எனக்கு அடைக்கலம் அளித்து உயிரையும் கொடுத்தாயே, உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! எந்த விதத்தில் என் நன்றியைச் செலுத்தப் போகிறேன்" என்றான் உலகநாதன்.

"இவ்விடம் நீர் வந்தது போலவே ஒருவரும் அறியாதபடித் திரும்பிப் போய்ச் சேர்ந்தால் அதுதான் எனக்கு நீர் செய்யும் பிரதி உபகாரம்" என்றாள் மாணிக்கவல்லி.

"அந்த உபகாரம் அவசியம் செய்கிறேன் அம்மணி! என் உடலில் இப்போது தெம்பு இருக்கிறது; இடுப்பிலே கத்தி இருக்கிறது; அப்புறம் சோலைமலை முருகக் கடவுளும் இருக்கிறார். இப்போதே வேணுமானாலும் கிளம்பி விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.

"வேண்டாம்; இப்போது போனால் யாராவது கவனிப்பார்கள். ஏதாவது தொல்லை ஏற்படலாம். முதலில் சொன்னபடி இருட்டிய உடனே புறப்பட்டால் போதும்" என்றாள் இளவரசி.

"அப்படியே ஆகட்டும்; இருட்டிய பிறகு ஒரு நொடிப்பொழுதுகூட இங்கே நான் நிற்கமாட்டேன்."

"நான் மறுபடியும் வருவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்க வேண்டாம்! தெரிகிறதா?"

"நன்றாய்த் தெரிகிறது. அந்த உத்தேசமே எனக்குக் கிடையாது. அதிர்ஷ்ட தேவதையின் கருணை இரண்டு தடவை கிடைத்து விட்டது. இன்னொரு தடவையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா? இருட்டியதும் கிளம்பி விடுகிறேன்."

"இல்லை; வேண்டாம். ஒரு வேளை இன்று சாயங்காலத்துக்குள் அப்பா திரும்பி வந்தாலும் வந்து விடுவார். எல்லாவற்றுக்கும் நான் இன்னொரு தடவை வந்து தகவல் சொல்கிறேன். அதுவரையில் நீர் இங்கேதான் இருக்க வேண்டும். மறுபடி நான் வந்து சொல்லும் வரையில் போகக்கூடாது. தெரிகிறதா?"

பெண்களின் சஞ்சலப் புத்தியை நினைத்துப் புன்னகை புரிந்தவண்ணம் இளவரசன், "ஆகா தெரிகிறது! அப்படியானால் கொஞ்சம் சீக்கிரமே வந்துவிடு. இன்றைக்கு இரவு நாலு நாழிகைக்குச் சந்திரன் உதயமாகும். பளிச்சென்று அடிக்கும் நிலாவில் கோட்டைச் சுவரைத் தாண்டிச் செல்வது கஷ்டமாயிருக்கும்" என்றான்.

"ஓஹோ! நிலா வெளிச்சத்தை நினைத்தால் பயமாயிருக்கிறதா? சற்று முன்னால் ‘இடுப்பில் கத்தி இருக்கிறது; உயிருக்குப் பயமில்லை’ என்று ஜம்பம் பேசினீரே!" என்று இளவரசி கேலி செய்தாள்.

"ஜம்பம் இல்லை அம்மணி! நான் கூறியது உண்மைதான். என் உயிரைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. என் காரணமாக உனக்கு ஒரு தொந்தரவும் ஏற்படக்கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன்."

"என்னைப் பற்றி நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்! நான் சோலைமலை இளவரசி. என் தந்தைக்குச் செல்லப்பெண். என்னை யார் என்ன சொல்லக் கிடக்கிறது? நான் சீக்கிரமாக வந்தாலும் நேரங்கழித்து வந்தாலும் நான் வந்த பிறகுதான் நீர் போக வேண்டும். இல்லாவிட்டால்…"

"இல்லாவிட்டால் என்ன?"

"உடனே சங்கிலித் தேவனைக் கூப்பிட்டு உம்மை அவனிடம் ஒப்படைத்து விடுவேன்."

