பத்தாயிரம் தலைமுறைகளின் ஆசான் (2)

கற்பதில் கன்ஃப்யூஷியஸுக்கு இருந்த ஆனந்தம் அளவில்லாதது. யாரிடமிருந்தும் கற்கும் பணிவு அவரிடம் இருந்தது. ‘காலையில் அறிவைத் தேடவென்று நான் படித்திருந்தால் மாலையில் திருப்தியுடன் இறப்பேன்’, என்று கூறுவார். சத்தியத்திற்கான தேடல், சான்றோருக்குரிய பண்புகள், சான்றோனாவதற்கான பாடங்கள், ஒருத்துவம், உறுதி, அன்பு, பணிவு, பண்பு போன்ற அனைத்தையும் தன் மாணவர்களுக்குக் கற்பிக்க கன்ஃப்யூஷியஸ் என்றைக்கும் கொஞ்சம் கூடச் சலித்ததில்லை. மாணவர்கள் கற்றவை யாவும் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்பட்டன. அவரிடமிருந்த 3000 மாணர்களில் 72 பேர் தான் இலக்கியம், ஒழுக்கம், மொழி, அரசியல் போன்ற துறைகளில் பெரிய உயரங்களை எட்டிச் சிறந்தோங்கினர். குறிப்பாக அரசியலில் நிலைத்துச் செயல்பட்டவர்கள் தான் கன்ஃப்யூஷியனிஸம் பரவவும், உருவாகி வளரவும் காரணர்களாகினர். தன் ஒரே மகன் இறந்த சில நாட்களில் கன்ஃப்யூஷியஸின் பிரதான சீடன் ஜீ லூ இறந்தான். சீடன் ஆசானின் ‘செத்தாலும் சீருடன் சாகவேண்டும்’ என்பது போதனைகளால் தாக்கம் கொண்டு தன் இறுதி மூச்சுக்கு முன்னர் தன் சிகை அலங்காரத்தை சரி செய்து கொண்டான் என்பார்கள். மனதிற்கு நெருக்கமான இந்த மாணவனின் மரணத்திற்கு ஏழாம் நாள் துக்கம் தாளாமல் கன்ஃப்யூஷியஸ் இறந்தார். மகன் மற்றும் சீடன் ஆகிய இருவரின் மரணங்களும் அவரை மிகவும் பாதித்ததாகச் சொல்லும் சில பதிவுகளும் உள்ளன.

கன்ஃப்யூஷியஸ் நேர்மைக்குக் கொடுத்த முக்கியத்துவம் மகத்தானது. அவர், ‘தரத்தில் தாழ்ந்த அரிசி என் உணவுக்கும், வெறும் நீர் பானமாகவும், மடக்கிய கை தலையணையாகவும் இருந்தால், காண முடியாதா மகிழ்ச்சியை? தவறான முறையில் சேர்ந்த செல்வமானது எனக்கு கலைந்திடும் மேகங்கள் போன்றதே. முறையான வருவாய்க்கு நான் வாகனமோட்டுவது போன்ற சாதாரண வேலைக்கும் தயார்’, என்றுரைப்பார். வறுமையைக் கடந்தும் அவர் தன் கோட்பாடுகளில் தெளிவாக இருந்தார். எளிய முறையில் பிறருக்கு விளக்கினார். "ஆசானே, உங்களிடம் ஒரே ஒரு சொல்லுண்டா? அதை மட்டுமே ஒரு மனிதன் தன் வாழ் நாளெல்லாம் பின்பற்றி நன்னெறியுடன் நடக்க?", என்று கன்ஃப்யூஷியஸிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. உடனே கொஞ்சம் கூடத் தயங்காமல், ‘உனக்கு வேண்டாததென்று கருதும் எதையும் பிறருக்குக் கொடுக்காதே’, என்ற பொருளில் "ஷூ", என்று சொன்னார். எல்லோரையும் பொறுமையுடனும் நேர்மையுடனும் நடத்தி என்றென்றும் அறம் வழுவாது வாழ்ந்த அவரைப் பொருத்தவரை பிறரிடம் அன்பு பாராட்டுபவனே பண்பாளன்.

