தடுமாறும் தலைமுறைகள்

"அம்மா! என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சி, ரெண்டுத்துலயுமே 96% மேல மார்க் வந்திருக்கும்மா!" குதூகலத்துடன் தாயைக் கட்டிக்கொண்டு சுற்றினாள் வித்யா. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் "ஹ்ம்ம்ம்ம்! ஆச்சு அடுத்த குழப்பம் ஆரம்பம்" என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை சாரதாவால்.

வித்யா அந்த வருடம் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். ப்ளஸ் டூவில் சேரும்போதும் இதே போல்தான். 96%-க்கு எந்தப் பிரிவைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு கொடுப்பார்கள்தான். ஆனால் எந்தப் பிரிவு என்று நாம்தானே தீர்மானிக்க வேண்டும். அதில்தான் குழப்பமே. வித்யாவுக்கு கணக்கு மிகவும் நன்றாக வரும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% மதிப்பெண் பெற்றிருந்தாள். அதனால் கணக்குப் பிரிவு எடுக்க ஆவலாக இருந்தது. முழு அறிவியல் எடுக்கவும் ஒரு பக்கம் ஆசை. இரண்டு பிரிவிற்குமே சாதகமாக பதில் வந்ததில் முதல் குழப்பம் ஆரம்பம். இதுவா, அதுவா என்று குழம்பி கடைசியில் இரண்டுமே இல்லாமல் கணிப்பொறியுடன், அறிவியல், கணக்கு என்று மூன்றுமே இருந்த முதல் பிரிவில் சேர்ந்தாள். ப்ளஸ்டூ தேர்வு நெருங்கும்போதே தேர்வுக்குப் படிக்கும் கவலையுடன் கல்லூரியில் எந்தப் பிரிவு எடுப்பது என்ற குழப்பம் ஆரம்பித்து விட்டது.

ஆயிற்று, ப்ளஸ்டூ தேர்விலும் 97% எடுத்து விட்டாள். இப்போது மருத்துவமா, பொறியியலா, கணிப்பொறியியலா என்ற தடுமாற்றம். இந்தத் தலைமுறையினருக்கு ஏன் எதை எடுத்தாலும் இந்தத் தடுமாற்றம் என்று ஆச்சரியமாக இருந்தது சாரதாவிற்கு.

வித்யாவிற்கு சென்னை மருத்துவக் கல்லூரியிலும், கோவை PSG பொறியியல் கல்லூரியிலும் சேரச் சொல்லி ஒரே நேரத்தில் அழைப்பு வந்தது. அப்பாவும் மகளும் (இந்த முறை பத்தாவது படிக்கும் வித்யாவின் தம்பியும் கூடச் சேர்ந்து கொண்டான்) ஒரே அலசல்தான். மருத்துவத்திலும், பொறியியலிலும் உள்ள நன்மை தீமைகளைப் பெரிய பட்டியலிட்டு ஆராய்ந்தனர். எந்நேரமும் இதே ஆராய்ச்சிதான். இவர்களின் ஆர்ப்பாட்டம் தாங்காமல் சாரதா "ஏண்டீ வித்யா, நானும் நீ பத்தாவது முடிச்சதுல இருந்து பார்த்துகிட்டிருக்கேன், எப்பப் பார் இதே குழப்பம்தானா? எதுலயுமே ஒரே முறைல ஒழுங்கான முடிவு எடுக்கத் தெரியாதா? நாங்க எல்லாம் எங்க காலத்துல எந்த விஷயத்துலயும் எங்க அம்மா அப்பாவுக்குதான் எல்லாம் தெரியும், அவங்க நம்ப நன்மைக்குதான் சொல்வாங்கன்னு பெரியவங்க சொல்றதை அப்படியே கேட்போம். ஆனா நீங்கள்லாம் அப்படியா? ஏதோ அம்மா அப்பாவுக்கெல்லாம் எதுவுமே தெரியாத மாதிரியும் உங்களுக்குதான் எல்லாமெ தெரியுங்கற மாதிரியும் எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசறீங்க! சரி நீங்களாகவாவது ஒரு நிலையான முடிவுக்கு வர்றீங்களான்னா அதுவும் இல்லை. என் ப்ரெண்ட் கூட சேர்ந்து பாட்டுக் கத்துக்கறேன்னு அதுக்கு கொஞ்ச நாள் போறது அப்புறம் அது போரடிச்சிப் போய் வீணை க்ளாஸ் கொஞ்ச நாள். அப்புறம் அதுவும் சலிச்சிப் போகுது. நீ மட்டுமில்லை உன் தலைமுறை பிள்ளைங்களே இப்படித்தான் இருக்கீங்க. நானும் உன்னோட ப்ரெண்ட்ஸையெல்லாம் பார்த்துகிட்டுத்தானெ இருக்கேன். உங்க வாழ்க்கையில கல்யாணம்கிற முக்கியமான முடிவு எடுக்க இப்படி ரெண்டு மனசா தடுமாறினா அவ்வளவுதான்" என்று அங்கலாய்த்தாள்.