"அவ்வளவு சிரமம் உனக்கு நான் வைக்கவில்லை. நீ மறுபடி வருகிற வரையில் இங்கேயே இருப்பேன். ஆனால், சீக்கிரமாக வந்துவிட்டால் ரொம்ப உபகாரமாயிருக்கும். நான் செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கிறது."

"சீக்கிரமாக வருவதற்குப் பார்க்கிறேன். ஆனால், நிஜமாகவே உமக்குப் பசி தீர்ந்துவிட்டதல்லவா? நீர் சாப்பிடுவதைப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கொண்டு வரவில்லையே என்று இருந்தது."

"அழகுதான்! இப்போது நான் சாப்பிட்டது இன்னும் மூன்று நாளைக்குப் போதும். இராத்திரி நிச்சயமாகச் சாப்பாடு கொண்டுவர வேண்டாம்."

"ஆகா! சோலைமலை இளவரசி உமக்குச் சோறு படைக்கப் பிறந்தவள் என்று எண்ணியிருக்கிறீரோ? ஏதோ பசித்திருக்கிறீரே என்று பரிதாபப்பட்டு ஒருவேளை கொண்டு வந்தால் இராத்திரிக்கும் கொண்டு வா என்கிறீரே?"

"ஐயையோ! நான் அப்படிச் சொல்லவில்லையே? வேண்டாம் என்றுதானே சொன்னேன்?"

"வேண்டாம் என்று சொல்வதற்கு அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாதா? ‘கட்டாயம் கொண்டு வா’ என்றுதான் அர்த்தம். ஆனால், அது முடியாத காரியம்."

"வேண்டாம் அம்மணி வேண்டாம்! இராத்திரி எனக்கு ஒன்றும் வேண்டாம்!"

"நான் கொண்டு வருவதாக இருந்தால் அல்லவா நீர் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?"

இளவரசன் ‘மௌனம் கலக நாஸ்தி’ என்ற பழமொழியை நினைவுகூர்ந்து சும்மா இருந்தான். இளவரசியும் போஜனப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றாள்.

மாணிக்கவல்லி அவ்விடமிருந்து போன பிறகு மாறனேந்தல் இளவரசன் மாலைப்பொழுதின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவ்விதம் அவன் ஆவல் கொள்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. உடம்பின் களைப்பு தீர்ந்துவிட்டபடியால் அவன் உடனே புறப்பட்டுச் செல்ல விரும்பினான். எத்தனையோ அவசரக் காரியங்கள் அவன் செய்வதற்கு இருந்தன. சோலைமலைப் பிரதேசத்தை அன்று இரவுக்கிரவே எப்படியாவது தாண்டிப் போய்விட வேண்டும். தூர தூர தேசங்களுக்குச் சென்று அங்கங்கே கும்பெனி ஆட்சிக்கு விரோதமாயுள்ள ராஜாக்களையும் நவாப்புகளையும் சந்திக்க வேண்டும். பெரிய படை திரட்டிக் கொண்டு திரும்பி வரவேண்டும். வியாபாரம் செய்வதற்காக வந்து இராஜ்யங்களைக் கவர்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மூஞ்சிகளை நாட்டிலிருந்து துரத்தியடிக்க வேண்டும். மூட்டை முடிச்சுகளைச் சுருட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் கப்பல் ஏறி ஓடும்படிச் செய்ய வேண்டும். மாடு இல்லாமலும் குதிரை இல்லாமலும் ரயில் வண்டி விடுவதாகச் சொல்லித் தேசமெங்கும் இரும்புத் தண்டவாளங்களைப் போட்டல்லவா அவர்கள் இந்தப் புராதன பாரத தேசத்தைக் கட்டி ஆளப் பார்க்கிறார்கள்! இரும்புக் கம்பியால் வேலி எடுத்துத் தேசத்தையே அல்லவா சிறைச்சாலையாக்கப் பார்க்கிறார்கள்! அப்படிப்பட்டவர்களைத் துரத்தியடிப்பதற்கு வடக்கே டில்லி பாதுஷா என்ன! மராட்டிய மகாவீரர்கள் என்ன! ஜான்ஸி மகாராணி என்ன! இப்படி எத்தனையோ பேர் ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக அவன் கேள்விப்பட்டிரு"தான். அவர்களோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும். பெரிய படை திரட்டிக் கொண்டு திரும்பி வந்து தமிழகத்திலிருந்தும் வெள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்க வேண்டும். பிறகு, முதற்காரியமாக அவர்கள் போட்ட ரயில் தண்டவாளங்களையெல்லாம் பிடுங்கி எறிந்து விட வேண்டும்…

