நீல நிற நிழல்கள் (26)

ர்ஸின் முகத்தில் படிந்திருந்த கலவரத்தைப் படித்து விட்ட மாசிலாமணி, கண்களில் பயத்தைப் பரப்பிக் கொண்டு அவளை ஏறிட்டார்.

"நீ… நீ… என்னம்மா… சொ… சொல்றே…? கீதாம்பரியோட உயிருக்கு மறுபடியும் ஏதாவது ஆபத்தா…?"

"சார்… கீதாம்பரியோட உயிரைப் பத்தியோ, பிறந்த குழந்தையோட உயிரைப் பத்தியோ இனிமே கவலைப்பட ஏதுமில்லை. இப்ப நான் சொல்ல வந்த விஷயமே வேறே…"

"நீ… என்னம்மா… சொல்றே…?"

"சார்…! உங்க குடும்ப விஷயத்துல நான் தலையிடறதா நீங்க நினைக்கக் கூடாது. கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஹாஸ்பிடலோட
பின்பக்கம் நான் பார்த்த ஒரு சம்பவத்தையும் என் காதால கேட்ட வார்த்தைகளையும்தான் உங்ககிட்ட இப்பச் சொல்லப்போறேன்… இது உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது சார்…"

"சொ… சொல்லும்மா… என்ன…?"

குரலைத் தாழ்த்திக்கொண்டு பேச முயன்ற நர்ஸ், வராந்தாவின் கோடியில் திலகமும், பர்வதமும் வருவதைப் பார்த்துவிட்டுப் பின்வாங்கினாள்.

"சார்… உங்க மனைவியும் கீதாம்பரியோட அம்மாவும் வர்றாங்க… நீங்க அவங்களைப் பேசி அனுப்பிச்சுட்டு ஸ்டோர் ரூம் பக்கம் வாங்க. அங்கே உங்களுக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்."

சொல்லிவிட்டு எதிர்த்திசை வராந்தாவில் நர்ஸ் வேகமாய் நடந்து போக, அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த மாசிலாமணியின் பக்கத்தில் வந்து நின்றார்கள் திலகமும் பர்வதமும்.

திலகம் அவருடைய கையைத் தொட்டாள்.

"என்னங்க…"

"ம்…"

"அந்த நர்ஸ் என்ன சொல்லிட்டுப் போறா, ஏன் அவளையே பார்த்துட்டிருக்கீங்க?"

மாசிலாமணி சுதாரிப்புக்கு வந்தார். "அ… அது ஒ… ஒண்ணுமில்லை… திலகம், தலைவலிக்கு ஒரு மாத்திரை கேட்டேன். அதுக்கு அந்த நர்ஸ் ‘டாக்டரைக் கேட்காம யாருக்கும் எந்த மாத்திரையும் தரக்கூடாது’ன்னு சொல்லிட்டுப் போறா… ஒரு தலைவலி மாத்திரைக்குக்கூடவா டாக்டரைக் கேட்கணும்?"

"டாக்டர் சொல்லியிருக்கிறதும் சரிதான்… சிலருக்குச் சில மாத்திரைகள் ஒப்புக்காம போறதுண்டே!"

"சரி… நீங்க ரெண்டு பேரும் இப்போ கீதாம்பரியை விட்டு எதுக்காக வெளியே வந்தீங்க?"

"நம்ம கார் டிரைவர் வெளியில்தானே இருக்கார்?"

