தேவதையோடு ஒரு போர்-(4)

மளமளவென செய்தி பரவியது. ‘ரங்கம் ஆத்மநாதனோடு ஓடிப் போயிட்டாளாம்.’

ரங்கத்தைப் பற்றியே பேச்சு. அங்கே பார்த்தேன். இங்கே பார்த்தேன். ஆத்மநாதனையும் இப்ப கழற்றிவிட்டுட்டாளாம். சினிமாவிலே சேர்ந்துட்டாளாம். தஞ்சாவூர் பக்கம் ஒரு மிராஸ்தார் வச்சுண்டிருக்கானாம்… ராட்சசக் குழாய்களின் இடுக்குகளில் சொற்கள் புகுந்து புகுந்து சுழன்றன.

‘எவர்கள் அசுத்தத்தை உபதேசிக்கிறார்களோ – அவர்கள் காரிருளில் புகுகின்றனர்.’

பூமியைத் துளையிட்டுக் கொண்டிருந்த எந்திரங்களையும் அவற்றின் இரைச்சலையும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே நிரந்தரமாய் நின்றது. இரண்டு டீக்கடைகள், நான்கு பெட்டிக் கடைகள், பலூன் விற்பவர்கள் அய்ஸ் விற்பவர்கள் – என களைகட்டியது. கூட்டம் சேரச் சேர அதைக் கட்டுப்படுத்த ஏழெட்டு போலீஸ்காரர்கள் நகரத்திலிருந்து இங்கே வந்து டேரா போட்டு அதட்டிக் கொண்டிருந்தார்கள்.

துள்ளுக்குட்டி அய்யனார் கோயில் பூசாரிக்கு சந்நதம் வந்துவிட்டது. ஆகாயத்துக்கும் பூமிக்குமாய்க் குதித்தது. ஊருக்கு நல்ல காலம் பொறந்துடிச்சி. ஊர் செழிக்கப் போகுது. அத்தனை பேருக்கும் இங்கேயே வேலை. வசதி வாய்ப்பு பெருகப் போகுது. உடுக்கையை ஓங்கி ஓங்கி அடித்தது.’டாய் இத்தனை வருஷமாய் நின்னுபோன கொடையை நிறைவேத்து வீங்களாடா… நிறைவேத்துவீங்களாடா… இரண்டு பாட்டில் சாராயத்தை கடகடவென ஊற்றிக்கொண்டு துள்ளுக்குட்டி சாமி மலையேறியது.’
ஏழெட்டு பிரம்மாண்டமான எந்திரங்களும் கரகரவென்ற சப்தத்தோடு அங்குல அங்குலமாய் பூமியைத் துளைத்துக் கொண்டிருந்தன. விதவிதமான நிறத்தில் மணல் குவியல்கள் ஏராளமான குட்டி மலைகளாய் – மூன்று எந்திரங்கள் அவற்றை வாகாய் அள்ளி தூரக் கொட்டிக் கொண்டிருந்தன. ராட்சசக் குழாய்கள் லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. எங்கும் அவசரம். ஆவேசம். பரபரப்பு –

இவன் வழக்கமாய்ச் சிரிப்பதைக் கேட்கவில்லை யாரும். சிரிப்பின் சாயல் மாறியிருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். நடையில் மூர்க்கம் தெரிந்தது. விடுவிடுவென நடந்து சிவன்கோயில் மொட்டைக் கோபுரத்தைப் பார்த்து அதன் மேல் வேர் விட்டிருக்கும் பெரிய பெரிய செடிகளை – மரங்களை உற்று உற்றுப் பார்த்து – என்னவோ புரியாத மொழியில் சேதி சொல்வது போலிருந்தது. ஏகப்பட்ட அந்நிய முகங்கள் ஊருக்குள் தென்பட ஆரம்பித்தன. சிலர் இவனைப் பார்த்து அசூயைப்பட்டு ஒதுங்கிக் கொண்டனர். பலருக்கும் பயம். பைத்தியமோ?

சிதலமடைந்த சிவன் கோயில் மதிற்சுவரைத் தாண்டி எட்டிப் பார்க்கும் பவளமல்லிப் பூக்களைக் காணவில்லை. நீர் ஊற்றாமலே கொடைவள்ளலாய்ப் பூத்துக் குலுங்கும் அற்புதம் எப்போதும் போல கொஞ்ச நாளாய் நிகழவில்லை. இந்த நொடியிலேயே விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த அர்த்த மண்டபத்தைக் கண்டு பயந்தனவோ, ஆறிப்போன சோற்றை ஒரு வேளையாவது காட்டிக் கொண்டிருந்த குருக்கள் வரும்படி தேடி பட்டணம் போனபிறகு சிவபெருமானுக்குத் துணையாய் புழுக்கைகளும் பூச்சிகளும் இன்னதென அடையாளம் காண முடியாத வண்டுகளுமே மிச்சம் –

ஊரே அதிசயத்து நின்றது. இவன் ஹா… ஹா…ஹா வென்று உடைந்த கோபுரத்தின் முன் நின்று ஒரு நாள் அதிகாலை பலமாய் சிரித்துக் கொண்டிருந்தான். இருண்ட மண்டபங்களில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால்கள் பயந்துபோய் சடசடவென கூட்டமாய் வெளியே பறந்தன. சில மயங்கிப்போய் பொத்பொத்தென விழுந்து நெடுக இறைந்து கிடந்தன.

