நினைவுப் பரிசு (2)

மீண்டும் பேச ஆரம்பித்தான் ஸ்ரீதர். "அருணுக்கும் சத்யாவுக்கும் குழந்தைகள்னா எவ்வளவு ஆசைன்னு என்கிட்ட நிறையவே சொல்லி இருக்கான். தனது மறைவிற்குப் பிறகு கொஞ்ச நாள் கழிச்சாவது சத்யா வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தைகளோட சந்தோஷமா வாழணும்னு ஆசைப்பட்டான்".

"நோஓஓஓஓ….. வீறிட்டாள் சத்யா. அருண் மேல நான் உயிரையே வெச்சிருக்கேன். அவர்தான் என் உலகம். அவரைத் தவிர வேற யாரையும் என்னால நேசிக்க முடியாது. அதை விட நான் செத்துடுவேன்" என்று கதறினாள்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்ட ஸ்ரீதர் "நீ இப்படித்தான் சொல்வேன்னு அருண் சொன்னான்மா. அதனாலதான் அதுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செஞ்சி வெச்சிட்டுப் போயிருக்கான்"

அழுகையை சற்றே நிறுத்தி ஸ்ரீதர் என்ன சொல்லப்போகிறானோவென்று அவன் முகம் பார்த்தாள் சத்யா.

"தனக்கு புற்று நோய் வந்துடுச்சின்னு தெரிஞ்சதுமே அதைப் பத்தி நிறைய படிச்சி, மருத்துவர்கள் கிட்ட பேசி தெளிவாப் புரிஞ்சிகிட்டான். அதனால தீவிர சிகிச்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே தனது உயிரணுக்களை ஒரு ‘உயிரணு பாதுகாப்பு வங்கி’யில் பத்திரப்படுத்தி வெச்சிருக்கான். 1-2 வருஷங்களுக்குப் பிறகும் தனக்கு மறுமணம் வேண்டாம்னு சத்யா தீவிரமா இருந்தா அவனோட உயிரணுக்களை உபயோகப்படுத்தி செயற்கை முறையிலாவது அவனோட குழந்தையை இந்த உலகத்துக்குக் கொண்டு வர வழி செஞ்சி வெச்சிட்டுப் போயிருக்கான்பா". சத்யாவைப் பத்தி அவன் நல்லாவே புரிஞ்சி வெச்சிகிட்டதாலதான் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கான். சத்யாவோட ஆழமான அன்பைப் புரிஞ்சிகிட்டதாலதான் வருடக்கணக்கில காத்திருக்காம இவ்வளவு சீக்கிரம் இதைப் பத்திச் சொன்னேன்"

துக்கத்தையும் மீறி ஒரு தெளிவு ஏற்பட்டது சத்யாவின் முகத்தில். அவளையே பார்த்திருந்த அவளது பெற்றோர் திடுக்கிட்டனர். "அம்மா சத்யா, உனக்கு ரொம்ப சின்ன வயசும்மா, கல்யாணம் முடிஞ்சி ஆறு மாசம் கூட புருஷனோட வாழல. அவசரப்பட்டு முடிவெடுத்திடாதேம்மா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு" என்று பதறினார் அவள் அன்னை.

அவர்களைப் பார்த்து வாஞ்சையாகப் புன்னகைத்த சத்யா, உறுதி மிக்க குரலில் "அம்மா.. உங்க கவலை, என் மேல இருக்கற பாசம் எல்லாம் எனக்குப் புரியுதும்மா. ஆனால் என்னைப் பற்றி என்னை விடவே என்னோட அருண்தான் நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்கார். அதனாலதான் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணி வெச்சிட்டுப் போயிருக்கார். அவர் இல்லைன்னாலும் அவரோட வாரிசு இந்த உலகத்துல நடமாடும். அந்தக் குழந்தையைச் சுமக்கற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கறதை நினைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இதுலதான்மா என் சந்தோஷமும், நிறைவும் இருக்கு. என்னிக்கிருந்தாலும் நான் அருணோட மனைவி, இந்த வீட்டு மருமகள். இப்போ இந்த வீட்டு வாரிசுக்குத் தாயாகிற ஒரு வாய்ப்பும் கிடைச்சி என் வாழ்க்கையை முழுமையாக்கிடுச்சி. எனக்குத் தேவை இதுதான்மா" என்றாள்.

சத்யாவின் மாமியார் கண்ணீருடன், "அம்மா சத்யா, அவங்க சொல்றது சரிதான்மா.. உனக்கு சின்ன வயசு, இன்னும் வாழ வேண்டிய காலம் எவ்வளவோ இருக்கு. இறந்து போயிட்டவன் ஆசையை நிறைவேத்தறதுக்காக உன்னோட வாழ்க்கையை சாகடிச்சிடாதேம்மா" என்று வேண்டினார்.

"எல்லாரும் கேட்டுக்கோங்க. நான் சுயநினைவோட, முழுச் சம்மதத்தோடதான் எங்க குழந்தையப் பெத்துக்க ஆசைப்படறேன். இதுதான் என் வாழ்க்கை, என் தவம் எல்லாம். தயவு செய்து யாரும் மறுத்துப் பேசாதீங்க. ஸ்ரீதரண்ணா, இனிமே இது விஷயமா என்ன பண்ணனுமோ நீங்கதான் உதவி பண்ணனும்” என்று கை குவித்துக் கேட்டுக் கொண்டாள்.

அதன்பிறகு வெளி நாட்டிலிருந்து அருணின் உயிரணுக்களை வரவழைத்து, ஒரு நல்ல மருத்துவர் மூலம் சிகிச்சையளித்ததில் இன்று அருணின் குழந்தை எந்த நிமிடமும் உலகத்தை எட்டிப் பார்க்கத் தயாராய்..

ஆனால் இந்த முயற்சியை ஆரம்பித்ததிலிருந்து இந்தப் பன்னிரண்டு மாதங்களும் சத்யா பட்ட கஷ்டங்கள் பல. எதையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் இந்த உலகம், சத்யாவையும் அதே கண் கொண்டு பார்த்து காது கூசும் வகையில் விமர்சித்தது. ஆனால் தனது புகுந்த வீடு, பிறந்த வீட்டின் துணையுடனும், ரேவதி என்ற ஆருயிர்த் தோழியின் அரவணைப்புடனும் அத்தனையும் எதிர் கொண்டாள் சத்யா.

தொலைபேசி மணி அடித்து கடந்த கால யோசனையில் ஆழ்ந்திருந்த அவளை இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது. எக்கி தொலைபேசியை எடுத்தவளின் இடுப்பில் சுளீரென்று வலி… "அம்மா.." துடித்துப் போனாள். உடனடியாக ரேவதியின் துணையுடன் மருத்துவமனையில் சேர்ந்து அப்பாவையே உரித்துக் கொண்டு பிறந்த வருணுக்குத் தாயானாள்.

"சத்யா, கடைசியில நீ ஆசைப்பட்டபடியே வருண்தான்.. இப்போ திருப்தியா?" சிரித்துக் கொண்டே கேட்டாள் கவிதா.

"சந்தோஷம்தான். ஆனா முழுத்திருப்தி எப்போ தெரியுமா? இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி இதே மாதிரி ஒரு கருணுக்குத் தாயாகும்போது" மனமாரப் புன்னகைத்தாள் சத்யா.

*****

About The Author