தம்பீ! சிரித்துக்கொண்டே யோசனை செய்! (2)

(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுட‎ன் “வெற்றிக்கு முதல் படி” நூலிலிருந்து)

ஓடி விளையாடு!

தோல்வியிலும் சிரிக்கும் விளையாட்டு வீர மனோபாவத்தை நாம் நம் குழந்தைகளிடம் வளர்ப்பதில்லை. "படி படி" என்று படிப்புக்கு முதன்மை கொடுக்கிற அளவுக்கு விளையாட்டு, போட்டி, பந்தயங்களுக்கு அவ்வளவு முக்கியம் கொடுப்பதில்லை.
விளையாட்டு எத்தகைய மனப்பழக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதன் முழு கவனத்தையும் நமது கல்வியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

விளையாட்டு உடல் வலிமையைக் காட்டுகிறது. உடல் வலிமை, மனதில் தெம்பை ஊட்டுகிறது. முயல வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. வெற்றி-தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை வளர்க்கிறது. நாம் தோற்றாலும் வெற்றி பெற்றவனை மனமாரப் பாராட்டும் நல்ல குணத்தை வளர்க்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வில் வரும் சிக்கல்களை எல்லாம் விளையாட்டு பந்தயமாக எடுத்துக்கொள்ளும் மனோபாவத்துடன் அணுகும் பக்குவத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. எனவேதான் பாரதியார் – "ஓடிவிளையாடு பாப்பா" என்று பாடினார்!

வாழ்க்கையே ஒரு விளையாட்டு!

வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

தம்பி! வாழ்க்கையை ஒரு விளையாட்டுப் பந்தயமாக எடுத்துக்கொள். தோல்வியைக் கண்டு சிரி. ‘அடுத்தமுறை நான்தான் வெற்றி பெறப் போகிறேன்’ என்று போராடு; விளையாடு; நடமாடு!

வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான்! அதுதான் சரியான அணுகுமுறை.

மாலை நேரங்களில் விளையாடு. உடலையும் வளர்த்துக்கொள். தோல்வியைச் சமாளிக்கும் மனப்பழக்கத்தையும் வளர்த்துக்கொள். வெற்றியைக் கண்டு உன்னைப் பற்றியே பெருமைப்படும் மகிழ்வையும் வளர்த்துக்கொள்.

தோல்வி ஏற்பட்டால்!

தோல்வியை எதிர்பார்த்து யாரும் செயல்படுவதில்லை. "தோல்வியே வா!" என்று யாரும் வருந்தி அழைப்பதில்லை. ஆனால் வந்துவிட்டால், அதை விளையாட்டு வீரன் போல சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்.

தோல்வியை எடுத்துக்கொள்வதில்தான் – கையாளுவதில்தான் – மனிதர்கள் வேறுபடுகிறார்கள். தோல்வி எனக்கு ஏற்படும்போது நான் என்ன சிரிக்கிறேனா? சிரிக்க முயல்கிறேன்! அவ்வளவுதான்!

நானும் எல்லோரையும் போன்ற மனிதன்தான். எனக்கும் வருத்தம் ஏற்படுகிறது. அழுகை வருகிறது. எல்லாரும் என்ன நினைப்பார்கள்? என்கிற அவமான உணர்வுகள் எல்லாம் எழுகின்றன.

எல்லாம் கொஞ்ச நேரம்தான்! நான் மீண்டும் பழைய மனிதனாக வெளிவருகிறேன். உற்சாகமான மனிதனாக வெளிவருகிறேன். உற்சாகமான மனிதனாக! நம்பிக்கை கொண்ட தலைவனாக! "யாரும் என்னை அடித்து விட முடியாது!" என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

தோல்வி ஏற்படும்போது மனவுறுதி குலைந்தது உண்மை. ஆனால் அது தற்காலிகம்! இதோ மீண்டும் எழுந்துவிட்டேன். வாழ்க்கை இருக்கும்வரை அது ஒரு இனிமையான விளையாட்டுப் போட்டிதான்; போராட்டம்தான்!

வெற்றி பெறுவது எப்படி?

பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், "ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?" என்று ஒரு இளைஞன் கேட்டான். அதற்கு வீரன் சொன்னான்: "முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!"

நமது வாழ்க்கையும் – நமது முயற்சிகளும் ஒரு ஓட்டப்பந்தயந்தான். அதில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!

இரண்டாவதாக, எந்தப் பந்தயத்திலும் வெற்றி-தோல்வி உண்டு என்பதை உணர வேண்டும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு அல்லவா? தோல்வி கண்டு துவண்டுவிடாமல், அடுத்த பந்தயத்துக்கு முயற்சி செய்ய வேண்டும். "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு" என்பார்கள். அந்த வீரனாக நாம் விளங்க வேண்டும்!

அடுத்து முயன்றால் ஆகாதது ஒன்றுமில்லை!

வீரன் தோல்வியிலும் வெற்றிக்கான விதையைக் காண்கிறான்; எனவே அவனுக்கு தோல்வியும் வெற்றிதான்! யானை படுத்தாலும் குதிரை மட்டம் அல்லவா?”

About The Author

1 Comment

  1. Panneer selvam.R

    அருமையான கருத்துகள். அனைவரும் பயனடைய உங்கள் பணி சிறக்கட்டும்

    பன்னீர் செல்வம்

Comments are closed.