"ஆமா…"

"நீங்க கார்ல கிளம்பி வீட்டுக்குப் போய் ரெண்டு தலையணையையும் போர்வையையும் கொண்டாந்துடுங்க. ஃபிளாஸ்க்கும் வேணும். அப்படியே பர்வதம் வீட்டுக்குப் போய்ப் பின்பக்கக்கதவு சாத்தியிருக்கான்னு பார்க்கணும். ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டு வர்ற அவசரத்துல பின்பக்கக் கதவை அடைச்சோமா இல்லையான்னு பர்வதத்துக்குச் சந்தேகம்…"

"போற வழிதானே… பார்த்துடறேன்…"

"அப்புறம்…"

"சொல்லு திலகம்…"

"ஃபிளாஸ்க்கை நல்லாக் கழுவி டீயோ, காபியோ வாங்கிட்டு வந்துடுங்க…"

"சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"

பர்வதம் குறுக்கிட்டுச் சொன்னாள்:

"அதெல்லாம் வேண்டாங்க… தொண்டையை நனைக்கிறதுக்கு மட்டும் காபியோ, டீயோ ஏதாவது ஒண்ணு இருந்தாப் போதும்!"
மாசிலாமணி தலையாட்டிவிட்டு, ஹாஸ்பிடலின் வாசல் பக்கம் போவதைப் போல் பாவ்லா காட்டி… அவர்கள் தலைமறைந்ததும் ஸ்டோர் ரூம் இருந்த திசையை நோக்கி வேகமாய் நடந்தார்.

அரையிருட்டோடு ஸ்டோர் ரூம் வந்தது.

சுவருக்குச் சாய்ந்துகொண்டு அந்த நர்ஸ் காத்திருந்தாள்.

*********

ட்டிலுக்குக் கீழே உருண்டிருந்த திவாகர் கஷ்டமான ஒரு கோணத்தில் பார்வையை வைத்துப் பார்க்க, வால்சந்த் தெரிந்தான்.

‘யார் இவன்? இந்த வீட்டுக்கு வேலைக்காரனா? உடுத்தியிருக்கிற டிரஸ்ஸைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது! இவனை இதே அறையில் அடித்து வீழ்த்தி ஹரிஹரன் எங்கேயிருக்கிறான் என்கிற உண்மையைக் கறக்க முயற்சிக்கலாமா?’

திவாகர் யோசனையில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதே…

"பீங்க்க்க்…!"

பங்களாவுக்கு வெளியேயிருந்து அந்தக் கார்ஹாரன் சத்தம் கேட்டது. அலமாரியில் எதையோ எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த வால்சந்த், கார்ஹாரன் சத்தம் கேட்டதும் உடனடியாய் உடல் ஒடுங்கிப் பவ்யமாய் வெளியே ஓடினான்.
திவாகர் யோசித்தான்.

‘காரில் வருவது யார்?… ஜோஷியா? இல்லை, வேறு யாராவதா?’ கட்டிலுக்குக் கீழேயிருந்து உருண்டு வெளியே வந்தான். அறையினின்றும் மெதுவாய் நகர்ந்து எட்டிப்பார்க்க, ஹாலும் அதற்கப்பால் போர்டிகோவும் தெரிந்தன. கண்டஸா மூக்கை நீட்டிக் கொண்டிருக்க… குர்தா அணிந்த ஜோஷி காரினின்றும் பதற்றமாய் இறங்கி உள்ளே வந்துகொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னால் பவ்யமாய் வால்சந்த்… இந்தியில் சம்பாஷணை.

"வால்சந்த்… யாராவது என்னைப் பார்க்க வந்தாங்களா?"

"இல்ல ஸாப்!"

"போன்…?"

"எதுவும் வரலை ஸாப்!"

"சரி, உள்ளே வா… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டியிருக்கு. வாசல் கதவைச் சாத்தித் தாழ்போட்டுட்டு வா!"

ஜோஷி சொல்லிக் கொண்டே ஓர் அறைக்குள் நுழைந்துவிட, வால்சந்த் வாசல்பக்கம் இருந்த பெரிய தேக்குக்கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு ஜோஷி நுழைந்த அறைக்குள் பிரவேசித்தான்.

திவாகர் அந்த அறைக்குப் பக்கவாட்டுச் சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டான்.

சம்பாஷணை காதில் விழுந்தது.

