நண்பர்கள்

மூலம் : மேற்கத்திய நாடோடிக் கதை

மொழிமாற்றம் : விஜயா ராமமூர்த்தி

*****

வெட்டுக்கிளியும் தேரையும் நண்பர்களாக அறிமுகமாயின. ஒரு நாள் தேரை வெட்டுக்கிளியிடம், "நண்பா, நாளை என் வீட்டில் சாப்பிட வா. உனக்காக விருந்து சமைத்து வைக்கிறேன். நாம் சேர்ந்து சாப்பிடலாம்" என சொல்லிற்று.

மறுநாள் வெட்டுக்கிளி தேரை வீட்டிற்குச் சென்றது. சாப்பிடும் முன் தேரை கால் கழுவியதும் வெட்டுக்கிளியை கழுவச் சொன்னது. வெட்டுக்கிளி கால் கழுவும் போது சப்தம் போட்டது. உடனே தேரை, "நண்பா சப்தம் செய்யாதே; எனக்குப் பிடிக்காது" என்றது.

வெட்டுக்கிளி தன் முன்னங்கால்களால் சப்தமிடாமல் சாப்பிட முயன்றது. ஆனால் முடியவில்லை. ஒவ்வொரு முறையும் கால்கள் உரசும் சப்தம் கேட்கையில் தேரை முணுமுணுத்தது. வெட்டுக்கிளியால் சாப்பிட முடியவில்லை. எனவே மிகுந்த கோபம் கொண்டது. ஆனால் கோபத்தைக் காட்டாமல், தேரையிடம் மறுநாள் தன் வீட்டிற்கு சாப்பிட வரச் சொன்னது.

மறுநாள் தேரை வந்தது. சாப்பாடு தயாரானதும் இருவரும் கால் கழுவினர். தேரை கால் கழுவியதும் மேசைக்குத் தத்திச் சென்றது. உடனே வெட்டுக்கிளி தேரையிடம், "மீண்டும் கால் கழுவிக்கொண்டு வா; நீ தத்தி வந்ததால் கால் அழுக்காகி விட்டது" எனச் சொன்னது. தேரையும் மறுபடியும் கால் கழுவிக் கொண்டு தத்தித் தத்தி மேசைக்கு வந்தது. தட்டில் சாப்பாடு போடும்போது, "உன் அழுக்கான முன்னங்கால்களைச் சாப்பாட்டில் வைக்காதே. மீண்டும் கழுவிக் கொண்டு வா" என்றது.

தேரைக்கு மிகுந்த கோபம், "உனக்கு நான் சாப்பிடுவது பிடிக்கவில்லையா? என் முன்னங்கால்களால் தான் தாவ முடியும். மேசைக்கும் தண்ணீர்த் தொட்டிக்கும் இடையில் தாவும் போது என் கால்கள் அழுக்காவது தவிர்க்க முடியாது" என்றது.

உடனே வெட்டுக்கிளி, "நீ தான் இதற்குக் காரணம். நேற்று உன் வீட்டில் என்னைக் குறை சொல்லி சாப்பிடவிடாமல் செய்தாயல்லவா?" என கேட்டது.

அன்று முதல் இருவரும் பிரிந்தனர்.

கருத்து: நண்பர்களிடம் குறைகளும் இருக்கும்; நிறைகளும் இருக்கும். சில அடிப்படைப் பண்புகள் மாற்ற இயலாதவை. அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டால்தான் நட்பு நீடிக்கும்”

About The Author

1 Comment

  1. SHAHUL HAMEED

    உதாரனம் சுப்பர் தொடரட்டும் உன் புகழ் சாகுல் அமீது

Comments are closed.