பெண்வீடு (4)

சாப்பிட்டு முடித்த மாப்பிள்ளை வீட்டார்களில் பெரும்பாலோர் போய்விட்டார்கள். பெண் வீட்டாரில் சாப்பிடாது இருந்தவர்கள் சாலைக்கு வந்தார்கள். அவர்கள் வேகமெடுத்து நடக்கத் துவங்கவும் மாப்பிள்ளை வீட்டார் இருவர் விரைந்து வந்து அவர்களை நெருங்கினார்கள். "எல்லோரும் எங்க போறீங்க? இருங்க.. சாப்பிட்டுப் போகலாம்." "எங்கேயும் போகல்ல. சும்மா இப்படிக் கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வாரோம்" என்றான் ஒருவன்.

‘உங்க ஊரு மலைக்காத்து ஜில்லுனு இருக்குது. அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போனா ராகத்தா இருக்கும்ல. அதான் பொடி நடையா போறோம்" என்றார் இன்னொருவர்.

மாப்பிள்ளை வீட்டு ஆள்களுக்குத் தர்மசங்கடமாயிருந்தது. "நாங்களே எதிர்பார்க்கலே. தட்டுப்பாடு உண்டாயிடுச்சி. கொஞ்சம் பொறுத்தா நல்லது. எப்படியும் சாப்பாடு தயாராயிடும்."

"இப்ப எதுக்குச் சிரமப்படுறீங்க? நாங்க இப்படி ஏதாவது கிடைச்சிடுச்சின்னா வாயில் போட்டுக்குறோம். நீங்க ஒண்ணும் அதுக்காக அலட்டிக்க வேண்டாம்"

பதில் சொல்லத் தெரியாதவர் மாப்பிள்ளையின் வாப்பாவைத் தேடி ஓடினார். அவரோ ரொம்ப நேரம் காணக் கிடைக்காமல் இருந்தார். அவர்கள் வேனை நெருங்கிய சமயத்தில் தமீமுல் அன்சாரி சம்சுதீனை நெருங்கி, "நாங்க கிளம்புறோம். பொண்ணையும் மாப்பிள்ளையும் எங்க கூட அனுப்பி வையிங்க" என்றார்.

அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. "என்ன அதுக்குள்ளேயா? இன்னும் கொஞ்ச பேரு சாப்பிடவே இல்லியே"?

"பரவாயில்லே. நாங்க போற வழியில பாத்துக்கிடறோம்"

"கல்யாண வீட்டுல இப்படி நடக்குறது சகஜம்தான். இருந்தாலும் எங்க கைய மீறி நெலமை போயிடுச்சி. அதனால் இப்ப அம்பாசமுத்திரத்துக்கு போன் போட்டிருக்கோம். அங்கேயிருந்து சாப்பாடு வந்துகிட்டு இருக்கு. பொறுத்தது பொறுத்தீங்க. இன்னும் கொஞ்சநேரம்தான்" அவரையறியாமல் ஒரு படபடப்பு.

இந்த சமயத்தில் மாப்பிள்ளை வந்தார். "நீங்க எல்லாம் உள்ளே வாங்க. சாப்புடாம யாரும் போவக்கூடாது" என்றபடி தன்னுடைய இரண்டு மைத்துனன்களையும் இருபுறமுமாக வளைத்துக் கொண்டார்.

யாரும் மறுத்துப் பேசாமல் உள்ளே போனார்கள். ஒரு மௌன ஊர்வலம் போல இருந்தது அது. மீண்டும் அமைதி. அமைதி குலைவுறாமல் மீண்டும் தண்ணீர்; மீண்டும் இலை; யாரும் தீண்டவில்லை. பெண்கள், குழந்தைகள், கொஞ்சமாய் சாப்பிட்டவர்கள் என சரிபாதிப்பேர் மூன்று வேன்களில் ஏறிப் புறப்பட்டு விட்டார்கள்.

மேலும் ஒரு கால் மணி நேரம் போகவிட்டுத்தான் சாப்பாடு வந்தது. மாப்பிள்ளையின் வாப்பா வந்து சொன்னார். "அம்பாசமுத்திரத்துல இருந்து சைவ சாப்பாடுதான் வந்திருக்கு. அதையே பிரியாணின்னு நெனச்சு சாப்பிட்டிருங்க"

இதற்கு இப்படி மீண்டும் வந்து உட்காராமலேயே இருந்திருக்கலாம் என்றே பலரும் எண்ணினார்கள்.

எனினும் பசி. இலைகளை விரித்துத் தண்ணீரைத் தெளித்தார்கள். சாதம், சாம்பார், பீன்ஸ் பொரியல், கத்தரிக்காய், வாழைக்காய் இணைந்த கூட்டு, அப்பளம், ஊறுகாய். அவசரம் சமையைலில் தன் முத்திரையைப் பதித்திருந்தது. அரைகுறை வேக்காடு, சாதம் குழைவு, சாம்பார் தண்ணீராக! Fast food!

