மனிதரில் எத்தனை நிறங்கள்! (58)

"There is only one success, to be able to spend your life in your own way."
– Christopher Morley

திடீர் திடீர் என்று முகம் மாறும் மகளை சந்திரசேகரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பெரியக்கா இங்கு இருந்திருந்தால் சுலபமாகக் காரணத்தை சொல்லி இருப்பாள் என்று அவருக்குத் தோன்றியது. எல்லாம் டாக்டரிடம் போய் வந்தால் சரியாகும் என்று அவர் நினைத்தார். அவள் ஆழ்மனதில் என்ன பதிந்திருக்கிறதோ அவருக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அது கனவில் தான் அவளைப் பாதிக்கின்றது என்றால் விழித்திருக்கையிலும் இப்படி ஏன் பாதிக்கின்றது என்பது அவருக்குப் புரியவில்லை.

மகளை மிகவும் கனிவாகப் பார்த்துச் சொன்னர். "என்ன ஆர்த்தி இப்படி அடிக்கடி உனக்கு முகம் வெளுத்துப் போகுது? உன்னை எதும்மா இப்படி பயமுறுத்துது?"

ஆர்த்தி என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். அம்மா கொலையில் எனக்கு உங்கள் மேல் கூட சந்தேகமாயிருக்கிறது என்று அவள் எப்படிச் சொல்வாள்?

"எனக்குத் தெரியலைப்பா"

மகளின் அந்த பதில் அவர் மனதை என்னவோ செய்தது. அவள் அருகில் அமர்ந்து அவள் தோளைத் தடவியபடி சொன்னார். "இந்த விஷயத்தில் நீயும் என்னை மாதிரி தான் போல இருக்கு. நானும் சின்னதில் எது எதுக்கோ பயந்துப்பேன். பெரியக்கா வீட்டில் இல்லைன்னா அவ வர்ற வரைக்கும் ஒரு இனம் புரியாத பயம் மனசில் இருந்துகிட்டே இருக்கும். அவள் வந்த பிறகு பயம் சுத்தமா போயிடும். வெளிச்சம் வந்தா இருட்டு காணாம போற மாதிரி…."

"நீங்க எதுக்குப்பா பயந்தீங்க?"

சந்திரசேகர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப் பிரியப்படாதது போல் தோன்றியது. யோசித்து விட்டுப் பொதுவாகச் சொன்னார். "எனக்கு சொல்லத் தெரியலை…… சின்னக்கா என்னை விடக் கொஞ்சம் தைரியசாலி. ஆனா பெரியக்காவுக்கு பயம்கிறதே கிடையாது. நான் அவள் மாதிரி ஒருத்தி எனக்கு மகளாய் பிறக்கணும்னு ஆசைப்பட்டேன். உங்கம்மா அவங்கப்பா மாதிரி ஒரு மகன் பிறக்கணும்னு ஆசைப்பட்டாள். அந்த ஆள் கிட்ட அப்படி என்ன இருக்குன்னு அவள் அப்படி ஆசைப்பட்டாள்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் விளங்கலை.."

தாத்தாவை அப்படிக் குறைவாக அவர் சொன்னதில் அவளுக்கு லேசாக வருத்தம் ஏற்பட்டது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாதிருக்க முயற்சித்து அவரிடம் கேட்டாள். "நான் அத்தை மாதிரி தைரியசாலி இல்லைன்னு உங்களுக்கு ஏமாற்றமா இருக்காப்பா?"

சந்திரசேகருக்கு மகள் மனதைப் புண்படுத்தி விட்டோமோ என்று சந்தேகம் ஏற்பட வேகமாக மறுத்தார். "சேச்சே அப்படியெல்லாம் இல்லை ஆர்த்தி… அக்கா சொல்றாள் நீ அப்படியொன்னும் பயந்த சுபாவக்காரி இல்லையாம். இயல்பாவே நீ மென்மையானவள்னாலும் தைரியசாலின்னு சொல்றாள். மனுஷங்களை கணிக்கிறதில் அக்காவை மிஞ்ச ஆளில்லை. பின்னே நீ எப்படி இருந்தாலும் எனக்கு வருத்தமில்லை….."

தன்னைப் போய் சிவகாமி தைரியசாலி என்று எப்படிச் சொன்னாள் என்று ஆர்த்திக்குத் தெரியவில்லை. அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கையில் பழைய சந்தேகம் கரைய ஆரம்பித்தது. "இவர் கண்டிப்பாய் கொலை செய்திருக்க மாட்டார்" என்று அவளுக்குத் தோன்றியது. அவர் மேல் உள்ள பாசத்தால் அப்படி நினைக்கிறோமா என்று ஒரு கேள்வி மனதின் மூலையில் எழுந்தாலும் அவள் அதை சட்டை செய்யவில்லை. உள்ளுணர்வு தந்தைக்கு ஆதரவாக இருந்தது.

