துருவன் (2)

நாரதர் நேராக உத்தானபாதனின் அரண்மணைக்குச் சென்றார். "அரசனே, மகிழ்ச்சி இன்றி எதையோ பற்றிச் சிந்தித்தபடி இருக்கிறாயே! என்ன நடந்தது?" என்று அரசனிடம் கேட்டார்.

உத்தானபாதன் நடந்ததையெல்லாம் கூறினார். "என் மகனைத் துரத்தி விட்டேன். அவன் மனம் வருந்தி நகரைவிட்டே போய்விட்டான். அப்போதும் அவனை நான் தடுக்கவில்லை. காட்டிலே அவன் என்ன செய்வான்? மிருகங்கள் அவனைத் தின்றுவிடுமே! நான் என்ன செய்வேன்?" என்று புலம்பினான்.

நாரதர், "உன் புதல்வனைப் பற்றி இனி நீ வருந்த வேண்டாம். அவனைக் கடவுள் பாதுகாப்பார். அவனுடைய புகழ் உலகம் முழுவதும் பரவப் போகிறது. சீக்கிரத்திலே அவன் புகழோடு திரும்பி வருவான்" என்று மன்னனுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

உத்தானபாதன் நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆறுதல் அடைந்து துருவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

மதுவனம் சென்ற துருவன் யமுனை நதியில் குளித்து நீராடி பட்டினி இருந்து இறைவனை நோக்கித் தவம் இயற்ற ஆரம்பித்தான். மூன்று இரவுகள் கழிந்தன. நான்காம் நாளிலிருந்து மிகக் குறைந்த அளவே புசிக்க ஆரம்பித்தான். மாதங்கள் கழிந்தன. இறைவனை மனதிலே இருத்தித் தன் தவத்தில் அவன் உறுதியாக இருந்தான். துருவனுடைய கடும் தவத்தால் அவன் மிக்க ஒளியைப் பெற்றான். அந்த ஒளியை மூன்று உலகங்களாலும் பொறுக்க முடியவில்லை.

துருவன் ஒரு காலில் நின்று தவம் செய்யத் தொடங்கியது முதல் பூமாதேவி அவனது ஒரு கால் கட்டை விரலால் அழுத்தம் மிகப் பெற்று பாரம் தாங்க முடியாமல் வருந்தினாள். இந்திரன் முதலான தேவர்களுக்கும் துருவனின் உக்கிரமான தவத்தால் மூச்சுவிட முடியாதபடி ஆனார்கள். அனைவரும் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார்கள். மகாவிஷ்ணு, தேவர்களை நோக்கி, "கவலைப்பட வேண்டாம்" என்று கூறி, "அந்த ஜந்து வயது பாலகன் துருவனுடைய இஷ்டத்தை நிறைவேற்றுகிறேன்" என்று கூறி அருளினார். கருடன் மீது ஏறி மகாவிஷ்ணு மதுவனத்தில் துருவன் முன் பிரசன்னம் ஆனார். தன் பக்திக்கு ஏற்ற பலன் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த துருவன் மகாவிஷ்ணுவின் அடி பணிந்து அவரைப் பல தோத்திரத் துதிகளால் பாடிப் பரவினான்.

"இறைவனே! எனக்கு சொர்க்கம் வேண்டாம். உன் பாதங்களை எந்த நாளும் பணிய அருளும், உன்னை வணங்கும் முனிவர்கள் இடையே இடையறாது எப்போதும் இருக்கும்படி அருளவேண்டும்" என்று வேண்டினான்.

உடனே மகாவிஷ்ணு, "துருவா! உன்னுடைய தவத்தை நான் மெச்சினேன். நிரந்தரமான ஒளியுடன் நீ பிரகாசிப்பாய்! சூரியன் முதலான கிரகங்களும், அசுவனி முதலான நட்சத்திரங்களும், இதர ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களும் போற்றுகின்ற உன்னதமான இடத்தை உனக்குத் தருகிறேன். முளையிலே மாடுகள் கட்டி இருப்பது போல உன்னால் இந்த நட்சத்திரங்கள் கட்டுண்டிருக்கும். கல்ப காலம் எல்லாம் முடிந்தாலும் உன் ஸ்தானம் அழியவே அழியாது. சுக்கிரன் முதலானோர் கூட உன்னை வலம் வந்து பிரதட்சிணம் செய்வர். உன் தந்தையான உத்தானபாதன் உன்னிடமே அரசாட்சியை ஒப்புவிப்பான். நீ அதைப் பெற்று ராஜ்யத்தை ஆள்வாயாக. உன் சகோதரன் உத்தமன் வனத்திற்கு வேட்டையாடப் போவான், அப்போது அவன் காணாமல் போவான். உன் மாற்றாந்தாய் சுருசி வனம் சென்று காட்டுத் தீயில் அகப்பட்டுக் கொள்வாள். நீ பல யாகங்களைச் செய்து என்னை ஆராதித்து ராஜ்யம் மூலம் ஏற்படும் சுகங்களை அனுபவித்த பின்னர் சப்த ரிஷிகளுக்கு மேல் இருப்பதும் திரும்பி வராத இடமுமான வைகுண்டலோகத்திற்கே செல்வாய்! இறுதியில் என் பதவியைப் பெறுவாய்!" என்று வரம் அளித்தார்.
துருவனுக்கு வரம் அளித்த மகாவிஷ்ணு தன் லோகத்திற்கு மீண்டார்.

துருவன் தான் நினைத்தப்படியே இறைவனை நேரில் பார்த்ததை எண்ணி மகிழ்ந்து தன் பட்டணத்திற்குத் திரும்பினான்.
உத்தானபாதன் துருவன் திரும்பியதைப் பார்த்து மனம் மகிழ்ந்தான். தாய் சுநீதியும் மிகவும் மகிழ்ந்தாள். சங்கு, துந்துபி வாத்தியங்கள் முழங்க, அரசிகள் சுநீதி, சுருசி கூட வர மகன் உத்தமனும் கூட வர மன்னர் துருவனை எதிர்கொண்டு அழைத்தான். சுநீதி மகனைக் கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் விடுத்தாள்ன். துருவனும் உத்தானபாதனை வணங்கிப் பணிந்தான். சுருசி அவனை அணைத்து "பல்லாண்டு வாழ்வாயாக" என்று வாழ்த்தினான். மக்களும் துருவனை கோலாகலத்துடன் வரவேற்றனர்.

(சிறுவர் புராணக் கதைகள் – மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author