"அம்மா, உங்க காலத்துல உங்களுக்கெல்லாம் வெளியுலகத் தொடர்பு இல்லாம இருந்துச்சி, உங்களைச் சுத்தி என்ன நடக்குதுன்னே உங்களுக்குத் தெரியாது. அம்மா அப்பாவைப் பார்த்தா பயம், அதீதமான மரியாதை. அதனால அவங்க என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்னு கண்ணை மூடிக்கிட்டு நம்பினீங்க. ஆனா எங்க காலம் அப்படி இல்லையேம்மா, படிக்கும்போது, நாலு பேரோட பழகும்போது இந்த உலகத்தைப் பத்தி தெளிவாவே புரிஞ்சிக்க முடியுது. எங்களுக்கு என்ன வேணும்னு எங்களாலயே தீர்மானிக்க முடியுது. போதாக்குறைக்கு இந்த காலத்து அம்மா அப்பாவும் உங்க காலம் மாதிரி இல்லாம பசங்க உணர்வுகளைப் புரிஞ்சிகிட்டு நட்புணர்வோட பழகறீங்க. உங்களையும் சேர்த்துதான் சொல்றேன். இல்லைன்னா இந்த அளவுக்கு உங்க கிட்டப் பேச முடியுமா? கடையில போய் ஒரு புடவை வாங்கறதுக்கு எத்தனை புடவைகளை எடுத்துப் போடச் சொல்றோம், எவ்வளவு குழம்பறோம்! இதெல்லாம் வாழ்க்கையை தீர்மானிக்கப் போற முடிவுகள்மா. குழம்பறதுல தப்பே இல்லை, கடைசியில தெளிஞ்சிட்டா போதும்" கண் சிமிட்டியவாறே பெரிய லெக்சர் கொடுத்தாள்.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வழக்கம் போல முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று படிப்பு முடிவதற்கு முன்பே காம்பஸ் செலக்ஷனில் நகரின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றில் வேலைக்கு அமர்ந்தாள் வித்யா. வழக்கம் போல அவள் திறமையைப் பார்த்து மூன்று நிறுவனங்களில் வேலைக்கு அழைத்ததால் அதிலும் குழப்பம், தடுமாற்றம் இல்லாமல் இல்லை.

இதோ சாரதா சொன்ன ‘வாழ்க்கையின் முக்கியமான முடிவு’ எடுக்க வேண்டிய கட்டம் வந்தாயிற்று. தரகர் கொண்டு வந்த வரன்களில் இருந்து மூன்று பேரை வடிகட்டி வைத்திருந்தார் வித்யாவின் தந்தை கேசவன். சாரதாவிற்கு இது அவ்வளவு எளிதில் முடிந்து விடக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. இருந்தாலும் மகள் என்ன சொல்லப் போகிறாளோ என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

மாலை அலுவலகத்திலிருந்த வந்து முகம் கழுவி காபி குடித்த வித்யா நேராகத் தந்தையிடம் வந்தாள். "என்னப்பா விஷயம்?" என்றாள். திகைப்புடன் பார்த்த தந்தையை நோக்கி "என்ன கண்டுபிடிச்சிட்டேனேன்னு ஆச்சரியமா இருக்கா? முக்கியமான விஷயம் இல்லாட்டா நீங்க இந்த நேரம் வீட்ல இருக்க மாட்டீங்களே! உங்க MD வேற அடுத்த வாரம் வரப்போறதா சொன்னீங்க, அந்தக் கவலையையும் பரபரப்பையும் விட்டுட்டு உட்கார்ந்திருக்கீங்கன்னா" என்று சிரித்தாள். தன் மகளின் புத்திசாலித்தனத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை சாரதாவால். அதே சமயம் இந்த புத்திசாலித்தனம்தான் சில தடுமாற்றங்களுக்கும் காரணம் என்பதும் அவளுக்குப் புரிந்துதான் இருந்தது. "என்னங்க, அப்படியே பார்த்துகிட்டிருந்தா ஆச்சா? விஷயத்தைச் சொல்லுங்க" என்று எடுத்துக் கொடுத்தாள்.

