பேரழகி கிளியோபாட்ரா – பகுதி – 6

பாம்பேயின் தலையைத் துண்டித்துத் தனக்குப் பரிசாகக் கொண்டு வந்த டாலமி மீது ஜூலியஸ் சீஸருக்கு கோபம் அதிகமானது.

"இவனிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது" என்று நினைத்தாரோ என்னவோ, "எகிப்து இனி என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும்…" என்று உத்தரவிட்டுவிட்டு அரியணையில் இருந்து கீழே இறங்கி வெளியேறினார்.

டாலமிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. "அமைச்சர்கள் பேச்சைக் கேட்டு கிளியோபாட்ராவை ஏற்கெனவே துரத்திவிட்டோம். இப்போது இந்த சீஸர் நம்மை துரத்திவிடுவார் போலிருக்கிறதே…" என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அன்று இரவு அரண்மனையின் சொகுசு படுக்கையறையிலும் அவனுக்குத் தூக்கம் வர மறுத்தது. நாளை என்ன நடக்குமோ என்ற பயம் அதிகமாகியது.

மறுநாள் காலை விடிந்தது.

டாலமி எதிர்பார்த்தது போலவே நடந்தது.

ஜூலியஸ் சீஸரின் படைகள் எகிப்து பேரரசின் தலைநகரான அலெக்ஸாண்டிரியாவை முற்றுகையிட்டன. நகர் வீதிகளில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கியதோடு கண்ணில்பட்டவர்களை எல்லாம் கொலை செய்தனர். இதோடு அவர்கள் நின்றுவிடவில்லை; பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்குள்ளும் புகுந்தனர். பொருட்களோடு, பெண்களின் கற்பையும் சூறையாடினர்.

எங்குப் பார்த்தாலும் மக்களின் அபயக்குரல். பொதுமக்களில் பலர் தற்காத்துக் கொள்ள மறைவான இடங்களில் பதுங்கினர். சிலர் பாதுகாப்பான இடம் தேடி கடற்கரையோரம் ஓடினர்.

டாலமிக்கும் பயம் அதிகமாகியது. தனது உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சினான். தலைமை அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தி சீஸரின் ஆட்களைக் கொல்ல தனது படைவீரர்களை அனுப்பினான்.

ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பலம் வாய்ந்த ஜூலியஸ் சீஸரின் படை வெற்றிபெற்றது. டாலமியின் படைவீரர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் போர்க் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த டாலமி பதறிப்போனான். தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பக்கத்து நாடான எலூசியத்திற்கு தப்பி ஓடினான். அலெக்ஸாண்டிரியா முழுவதும் சீஸரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கூடவே டாலமியின் அரண்மனையும்தான்!

தன்னைப் புதிய எகிப்திய பேரரசராக அறிவித்தார் ஜூலியஸ் சீஸர். ஆணைகளையும் பிறப்பிக்க ஆரம்பித்தார்.

இப்போது – கிளியோபாட்ரா ஒரு பக்கம் தலைமறைவு. 13-ம் டாலமி இன்னொரு பக்கம் தலைமறைவு.

எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்வது என்று யோசித்த இருவரும், ஜூலியஸ் சீஸரிடம் இருந்து எகிப்தை கைப்பற்ற திட்டம் தீட்டினர். சீஸரின் படையை நேருக்கு நேராக எதிர்த்து போரிட படை பலம் தங்களிடம் இல்லாததால், அவர்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

டாலமி சிறுவன் என்பதால், அவனால் ராஜதந்திரமான முடிவுகளையும் எடுக்க இயலவில்லை. வழக்கம்போல் தலைமை அமைச்சர்களிடமே ஆலோசனை கேட்டான்.

"மன்னா! இப்போது நம்மிடம் போதிய படைபலம் இல்லை. அதனால், யோசித்துதான் முடிவு எடுக்க வேண்டும்" .

"யோசித்துதான் முடிவெடுக்க வேண்டுமென்றால், என்னை இப்படியே இருக்கச் சொல்கிறீர்களா?"

"இல்லை மன்னா! இப்போதைய நிலவரப்படி சீஸரிடம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியே இல்லை".

"அப்படியென்றால், என்னை அவரது காலில் போய் விழச் சொல்கிறீர்களா?"

"மன்னா! நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. அவருக்கு ஆதரவாகப் போய்விடுவோமே என்றுதான் சொல்கிறோம்…" – டாலமியிடம் இப்படி யோசனை கூறினார்கள் தலைமை அமைச்சர்கள்.

வேறு வழி தெரியாத அவனும், "சரி…" என்று தலையை ஆட்டி வைத்தான்.

ஆட்சிக்காக தன்மானத்தைக் கூட இழக்கத் தயார் ஆனான். ஆனால், கிளியோபாட்ராவோ வேறுவிதமாக யோசித்தாள்.

தனது அழகால், ஜூலியஸ் சீஸரை என்ன… எப்பேற்பட்ட பேரரசனையும் வீழ்த்திவிட முடியும் என்று உறுதியாக நம்பினாள் அவள்.

அதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தாள்

(இன்னும் வருவாள்…)

About The Author