பிள்ளை வளர்ப்பு

அம்மா அன்று முழுவதும் ரகுவுடன் பேசவே இல்லை. அவன் மீது எக்கச்சக்கமான கோபம். எத்தனை சொல்லிக் கொடுத்தும், பாடுபட்டும் பீட்டரை முந்திக் காட்டவில்லையே அவன்.

உண்மைதான். அம்மா அவனுக்காக ஸ்பெஷலாகப் பல ட்யூஷன்கள் வைத்தாள். அதிகாலை ஐந்து மணிக்கே எழுப்பிப் படிக்க வைத்தாள். அருகில் உட்கார்ந்து எழுதச் சொன்னாள். அவனுக்காக அம்மா தன் தோழி வீட்டில் விருந்திற்குக் கூடப் போகவில்லை. இம்முறை கட்டாயம் அவன் முதலில் வர வேண்டும் என்று கூறியிருந்தாள். அவனும் முயன்றே படித்தான்.

பீட்டரின் அம்மாவும் ரகுவின் அம்மாவும் மாதர் சங்கத்தில் உறுப்பினர்கள். தோழிகளாகப் பழகினாலும் உள்ளுக்குள் போட்டிகள் அதிகம். அந்த வட்டாரப் பெண்களிடையே போட்டி மனபான்மை நிறைந்து விளங்கியது. விளையாட்டு, கம்ப்யூட்டர், படிப்பு என்று எதிலும் தங்கள் குழந்தைகளே முன்னில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அம்மா ராதிகாவிடம் மிகக் கெஞ்சினான் ரகு. வரும் தேர்வில் கட்டாயம் தான் முதலாவதாக வருவதாகவும், இந்த ஒருமுறை மன்னிக்கும்படியும் தாயாரிடம் கேட்டுக் கொண்டான்.
நிஜமாகவே அவன் முன்பைவிட நன்றாகத்தான் தெளிவுடன் எழுதி இருந்தான். பாடத்தை புரிந்து கொண்ட பக்குவம் தெரிந்தது. சிறு பிழைகளே தெரிந்தன. அதைத் திருத்தி விடலாம்.

இரவெல்லாம் கண் விழித்துப் படித்தான் ரகு. அப்படியும் காலையில் தூங்க விடவில்லை அம்மா.
"டேய் ரகு, பீட்டர் வீட்டில் விளக்கு எரிகிறது. நீ ஏன் சோம்பேறியாகத் தூங்குகிறாய்? படிப்பில் அக்கறையே இல்லை உனக்கு……"

"இல்லேம்மா! இரவே எல்லாம் முடித்துவிட்டேன். அப்புறம் ஒரு முறை புரட்டினால் போதும்."
விடவில்லை அம்மா. அப்போதே தேநீர் கலந்து கொடுத்து உட்கார்த்தி வைத்து விட்டாள்.

எதிர்பார்த்த வினாக்கள் அமைய உற்சாகத்தோடு எழுத ஆரம்பித்தான் ரகு. ஆனால் எழுத, எழுத ஒரே தளர்ச்சி, கண்கள் வலித்தன., இரவெல்லாம் தூங்கவில்லை. காலையிலும் முன்னதாக எழ வேண்டியதாயிற்று. இருந்தும் கஷ்டப்பட்டு எழுதுவதைத் தொடர்ந்தான் ரகு.

என்ன சோதனை! பயத்திலும், படபடப்பிலும் நன்றாகப் படித்த ஆங்கிலப் பாடலின் ஒரு வரி மறந்தே விட்டது. திரும்பத் திரும்பக் கூறிப் பார்த்தாலும் வரவில்லை. அதற்கு மேல் யோசித்தால் தலை வலித்தது. அம்மாவை நினைத்தாலும் பயமாக இருந்தது. அவளின் கோபமான முகம் கண்முன் வந்து நின்றதும், கொஞ்சம் யோசித்தான் கவலையுடன்.

வெட்கத்தை விட்டுச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகில் உட்கார்ந்திருந்த அருளிடம் மெதுவாகப் பாடல் வரியைக் காண்பித்துக் கேட்டான்.

பயந்து போனான் அருள். வேகமாக மறுத்துவிட்டு மறுபடி எழுத ஆரம்பித்துவிட்டான். ரகு பார்வையால் கெஞ்ச, அருள் அவன் பார்வையைத் தவிர்த்தான்.