அறிவுத் தேடல் என்றுமே கல்வியுடன் முற்றுப் பெறுவதில்லை என்பதை கன்ஃப்யூஷியனிஸத்தின் தாக்கம் கொண்ட சீனக்கலாசாரம் என்றென்றும் நம்பிப் பின்பற்றி வருகிறது. தனிமனிதப் பண்பில் ஒருவன் உயர்வதும் அவன் தன் திறன் மற்றும் அறிவு முழுவதையும் பயன் படுத்துவதும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் உலகுக்கும் பயனுற வாழ்வதும் அவனது வாழ்வை முழுமைப்படுத்தும். ஒரு முறை அலுவலகத்திலிருந்து திரும்பியதும் கன்ஃப்யூஷியஸ் குதிரை லாடம் தீப்பிடித்து எரிந்த செய்தி அறிந்து, "யாருக்கும் காயமேற்பட்டதா?", என்று வினவினார். குதிரைகளைக் குறித்து ஒன்றுமே கேட்கவில்லை. அதை வைத்துக் கொண்டு கன்ஃப்யூஷியஸ் மனித நேயம் மிகுந்தவர் என்போர் ஒருபுறம். குதிரைகளை உயிர்களாகப் பார்க்காமல் உடைமைகளாகப் பார்க்கிறார் கன்ஃப்யூஷியஸ் என்போர் ஒருபுறம் உள்ளனர்.

அவர் தன் இறுதி காலத்தில் பிழைதிருத்தமும் தொகுப்பும் செய்தவை அனைத்துமே முற்காலத்திலிருந்து வழிவழி வந்த அரசாங்கக் கோப்புகள், நாட்டுப் புறப்பாடல்கள் மற்றும் வரலாற்றுப் பதிவுகள். முக்கியமானவை ஐந்து செவ்விலக்கியங்களான ‘செவ்வியல் கவிதை’, ‘செவ்வியல் வரலாறு’, ‘வசந்த இலையுதிர்கால பஞ்சாங்கம்’, ‘சடங்குகளின் பதிவுகள்’, ‘செவ்வியல் மாற்றங்கள்’. இது தவிர, அவரது போதனைத் துளிகள் பழமொழிகளாக மாணவர்களால் பதியப்பட்ட நான்கு நூல்களும் அவரால் முறைப்படுத்தப்பட்டன. 2000 ஆண்டுகளாக அரசாங்க உயர்பதவிகளுக்கான தேர்வுகளில் பயன்படுகின்றன இந்நூல்கள். எழுத வேண்டும் எனும் நோக்கில் முறையாக அவர் எந்த நூலையும் எழுதியதில்லை. அக்காலத்தில் நூல்கள் எழுதுவதும் பதிப்பிப்பது வழக்கில் இல்லை. தவிரவும், பழம் கோட்பாடுகளை விளக்குவதில் அவருக்கு இருந்த அளவிலாத ஈடுபாடு புதியனவற்றை உருவாக்குவதில் இல்லை.

மனிதம், சடங்குகள், அரசாங்கம், நீதி, கல்வித்துறை, அறிவியல் துறை, இசை, கவிதை, சான்றோனின் பண்புகள், கீழோரின் பலகீனங்கள் போன்ற பல்வேறு பொருள்களில் கன்ஃப்யூஷியஸ் சொன்ன 500 பழமொழிகள் அடங்கிய ஒரு நூல் மட்டுமே முக்கிய வரலாற்றுப் பதிவாகக் கிடைத்திருக்கிறது. அதுவும் மாணவர்கள் பதிந்தவை தான். அதிலிருக்கும் ஒரு முக்கிய பழமொழி ‘உன்னில் நீ குறைகள் கண்டால், அவற்றைத் துறக்கத் தயங்காதே’. அவரின் வாழ்வுமுறை, ஆளுமை, குணங்கள் குறித்த சில தகவல்கள் அதே நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த ஒரு நூலிலிருந்து தான் அவரது சித்தாந்தங்களும் சிந்தனைகளும் ஆராய்ச்சிக்குட்பட்டும் வருகின்றன. மனிதன், வாழ்க்கை, சமூகம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கான தன் கருத்துக்களைப் பதிந்துள்ளதால் இது சந்தேகமே இல்லாமல் அரியதொரு நூல்.

