நான் வறட்டு நிலமல்ல… ஊற்று!” தேன்மொழி தாஸுடன் ஒரு நேர்காணல்”

"நான் இறந்த பிறகும் என் கண்களும் எனது படைப்புகளும் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இயற்கையை அள்ளிக் குடித்த இந்த கண்கள் அழியவே கூடாது" என்கிறார் தேன்மொழி தாஸ். உதவி இயக்குனர், எழுத்தாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர் என இவருக்கு கலை உலகில் பல முகங்கள் உண்டு. இது வரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கவிதைகள் அனைத்துமே இவர் இயற்கையை காதலித்த அனுபவங்கள். பாரதிராஜா இயக்கி இவர் வசனம் எழுதிய ‘ஈரநிலம்’ படத்திற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

"நாலு பேரை வெட்டிட்டு தூக்குச் சட்டில ரத்தத்தைப் புடிச்சிட்டு வாடா; ஆம்பளனு ஒத்துக்கறேன்" இப்படி வீரமான வசனங்கள் தேன்மொழிக்கு மிகவும் பரிச்சயம். பேனா மையோடு மண் வாசனையையும் சேர்த்து எழுதக் கூடியவர்.

மேலே சொன்ன வரிகள் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தெக்கத்திப் பொண்ணு’ சீரியலில் இடம்பெற்றவைதான். இப்படி சீரியலுக்கு பக்கா கிராமத்து மண் வாசனையில் டயலாக் எழுதுவது ஒரு புறம் என்றால்… ‘என்னைத் தேடி வந்த காதல் சொல்லி அனுப்பு’ என்றும்… ‘கனவுகள் காணும் வயசாச்சு’ என்றும்… இளமை துள்ள பாடல்களை விஜய் டிவிக்கு எழுதியுள்ளார்.

இன்று இவருடைய பாடல்கள் இளசுகளின் ரிங் டோனாக ரீங்கரிக்கின்றன. இந்தப் பாடலை ஹம் பண்ணிக் கொண்டே அவர் வீட்டிற்குப் போனால் செல்ல கிளியக்கா வெல்கம் சொல்கிறது. லவ் பேர்ட்ஸ்கள் தம் அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றன. பேர் தெரியாத பறவைகள் அழகாக வண்ணமயமாக கூண்டுக்குள் நம்மைப் பார்த்து கீச் கீச் என்று குரல் எழுப்புகின்றன. நாய்க் குட்டி ஒன்று ஓடி வந்து காலைச் சுற்றுகிறது. இப்படி வீடு முழுவதும் விலங்குகளும், பறவைகளும் இல்லை இல்லை…. அவருக்குக் கோபம் வரும் – அவருடைய குழந்தைகளாக நிரம்பி இருக்கின்றன.

பிரமாண்டமான அந்த வீட்டிற்குள் கண்களுக்குத் தீனி போட நிறைய பொருட்கள் இருக்கின்றன. புத்தக அலமாரியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் பல தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. ரியல் பூந்தொட்டியும் ரீல் பூந்தொட்டியும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஒன்று போல் இருக்கின்றன. தெக்கத்திப் பொண்ணு படப்பிடிப்பு பிசியில் இருந்தவரை சந்தித்தோம். பேச்சில் யதார்த்தம் தொனித்தது.

உங்களைப் பற்றி …?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திலுள்ள மணலாருதான் எங்க ஊர். என்னுடன் பிறந்தவர்கள் 6 பேர். 5வது பொண்ணா பிறந்தேன். வீட்டைச் சுற்றி தேயிலைத் தோட்டங்கள், செடி கொடிகள், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் வானவில் வளைவையும் ரசிப்பதில் சோம்பல் இல்லாத புத்துணர்வான வாழ்க்கையை எங்க ஊர் எனக்குக் கொடுத்தது.

அது மட்டுமல்ல, சமுதாயத்துல அங்கீகரிக்கப்பட்டவளா இன்றைக்கு உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கேனா அதுக்குக் காரணம், என்னைச் சுற்றி இருந்த இயற்கை. என்னை அறியாமல் என்னைக் கொள்ளை கொண்டவை.