இந்தப் பாடலின் வரி பீட்டரை உயர்த்திவிடும் போல் உள்ளதே! அருள் மிகவும் ஏழை. அதைப் பயன்படுத்தத் துணிந்தான் ரகு. தன் பையில் இருந்து பத்து ரூபாயை எடுத்துக் காட்டினான். அதிர்ந்து விட்டான் அருள். ஆனால் அதை வைத்து அம்மாவின் காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கித் தரலாமே?
அந்தப் பிஞ்சு மனம் அந்த ஆசைக்கு அடிமையாயிற்று. மெதுவாக தன் விடைத்தாளை ரகுவின் பக்கம் நகர்த்த, நன்றியுடன் புன்னகைத்து அதைப் பார்த்து எழுதிக் கொண்டான் ரகு. நிம்மதியுடன் பெருமூச்சும் விட்டான்.

இதையெல்லாம் கவனிக்காதது போல் எழுதியபடி மேற்பார்வை பார்த்த ஆசிரியர் சிவசங்கருக்கு மனம் வேதனைப்பட்டது. தன் வகுப்புப் பையன்கள் இப்படி நடந்து கொள்வதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எத்தனை நீதிக்கதைகள் சொல்லிப் புத்தி புகட்டி இருக்கிறோம்? இவர்கள் இன்னும் இப்படி நடக்கத் தூண்டுவது எது? ரகுவை எல்லோர் முன்பும் அவமானப்படுத்த விரும்பவில்லை.

ரகுவை பரீட்சைத் தாள்களைத் தன் அறையில் கொண்டு வைத்து வரும்படி சாதாரணமாகக் கூறிவிட்டுப் போய் விட்டார். ரகுவிற்கு அவரிடம் மாற்றம் எதுவும் தெரியவில்லை.

"ரகு உனக்கு எப்போது லஞ்சம் கொடுப்பதற்குக் கற்றுத் தந்தேன்?"

எதிர்பாராத வகையில் தனி அறையில் ஆசிரியர் ரகுவை உட்கார்த்தி விசாரித்ததும் திடுக்கிட்டுப் போனான் அவன். ஆனால் ஆசிரியரின் பரிவு அவனைப் பேச வைத்தது.

"எனக்கு உங்கள் அறிவுரைகள், நீதி போதனை வகுப்பு மிகவும் பிடிக்கும் சார். எனக்கு உண்மையாக நடக்கத்தான் ஆசை. ஆனால் என் அம்மா கோபப்படறாங்களே. எல்லோர் அம்மாவும் போட்டி போடறாங்க. தன் பிள்ளைதான் முதல் மார்க் வாங்கணும்கிற போட்டி. பயந்துதான் நான் தவறு செய்துட்டேன். மன்னிச்சுடுங்க சார். இனி இப்படி நடந்துக்க மாட்டேன்"

சிவசங்கர் ரகுவின் பெற்றோர்களைத் தனியே அழைத்து நிலையை விளக்க, அவர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். "உங்களுக்குள் உள்ள போட்டி எனும் தன்னலத்திற்காகக் குழந்தைகளை ஏன் பலியிடுகிறீர்கள்? அவன் வளமான எதிர்காலத்திற்கு இயன்ற அளவு நேர்மையாகப் பாடுபடுங்கள். வஞ்சத்தை மனத்தில் விதைக்காதீர்கள்."

"அவன் படிக்கா விட்டாலோ, சோம்பேறியாக இருந்தாலோ திருத்தலாம். அவனே முன்னேற விரும்பும் போது சிறு பிழைகளைப் பொறுத்து மறுபடி முயற்சிக்க ஊக்கம் தர வேண்டுமே ஒழிய போட்டியில் விடலாமா?"

"நல்லவனான ரகுவின் மனம் கூடப் பயத்தால் காப்பி அடிக்கும் கெட்ட குணத்தை நாடுகிறது. தவிர லஞ்சம் கொடுத்து இந்த வயதிலேயே இன்னொரு பிஞ்சு உள்ளத்தையும் கெடுக்கிறது."

"இந்த வயதில் செய்யும் தீய செயல்கள் வளர்ந்து பெரியவன் ஆனதும் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்."

ஆசிரியர் உரையால் ரகுவின் பெற்றோர் மனம் திருந்தினார்கள். இப்போது ரகு பயமின்றி உற்சாகத்துடன், நிம்மதியாக, போட்டி இல்லாமல் படிக்கிறான். அவன் அம்மாவும் மகளிர் மன்றத்தில் மெதுவாக இதை அறிவுறுத்தி மற்றவர்களையும் மாற்றி வருகிறாள்.

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ – நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ – நன்னெஞ்சே!

– பாரதியார்

(‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author