மத்தாப்புக் கொளுத்தும் மனசு

தீபாவளிக்கு முந்தின நாள் பாரிஸுக்குப் பயணமானேன். ஃப்ரான்ஸிற்கும் பாண்டிச்சேரிக்கும் தலைநகரமான பாரிஸ் அல்ல; நம்ம மெட்ராஸின் தலைப்பிரதேசத்திலிருக்கிற பாரிஸ் கார்னர்.

"ஒங்க நான்-ஹிண்டு ஃப்ரண்ஸ்க்கெல்லாம் டிஸ்ட்ரிபியூட் பண்றதுன்னா, வீட்ல செய்யற பலகாரம் பத்தாதுங்க. ஒங்களுக்குப் புடிச்ச ஸ்வீட் கடையில போய் ஒங்களுக்குப் புடிச்ச ஸ்வீட் வெரய்ட்டி ஒரு மூணு கிலோ வாங்கிட்டு வந்துருங்க" என்று என்னுடைய சரோஜினி ஆலோசனை சொன்னதன் பேரில், பாரிஸில் கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலிருக்கிற பிரபலமான மிட்டாய்க் கடைக்குப் போனேன்.

போனால், கடையையொட்டிக் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கு அநியாயத்துக்கு ஒரு க்யூ, என்னமோ தர்மத்துக்கு ஸ்வீட் கிடைக்கிற மாதிரி!

மழைத் தூறல் போடுகிறது.

வரிசையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க போலீஸ்காரர்கள் அவ்வப்போது லாட்டியால் தட்டுகிறார்கள்.
ஸ்வீட் எங்கே வாங்கினாலும் ஒரே மாதிரி இனிப்புத்தானே, வாலிப வயோதிக அன்பர்களே, மழையில் ஊறிக் கொண்டு க்யூவில் நின்று, போலீஸ்காரனிடம் செல்ல அடியும் வாங்கிக்கொண்டு, இவ்வளவு தொலைவு வந்து காசு கொடுத்து ஸ்வீட் வாங்கித் தின்னாவிட்டால்தான் என்ன என்று அந்தப் பரிதாப ஜீவன்களைப் பார்த்து அனுதாபப்பட்டுவிட்டுத் திரும்ப அண்ணா நகருக்கே வந்து ஏஸி கடையொன்றில் ஸ்வீட் வாங்கி என் சரோஜினியிடம் சமர்ப்பித்து விட்டுச் சொன்னேன்,

"சரோ, போன மாசம் அந்த மூணாம் நம்பர்க்குக் குடி வந்தாங்களே ஒரு முஸ்லிம் ஃபேமிலி, அவங்களுக்குக் காலைல தீபாவளிப் பலகாரம் குடுத்தணுப்பணும், மறந்துராத."

"அவங்க யார்ன்னே நமக்குத் தெரியாதேங்க?" என்று ஆட்சேபித்தாள்.
"தெரிஞ்சிக்குவோம்"என்றேன்.
"நமக்கு அறிமுகமே இல்லியேங்க?"
"அறிமுகப்படுத்திக்குவோம்."
"அவங்க முஸ்லிம்ஸ்ங்க. ஒரு மாசத்துக்குப் பகல்ல எதுவும் சாப்புட மாட்டாங்க. அவங்களுக்கு இது ரம்ஜான் மாசம்."

"அதுக்குத்தான் மண்டு சொல்றேன்" என்று அவளுடைய மண்டையில் ஒரு காதல் குட்டு வைத்தேன்.
"சாயங்காலம் விரதம் முடிச்சிட்டு சாப்புடுவாங்க. ரம்ஜான் மாசம் முடியப்போகுது. இன்னும் மூணு நாள்ல ரம்ஜான் பெருநாள் வருது. தீபாவளிக்கி நாம பலகாரம் குடுத்து விட்டோம்னா ரம்ஜானுக்கு அங்கயிருந்து பிரியாணி வரும். முஸ்லிம் வீட்டு பிரியாணி டேஸ்ட் பண்ணியிருக்கியா நீ? ஹா!"