காலையில் எழுந்ததும் மலை முகடுகளைப் பார்க்கிறதுக்கு அந்தக் காட்டுக்குள்ள கைய விரிச்சுக்கிட்டு ஓடுவேன். என் கையால அந்த மலையை புடிச்சிடமாட்டோமானு ஒரு ஏக்கம் இருக்கும். அல்லிச் செடி தண்டை எடுத்து மாலையா உடம்பு முழுதும் போட்டுகிட்டு காட்டுக் கொடியை கட்டி கிரீடமா வச்சுக்கிட்டு அந்த ஒளியறியா காட்டுக்குள்ள ராணி மாதிரி சுத்துவேன். அதுதாங்க என்னைப் படைப்பாளி ஆக்கியது. எங்க அப்பாகிட்ட நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெரிஞ்சதல்லாம் அந்தக் காடும் அதனுடன் நானும். இப்படியே போனது என்னுடைய இளமைக் காலம்.

நீங்க படிச்சது?

நான் நர்சிங் படிச்சேன். படிக்கும் போது நிறைய கவிதை எழுத ஆரம்பித்தேன். புத்தகங்கள் படிக்கிறதும் ரொம்பப் பிடிக்கும். பயங்கர பைத்தியம். புடவையை வித்து, மோதிரத்தை வித்து கண்ணதாசன், ஜெயகாந்தன்னு நிறைய பேருடைய படைப்புகளை வாங்குவேன். அப்பா ஒரு நாள் அடித்து கூட இருக்கிறார். படிக்கிற வயசுல இப்படி கவிதை எல்லாம் எழுதிக்கிட்டு திரியுறீயேனு செம அடி.

பயங்கர கோபத்தோடு எங்க வீட்டில உள்ளவங்களை எல்லாம் திட்டிட்டு எங்கம்மாகிட்ட சொல்லிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தேன். ரொம்ப கஷ்டப்பட்டு என்னுடைய 500 கவிதைகளையும் எங்க வீட்டில இருந்து காப்பாற்றி எடுத்துட்டுட்டு வந்தேன். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பஸ், டீக்கடை இப்படிப்பட்ட வசதிகள் கூட இல்லாத ஊர்ல நான் புத்தகம், கவிதைனு இருந்தா கோபம் வராம என்ன செய்யும். அதன் பிறகு அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையில் வேலை கிடைத்தது. பயங்கர சுறுசுறுப்பா வேலை செய்வேன். சீக்கிரம் முடிச்சிட்டா கொஞ்சம் புக் படிக்கலாங்கிற சுயநலமும் அதுக்கொரு காரணம்.

சென்னை வாழ்க்கை முறை?

இன்றைக்கும் சென்னை எனக்கு அன்னியமாதான் தெரியுது. சிட்டி கலாசாரம்னா மிரண்டுடுவேன். போன் பேச தெரியாம போனை உடைச்ச காலம் எல்லாம் இருக்கு. புத்தகம் படிச்சதாலயும், எழுத்தாளர்களை சந்திக்கணுங்கிற எண்ணம் இருந்ததாலேயோ என்னவோ எனக்கு அது பெரிசா தெரியல. நான் இங்கு வந்தும் எனக்கான வாழ்க்கையதான் வாழறேன். வீட்டைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். இதோ என்னைப் பேர் சொல்லி எம்புள்ள (கிளி) கூப்பிடுது பாருங்க. இவர்களும், புத்தகங்களும்தான் என்னை முழுவதும் நிரப்பி உள்ளார்கள். பிறகு எதற்கு நான் சென்னையைப் பற்றி யோசிக்கனும்? என் விரல்கள்தான் எனக்குப் புருஷன். அவை நிறைய சம்பாதித்துக் கொடுக்கின்றன. என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நான் வறட்டு நிலமல்ல; ஊற்று. எழுதிக் கொண்டே இருப்பேன். நான் சமுதாயம் வரையறுத்துள்ள வட்டத்துக்குள் வாழாமல்… நான் நானாக இருக்கிறேன்.