"வால்சந்த்… நீ உடனடியாய்ப் புறப்பட்டு டாக்டர் பங்களாவுக்குப் போ! ஆர்யாவும் நீயும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு காரியத்தைப் பத்தி டாக்டர் சொல்வார்… அவர் என்ன சொல்றாரோ அதைப் பண்ணிட்டு வந்து சேர்!"

"ஸாப்… விஷயம் என்னான்னு…?"

"என்கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காதே! டாக்டர் பங்களாவுக்குப் போ… செய்ய வேண்டியதை அவர் உனக்குப் புரியும்படியா சொல்வார்."

"சரி, ஸாப்!"

"டாக்டர் பங்களாவுக்கு டாக்ஸியில் போகாதே! கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் பஸ்ஸைப் பிடி. இல்லேன்னா, எலெக்ட்ரிக் டிரெயினைப் பிடி."

சில விநாடிகள் நிசப்தம். பின் ஜோஷியின் குரல் கேட்டது. "இந்தா ரிவால்வர்!"

"இது எதுக்கு ஸாப்?"

"நீயும் ஆர்யாவும் இறங்கப்போறது துணிச்சலான ஒரு காரியத்தில்! டாக்டர் சொல்ற திட்டம் வொர்க் அவுட் ஆகாதபட்சத்தில் இதை உபயோகப்படுத்திக்கோ! ஆனா… உன்கிட்ட ரிவால்வர் இருக்கிற விஷயத்தை டாக்டர்கிட்டேயும் சரி… ஆர்யாகிட்டேயும் சரி… காட்டிக்க வேண்டாம்!"

"சரி ஸாப்…"

"புறப்படு!"

திவாகர் மெள்ளப் பின்வாங்கி, சத்தமில்லாமல் நடைபோட்டு, பங்களாவின் பின்பக்கத்துக்குச் சரசரவென்று வந்து சுவரில் தாவி ஏறி மறுபக்கம் குதித்தான்.

மூச்சிரைத்துக்கொண்டு பங்களாவுக்கு வலதுபக்கமாய் ஓடி, ரமணி மறைந்து உட்கார்ந்திருந்த டிரான்ஸ்ஃபார்மருக்குப் பக்கத்தில் வந்து குரல் கொடுத்தான்.

"ரமணி…" மிக மெதுவாக அழைத்தான்.

செடிகளுக்கு மத்தியிலிருந்து அவன் தலை உயர்ந்தது.

"என்ன திவாகர்?"

"நாம சந்தேகப்பட்டது சரி…"

"உள்ளே என்ன நடந்தது?"

"பங்களாவுக்குள்ளே போன காரைப் பார்த்தியா?"

"பார்த்தேன்…"

"உள்ளே வந்தது ஜோஷி. அவர் நார்மலா இல்லை. மனுஷன் ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கார். பங்களாவில் வேலைக்காரனைத் தவிர வேற யாரும் இல்லை. ஜோஷி உள்ளே வந்ததும் வராததுமா… யாரோ ஒரு டாக்டர் பங்களாவுக்கு வேலைக்காரனைப் போகச் சொன்னார். ஆர்யாங்கிற ஒரு பொண்ணோட சேர்ந்து ஏதோ ஒரு காரியம் பண்ணப்போறாங்க… அது என்னான்னு தெரியலை. வேலைக்காரன் கையில ரிவால்வரையும் கொடுத்து விட்டிருக்கார் ஜோஷி."

"ஸோ… யாரையோ தீர்த்துக்கட்டப் போறாங்க…?"

"ஆமா… அது ஹரிஹரனாகக்கூட இருக்கலாம்."

"போலீஸுக்குப் போயிடலாமா?"

"வேண்டாம் ரமணி… போலீஸைக் கூப்பிட்டா தேன் கூட்ல கல்லெறிஞ்ச மாதிரி ஒரே களேபரம் ஆயிடும்."

"சரி… இப்ப என்ன பண்ணலாம்கிறே?"