இப்படியெல்லாம் மாறனேந்தல் இளவரசன் மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தான். அந்த மனக்கோட்டைகளுக்கு இடையிடையே மாறனேந்தல் கோட்டையின் கதி என்ன ஆயிற்றோ, தன்னுடைய தாய், தந்தை, தம்பி ஆகியவர்கள் என்ன கதியை அடைந்தார்களோ என்ற கவலையும் அவனைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது. எனவே, சூரியன் எப்போது அஸ்தமிக்கும் என்று அவன் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததில் வியப்பில்லை அல்லவா? அந்தப் பரபரப்புக்கு இரண்டாவது சிறு காரணம் ஒன்றும் இருக்கத்தான் செய்தது. அது, இரவு வந்ததும் சோலைமலை இளவரசி அங்கு வருவாள் என்ற எண்ணந்தான். தான் அந்தக் கோட்டையைவிட்டுப் போவதற்கு முன்னால் மாணிக்கவல்லியை மறுபடியும் ஒரு தடவை பார்க்கலாம் என்ற நினைவு அவனுக்கு அதுவரையில் அநுபவித்து அறியாத ஓர் அதிசயமான உவகை உணர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. சிற்சில சமயம், காரியங்கள் வேறு விதமாக நடந்திருந்தால் இந்த அபூர்வமான தேவகன்னிகையைத் தான் மணந்திருக்கலாமல்லவா என்ற எண்ணமும் உதித்தது. சோலைமலை ராஜாவைப் பற்றி அப்படியெல்லாம் தான் வாய் துடுக்காகப் பேசியிராவிட்டால் அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் வைபோகமாகக் கலியாணம் நடந்திருக்கலாமல்லவா? ஆனால், உண்மையில் தன் பேரில் குற்றம் ஒன்றுமில்லை. ‘சரா புரா’வென்று மலைக் குறவர் பாஷை பேசும் வெள்ளைக்காரச் சாதியார் வந்ததனால் அல்லவா அவ்விதம் நடவாமல் போயிற்று! தான் கரம் பிடித்து மணந்திருக்கக்கூடிய பெண்ணிடம் அடைக்கலம் கேட்கும்படியும் அவள் அளித்த ஒருவேளை உணவுக்காக நன்றி செலுத்தும்படியும் நேரிட்டது…

இவ்விதம் உள்ளம் அங்குமிங்கும் அப்படியும் இப்படியும் ஊசலாட, உலகநாதன் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகக் கழித்துக் கொண்டு அந்தப்புர நந்தவனத்து வஸந்த மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான். கடைசியாக, கழியாத நீள்பகலும் கழிந்தது. நாலு பக்கங்களிலும் இருள் சூழ்ந்து வந்தது. கோட்டை மதிலுக்கு அப்பால் சோலைமலைச் சிகரத்தின் உச்சியில் முருகன் கோயில் தீபம் ஒளிர்ந்தது. இனி சீக்கிரத்திலேயே சோலைமலை இளவரசி தனக்கு விடை கொடுக்க வந்துவிடுவாள் என்ற எண்ணத்தினால் இளவரசனின் நெஞ்சு ‘தடக் தடக்’ என்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனுடைய கண்ணெதிரே தோன்றிய முருகன் கோயில் தீபம் பெரிதாகிக் கொண்டு வந்தது. கிட்டத்தட்ட மாலை வேளையில் உதிக்கும் பூரண சந்திரனுடைய வடிவை அது அடைந்தது. சட்டென்று அந்தப் பூரண சந்திரன் ரயில் வண்டியின் ஸர்ச் லைட்டாக மாறியது. ரயிலும் ஸர்ச் லைட்டும் அதிவேகமாக அவனை நெருங்கி நெருங்கி வந்தன. ஸர்ச் லைட்டின் உஷ்ணமான வெளிச்சம் அவனுடைய முகத்தில் பளீரென்று விழுந்து மூடியிருந்த கண்களையும் கூசும்படிச் செய்தது.