முதல் கவிதைத் தொகுப்பு?

அப்பல்லோ மருத்துவமனைக்கு சாவி பத்திரிக்கையில் பணிபுரியும் ஒருவர் வந்திருந்தார். நான் எப்போதும் புத்தகம் படிப்பதைப் பார்த்த அவர் என்னைப் பற்றி விசாரித்தார். அவர் மூலம் எனது முதல் கவிதை சாவி பத்திரிக்கையில் வெளிவந்தது. முதல் சந்தோஷம்…. விவரிக்க வார்த்தையே இல்லைங்க.

வேலை செய்துகிட்டு இருந்தாலும் எனக்கு லீவு கிடைக்கும்போதெல்லாம் எனக்குப் பிடித்த எழுத்தாளரைப் பார்க்க கிளம்பிடுவேன். முதன் முதலில் கண்ணதாசனைப் பற்றி தெரிஞ்சிக்க விஷாலி கண்ணதாசனைத் தேடிப் போனேன். அதன் பிறகு புத்தகக் கண்காட்சியில் கவிஞர் அறிவுமதியைப் பார்க்கலாம் என்று போனேன்; முடியவில்லை. போன் நம்பரோடு திரும்பின நான் ஒரு நாள் அவருக்கு போன் பண்ணி என் கவிதைகளைப் பற்றி சொன்னேன். உங்களைப் பார்க்கணும்னு நான் சொன்னதும் ஒரு சில கவிதையை போனிலயே வாசித்து கண்பிக்கச் சொன்னார். வாசித்ததும் உடனே கிளம்பி வரச் சொன்னார். என் கவிதை எல்லாம் அவருக்கு ரொம்பப் பிடித்துப்போனது. உடனே தொகுப்பாக்க ரெடியானார். அவர்தான் என்னுடைய முதல் தொகுப்பு வெளியாகக் காரணம். அதனை "இசையில்லாத இலையில்லை" என்ற பெயரில் பாரதிராஜாவை வைத்து வெளியிட்டேன். அந்தத் தொகுப்பிற்கு நிறைய இலக்கிய விருதுகளும் கிடைத்தன.

சினிமா பிரவேசம்?

எனது கவிதைத் தொகுப்பு பாரதிராஜாவிற்கு மிகவும் பிடித்து விட்டது. அப்போது அவர் "கண்களால் கைது செய்" படம் ஆரம்பித்தார். அந்தப் படத்திற்கு என்னை அசிஸ்டண்டாக அழைத்த போது நான் மறுத்துவிட்டேன். உடனே எங்கள் ஊருக்கு வந்து எங்க அம்மா அப்பாகிட்ட பேசி என்னை அழைத்துக்கொண்டு வந்தார். எங்க ஊரைப் பார்த்ததும் என்னை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

முதல் நாள் கதை டிஸ்கஷனுக்காக அழைத்தார்கள். சினிமா தியேட்டர் பக்கம் கூட போகாத நான் முதல் நாள் கதை டிஸ்கஷனுக்குப் போறேன். சுஜாதா போன்றவர்கள் வந்திருந்தார்கள். நானும் உட்கார்ந்திருந்தேன். டைரக்டர், இறந்து போன அப்பா பற்றிய காட்சியை விவரிக்கிறார். அவரோட இறுதி சடங்கில் இன்டர்கட் வைத்து ஃபிளாஷ்பேக் ஓட்டி காண்பிக்கிறார். எனக்கு அது பிடிக்கவில்லை. அங்கு யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்காமல், செத்து கிடக்கிற நேரத்துல எதுக்கு ஃபிளாஷ்பேக்? செத்துப் போன ஃபீலே இல்லையேனு சொன்னேன். டைரக்டர், ‘முதல் டிஸ்கஷன்லயே இவ்வளவு பேசுற… இப்படி எல்லாம் பேசக் கூடாது. இந்தப் புள்ளய வெளில அனுப்புங்கய்யா’னு… செம திட்டு. பிறகு அவர் சொன்ன மாதிரி ஷுட் பண்ணினாங்க.