‘எல்லா மனிதர்களும் ஒன்று போலவே இருக்கிறார்கள். கல்வியும் பழக்க வழக்கங்களும் தான் அவர்களை வகைப் படுத்துகின்றன’, என்று சமத்துவம் பேசி வந்த கன்ஃப்யூஷியஸ் எப்போதுமே சக மனிதர்கள் மீது அன்பு கொண்டவராக வாழ்ந்து வந்திருக்கிறார். வாழ்வில் உயரவும் அறிவுக்கான தேடலிலும் அனைவருக்கும் அவர் உதவினார். சமூகத்தின் மேல்தட்டு கீழ்தட்டு, ஏழை பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடுமில்லாமல் அனைவரையும் மாணவர்களாக ஏற்றுக் கொண்டார்.

மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் மனிதத்தையும் சமூகத்தையும் அறிய ஆர்வம் கொண்டவராகவும் அதற்கு இறந்த காலத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் எதிர்காலம் குறித்த தெளிந்த சிந்தனையும் கொண்டிருக்க வேண்டும் என்று கன்ஃப்யூஷியஸ் எதிர்பார்த்தார். மாணவன் எந்தத் துறையிலும் மேலோங்கி வர வேண்டும் என்றெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை. அறிவுத் தேடலுக்கு ஒவ்வொரு மாணவனும் தன்னையே அர்பணித்து நடக்க வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தி வந்தார். அவர்கள் அந்தத் தேடலை அனைவருக்கும் கற்பித்துப் பரப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

கன்ஃப்யூஷியஸின் மாணவர்கள் அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் விசுவாசமும் கொண்டவர்களாக விளங்கினர். பலர் அவரோடு பயணங்களில் சென்றிருக்கின்றனர். வழியில் இடர்களையும் ஆபத்துகளையும் கூட அவருடன் சேர்ந்து எதிர்கொண்டனர். ஒருமுறை, குவாங் எனும் ஊரில் கன்ஃப்யூஷியஸ் கைது செய்யப் பட்டார். உடன் இருந்தது யான் ஹ்யூ.

கன்ஃப்யூஷியஸ் விடுவிக்கப் பட்டதும் மாணவனைப் பார்த்து, "நீ இறந்து போயிருப்பாய் என்று பயந்தேன்!", என்றார். மாணவன் யான் ஹ்யூவோ, "குருவே, தாங்கள் உயிரோடிருக்க, தங்களைக் காக்கும் பணியை விட்டுவிட்டு நான் இறக்கவோ?", என்றான். ஆசான் மிக நெகிழ்ந்து போனார். ஆசிரியர் மாணவன் உறவிற்கு உதாரணமாக சீனத்தில் நிலவும் உண்மைக் கதைகளில் முக்கிய கதை இது.

பெரும்பாலும் கேள்வி பதில் பாணியிலேயே அவர் போதித்தார். பதிலளிப்பது தவிர மாணவனின் கருத்தைக் கேட்டு அதற்கு எதிர்வினையாற்றுவதன் மூலமும் கற்பித்தல் நடந்திருக்கிறது. ஒரே கேள்வியை வெவ்வேறு மாணவன் வெவ்வேறு காலத்தில் கேட்கும் போது வெவ்வேறு பதில்கள் அளித்துமிருக்கிறார். மாணவர்களை ஆழ்ந்து யோசிக்கப் பழக்கினார். உரையாடல் ஒன்றைத் துவங்கி மாணவனின் சிந்தனையை ஒரு சின்ன தத்துவத்தின் மீதோ கேள்வியின் மீதோ குவிய வைக்கும் வகையிலும் கன்ஃப்யூஷியஸ் கற்பித்துள்ளார். சில வேளைகளில், வாழ்விலிருந்து உண்மைச் சம்பவங்களை எடுத்துக் கொண்டு அது குறித்து ஆராய்ந்து தன் கருத்தைச் சொல்வார். அத்துடன் சொற்பொழிவு, கலைகள் போன்றவற்றையும் கற்பித்தார். நளினமும் கம்பீரமும் கொண்ட சீரிய பேச்சுத் திறனை வலியுறுத்தியதன் மூலம் சொற்பொழிவுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. சத்தற்ற வெறும் நாடகத் தன்மைகளை மட்டுமே கொண்ட சொற்பொழிவை வெறுத்தார்.

About The Author