"ஓஹோ, கத அப்படிப் போகுதா!" என்று சரோ என் காதல் குட்டைத் திருப்பித் தந்தாள். காலையில் ஸ்பெஷல் தீபாவளிக் குளியலொன்று போட்டுவிட்டு, ஹாலில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தபோது, கிச்சனில் மாலாவுக்கும் சரோஜினிக்குமிடையே நடந்து கொண்டிருந்த உரையாடல் காதில் விழுந்தது.

"அண்ணி, அண்ணி, அந்த மூணாம் நம்பர் வீட்டுக்குப் பலகாரம் நான் போய்க் குடுத்துட்டு வர்றேன் அண்ணி."
"எந்த மூணாம் நம்பர் மாலா?"
"அதான், அந்த முஸ்லிம் வீடு. நீங்களும் அண்ணாவும் ராத்திரி பேசிட்டிருந்தீங்களே, பிரியாணி, சிக்கன் ஃப்ரை, அது இதுன்னு…" "நீ ஒட்டுக் கேட்டுட்டிருந்தியாக்கும்?"
"ச்சீ, ஒட்டெல்லாம் கேக்கல, சும்மா வாசம் புடிச்சேன். அந்த வீட்டுக்குப் பலகாரம் நா கொண்டு போறேன் அண்ணி, ப்ளீஸ்."
"அந்த வீட்டுக்கெல்லாம் நீ போக வேண்டாம், போகக் கூடாது."
"ஐயோ, ஏண்ணி?"
"வயசுப் பையன் ஒர்த்தன் இருக்கான் அந்த வீட்ல."
"யாரு, ஒயரமா செக்கச் செவேல்னு இருப்பானே, அந்தப் பையனா அண்ணி?"
"ஆமா. அந்தப் பையன் தான்."
"நெறைய்ய தலைமுடி, எண்ணை தேய்க்காம ஸ்டைலாக் கலச்சு விட்டிருப்பானே, அந்தப் பையனா அண்ணி?"
"ஆமா."
"ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி கண்ணு ரெண்டும் பளபளன்னு இருக்குமே, அந்தப் பையனா?"
"ம்."
"வித்யாசமா, வலது கையில வாச்சக் கட்டிக்கிட்டு அசத்துவானே, அந்தப் பையனா?"
"ம்? அவனோட வலது கையையும் நா பாக்கல. வாச்சையும் பாக்கல. நீ போய் வேற வேல இருந்தா பார்."
"ஐயோ, இப்படிச் சொன்னா எப்படி அண்ணி, நா எதுக்குச் சொல்றேன்னா…."
"சொல்லு."
"அந்தப் பையன், ஐ மீன் அந்தப் பையர் எங்க அஃபீஸ்ல தான ஒர்க் பண்றார்."
"பண்ணிட்டுப் போறார். அதுக்கென்ன?"
"வந்து, அவர் என்னப் புடிச்சிருக்குன்னு சொன்னார் அண்ணி."
"ஓஹோ, கத அப்படிப் போகுதா!"
"அண்ணாட்ட நீங்கதான் சொல்லணும் அண்ணி. ப்ளீஸ்ண்ணி."
"ம். பாக்கலாம். இப்ப நீ போய்ப் பலகாரம் குடுத்துட்டு வா. மத்த விஷயங்களப் பத்தி யோசிப்போம்."
"எப்ப யோசிப்பீங்களாம்?"
"ராத்திரி யோசிப்போம்"
"மை ஸ்வீட் அண்ணீ. தாங்க் யூ அண்ணீ!"

சாயங்காலம் சிநேகிதர்களை விஸிட் அடித்துவிட்டு நான் வீடு திரும்புகிறபோது, மூணாம் நம்பர் வாசலில் பையன் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தான்.