அந்த சீனை எடிட்டிங் செய்துட்டு ஏதோ மிஸ் ஆகுதேனு டைரக்டர் யோசிக்கிறார். எடிட்டிங் ரூம்ல நானும் இருக்கேன். திரும்ப ஃபிளாஷ் பேக் சீன் எல்லாம் வெட்டிப் போட்டுட்டு சீன் வைக்கிறார். ஓகே ஆகுது சீன். ‘இதைத் தானே முதல் நாளே சொன்னேன். இப்ப எவ்வளவு லட்சம் செலவானது’ன்னு சொன்னேன். உடனே ‘இந்தப் புள்ள உஷாரு’னு டைரக்டர் பக்கத்துல உள்ளவங்ககிட்ட சொல்லிட்டு பிறகு என்னிடம் "வாக்கபட்ட பூமி" புக்கை கொடுத்து படிக்கச் சொன்னார்.

முதல் படம்?

முதல் படம் ‘ஈரநிலம்’. முதல் படத்திலயே உதவி இயக்குனர், பாடலாசிரியர், உரையாடல் ஆசிரியர்னு பல முகங்கள் என் திறமைக்குக் கிடைச்சது. பாரதிராஜாகிட்ட நிறைய கத்துகிட்டேன். அந்தப் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது எனக்குக் கிடைத்தது. அப்போது என்னுடைய இரண்டாவது தொகுப்பு “அநாதி காலம்” வெளியானது.

அதன் பிறகு சுஹாசினி மணிரத்னம் இயக்கிய "காய்ச்ச மரம்" என்ற குறும்படத்தில் உதவி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்தேன். சுஹாசினி எவ்வளவு பெரிய நடிகை. அந்த பந்தா எதுவுமில்லாமல் ரொம்ப எளிமையாவும், அனைவரையும் சமமாக அவர் மதிப்பதையும் பார்த்து வியந்து போனேன். தன்னடக்கம் ஒரு மனிதனை எப்படி உருவாக்குகிறது என்று அவரிடம்தான் தெரிந்து கொண்டேன்.

அடுத்த முயற்சி ?

படம் பண்ண நிறைய கதை ரெடியாக இருக்கிறது. சீரியல் வேலையால் என்னால் இப்போது வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் வரும் காலத்தில் சினிமாவைத் தாண்டி இரண்டு விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ஒன்று, ஆதி திராவிடர் தெரு என்று முழுக்க முழுக்க தலித் மக்கள் மட்டும் வாழும் ஒரு ஊரை உருவாக்க வேண்டும். இதற்குக் காரணமும் இருக்கிறது. என்னுடைய கவிதை வரிகள் ஒன்றைக் கண்டிப்பாக சொல்லணும்…

என்மேல் சுற்றியிருந்த
உயிர்க்கொடி அறுத்து
ஜாதிக் கொடி போர்த்தியபோது
நான் தூங்கியிருக்கக் கூடாது.

எங்கப்பா மேல்ஜாதிக்காரர். எங்கம்மா ஒரு தலித். இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். எங்களுக்கெல்லாம் நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய சான்றிதழில் தலித் என்று குறிப்பிட்டிருந்தார். நான் 5ம் வகுப்பு வரை ஒரு கிறிஸ்துவ விடுதியில் படித்தேன். அங்கு வாரம் ஒவ்வொருவர் ஒரு வேலை செய்ய வேண்டும். காய் நறுக்குதல், விறகு வெட்டுதல், கூட்டி பெருக்குதல்னு, மலம் அள்ளறது உட்பட எல்லா வேலையும் செய்யணும். மனிதருடைய மலத்தை அந்த 11 வயதில் நான் அள்ளி சுமந்திருக்கிறேன். அந்தத் தருணம் எல்லாம் இன்னும் என் மனதில் ரணமாய் இருந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மற்ற ஜாதி பெயரைக் கொண்டு நம் நாட்டில் தெருக்களும் ஊர்களும் உள்ளன. ஆனால் ஒரு தலித் பெயர் கொண்ட ஊரோ, தெருவோ இது வரை யாரும் உருவாக்கவில்லை. கண்டிப்பாக நான் செய்வேன்.

