பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் (1.2)

புலியைத் தேடிப் புறப்பட்டவர்! (2)

புலியைத் தேடிப் புறப்பட்டுக் கிலி பிடித்து ஓடி வந்தானே, அதே சிறுவன் குதிரை ஓட்டுவதில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான். ஐந்தாவது வயதிலிருந்தே அந்தப் பழக்கம் அவனுக்கு இருந்தது. அவனுடைய அப்பா, அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத்திருந்தார். தினந்தோறும் அச்சிறுவன் அந்தக் குதிரைமீது ஏறி ஊரைச் சுற்றி வருவான்.

அன்று பரத்பூர் குதிரைப் பந்தய மைதானத்தில் ஏராளமான கூட்டம் கூடியது. பந்தயக் குதிரைகள் புறப்படுவதற்குத் தயாராக நின்றன. அதே சமயம், அந்தச் சிறுவன் தன்னுடைய குதிரை மீதேறி கம்பீரமாக அங்கு வந்து சேர்ந்தான்.

அவனைப் பார்த்ததும், அங்கு நின்றவர்களில் சிலர், "தம்பி, நீயும் பந்தயத்திலே கலந்து கொள்ளப் போகிறாயா?… உம், கலந்து கொள். உனக்குத்தான் முதல் பரிசு !" என்று வேடிக்கையாகக் கூறினர்.

உடனே, அந்தப் பையனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. தன்னுடைய குதிரையைத் தட்டி விட்டான். நாலுகால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்த பந்தயக் குதிரைகளின் பின்னால், அவனுடைய குதிரையும் வெகு வேகமாக ஓடியது.

ஆனால், அந்தக் குதிரையின் சேணத்தில் கால் வைத்துக் கொள்வதற்கான படிகள் (stirrups) இல்லை. ஆனாலும், அந்தப் பையன் கீழே விழாமல் தன் முழங்கால்களால் சேணத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அதனால், குதிரை தாவித் தாவிச் செல்லும்போது, முழங்கால்கள் சேணத்தில் உராய்ந்தன; இரத்தம் வழிய ஆரம்பித்தது. ஆயினும், அவன் சளைக்கவில்லை. விடாப் பிடியாகக் குதிரையை ஓட்டி, பந்தயத்தை முடித்தே தீர்த்தான். பந்தயத்தில் அவன் வெற்றி பெறாவிட்டாலும் அவனுடைய விடா முயற்சியைக் கண்டு எல்லோரும் வியந்தனர்.

‘எவ்வளவு துன்பங்கள் இடையிலே வந்தாலும் எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துவிட வேண்டும்’ என்ற எண்ணம் அவனுக்கு அப்போதே இருந்திருக்கிறது!

* * *

குதிரைப் பந்தயத்தில் கூட்டத்தைத் திகைக்க வைத்தானே, அதே பையன் அடிக்கடி அப்பாவையும் திகைக்க வைப்பது வழக்கம். ஆம், கேள்வி மேல் கேள்வி கேட்டு அப்பாவைத் திகைக்க வைத்து விடுவான்!

தினந்தோறும், இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு அப்பாவின் அருகிலே போய் அவன் உட்கார்ந்து கொள்வான்; ‘அது ஏன் அப்படி இருக்கிறது? இது ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்றெல்லாம் கேள்வி கேட்பான். அவர் அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் கூறுவார். சில சமயங்களில், அவன் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் கூற முடிவதில்லை. அப்போது அவர் திகைப்பார்.

இரவில் அப்பா படுத்த பிறகு கூட அவன் அவரைத் தூங்கவிட மாட்டான். பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருப்பான்.

இப்படி, அவன் அடிக்கடி கேள்வி கேட்பது அவனுடைய பாட்டிக்குப் (அப்பாவைப் பெற்றவள்) பிடிக்கவில்லை. “டேய், ஏன் இப்படி அவனைத் தொந்தரவு செய்கிறாய்? அவனைத் தூங்கவிட மாட்டாய் போலிருக்கிறதே!” என்று கோபித்துக் கொள்ளுவாள். தன் மகனுடைய தூக்கம் கெட்டுப் போகுமே என்று அவள் கவலைப்பட்டாள்!

ஒருநாள், அந்தப் பையன் வெகு நேரம் வரை அப்பாவைத் தூங்கவிடாமல், கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தான். பாட்டிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே, ஒரு பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு வந்து, "டேய்! இப்போது பேசாமல் போய்ப் படுக்கிறாயா அல்லது உதை வேண்டுமா?" என்று மிரட்டினாள்.

உடனே அவன் பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டான். அத்துடன் கேள்வி கேட்கும் வழக்கத்தையும் விட்டுவிட்டான் என்று நினைத்து விடாதீர்கள்! மறுநாள் விடிந்ததும், "அப்பா!" என்று கூவிக்கொண்டே அப்பாவின் அருகிலே சென்றான். எதற்கு? ஏதோ ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தான்!

