பாபா பதில்கள் – பிரார்த்தனையின் நோக்கம்

பிரார்த்தனையின் நோக்கம்:

"இந்த உலகத்திலிருக்கிற மாயைகளான, பொருள், பெண், மோகம், ‘மக, மாடு, மடந்தை’ இவற்றை இன்னும் கொஞ்சம் தேடி அலைவது தான் உங்களுடைய வழிபாட்டின் நோக்கம்" என்ற அளவில் தான் இன்றைய ஆன்மீகம் இருந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரு நேரம் வரும்.

‘வேளை நமனும் வருவானே! தம்பி தனையன் துணையாமோ’ அந்த மாதிரி உங்கள் வாழ்க்கையில் இந்த உலகம் என்ற பாற்கடலைக் கடைந்து நல்ல விஷயங்கள் கிடைத்த போது எடுத்துக் கொண்ட நீங்கள், நாளைக்கு ஒருவன் வருவான் – அவன் பெயர் காலன்; ஆலகாலன், அந்த ஆலகாலன் வருகிற போது நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற பொன்னும், பொருளும் போகமும் உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. இந்த சிவப்பரம்பொருள் ஒன்றுதான் காப்பாற்றும்.

என்ன ஆதாரம் என்று கேட்டால், அன்றைக்கு திருக்கடையூரிலே மார்க்கண்டேயன் என்று சொல்லக் கூடிய சிறுவன், ‘சிவனே!’ என்று அணைத்துக் கொண்ட போது, அந்த எமனை காலால் எட்டி உதைத்து தன்னை நம்பிய அந்த மார்க்கண்டேயனைக் காப்பாற்றினார் என்பது தான். நாளை உங்களுடைய வாழ்க்கையில் ஆலகாலன் – எமதர்மன் வரும் போது அந்த சிவன் உங்களுக்குத் துணை நிற்பான் என்பதற்கு ஆதாரம்.

மயிலாப்பூரில், எலும்பு சாம்பலாக கிடந்தபோது, அந்த சிவப்பரம்பொருளிடத்தில் திருஞான சம்பந்தர் பாடல் பாடி, எலும்பு சாம்பலை பெண்ணுருவாக்கி காட்டினான் என்பது தான் அந்தச் சிவன் உங்களை எமனிடத்திலிருந்து காப்பாற்றக் கூடிய வல்லமையோடு இருக்கிறான் என்பதற்கு அத்தாட்சி.

அப்பூதிஅடிகளின் மகனை பாம்பு தீண்டிய நிலையிலிருந்தும், அவிநாசியிலே முதலை உண்ட பாலகனாக இருந்தவனை உயிர்ப்பிக்க வைத்தான் என்பதுவும், அந்தச் சிவபரம்பொருள் உயிர்ப்பிக்க கூடிய அந்த சக்தியோடும், சித்தியோடும் இந்த உலகத்தில் உங்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்.

‘சிவாய நம:’ என்று சிந்தித்து இருப்பவர்க்கு அபாயம் இல்லை என்பதை மனதில் கொண்டு, நீங்கள் அனைவரும் சவமாவதற்குள் சிவ நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

About The Author

1 Comment

  1. priya

    மிகவும் அருமையான எளிமையான ஆன்மிக கருத்துக்கள்.

Comments are closed.