"நான் அந்த வேலைக்காரனை ஃபாலோ பண்ணப் போறேன். அந்த டாக்டர் பங்களா எங்கேயிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் போலீஸுக்குப் போயிடலாம்."

"அப்ப… நான்…?"

"நீ இங்கேயே இருந்து ஜோஷியோட பங்களாவை வாட்ச் பண்ணு!"

"திவாகர்! எனக்கு பயம்மாயிருக்கு…"

"ரமணி! ஹரிஹரன் விஷயத்துல இப்பத்தான் சரியான பிடி கிடைச்சிருக்கு. இதைப் புத்திசாலித்தனமா உபயோகப்படுத்திக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அதோ, அந்த வேலைக்காரன் பங்களாவை விட்டு வெளியே வந்துட்டான். நான் கிளம்பறேன்… நீ ஜோஷி பங்களாவை உன்னிப்பா நோட் பண்ணு… எந்த வாகனம் உள்ளே போனாலும் நம்பரை பாக்கெட் டைரியில் எழுதிக்கோ…"

"ம்… ம்…"

திவாகர் கிளம்பினான்.

"ஜாக்கிரதை திவாகர்!"

"நான் பார்த்துக்கிறேன்…"

நூறு மீட்டர் தொலைவில் நடந்து போகும் நிழல் உருவ வால்சந்தைப் பின்தொடர ஆரம்பித்தான் திவாகர்.

***********

ஜோஷி ஒட்டுமொத்த நிம்மதியையும் தொலைத்து விட்டவரைப்போல் சோபாவில் உட்காருவதும் எழுந்து நடப்பதுமாக இருந்தார்.
பரந்த முன்வழுக்கை வியர்த்துச் சொதசொதத்தது.

‘டாக்டர் சொல்படி வால்சந்தும் ஆர்யாவும் காரியத்தைச் செய்து முடிப்பார்களா…?’

‘ஆர்யா கெட்டிக்காரி… எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கிற சாமர்த்தியம் அவளுக்கு இருக்கிறது!’

யோசிப்பில், நிலைகொள்ளாமல் நடைபோட்டவரை ஜன்னலுக்குப் பக்கத்தில் இருந்த டெலிபோன் அலறி ஈர்த்தது.

போய் ரிஸீவரை எடுத்தார்.

"ஹலோ…"

மறுமுனையில் டாக்டர் சதுர்வேதி பேசினார்.

"என்ன… வால்சந்தை அனுப்பிட்டீங்களா?"

"வந்துட்டிருக்கான்."

"டாக்ஸி வேண்டாம்னு சொல்லிட்டீங்கள்ல?"

"சொல்லிட்டேன்."

"ஆர்யா இங்கே தயாரா காத்திட்டிருக்கா. வால்சந்த் புறப்பட்டு எவ்வளவு நேரமாகியிருக்கும்?"

"அரைமணி நேரம்."

"பஸ்ஸையோ டிரெயினையோ பிடிச்சுவர இவ்வளவு நேரமா?"

"எப்படியும் இன்னும் அஞ்சு பத்து நிமிஷத்துக்குள்ளே வந்துடுவான்."

"வந்ததும் உங்களுக்கு போன் பண்றேன்" மறுமுனையில் டாக்டர் ரிஸீவரை வைத்துவிட, ஜோஷியும் ரிஸீவரை வைத்துவிட்டு மெள்ள நிமிர்ந்தார்.

நிமிர்ந்தவரின் பார்வை திடுக்கிட்டது.

சாலையில் போகிற ஏதோ ஒரு வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம் ட்ரான்ஸ்ஃபார்மர் மீது பட… குத்துச் செடிகளுக்குப் பின்னால் உட்கார்ந்து எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ரமணி, ஜோஷியின் பார்வைக்கு ஸ்பஷ்டமாய்க் கிடைத்தான்!

(தொடரும்)

About The Author