அந்த வயதிலேயே ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள அவன் ஆசைப்பட்டான்!

தந்தையைக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் திணற வைத்தானே, அதே சிறுவன் பல ஆண்டுகளுக்குப் பின் வளர்ந்து விட்டான்; பி.ஏ படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள், அயலூரிலுள்ள ஒரு ஜமீன்தார் வீட்டுக்கு அவன் சென்றிருந்தான். அந்த ஜமீன்தார் அவனுடைய குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்.

ஜமீன்தார் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவனுக்குக் காய்ச்சல் கண்டது. அந்தக் காய்ச்சலுடன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அவன் நினைத்தான். பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால், அன்றே செல்ல வேண்டும் என்று ஜமீன்தாரிடம் தெரிவித்தான்.

ஜமீன்தார் சிறிது தயங்கினார். பிறகு, "தம்பி, நீ இப்போதே புறப்பட வேண்டுமென்கிறாய்… சரி, புகைவண்டி நிலையம் வரையிலாவது உன்னைப் பல்லக்கில் கொண்டு போய்விட வேண்டாமா? ஆனால், பல்லக்கு வேறு ஓரிடத்திற்குப் போயிருக்கிறதே! அது எப்போது வருமோ?…" என்றார்.

"அதனால் கவலையில்லை. உங்களிடம் குதிரை இருக்குமே, அதைக் கொடுங்கள்! அதில் ஏறிப் புகைவண்டி நிலையத்துக்குச் செல்கிறேன்."

"இப்போது ஒரே ஒரு குதிரைதான் இருக்கிறது. அதுவும் முரட்டுக் குதிரை. தன்மீது ஏறுகிறவர்களைக் கீழே தள்ளி மிதித்து விடும். பொல்லாதது!"

"அப்படியா! சரி, அது எங்கே நிற்கிறது? நான் பார்க்கலாமா?"

ஜமீன்தார் அவனை அழைத்துக் கொண்டு குதிரை நிற்கும் இடத்திற்குச் சென்றார்.அங்கே நின்ற முரட்டுக் குதிரையை அவன் பார்த்தான். பிறகு, மெல்ல அதன் அருகே சென்று அதைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான்.

உடனே, அந்த முரட்டுக் குதிரை முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக்கொண்டு அவனை மிதிக்க வந்தது; பற்களையும் காட்டிப் பயமுறுத்தியது. ஆனால், அவன் சிறிதும் அஞ்சவில்லை. சற்றுப் பின் வாங்கினான். பிறகு, திடீரென்று தாவி அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

குதிரைக்கு உடனே கோபம் வந்துவிட்டது. அந்த இடத்தை விட்டு நாலுகால் பாய்ச்சலில் காற்றாய்ப் பறந்தது.

அவன் அதை அடக்க முயன்றான். முதலில் முடியவில்லை. அதற்காக அவன் மனம் கலங்கவில்லை. ‘ஜமீன்தாரிடம் விடைபெற முடியாமல் போய் விட்டதே!’ என்றுதான் வருந்தினான்.

குதிரை வேகமாக ஓடும்போது, எதிரே ஓர் ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றையும் சாமர்த்தியமாகக் கடந்து எப்படியோ புகைவண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டான்! அவ்விடத்தை நெருங்கியதும் குதிரையிலிருந்து கீழே குதித்தான். அன்றே புகை வண்டியிலேறி ஊர் வந்து சேர்ந்தான்.

வீட்டை அடைந்ததும், காய்ச்சல் அதிகமாகிவிட்டது. மருந்து சாப்பிட்டும், விட்டு விட்டுக் காய்ச்சல் வந்தது. அத்துடனே அவன் பி.ஏ பரீட்சை எழுதினான்; அதில் வெற்றியும் பெற்றான்!
சிறு வயதிலேயே அவன் இவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தான் என்றால் பெரியவனானதும் அவனைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மிக மிகக் கெட்டிக்காரனாக, உலகம் போற்றும் விஞ்ஞானியாகவே அவன் விளங்கினான்!

‘செடி கொடிகளுக்கு உயிரில்லை; உணர்ச்சியில்லை. ஒரு செடியை நாம் ஊசியால் குத்தினால் அது வருந்தாது; கத்தியால் வெட்டினால் அது துடிக்காது’ என்றுதான் உலகம் முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தது.

ஜகதீஷ் சந்திரபோஸ்

 
ஆனால், ‘செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிருண்டு; உணர்ச்சி உண்டு; இன்ப, துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சக்தி உண்டு’ என்னும் உண்மையை உலகம் அறிய ஆராய்ச்சி மூலம் எடுத்துக்காட்டியவர் யார் தெரியுமா? ஜகதீஷ் சந்திரபோஸ் என்ற நம் இந்திய விஞ்ஞானிதான்!

அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றித்தான் நாம் இவ்வளவு நேரமாகப் படித்தோம்!

–நிகழ்ச்சிகள் தொடரும்

About The Author