"என்னைப் பார்த்ததும் அடையாளங் கண்டு கொண்டு, ஹாப்பி தீவாளி சார்" என்று வாழ்த்தினான்.
"என்ன தம்பி, ஒங்களுக்கும் தீபாவளியா?" என்று நான் சிரித்ததற்கு, "ஏன் சார் எங்களுக்கு என்ன?" என்று பதிலுக்கு சிரித்தான்.
"இல்ல, தீபாவளி இந்துப் பண்டிகையாச்சேன்னு கேட்டேன்."
"நோ சார். இந்துப் பண்டிகையில்ல. தீபாவளி இந்தியப் பண்டிகை."
"அந்த நெத்தியடி எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு."

ராத்திரி உணவுக்குப் பின்னால், காலையில் அரியர்ஸாய்ப் போன ஹிண்டு தலையங்கங்களை ஆறுதலாய் மேய்ந்து கொண்டிருந்தபோது, மெல்ல சமீபித்து சரோஜினி தொண்டையைச் செருமினாள். மறைவாய் மாலா.

"சப்ஜெக்ட் என்னவென்று எனக்குத் தெரிந்திருந்தபடியால், பேப்பரிலிருந்து பார்வையை விலக்காமலேயே, இன்னா மேட்டர் மேடம்?" என்றேன்.
"வந்து…. மாலாவுக்கு வயசாயிட்டே போகுது."
"ஒனக்குந்தான் வயசு ஆய்ட்டே போகுது."
"எனக்கு ஆனா ஆய்ட்டுப் போகுது. எனக்குத்தான் கல்யாணம் ஆயிருச்சே!"
"கல்யாணம் ஆய்ட்டாப் போதுமா? அதுக்கப்புறம் வயித்துல இந்த புழு பூச்சியெல்லாம் வக்கிறதுன்னு சொல்லுவாங்களே, அதெல்லாம் ஒண்ணையுங் காணோமே…"
"ஷ்ஷ்… மாலா ஒளிஞ்சி நின்னு பாத்துட்டிருக்கா, நீங்க ட்ராக்க மாத்தாதீங்க. நா சொல்ல வந்த விஷயம் வேற."
"இன்னா விஷயம் அது, சொல்லு" என்று நான் தலை நிமிர்ந்தேன்.
"மாலாவுக்கு வரன் பாக்க வேண்டாமா?" என்று என்னை நோட்டம் பார்த்தாள்.
"பாக்கணும். அவ பாக்கலைன்னா நாம தான் பாக்கணும்."
"வந்துங்க… அடுத்த தீபாவளி நம்ம மாலாவுக்குத் தலை தீபாவளியா இருந்தா எப்படியிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன்."
"யோசிச்சுப் பாத்தேன். தலை தீபாவளிக்குப் பின்னாலேயே இன்னொண்ணும் வரும்னு தோணிச்சு."
"இன்னொண்ணு?"
ஹிண்டுவை மடித்து வைத்துவிட்டு நான் சொன்னேன்: "தலை ரம்ஜான்."

என்னுடைய நெத்தியடி சரோஜினிக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு என்பது அவளுடைய விழிகள் அகலமாய் விரிந்ததில் தெரிந்தது. மறைவிடத்திலிருந்த உருவம் முகத்தை மெல்ல வெளியே காட்டியது.
சஸ்பென்ஸை சட்டுபுட்டென்று ஒரு முடிவுக்குக் கொண்டு வர நான் தொடர்ந்து பேசினேன்.

"அந்த முஸ்லிம் பையன நா மீட் பண்ணேன் சரோ. எனக்கு ஓக்கே. அவங்க அப்பா அம்மாட்ட போய்ப் பேசறேன்."

மறைந்திருந்த மாலா புளகாங்கிதத்தோடு வெளிப்பட்டு, என்னை நோக்கி ஓட்டமாய் ஓடி வந்து ‘அண்ணா’ என்று கண்ணீர் பொங்க சினிமாத் தங்கைகள் மாதிரிக் கட்டிக் கொள்வாள் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

என்னைப்பற்றி அக்கறையே படாமல் அண்ணியும் நாத்தனாரும் உணர்ச்சிபூர்வமாய் ஒருத்தரையொருத்தர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

கதை எப்படிப் போகுது பாத்தீங்களா!

(க்ருஹஷோபா, நவம்பர் 2004)

About The Author

1 Comment

Comments are closed.