மேஜை மேலிருந்த கவரைப் பிரித்து உள்ளே இருந்து சில புகைப்படங்களையும் ஜாதகங்களையும் எடுத்தார் கேசவன். "ஓ! மாப்பிள்ளை தேடும் படலமா? ஹ்ம்ம்ம்… எத்தனை பேரோட அப்ளிகேஷன் தேறிச்சி?" என்று கிண்டலாகக் கேட்டவாறே தந்தை கையில் இருந்த போட்டோக்களை வாங்கிப் பார்த்தாள். மூவருமே தோற்றத்தில் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருந்தனர். குறை சொல்ல எதுவுமில்லை. கேசவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மாப்பிள்ளைகளைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். "இவர் பெயர் வெங்கடேஷ், 28 வயசு, ராமச்சந்திரால டாக்டரா இருக்கார். தனியாவும் ப்ராக்டீஸ் பண்றார். நல்ல கைராசின்னு இப்போவே பேர் வாங்கிட்டார். அம்மா இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் டாக்டர்தான். பூந்தமல்லியில இவங்களுக்கு சொந்தமா ஒரு பங்களா இருக்கு. ஒரு நர்ஸிங் ஹோமும் கட்டிகிட்டிருக்காங்க" வித்யாவின் முகத்திலிருந்து எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.

"இவர் ப்ரதீப், வயசு 29, பரம்பரைப் பணக்காரங்க, அம்மா சமூக சேவகி, அனேகமா எல்லா லேடீஸ் க்ளப்புலயும் உறுப்பினர். அப்பா சொந்தமா மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கற தொழிற்சாலை ஒண்ணு சின்ன அளவுல தொடங்கி நடத்திகிட்டிருக்கார். இப்பொ இவர் வெளி நாடு போய்ப் படிச்சிட்டு வந்து அதை விஸ்தரிக்கறதுல ஈடுபட்டிருக்கார். ரொம்ப திறமைசாலி"… ம்ஹும்.. வித்யாவின் முகத்தில் மாற்றமே இல்லை.

கடைசிப் புகைப்படத்தை எடுத்தார். இவர் பெயர் ராமகிருஷ்ணன். வயசு 32 கல்லூரியில விரிவுரையாளரா இருக்கார். அம்மா மட்டும்தான். அப்பா சின்ன வயசுலயே தவறிட்டார். இவரையும் ரெண்டு தங்கைகளையும் அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்க. ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்ணிட்டுதான் தான் பண்ணிக்கணும்னு வைராக்கியமா இருந்திருக்கார். வீட்டைச் சுத்தி தோட்டம் வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டு ஊருக்கு கொஞ்சம் வெளியே இருந்தாலும் பரவால்லைன்னு இப்போதான் ஊரப்பாக்கத்துல சொந்த வீடு கட்டியிருக்கார். அம்மா தங்கைகள் மேல பாசம் அதிகம். இருக்கறதுல இதுதான் கொஞ்சம் சுமாரான வரன். வயசும் கொஞ்சம் அதிகம். மூணு ஜாதகமுமே நல்லாப் பொருந்தியிருக்கு. அவங்க வீட்ல எல்லாம் உன் போட்டோவைப் பார்த்துட்டுப் பிடிச்சிப் போயி நமக்குச் சம்மதம்னா பெண் பார்க்க வரதா சொல்லி இருக்காங்க. இப்போ நீதான் சொல்லணும்".

"அவ எங்கே இப்போதைக்கு முடிவு எடுக்கப் போறா! இன்னும் வாரம்-பத்து நாளாவது குழம்பி, இழுத்தடிச்சிதான் ஒரு முடிவுக்கு வருவா. அதுக்குள்ள இந்த மாப்பிள்ளைகளுக்கு கல்யாணமே முடிவாயிடும்" என்று தனக்குள் புலம்பிக்கொண்ட சாரதாவுக்கு வித்யாவின் பதிலைக்கேட்டு ஆச்சரியத்தில் மயக்கமே வந்து விட்டது.