குமாரலிங்கம் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தான் சோலைமலை இளவரசன் அல்லவென்பதையும் தேசத்தொண்டன் குமாரலிங்கம் என்பதையும் அவன் உணர்வதற்குச் சிறிது நேரம் பிடித்தது. கடைசியாக அவன் முகத்தில் அடித்த வெளிச்சம் ரயில் வண்டியின் ஸர்ச் லைட் வெளிச்சம் அல்ல. உச்சி வேளைச் சூரியனின் வெயில் வெளிச்சம் என்பதையும் தெரிந்து கொண்டான். உதய நேரத்தில் தான் அந்தப் பாழுங்கோட்டைக்குள் பிரவேசித்து அதிகமாக இடியாமலிருந்த வஸந்த மண்டபத்தில் படுத்த விஷயமும் நினைவுக்கு வந்தது. ஆனால் அதுவரையில் அவன் கண்ட காட்சி, அடைந்த அனுபவம் எல்லாம் தூக்கத்திலே கண்ட மாயக்கனவா? இல்லை, இல்லை, ஒரு நாளும் இல்லை. ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொர் அநுபவமும் பிரத்தியட்சமாகப் பார்த்து உணர்ந்து அநுபவித்ததாக அல்லவா தோன்றின! அவ்வளவும் வெறும் கனவாகவோ குழம்பிப் போன மூளையின் விசித்திரக் கற்பனையாகவோ இருக்க முடியுமா அல்லது உண்மையிலேயே முன்னொரு பிறவியில் தன்னுடைய வாழ்க்கை அநுபவங்கள்தான் அவ்வளவு தெளிவாக நினைவுக்கு வந்தனவா?

இத்தகைய மனக்குழப்பத்துடன் குமாரலிங்கம் சுற்றுமுற்றும் பார்த்தபோது சற்றுத் தூரத்தில் அந்தப் பாழடைந்த கோட்டையில் மனிதர் நடந்து நடந்து ஏற்பட்டிருந்த ஒற்றையடிப் பாதை வழியே தலையில் கூடையுடன் ஓர் இளம் பெண் வருவதைக் கண்டான். அந்தக் காட்சி அவனுடைய நெஞ்சின் ஆழத்தில் மகிழ்ச்சியையும் அடிவயிற்றில் திகிலையும் உண்டாக்கியது. எக்காரணத்தினாலோ மகிழ்ச்சியைக் காட்டிலும் திகில் அதிகமாயிற்று. தன்னுடைய நிலைமையும் ஞாபகத்துக்கு வந்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் ஒற்றர்கள் தன்னை நாலாபக்கத்திலும் தேடிக் கொண்டிருப்பார்கள். இச்சமயம் தான் அந்தப் பாழும் கோட்டையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் அந்தப் பெண் ஏதாவது கேட்கக்கூடும். தான் ஏதாவது பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதனால் என்ன விளையுமோ என்னவோ? அவள் கண்ணில் படாமல் மறைந்து கொள்வதற்கும் அப்போது நேரமில்லை. பின்னே, வேறு என்ன செய்யலாம்? மறுபடியும் அங்கேயே படுத்துத் தூங்குவது போலப் பாசாங்கு செய்வதுதான் சரி. அந்தப் பெண் தான் தூங்குவதைப் பார்த்துவிட்டுப் பேசாமல் தன் வழியே போய் விடுவாள். பிறகு, எழுந்து மேலே தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றித் தீர்மானித்துக் கொள்ளலாம். இவ்விதம் முடிவு செய்துகொண்டு குமாரலிங்கம் மறுபடியும் அந்தப் பழைய வஸந்த மண்டபத்தின் குறட்டில் படுத்தான்; இரண்டு கண்களையும் இறுக மூடிக் கொண்டான்.

தொடர்வாள்...

About The Author