தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் உளநிலையும்

தாய் என்ற சொல் மந்திரச்சொல் அல்ல. ஆனால், மந்திரமாய்ப் போற்றுகின்ற சொல். தாயைப் போற்றுகின்றவன் தெய்வத்தினைப் போற்றுகின்றவன் ஆவான். நேரில் வருகின்ற தெய்வம் போன்றவள்தான் தாய். தாய்க்கு நிகரான உயிர் உலகத்தில் இல்லை.

மீண்டும் செல்ல முடியாத
கோவில் கருவறை
அம்மாவின் கர்ப்பப்பை!

என்று புதுக் கவிஞர்கள் கருவறை குறித்துக் கவிதை இயற்றுகின்றனர்.

அறிவியல் ஆயிரம் வடிவத்தில் வந்தாலும், இயற்கையை மிஞ்சும் விதத்தில் செயற்கையில் அற்புதங்களைச் செய்தாலும், தாய்மையை அதனால் உருவாக்க முடியாது.

பெண் முழுமை அடைவதே தாய்மையில்தான். பெண்மையின் சிறப்பும், பேரழகும் தாய்மையில்தான் இருக்கின்றன. அழகும், கவர்ச்சியும் பருவம் ஆட்சி செய்யும் காலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், தாய்மை பருவங்களைக் கடந்து நிற்பது! குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற தாயாக அவள் இருக்கிறாள். சங்க இலக்கிய நூல்கள் பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் என ஐவகைத் தாயார்களை அறிமுகம் செய்கிறது.

பருவம் வந்த பெண்பிள்ளைக்கு உதவுபவள் செவிலித்தாய். பருவம் எய்திய பெண்ணின் காதல் உணர்வுகளையும், மன உணர்வுகளையும் குறிப்பால் அறிந்து நற்றாய்க்கும் (பெற்ற தாய்) இல்லத்தார்க்கும் எடுத்துக் கூறி, தலைவிக்கு (அதாவது, அந்தப் பெண்பிள்ளைக்கு) நல்நெறி காட்டுபவளாக அமைபவள் செவிலித்தாய். செவிலித்தாயைக் குறித்து நாற்கவிராச நம்பி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக் குரிய ஆகும் என்ப"

என்று செவிலித்தாயின் செயல்களை அறிமுகப்படுத்துகிறார்.

வீட்டை விட்டுத் தலைவனுடன் (காதலன்) போன தனது மகளை நினைத்து வளர்ப்புத் தாயான செவிலி, தன்னிடம் வளரும்போது அவளைத் தான் வளர்த்த விதத்தினையும், தன்னிடம் தன் மகள் நடந்து கொண்ட நிலையையும் எண்ணி வருந்திக் கூறியதாகச் சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, ‘நெருப்பு போன்ற வெய்யில் எரிக்கும் பாலை நிலத்திற்குத் தன் காதலனுடன் மகள் போனதால் செவிலித்தாய் வருந்துகிற’ செய்தியை,

"கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியு நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ
சென்மழை தவழுஞ் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே" (குறுந்தொகை – 144)

என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இதில் "காவிய (பூங்கா) மலர்களைப் பறித்தும், கடலில் உள்ள வெள்ளியாய்த் தெரிகிற அலைகளில் விளையாடியும், பிரியாத தோழிமார் தத்தமக்குரிய விளையாட்டைப் புரிய, இவ்விடத்துப் பொருந்துதலுக்கு உடன்படாமல், விரைந்து செல்லும் மேகங்கள் தவழுகின்ற விண்ணளவு உயர்ந்த மலைகள் கொண்ட நாட்டுக்கு, மெல்லிய பாதங்கள் வருந்த, பருக்கைக் கற்கள் நிறைந்த பாலை வழியே போய்விட்டாளே அவள்!" எனச் செவிலித்தாய் கலங்குவது சுட்டப்படுகிறது. காதல், சுட்டெரிக்கும் வெயிலையும் சுகமாக மாற்றும் வள்ளன்மை கொண்டது என்பதை அறியாமல் வருந்துகின்றாள் செவிலித்தாய். மேலும் செவித்தாய் வருந்துவதைக் குறுந்தொகைப் பாடல்,

"செம்பொற் புனைகலத்து அம்பொரிக் கலந்த
பாலும் பலஎன உண்ணாள்
கோல்அமை குறுந்தொடித் தளிர்அன் னோளே?" (குறுந்தொகை -356)

எனப் பதிவு செய்கிறது. இப்பாடலில், "செம்பொன்னால் ஆன பாத்திரத்தில் அழகிய பொரியோடு கலந்த பாலை வேண்டாம் என்று சொல்பவள், அழகிய ஆபரணங்கள் அணிந்தவள், மாந்தளிரை ஒத்த மென்மையானவள் என் மகள். வீரங்கொண்ட தலைவன் பாதுகாப்பான் எனக் காதலனோடு போய் நீர் வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மையைக் கொண்ட, மிக்க வெப்பத்தையுடைய கலங்கல் நீரைக் குடிக்க எவ்வாறு வலிமை பெற்றாளோ?" எனச் செவிலித்தாய் வருந்துகின்ற நிலை படம்பிடித்துக் காட்டப்படுகிறது.

தலைவனோடு கொண்ட அன்பின் காரணமாகத் தாய் வீட்டில் இன்பமாக வாழ்ந்ததைத் துறந்து தன் தலைவனுக்காக எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளத் தன்னை மாற்றிக் கொள்வது காதல் கொண்ட பெண்களின் உண்மையான நிலைப்பாடாகும்.

—தொடரும்–

About The Author