சாப்பிட்டதில் பாதி மூடப்பட்டது. ஒவ்வொரு இலையும் பொதிந்து வைக்கப்பட்டது போல இருந்தது.

எல்லோரும் சிரித்த முகத்துடன்தான் இருந்தார்கள். பக்கத்திலேயே மாப்பிள்ளை வீடு இருந்தது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் பொடி நடையாகப் போனார்கள். மலைக்காற்றுக்கென வஞ்சகம்? தாராளமாகப் புகுந்து புகுந்து சென்றது. மாப்பிள்ளையின் வீட்டிலிருந்து சில சிறிய சம்பிரதாயங்களை முடித்து, மணமக்களை அனுப்பி வைத்தார்கள். கடைசியாக எல்லோரிடமும் வழி சொல்லிக் கொள்ளும் பொருட்டு பெண்ணின் தந்தை ஹாஜாகனி தன் சம்பந்தி சம்சுதீனிடம் நெருங்கிச் சென்றார். உடனே சம்சுதீன் சொன்னார். "வர்ற வெள்ளிக்கிழமை அங்க வந்து நாங்க மாப்பிள்ளையையும் பொண்ணையும் எங்க வீட்டுக்கு கூட்டியாறோம். நாங்களும் மறுசாப்பாட்டுக்கு நாப்பது அம்பது பேரு வரைக்கும் வருவோம். எங்க ஊரு நிஜாம் பண்ணையாரு வீட்டுக் கல்யாணத்துல அவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு மறுவிருந்து கொடுக்கும்போது மொத்தம் இருபத்தோரு ஐட்டம் சாப்பாடு போட்டாரு. பாயாசத்துலேயே மூணு வகை இருந்துச்சு. பழவகையில நாலு, சிக்கன் சிக்ஸ்டி பைவ், பொறிச்ச முட்டை, அவிச்ச முட்டை, ஐஸ்கிரீம் இப்படின்னு மொத்தம் இருபத்தோரு ஐட்டம். போனவங்க எல்லாம் வயிறார சாப்பிட்டு வந்தோம். அதக் கொஞ்சம் மனசுல வச்சுக்கோங்க. அப்புறம் இன்னைக்கு நீங்கள்லாம் வந்திட்டுப் போனதுக்கு ரொம்ப சந்தோஷம்."

இறுகிப் போயிருந்த முகத்தில் இந்த இறுக்கமும், ஏறிக் கொள்ள முண்டியடித்தது. தொண்டைக் குழியில் ஏறியிருந்த கரகரப்பு குரலின் மூலம் இறுகிப் பிசைந்து ‘சரி’ என்று சொல்லி வெளியேற வைத்தது. கூட நின்ற மச்சானின் முகத்தில் ஈயாடவில்லை. மாப்பிள்ளையும் பெண்ணும் ஏறிக்கொள்ள தனியான் சொகுசு வேன் ஒன்று நின்றது. யாரும் அதில் ஏற ஆர்வம் காட்டவில்லை. சில பெரிய மனிதர்களையும் முக்கியமானவர்களையும் அதில் ஏறச் சொல்லிக் கட்டாயப்படுத்தி புறப்பட்டார்கள். பின்னால் நின்ற வேனில் மற்றவர்கள் நெருக்கியடித்து ஏற, வீங்கிய வேன் மெதுவாக ஊர்ந்தது. ஊர் எல்லை முடிந்து ஆளரவமற்ற சாலைக்கு வேன் வந்ததும் பலரும் திடும் திடும் என்று குரலுயர்த்தி வசைபாடத் தொடங்கினார்கள். கூடவே, இந்த ஒருநாள் விருந்துபச்சாரத்தின் அனுபவக் கீற்றுகள் சிலரை ஞானவான்களின் இடத்திற்கு நெட்டித் தள்ளியிருந்தது. அதில் ஒரு ஞானவானின் குரல் செவியேற்கப்படுவதற்கு வாய்ப்பான சூழ்நிலை இல்லையென்றபொதும், அவர் பின்வாங்காமல் சொன்னார். "கூச்சலை நிறுத்துங்கப்பா. நாம் பொறுத்துக்கத்தான் வேண்டும். வேற வழியில்ல. நம்ம பொண்ண அங்க குடுத்தாச்சி. அதனால் நாம பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கணும். நாளைக்கு இங்க உள்ள மத்தவங்க வீட்டுலேயும் இப்படித்தான் நடக்கப்போவுது."

எதிர்பாராத விதமாகக் கூச்சல் நின்று மௌனம் கூடியது. எல்லாப் பார்வைகளும் துண்டிக்கப்பட்டு தனித்தனியாய் அலையலாயின.

(முடிந்தது)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author