திருக்குறள் உணர்த்தும் உரிமைகள்!

திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகளைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம்:

1 வாழ்வு உரிமை ( Right to life)
2 பொருளாதார உரிமை ( Economic right)
3 கல்வி உரிமை (Right to education)
4 பேச்சுரிமை ( Right to expression)
5 நீதி பெறும் உரிமை (Right to equality before law)
6 தன்னுரிமை ( Right against self injury)

1 வாழ்வுரிமை :

மனிதனின் வாழ்வுரிமை பற்றி திருக்குறள் பொருட்பாலில் பல குறிப்புகள் உள்ளன. வாழ்வுரிமை என்பது உயிர் வாழும் உரிமை மாத்திரம் எனக் கொள்ளுதல் சரியாகாது; தரமான வாழ்விற்கும் உரிமை எனக் கொள்ளவேண்டும்.

வாழ்க்கைத் தரம், சுகாதாரச் சுற்றுச்சூழல், தூய்மையான பணியிடம், தேவையான ஓய்வு – அனைத்தையும் உள்ளடக்கியதே வாழ்வுரிமை ஆகும்.

சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் பிரிவு கூறும்: "எல்லா மனிதர்களும் உள்ளார்ந்த சுதந்திரத்தோடும், மாண்போடும், உரிமைகளோடும், சமத்துவத்தோடும் பிறக்கின்றனர். அவர்களுக்கு அறிவும், மனசாட்சியும் உள்ளன. எனவே, ஒருவருக்கு ஒருவர் சகோதர உணர்வோடும், ஒருவரை ஒருவர் மதித்தும் வாழ வேண்டியது அவர்தம் கடமையாகும்"

இதைத்தான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (குறள் 972)

என்று உணர்ர்த்தியுள்ளார்!

பிறப்பினால் எவரும் வேறுபடுவதில்லை; "உழைப்பே உயர்வளிக்கும்" என அறிவுறுத்தி, சாமானியத் தொழிலாகக் கருதப்பட்ட வேளாண்மைத் தொழிலுக்குச் சிறப்பளித்து "உழவு" என்ற அதிகாரத்தையே படைத்தார்!

"சுழன்றும் ஏர்பின்னது உலகம், அதனால்
உழந்தும் உழவே தலை" (குறள் 1031)

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" (குறள் 1032)

என உழவுத் தொழிலுக்கு முதன்மையிடம் கொடுத்ததுமல்லாமல்,

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்" (குறள் 1033)

என உழவர் பெருமக்களைச் சிறப்பித்து, பிறப்பினால் மனிதர்களை வேறுபடுத்துவது தவறு என்றும் உணர்த்துகிறார்.

"உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
சேறாது இயல்வது நாடு" (குறள் 734)

ஒவ்வொருவருக்கும் பசி, பிணி, பகையின்றி வாழும் உரிமை உள்ளதென்றும், அவற்றினின்று தம் குடிமக்களைக் காத்தல் அரசின் கடமையென்றும் திருவள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு" (குறள் 385)

பொருள் வரும் வழிகளை உண்டாக்குதல், பெற்ற பொருட்களைச் சேர்த்தல், சேர்த்தவற்றைக் காத்தல், அவற்றைக் குடிமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல் ஆகியவற்றைச் சிறப்பாகத் திறன்படச் செய்பவனே நல்ல அரசன் என்கிறார்.

அத்தகு அரசனின் கீழ் வாழும் குடிமக்கள் அச்சமும், கவலையுமின்றி இனிது வாழ்வர்; அவர்தம் வாழ்க்கைத் தரம் நன்கு விளங்கும். இத்தகு வாழ்வுரிமை அவ்வரசின் கீழ் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு என அறிவுறுத்துகிறார்.

பொருளாதார உரிமைகளில் மிகவும் இன்றியமையாதது "உணவு உரிமை".

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கச் செய்வது அரசின் / சமுதாயத்தின் கடமை.

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று அறச்சாலைகள் அமைத்து அனைவருக்கும் அன்னமிடுதல் அல்லவா?

"உணவில்லை" என்ற நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது; வறுமையற்ற சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்; அதற்கு இந்நாட்டின் அரசியல் சுதந்திரம் இன்றியமையாதது என முழுமையாக உணர்ந்தவர் மகாகவி பாரதி. அவர் சினம் கொண்டு கூறுவார்:

"தனி ஒருவருக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" என்று!

(தொடரும்)

About The Author