திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (33)

மலர்கள் நனைந்தன பனியாலே!

கே.வி.மஹாதேவன் தான் இசை அமைத்த பாடல்களிலேயே சிறந்த ஒன்று என்று கூறிய பாடல் இதயக்கமலம் படத்தில் இடம் பெற்றது! பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். தமிழ்ச் சொற்கள் ஜாலம் புரிய, சுசீலா தன் குரலால் பனிமழையை நம் மீது பொழிகிறார். உள்ளம் குளிர்கிறது; உடல் குளிர்கிறது; ஆன்மா சிலிர்க்கிறது அற்புதமான இசையைக் கேட்டு – அதில் வரும் கண்ணன் முருகன் போன்ற அற்புதமான தெய்வீக நாமங்களைக் கேட்டு!

பாடலைப் பார்ப்போம்:-

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழி விழ நகை கொண்டான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்து நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி (மலர்கள்)

இறைவன் முருகன் திரு வீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரென்னும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி (மலர்கள்)

சுசீலாவின் பனி மழைக் குரல் உள்ளத்தைச் சிலிர்க்க வைக்க கண்ணதாசன் ஏற்றும் ஒரு அற்புத விளக்கைக் காண்கிறோம். ‘சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே’ என்ற வரியில் ‘பொங்கி எழுந்தது’ என்பதை அடியிலிருந்து பால் பொங்கி வழிந்தது போல சுசீலா பாடியதை நன்கு அனுபவித்துக் கேட்க வேண்டும்!

‘என்னை நிலாவினில் துயர் செய்தான்’ என்ற வரி மகிழ்ந்து பாராட்டுதற்கான அற்புதமான கவிதை வரி!

அடுத்து ‘சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்து நீராடி’ போன்ற சொற்களை அவர் தமிழால் நனைத்திருக்கும் விதம் ரசிப்பதற்கு உரியது!

‘உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி’ என்பதை சுசீலா பிரித்துப் பாடிய விதம் பல முறை கேட்டு இன்புறுதற்குரியது.

மலர் அடி போற்றி உன்னோடிருப்பேன் என்ற நெஞ்சார்ந்த எண்ணத்தை நாயகி விளக்க வேண்டும். ஆனால் பாட்டில் உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி என்று வருகிறது. ஆகவே, ‘மலர் அடி போற்றி’ என்பதைத் தனியே எடுத்துப் பாடி அர்த்தத்தை விளக்கி நம்மை உருக்கி மகிழ வைக்கிறார் சுசீலா!

கடைசி சரணத்தில் ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது!

ஆழ்வார்கள் அன்பே தகளியாக, ஆர்வமே நெய்யாக ஏற்றிய விளக்கு நம் நினைவில் எழுந்து மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆழ்வார்கள் தனித் தனியே தமிழால் ஏற்றிய முத்தான தமிழ்ப் பாடல்களை நினைவில் கொண்டு கண்ணதாசனின் பாடலைப் பார்த்தால் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி அது எரிய உயிர் என்னும் காதல் நெய் ஊற்றும் பாங்கு நம்மை நெகிழ வைக்கிறது.

பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கைக் காண்போம்:

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று

அடுத்து பூதத்தாழ்வார் ஏற்றிய விளக்கைக் காண்போம்:
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

பரமனின் நினைவில் ஞானத்தமிழால் விளக்கேற்றினர் ஆழ்வார்கள். அந்தக் கண்ணனைப் பாடலில் இணைத்து முருகனையும் இணைத்து காதல் விளக்கு ஏற்றி விட்டார் கண்ணதாசன்!

கண்ணனின் கன்னங்களில் குழி விழ அவன் துயிலில் மோகன நகை கொண்ட பாடலும் கூட மோகன ராகத்தில் அமைந்ததுதான்! காலையில் மனதுக்கு இதமாகக் கேட்க வைக்கும் அற்புத இசையை அமைத்த கே.வி.மஹாதேவன் ஒரு இசை ஜீனியஸ் என்ற நிலைக்கு உயர்ந்து விடுகிறார்!

மோகன ராகத்தில் நூறுக்கு மேல் நல்ல தமிழ்த் திரைப்படப் பாடல்களைக் கேட்கலாம்.

அவற்றில் குறிப்பிடக்கூடிய சில பாடல்கள் இதோ:-

ஆஹா இன்ப நிலாவினிலே – மாயாபஜார்
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
என்னை முதல் முதலாக பார்த்த – பூம்புகார்
கங்கை யமுனை இங்குதான் சங்கமம் – இமயம்
கிரிதர கோபாலா – மீரா
காற்றுவெளியிடைக் கண்ணம்மா – கப்பலோட்டிய தமிழன்
கம்பன் ஏமாந்தான் – நிழல் நிஜமாகிறது
கண்மணியே காதல் என்பது கற்பனையோ – ஆறிலிருந்து அறுபது வரை
கண்ணன் ஒரு கைக்குழந்தை – பத்ரகாளி
நிலவும் மலரும் – தேனிலவு
பழகத் தெரிய வேணும் – மிஸ்ஸியம்மா
வந்த நாள் முதல் இந்த நாள் வரை – பாவ மன்னிப்பு

இவற்றில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய கிரிதர கோபாலா தனி ரகம்! கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் வேறொரு ரகம்.

ஆனால் மென்மையாக வருடி விடும் சுகத்தைத் தரும் பாடல் மலர்கள் நனைந்தன பனியாலேதான்!

‘இதயக்கமலம்‘ இதயத்தில் நினைத்து நினைத்து மகிழும் பாடல்களைக் கொண்ட படம் ஆகும்.

உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
என்ற பாடல் என்றும் நெஞ்சில் இருக்கக் கூடிய பாடல்! சுசீலாவின் சோகம் ததும்பும் குரல் நம் மனதை நெருடுகிறது. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை கேட்கும் போதெல்லாம் இந்தப் பாடல் எழுப்புவதை உணர்ந்து அனுபவிப்பவர்கள் கூறுவார்கள்!

‘மெலடி க்வீன்’ என்று இவரைக் கூறினாலும் அது இவரின் திறமைக்குச் சற்று குறைவான பட்டமாகவே தோன்றுகிறது! தமிழ்த் திரை இசை உலகம் இவரை என்ன சொல்லிப் புகழ்ந்தாலும் அது தகும் என்று சொல்வதோடு திருப்திப் படலாம்!

(தொடரும்)

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    திரைப்பாடல்களின் பயணத்தோடு முதல் ஆழ்வார்கள் இருவரின் முதன்மைப் பாசுரங்களையும் தொட்டுக் காட்டியதற்கு நன்றி. ஆழ்வார்களின் அமுதக் கருத்துகளைத் திரைப்படப் பாடலாசிரியர்கள் சிலர் விரும்பி எடுத்தாண்டுள்ளனர்.

Comments are closed.