மற்றொன்று இங்கு பார்க்கிறீர்களே இந்தப் பறவைகள், விலங்கினங்கள், இவை போன்று நிறைய விலங்கினங்கள் நம் நாட்டில் அழிந்து கொண்டே வருகின்றன. கிளியில் மட்டுமே 70 வகை நிறங்கள் உள்ளன. இங்குள்ள பறவைகளைப் பாதுகாக்காமல் நாம் விட்டுட்டோம். வெளிநாட்டுகாரர்கள் இங்கிருந்து அவர்கள் கொண்டுபோன பறவையை இனப்பெருக்கம் செய்து ஜோடி 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து நாம் அவர்களிடம் வாங்க வேண்டிய நிலைதான் இப்போது இருக்கிறது. இனியாவது இப்போதிருக்கும் பறவைகள், விலங்கினங்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அழியாமல் வரும் காலங்களில் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.

சுயநலமற்ற லட்சியம்!

(நன்றி : தினமலர்)”

About The Author

6 Comments

 1. shree

  பேட்டியைப் படித்து முடிப்பதற்குள் ஒரு கள்ளமில்லாத சிறுமி, கவிதைக்காய்ப் போராடும் கவிதாயினி, மக்கள் சேவையொடு இலக்கியத்திலும் ஆர்வக் கொண்ட உள்ளம், இயற்கையைப் பாதுகாக்க அளவு கடந்த ஆர்வம் இத்தனையும் கலந்த பன்முகம் கொண்ட ஒரு பெண்மணியைப் பார்க்க முடிந்தது.

  வாழ்த்துகள் தேன்மொழி! தங்கள் கனவுகள் நனவாக இறைவனை வேண்டுகிறேன்!

 2. vahitha

  வணக்கம் எனக்கு தேன்மொழி,தாமரை,ஆண்டாள்பிரியதர்னி,அழகு நிலா நால்வரை பற்றிய சுயவிவரம் படைப்புகள் பிற தகவல்கள் வேண்டும் உங்களூக்கு தெரிந்தால் எனக்கு அனுப்பவும் .

 3. vahitha

  வணக்கம் என்னை பற்றிய விவரம் நான் தஞ்சாவூர் தமிழ் சங்கத்தில் ஆய்வியல் நிறையர் படிக்கிறேன் அதற்கான தகவல்கள் தான் உங்களிடம் கேட்டுள்ளேன் தயவுசெய்து எனக்கு விவரங்கள் தந்து உதவுங்கள்.

 4. kavithraaja

  வனக்கம், நான் தேன் மொழியின் உரவினன் சராசரியாக எல்லாதலித்திர்க்கும் உரித்தான குமுரலை வெழிப்படுத்தியிருக்கிரார். ஆதி திராவிடர் ஊர் என்பதால் சமுதாயத்தில் என்ன புரட்சியை செய்துவிட முடியும் அம்பெத்கரையும் தந்தை பெரியாரையும் ஒவ்வொரு தலித்தும் படித்து அவர்கல் பாதையில் சென்ரால் மட்டுமெ தலித்துக்கான அங்கீகாரம் பெர முடியும் நீ வெல்லைக்காரசாமியான இயேசுவையும் பார்ப்பன சாமிகலின் வழித்தடத்தில் சென்ரால் தலித்திர்க்கான அங்கீகரம் கிடைக்காது. புரட்சி செய் போராடு ஒன்ரு படு வென்ரு விடுவாய்

 5. saravanan staffnurse

  HI, I am saravanan staffnurse from sankarankovil. How are you. My daughter is interested in music. I told her about you. She wants to meet you. Her name is S. LAVANYA Studying 8th standard.

Comments are closed.