"அப்பா! நான் வேலைக்குப் போய் நல்லாவே சம்பாதிக்கறேன். அதனால பணக்கார மாப்பிள்ளைதான் வேணும்கற எண்ணமெல்லாம் கிடையாது. டாக்டர் வரன்… ஹ்ம்ம்ம்.. சரி வராதுப்பா! அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்லயும் இருந்துகிட்டு, தனியாவும் ப்ராக்டீஸ் பண்றாருன்னா அவருக்கு தொழில் மேல காதல் இல்லை பணத்து மேல காதல். ரெண்டுமே சரியா வராது. பெண்கள் இல்லாத வீடு வேற! தனிமைல தவிச்சிப் போயிடுவேன்பா"

"அடுத்து.. ப்ரதீப். அனேகமா எல்லாப் பணக்காரக் குடும்பங்கள் மாதிரி அம்மாவுக்கு சமூக சேவைக்கும், அப்பாவுக்கு பிஸினெஸுக்குமே பொழுது சரியா இருக்கும். போதாக்குறைக்கு இவரும் தொழிலை விரிவாக்கறதுல ஈடுபடப்போறார்னா, வாழ்க்கையில வேற எதுக்குமே நேரம் இருக்காதுப்பா. அவர் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்னு அவங்க அவங்க வேலையைப் பார்த்துகிட்டு போறதுக்கு கல்யாணம் எதுக்கு?!"

"எனக்கு இந்த மூணாவது வரன் திருப்தியா இருக்குப்பா. பெரிய இடத்துல வாழ்க்கைப்பட்டா பொண்ணு செளகரியமா இருக்கலாமேங்கற உங்க ஆதங்கம் புரியுது. ஆனா வெறும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைப்பா. புருஷன் தன்னை நம்பி வர பொண்டாட்டிக்குன்னு நேரம் ஒதுக்கணும், வீட்ல பெரியவங்களா லட்சணமா ஒரு பொறுப்பான தாய் இருக்கணும். இன்னும் கலகலப்புக்கும் அன்புக்கும் பஞ்சமே இல்லாம அருமையான நாத்தனார்கள் இருக்கணும். நமக்கு ஏதாவது பிரச்சினைன்னா இவங்கள்லாம்தானேப்பா தோள் கொடுப்பாங்க. அப்புறம், அவரோட தோட்ட ரசனை, இயற்கையை ரசிக்கற மனுஷன், நிச்சயம் மென்மையானவராத்தான் இருக்கணும். சின்ன வயசுல தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்தவர், தங்கைகள் மேல பாசம் வெச்சிருக்கறவர், கண்டிப்பா இவர் மனைவியையும் மதிப்போட, பாசத்தோட நடத்துவார்னு நம்பிக்கை இருக்கு. அதனால இவருக்கு ஓகேன்னா எனக்கும் இந்த வரன்ல சம்மதம்தான்பா".

தன்னுடைய பேச்சைக் கேட்டு திகைத்து நின்ற சாரதாவின் முன் சொடுக்குப் போட்டாள் வித்யா. "அம்மா, முழிச்சிக்கோ! இது கனவில்லை. நூறு சதம் நிஜம்தான். அம்மா! இந்தத் தலைமுறைக்கே தடுமாற்றம் அதிகம்னு சொல்லுவீங்களே, இப்ப உங்களுக்குப் புரியுதா, நாங்க தடுமாற வேண்டிய விஷயங்களுக்குத் தடுமாறினாலும், முக்கியமான சில முடிவுகளை எந்தத் தடுமாற்றமும் இல்லாம ‘நச்’சுனு எடுத்துடுவோம்னு". தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.

திகைப்பிலிருந்து விடுபட்ட சாரதா "இதென்னடி இப்பதான் பெரிய மனுஷி மாதிரி விளக்கமா பேசினே, இப்போ என்னடான்ன சின்னக் குழந்தை மாதிரி கொஞ்சிகிட்டிருக்கே! ஹ்ம்ம்ம்… ஒண்ணு நல்லாப் புரியுது, இப்போ தடுமாற வேண்டியது என்னோட முறை. என்ன பார்க்கறே, கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கறதுல இருந்து சத்திரம் முடிவு பண்றது வரைக்கும் இதுவா அதுவான்னு இனிமையா தடுமாற வேண்டாமா?" கலகலவென்று சிரித்த தன் மகளின் கன்னத்தைத் தடவி திருஷ்டி கழித்தார்.

About The Author

2 Comments

  1. s.ramesh babu

    ஸ்ரீ இந்த தலைமுறைக்கு பொறுப்பே கிடையாதுன்னு சொல்றவங்க மத்தியில் இவர்கள் மிகவும் திறமைசலிகள்ன்னு சொன்னதுக்கு நன்றி.

Comments are closed.