சந்திரசேகர் தொடர்ந்தார். "….. நான் பெரியக்கா மாதிரி ஒரு மகள் வேணும்னு ஆசைப்பட்டது அவள் தைரியசாலிங்கறதுக்காக மட்டும் அல்ல. எல்லா விஷயங்கள்லயும் அவள் வாழ்க்கை நிறைவா இருக்கு. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமைஞ்சது. எங்கப்பா அவள் மேல் உயிரயே வச்சிருந்தார், அவள் கணவர் அவள் மேல் உயிரையே வச்சிருக்கார், நான், சின்னக்கா, ஆகாஷ், டேவிட், அர்ஜுன்னு எத்தனையோ பேர் அவளை நிறையவே நேசிக்கிறோம், மதிக்கறோம். இப்படி எல்லாராலயும் நேசிக்கப்படறதை விட பெரிய அதிர்ஷ்டம் ஏதாவது இருக்க முடியுமா ஆர்த்தி. அந்த மாதிரி அதிர்ஷ்டம் உனக்கும் அமையணும்னு நான் ஆசைப்பட்டேன்மா…."

ஆர்த்தி மனதில் சொல்லிக் கொண்டாள். "நான் அப்படி எல்லாராலயும் நேசிக்கப்படணும்னு பேராசைப்படலைப்பா. ஆகாஷ் ஒருத்தர் அப்படி என்னை நேசிச்சா போதும்னு தான் ஆசைப்படறேன். அதுவே நடக்காத அளவு அதிர்ஷ்டம் தான் எனக்கு இருக்கு"

சிவகாமி புராணத்தை இதற்கு மேல் கேட்கத் திராணி இல்லாத மூர்த்தி இனியும் ஒட்டுக் கேட்டால் தலை வெடித்து விடும் என்று அங்கிருந்து கிளம்பி பாட்டியிடம் சென்று, கேட்டதை ஒப்பித்தான்.

அவன் முடித்த போது பஞ்சவர்ணம் காதுகளைப் பொத்திக் கொண்டாள். "ஏண்டா இவன் இப்படி போற பக்கமெல்லாம் அந்த கொலைகாரியைப் பத்தியே புராணம் பாடறானே. அவனுக்கு சின்ன வயசுலயே ஏதோ வசியம் பண்ணி வச்சிருப்பாளோ? எந்த மந்திரவாதியைப் பிடிச்சு செஞ்சாளோ தெரியலையே. தெரிஞ்சா நாமளும் அவன் கிட்ட போயிருக்கலாம்"

மூர்த்தி பதில் பேசாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தான்.

பஞ்சவர்ணம் சிறிது மௌனம் சாதித்து விட்டுச் சொன்னாள். "அந்தக் கடைசி வருஷங்களோட டைரிக இல்லைன்னு சொன்னா அன்னைக்கு ராத்திரி சிவகாமி அந்த பீரோல இருந்து எடுத்துட்டுப் போனது அந்த ரெண்டு டைரியாத் தான் இருக்கணும். என் சந்தேகம் சரியாயிடுச்சு பார்த்தாயா? அதுசரி உனக்கு அடிக்கடி ஏன் முகம் வெளுத்துப் போகுதுன்னு அவன் கேட்டானே, அதுக்கு முன்னாடி என்ன நடந்தது?"

"கடைசி ரெண்டு வருஷங்களோட டைரிகள் காணோம்னு ஆர்த்தி சொன்னப்புறம் கொஞ்ச நேரத்துல அவ அப்படி ஆயிட்டா."

"எதனால அவள் அப்படி பயந்திருப்பாள்னு நீ நினைக்கிறாய்?"

மூர்த்தி அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. ஆர்த்தி என்ன நினைத்து பயந்தாள் என்பதை அவன் எப்படி ஊகிக்க முடியும்? இதற்கெல்லாம் பதில் அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று எப்படி பாட்டி எதிர்பார்க்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. ஆனால் யோசித்துப் பார்த்த போது அவன் மனதில் வேறு ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது.

"என்னடா யோசிக்கிறாய்?"

மூர்த்தி தயங்கித் தயங்கிக் கேட்டான். "ஆர்த்தியோட அம்மா அந்த கடைசி டைரிகள்ல நம்ம குடும்பத்தப் பத்தி கூட எழுதி இருப்பாளா பாட்டி?"

பஞ்சவர்ணம் உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை. ஒரு நிமிட மௌனத்திற்குப் பின்னால் பலவீனமாக அவளிடம் இருந்து பதில் வந்தது. "எழுதி இருக்கலாம்…"

(தொடரும்)

About The Author