தூது சென்ற தூதுவளை (3)

"எங்கே ஸ்வாமி.. உங்களை ரொம்ப நாளாக் காணோம்.. ராஜா வேற கேட்டுட்டார்.. அவசியம் என்னோட வரணும்.. கையோட அழைச்சுண்டு வரலைன்னா ராஜா கோபிச்சுப்பார்"

பெரியவர் கண்களில் ஆனந்த பாஷ்பம். ஆஹா.. வேளை வந்தாச்சு.

"போலாம்"

ஆளவந்தார் இவரைப் பார்த்ததும் கேட்டார்.

"நீர்தானா.. கீரை கொண்டு வந்தது"

"ஆமாம்.."

"உமக்கு என்ன வேணும்.. ப்ரியத்தைச் சொல்லும்."

"உம்மோடு கொஞ்சம் பேசணும்.. தனியே"

குறிப்பறிந்து மற்றவர்கள் விலகிப் போக, ஆளவந்தார் கேட்டார். "என்ன சொல்லும்"

"அடியேன் தங்கள் தாத்தாவோட சிஷ்யன்.. மணக்கால் நம்பின்னு அழைப்பா.. ராமமிஸ்ரர்னு பேரு.. உங்க பாட்டனார் சொத்து ஒண்ணு அடியேன்ட்ட இருக்கு.. அதை உங்ககிட்ட சேர்க்கணும்"

"ஓ.. அதுக்கென்ன.. வாங்கிண்டா போச்சு"

"என்னோட தனியா வரணும்.."

ஆளவந்தார் அவரைப் பின் தொடர்ந்து போனார்.

இருவருமாய் ஸ்ரீரங்கம் வந்தார்கள். ஆளவந்தாரை அரங்கன் ஸந்நிதிக்கு அழைத்து வந்தார்.

பச்சை மாமலை போல் மேனி
பவழவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே

சயனித்திருந்த அரங்கனைக் காட்டினார்.

"இதோ.. உம்ம குடும்பச் சொத்து.. அடியேன் இத்தனை நாள் உங்களுக்குக் காட்டிக் கொடுக்கவே காத்திருந்தேன்.. தேவரீரோட பாட்டனார் உங்களுக்காக விட்டுப் போனது"

அரங்கனின் திருமுகத்தில் புன்முறுவல். ‘எஎம்மைப் பார்க்க இத்தனை நாளாச்சோ உமக்கு’ என்று கேலியாகக் கேட்பதுபோல.

ஆளவந்தார் அக்கணமே கண்ணீர் மல்கி அரங்கனின் திருமேனி அழகில் லயித்து அரச போகத்தைத் துறந்தார்.

இவரே ‘உடையவர்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீராமனுஜரின் மானசீகக் குருவும் ஆவார்.

‘மச்சு அணியும் மதில் அரங்கம் வாழ்வித்தான் வாழியே’ என்று கொண்டாடப்படும் ஆளவந்தார் காலத்தில் தான் திருவரங்கத்தில் வைணவத் தலைமைப் பீடம் அமைந்தது.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டிக் காத்த ஆளவந்தாரை ராஜபோகத்திலிருந்து ஆன்மிகப் பாதையில் திருப்பிக் கொண்டு வந்தது தூதுவளைக் கீரை. பகவானிடம் இருந்து பக்தனுக்கு தூது போன தூதுவளை!

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதி
ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே
அகிஞ்சானோனான்யகதி: சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே

நான் தர்மத்தை அறிந்தவனல்லன்.
அன்றி தன்னையறிந்தவனுமல்லன்.
உன்னுடைய பாத கமலங்களை சரணடைந்த பக்தனுமல்லன்.
வேறொன்றுமறியாது உன்னைச் சரணடைவதே கதியென்றெண்ணி
உன் பாதங்களில் சரணடைகிறேன்.

-ஆளவந்தார்

(ஆளவந்தார் – ஆனி மாதம் உத்திராட நட்சத்திரம்.
1017 AD – 1137 AD)

****

பரவை நாச்சியார் குரலில் வெகு நேரமாய்க் காத்திருத்தலின் பரபரப்பு தெரிந்தது. "தயாரா சுவாமி"

"இதோ .. இன்னும் ஒரே நொடியில்.."

அறைக்குள் இருந்த சுந்தரர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு கோணங்களில் தம் அழகைப் பார்த்துக் கொண்டார். வேட்டி மடிப்புகள் சரியாக இருக்கிறதா என்று மறுபடியும் பார்த்தார். வாசனைத் திரவியத்தை மீண்டும் கழுத்தில் தடவிக் கொண்டார்.

"பெண்களைத்தான் அழகுபடுத்திக் கொள்ள தாமதிப்பதாய் குறை கூறுவார்கள். இங்கோ நீங்கள் செய்யும் ஆடம்பரம் பார்த்தால்.."

பரவை நாச்சியாரின் குரலில் உரிமையுடன் கேலி தெரிந்தது.

"என்ன செய்ய பெண்ணே.. இன்னும் ஏதோ ஒரு குறை இருப்பது போல.."

சுந்தரர் மறுபடி கண்ணாடியைப் பார்க்க பரவை நாச்சியார் கூவினார்.

"திருச்சிற்றம்பலம்.. ஈசனே என்னை ஏன் சோதிக்கிறீர்"

சுந்தரர் திரும்பி அவளைப் பார்த்தார்.

"உண்மையைச் சொல் பரவை .. நான் அழகாய் இருக்கிறேனா"

(தொடரும்)

About The Author

3 Comments

  1. Dr. S. Subramanian

    (ஆளவந்தார் – ஆனி மாதம் உத்திராட நட்சத்திரம்.
    1017 AD – 1137 AD)

  2. ரிஷபன்

    நன்றி. வேறோரு வலைத்தளத்தில் பார்த்ததை எழுதிவிட்டேன்.

Comments are closed.