தூது சென்ற தூதுவளை (1)

வியர்த்திருந்தது அந்த மனிதருக்கு.. அங்கவஸ்திரத்தால் விசிறிக் கொண்டு எதையோ தொலைத்ததைத் தேடி வருபவரைப் போலத் தெரிந்தார்.

"ஸ்வாமி.."

முதலில் கவனிக்கவில்லை. மறுமுறை சற்றே அழுத்திக் கூப்பிட்டதும் நின்றார். அவர் எதிரில் வயதான அந்தணர்.

"என்ன?"

"தேவரீர்.. அரண்மனைக் கைங்கர்யம்தானே.. ராஜா யமுனைத்துறைவரிடம்தானே"

"ஆமாம்..அதற்கென்னவாம்?"

"தங்களுக்கு சித்தம் என்றால் அடியேன் ஏதும் செய்யக்கூடும்.."

"உம்மால் ஆகாது.. நகரும்"

"அப்படிச் சொல்லக்கூடாது.. கிருபை பண்ணும்"

"என்ன இது.. உங்களோடு தொந்திரவாப்போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்காமல்.. ஸ்ஸ்.. ஸ்ரீமன்நாராயணா"

தடுத்தவர் சிரித்தார்.

"என்ன கீரை வேணும் ஸ்வாமி"

"தூதுவளை.. என்ன தரப்போறீரா?"

"கிலேசம் விட்டு திருமாளிகைக்குப் போங்கோ.. பின்னாலேயே எடுத்துண்டு வரேன்.."

சொன்னபடியே கொண்டுவந்துவிட்டார். ஹப்பா.. என்ன பச்சைப்பசேலென்று.. வாசம் வீசியது.

பரிசாரகஸ்வாமி (சமையல்காரர்) கண்களில்ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

"இனிமேல் இந்தக் கீரைக்காக தேவரீர் அலைய வேண்டாம். அடியேனே தினமும் கொண்டு வரேன்.."

அதேபோல கொண்டு வந்தார். பணம் கொடுக்க வந்தபோது வாங்க மறுத்துவிட்டார்.

"வேறெதுவும் வேண்டாம்."

ஆறுமாதங்கள். தொடர்ந்து சலிக்காமல் தூதுவளைக் கீரையுடன் அந்த வயோதிக ஸ்வாமி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

"ஸ்வாமி.. ராஜா எதுவும் தெரியப்படுத்தினாரா"

பரிசாரகர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"ரசித்து சாப்பிட்டார்.."

"ஓ.."

மறுநாள் தூதுவளை வரவில்லை. எங்காவது வெளியே சென்றிருக்கலாம். நாளை வந்துவிடும்.ஊஹூம். நாட்கள் ஓடின. கீரைமட்டும் வரவே இல்லை. அவர் தோட்டம் எங்கே இருக்கிறதோ.. அதைக்கூட விசாரித்து வைத்துக் கொள்ளவில்லை. அதைவிடவும் சங்கடமானது ராஜாவே கேட்டது.

"இன்னிக்கும் கீரை பண்ணலியா"

குரலில் தெரிந்த சலிப்பு. அதுவும் அவருக்கு மிகவும் இஷ்டமான தூதுவளை இல்லாமல் சாப்பாடா.

"க்ஷமிக்கணும். கிடைக்கல.."

"அதெப்படி.. நாள் தவறாம பண்ணின்டு இருந்தேளே"

வேறு வழியில்லை. உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

"ஒரு பெரியவர்.. ரொம்ப வயசானவர்..அவரா ப்ரீதியோட கொண்டு வந்து இத்தனை நாளும் தந்தார்.. இப்ப என்னமோ தெரியல.. காணோம்."

"அப்படியா"

ராஜா யமுனைத்துறைவரின் கண்களில் ஆச்சர்யம்.

"ஆமாம். அவர்கூட அடிக்கடி விசாரிப்பார்.. ராஜா எதுவும் சொன்னாரான்னு"

"ஓ.. அப்படின்னா அவரை நான் பார்க்கணுமே"

அவ்வளவுதான். இனி அது அரசகட்டளை. யமுனைத்துறைவர் ஒரு தடவை சொன்னால் சொன்னதுதான். ஏகசந்தாக்ரஹி.

பரிசாரகர் அவசரம் அவசரமாய் உணவை அள்ளிப்போட்டுக் கொண்டு அப்போதே கிளம்பி விட்டார். கீரை கொண்டு வரும் பெரியவர் இல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது..

வீதி வீதியாய்த் தேடி கொண்டு அலையும்போதே ராஜா யமுனாச்சார்யார் என்கிற ஆளவந்தார் பற்றிய நினைப்பேதான்.

(தொடரும்)

About The Author