என்ன நடக்கிறது இங்கே! என்ன இது?

"ஓடி வாங்க ஓடி வாங்க…. ஓடி… வா…!" மேலத்தெருவில் புகை மூட்டம். எங்கும் பதற்றம். பேரிரைச்சல்.

"ஓடி வாங்க ஓடி வாங்க நெருப்பு புடிச்சுகிச்சு… எரியுது. பெரியய்யா வீட்டிலே புடிச்சது. வரிசையா அடுத்த வீடு அதற்கடுத்த வீடு எதிர்ச்சாரி வீடு… ஓடி வாங்க வாங்க… ஓடி வாங்க…."

பிரம்மாண்டமான தீச்சுவாலை ஆகாசத்தைத் தொட்டது.

துளையிடும் எந்திரங்கள் சட்சட்டென பயத்தோடு நின்றன.

"வடக்குத்தெரு… அய்யோ… கீழத்தெரு… ஊரே புடிச்சுகிட்டு எரியுது… தண்ணி…தண்ணி தண்ணீ கொண்டாங்க. லே… நெருப்பு வண்டிக்குச் சொல்ல பட்டணத்துக்கு ஓடுடா… சீக்கிரம் சீக்கிரம்… ஓடு சீக்கிரம்…"

இவன் மர்மமாய்ச் சிரித்தான்.

‘அக்னியே. செல்வத்தை அனுபவிப்பதற்கு நல்ல மார்க்கத்தில் எங்களை அழைத்துச் செல். தேவனே எல்லா எண்ணங்களையும் அறிந்தவரே மறைந்து நின்று கெடுக்கும் பாவத்தை நாசம் செய்வீர். ஓ அக்னியே…’

ரங்கம் ஆலமரத்தடியில் பொட்டுத் துணியின்றி வெள்ளையாய்க் கிடந்தாள். முகத்தருகே ஏராளமான ஈக்கள். நின்று பார்க்க யாருக்கும் நேரமில்லை. அவசரம் அவசரம் – ஊழியை நேருக்கு நேர் எதிர் கொண்ட நடுக்கம். பயம் – அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாது திணறல் –

"பூமியில் எது உண்டோ. அது எல்லாவற்றையும்
எரித்துவிடக்கூடும் – எங்கும் தீச்சுவாலை."

காற்றேவா. காற்றே வா. வாயுதேவனே வா… நமஸ்தே வாயோ…

கிழக்குத் திசையிலிருந்து அப்படியொரு காற்று புயலாய் அதனினும் வேகத்தோடு நெருப்புக் கோளங்களோடு உறவாடப் புறப்பட்டதைப் போல சீறி வந்தது. எங்கிருந்து இந்தக் காற்று. எப்படி இந்த வேகம். எதற்காக இந்த விபரீத விளையாட்டு – ஊழி நர்த்தனம்…?

"ஹ் ஹா…. ஹ்ஹா…. ஹ்ஹா…."

கிணறுகள் குளங்கள்…. ஓடைகள்… சர்வமான இடங்கள் எல்லாவற்றிலிருந்தும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமல் வெறும் வாளிகளோடும் குடங்களோடும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

… காற்று நிலம் நீர் நெருப்பு ஆகாயம்… எல்லாம் ஒன்று சேர்ந்து யாரோடு இந்த யுத்தம்?

சடசடவென எதுஎதுவோ எரிந்து பஸ்பமாகி உதிர்ந்தது. எங்கும் பீதி அழுகுரல்…

காற்று சுழற்றடித்தது – ஆகாயம் தொட.
காற்று சுழன்றடித்தது – மேற்கிலிருந்து,
அக்னி ஜ்வாலை வீசியது – மேகம் பயப்பட.

துளையிடப்பட்ட பிரதேசத்திலிருந்து பூமி சீறுவதைப் போன்ற விநோதமான கூக்குரல் கேட்டது?

வறண்ட கிணறுகளிலிருந்து ஏராளமான விஷ ஜந்துக்கள் அவசர அவசரமாக வெளியேறின.

ஹஹ்ஹா… ஹ்ஹா… என்ற அட்டகாசமான சிரிப்பும் காணாமல் போயிருந்தது.

– இவனும் கூட –

About The Author