நினைவுப் பரிசு (1)

சத்யா மூச்சு வாங்கிக் கொண்டே படிகளில் ஏறினாள்.

உடன் வந்த ரேவதி "ஏண்டி சத்யா, குழந்தை பிறக்க இன்னும் 10 நாள்தான் இருக்கு, இன்னும் வேலைக்கு வரணுமா? வந்ததுதான் வந்தே, லிப்ட்-ல ஏறி வரலாமில்லெ, எதுக்கு இரண்டு மாடி ஏறி இறங்கற?" என்று உரிமையுடன் கண்டித்தாள்.

"ரேவதி, கடைசி வரைக்கும் இந்த மாதிரி சின்னச் சின்ன உடற்பயிற்சி செய்யறது பிரசவத்தை சுலபமாக்கும்னு உனக்குத் தெரியாதா? அதுவுமில்லாம லிப்ட்ல போகும்போது கூட வர்றவங்க ஏளனமாப் பார்க்கறதை தவிர்க்கலாமில்லே. இப்போ முடிஞ்ச அளவுக்கு வேலைக்கு வந்துட்டேன்னா வருண் பிறந்தப்புறம் அவன் கூட கொஞ்சம் அதிக நாள் இருக்கலாமே" என்று கலங்கிய கண்களோடு கூறிய சத்யாவைப் பார்த்தால் வேதனையாக இருந்தது ரேவதிக்கு.

"மத்தவங்களைப் பத்தி நீ ஏம்மா கவலைப்படறே? உன் மனசாட்சிக்கு விரோதமா நீ எதுவும் செய்யலியே. உன்னைத் தங்கமாய்த் தாங்கற மாமியார், மாமனார், உன் மனசறிஞ்சி நடக்கற அம்மா, அப்பா இவங்கள்ளாம் இருக்கும்போது யாரோ மூணாவது மனுஷங்க பேச்சைப் பத்தி ஏன் கவலைப் படறே? விட்டுத் தள்ளு. இந்த மாதிரி நேரத்துல மனசை போட்டு குழப்பிக்காதே" என்று ஆறுதல் கூறினாள்.

அன்று வேலைச்சுமை அதிகமில்லாததால் மதிய உணவைச் சீக்கிரமே முடித்துக் கொண்டு தன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு கடந்த காலத்தில் ஆழ்ந்தாள் சத்யா.

சத்யாவும் அருணும் பெற்றோரின் சம்மதத்துடன் காதல் மணம் புரிந்தவர்கள். திருமணமான மூன்றே மாதங்களில் அருணுக்கு வெளி நாடு செல்ல வேண்டியிருந்தது. அருண் ஊரிலிருந்த அந்த மூன்று மாதங்களும் அவர்களுக்கு மூன்று நிமிடங்களாய்ப் பறந்தன. பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றி, அவர்களுக்கு வைக்கப் போகும் பெயர் அருணின் பெயருக்கு இணையாக ஆணாக இருந்தால் ‘வருண்’ என்றும், பெண்ணாக இருந்தால் காருண்யா என்று பெயர் வைத்து ‘கருண்’ என்றும் அழைக்க வேண்டுமென்பது வரை முடிவு செய்து கொண்டனர். ஆனால் குழந்தைப் பேற்றின் போது அருண் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று சத்யா உறுதியாக இருந்ததால் அவன் இரண்டு வருடம் கழித்து வெளி நாட்டிலிருந்து வந்த பிறகே குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்திருந்தார்கள்.

வெளி நாடு சென்ற முதல் இரண்டு மாதங்கள் வரை வாரத்திற்கு இரண்டு கடிதங்கள் கூட வந்து கொண்டிருந்தன. போகப் போக வேலைச் சுமை காரணமாகக் கடிதப் போக்குவரத்து ஓரளவு குறைந்த போதும் அதிலிருந்த அன்பு மொழிகள் அவளுக்கு ஆறுதலாய் இருந்தன. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு அவனிடமிருந்து மாதத்திற்கு ஒரு கடிதம் வருவதே அரிதாகிப் போனது. அதிலும் பொதுவான "நான் நலம், நீங்கள் அனைவரும் நலமா?" என்பது போன்ற செய்திகள்தான். ஆனால் மாதா மாதம் பணம் மட்டும் தவறாமல் வந்தது. இங்கிருந்து தொலைபேசியில் பேசினாலும் அவன் எங்கேயாவது அவசரமாகச் சென்று கொண்டிருப்பான் அல்லது அவனது நண்பன்தான் இவர்களின் அழைப்பிற்கு பதிலளிப்பான். அவன் முகவரிக்குப் போட்ட கடிதங்கள் கூடத் திரும்பி வரத் துவங்கின. வயதானவர்கள் இருவரும் அவனுக்கு என்ன ஆனதோ என்று அழவே ஆரம்பித்து விட்டனர். அவன் மாதா மாதம் அனுப்பிய தொகை மட்டுமே அவன் அங்கு இருப்பதை உறுதிப்படுத்தியது.

அவன் வெளி நாடு சென்று ஒன்றரை வருடங்களாகி விட்ட நிலையில் அவனிடமிருந்து பணம் வருவதும் நின்று போனது. அது பெற்றவர்களை உலுக்கி விட்டது. அது வரையில் அது ஒன்றுதான் அவன் அங்கு இருப்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது. இப்போது அதுவுமில்லை என்றானவுடன் அவர்கள் கலங்கிப் போயினர். அங்கு யாரையும் தெரியாத நிலையில் யாரைத் தொடர்பு கொள்வது, எங்கு போய் அவன் பற்றிய தகவல்களை அறிவது எனக் குழம்பினர்.

அவர்களின் குழப்பம், கலக்கம் எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும் வகையில் ஒரு நாள் அருணின் நண்பன் ஸ்ரீதர் அவர்கள் வீடு தேடி வந்தான். அவன் கூறிய தகவல் இவர்கள் அனைவர் தலையிலும் இடியாய் விழுந்தது. ஆம்.. அவர்கள் வீட்டுச் சூரியன் வெளிநாட்டில் அஸ்தமித்திருந்தது.

வெளிநாடு சென்று ஆறு மாதங்களிலேயே அருணின் உடல் நிலையில் மாற்றம் தெரிந்தது. அடிக்கடி காய்ச்சல், உடல் வலி என்று அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். முதலில் பொருட்படுத்தாவிட்டாலும் உடல் நிலை நலிந்து கொண்டே போனதால் மருத்துவரிடம் சென்றதில் அவனுக்கு "ரத்தப் புற்று நோய்" என்று தெரிய வந்தது. தான் வியாபித்திருப்பதை வெளியே காட்டாமலேயே உடல் முழுவதும் ஆக்கிரமித்திருந்தான் அந்த அரக்கன். சில நாட்கள் அழுவது தவிர வேறொன்றும் தோன்றவில்லை அருணுக்கு. இதைச் சொல்லும்போதே ஸ்ரீதரின் கண்களும் கலங்கியது.

முதலில் குடும்பத்திற்கு இதைப் பற்றிக் கடிதம் எழுதத் தொடங்கி, பிறகு எதையோ யோசித்து அதைக் கிழித்துப் போட்டு விட்டான். குடும்பத்தில் யாருக்குமே இது தெரியக்கூடாது. தாங்க மாட்டார்கள். தான் இறப்பதற்கு முன் குடும்பத்திற்கு வேண்டியதைச் செய்து விடவேண்டும் என்ற உத்வேகத்தில் தன்னுடைய வாழ்நாளை நீட்டிப்பதற்காக ஒருபுறம் மருந்து, மாத்திரைகள், உடலை வருத்தும் வைத்திய முறைகள் என்றும், வேறொரு புறம் புதிய அலுவலகத்தில் இன்னும் அதிக ஊதியத்தில் வேலை, அதிகமான உழைப்பு என்றும் உடல் ஓயும் வரை போராடினான். குடும்பத்திற்கு, குறைந்தபட்சம் மனைவிக்காவது இதைத் தெரியப்படுத்த வேண்டியது முக்கியம் என்ற நண்பனின் கோரிக்கையை அலட்சியப்படுத்தித் தன்னந்தனியனாகப் போராடினான்.

போராட்டம் ஓய்ந்து இப்போது மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டான். வியாதியின் காரணமாக அவனது உடலை நாட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்லவோ, ஈமக்கிரியையைத் தாமதிக்கவோ மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஸ்ரீதரே அவனது ஈமச் சடங்குகளைச் செய்தான். அருணைக் காணத் துடித்துக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு அவனது அஸ்தியை மட்டுமே எடுத்து வந்து காட்ட முடிந்தது!!

யார் யாரைத் தேற்றுவது என்றே தெரியாத நிலை! தினமும் ஸ்ரீதர் வந்து போனான். அருணின் தந்தையை அவனும் "அப்பா" என்றுதான் அழைத்தான். உப்பும், புளியும் உடம்பில் சேரச் சேர துக்கம் மறக்கவில்லை என்றாலும் அதன் தாக்கம் சற்றே குறைந்து நிதர்சனம் உறைத்தது. அருண் அவனது பெற்றோர்களுக்கு ஒரே மகன். அவனுடன் பிறந்தவர்கள் யாருமில்லை. அதனால் அவனுக்குப் பின் அந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்கவும் வேறு யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தனர்.

அந்நேரம் அருண் முன்பு இந்தியாவில் வேலை பார்த்து வந்த அலுவலகத்திலிருந்து அதன் தலைமை அதிகாரி வந்தார். அருண் அவருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருந்ததாகவும் அவனுக்குப் பின் அலுவலக நடைமுறைகள் இடம் கொடுத்தால் அவனது மனைவிக்கு வேலை அளிக்குமாறும் வேண்டியிருந்தான். அதனை ஏற்றுக் கொண்டு அவர் சத்யாவிற்கு அவளது தகுதிக்கேற்ற வேலையை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்ரீதர் தனது ஒரு மாத விடுமுறை முடிந்து வேலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்தது. அருணின் வீட்டில் சொல்லிக் கொண்டு போக வந்தான். துக்க முகம் மாறாத வீடு அவன் பேச நினைத்ததைப் பேச விடாமல் தடுத்தது. ஆனால் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்ற நிலையில் மெதுவாகப் பேச்செடுத்தான். மூவரையும் ஒன்றாக அமரவைத்துப் பேச்சை ஆரம்பிக்கும் தருணம் சத்யாவின் பெற்றோரும் தற்செயலாக வந்து சேர்ந்தனர். அது ஒரு விதத்தில் அவனுக்கு வசதியாக இருந்தது.

அருணின் தந்தையைப் பார்த்துப் பேச்சை ஆரம்பித்தான். "அப்பா, அருண் சாகிறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிருக்கான். அதை நிறைவேத்த உங்க எல்லாரோட ஒத்துழைப்பும், முக்கியமா சத்யாவோட சம்மதம் தேவை" என்றான்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை.

(தொடரும்)

About The Author