மனிதரில் எத்தனை நிறங்கள்! (28)

People seem not to see that their opinion of the world is also a confession of character.
– Emerson

பஞ்சவர்ணம் மூவரையும் நெடுநாள் நெருங்கிப் பழகியவர்களை வரவேற்பது போல வரவேற்றாள். "வாங்க வாங்க". பவானி அவர்களைத் தாயின் அறைக்குள் அனுப்பி விட்டு அங்கிருந்து அப்படியே தனதறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள். தாய் அரங்கேற்றும் நாடகத்தில் பங்கு பெற அவளுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.

பார்வதி பவானி தன் தாய் அவர்களைக் காண விரும்புவதாகச் சொன்ன போது படுத்த படுக்கையாக நடமாட முடியாத நிலையில் உள்ள ஒரு மூதாட்டியைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்திருந்தாள். பஞ்சவர்ணத்தை அவர்கள் வந்ததில் இருந்து வெளியே பார்த்ததில்லை என்பதும் அதனால் தான் தங்களைக் காண தன் அறைக்கு அழைக்கிறாள் என்றும் நினைத்தாள். ஆனால் பஞ்சவர்ணம் எழுந்து நின்று வரவேற்றதைப் பார்த்த போது அவளுக்குத் திகைப்பு ஏற்பட்டது.

தன் திகைப்பை பார்வதி நாசுக்காகத் தெரிவித்தாள். "நாங்க வந்ததில் இருந்து உங்களை வெளியே பார்க்காததால் உங்களுக்கு உடம்பு சரியில்லையோன்னு நினைச்சேன்"

பஞ்சவர்ணம் தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டாள். "உடம்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மனசு தான் ரணமாய் இருக்கு. பிடிக்காத இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வேற வழியில்லாமல் இங்க இருக்கேன். அதனால நான் இந்தப் படியைத் தாண்டாமல் ஒரு ஜெயில் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன்"

நீலகண்டனுக்குக் கிட்டத்தட்ட தங்கள் நிலையிலேயே இருக்கும் இன்னொருத்தியைப் பார்க்கையில் ஒருவித சகோதரத்துவம் தோன்றியது.

பஞ்சவர்ணம் அவர் உடல்நிலையை அக்கறையுடன் விசாரித்தாள். ஆர்த்தியிடமும் மிகக் கனிவாக அவள் கல்வி பற்றி விசாரித்தாள். பின் மெல்ல ஆரம்பித்தாள்.

"ஏதோ நீங்க உங்க பேத்தியை அப்பவே எடுத்துகிட்டு போயிட்டதால அவள் பண சௌகரியங்கள் குறைவாய் இருந்தாலும் மத்தபடி சுதந்திரமாய் சந்தோஷமாய் வளர்ந்துட்டா. இங்கே இருந்திருந்தால் இந்த சர்வாதிகாரத்துல சிக்கிக் கஷ்டப்பட்டிருப்பாள்"

அந்த சமயத்தில் மூர்த்தி உள்ளே வந்தான். "இது தான் என் பேரன் மூர்த்தி. என்னை மாதிரி இன்னொரு துரதிர்ஷ்டசாலி. பெத்தவங்கள சின்ன வயசுலயே இழந்ததால இங்கே என் கூடவே இருக்கான். மூர்த்தி பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கப்பா".

மூர்த்தி மிகவும் பவ்யமாக நீலகண்டன், பார்வதி கால்களைத் தொட்டு வணங்கினான். நீலகண்டனுக்கு மூர்த்தியை மிகவும் பிடித்து விட்டது. இந்தக் காலத்திலும் இப்படி மரியாதை தெரிந்த இளைஞன் ஒருவன் இருப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

பார்வதி பஞ்சவர்ணத்திடம் கேட்டாள். "இவனோட அப்பா அம்மா எப்படி இறந்தாங்க?"

பஞ்சவர்ணம் பார்வதியின் இந்தக் கேள்வியை ரசிக்கவில்லை. ஆனால் அதை சிறிதும் காண்பித்துக் கொள்ளாமல் நிதானமாய் பதில் சொன்னாள். "ஒரு விபத்துல போயிட்டாங்க". விட்டால் இந்தக் கிழவி தன்னுடைய திட்டப்படி நடக்காமல் தன்னிடம் தேவையில்லாத தர்மசங்கடமான கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவாள் என்று எண்ணிய பஞ்சவர்ணம் மூர்த்தியிடம் தன் வேதனையைத் தெரிவிப்பது போல் பேச்சை ஆரம்பித்தாள்.

"ஆர்த்தியோட அம்மா இயற்கையாய் சாகலை, நடந்தது கொலை தான்னு நம்மகிட்ட பல பேர் உன் அத்தையைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததுக்கு அப்புறம் சொன்னதை முதல்லயே சொல்லி இருந்தா கண்டிப்பா பவானியை இந்தப் பாழும் கிணத்துல தள்ளி இருக்க மாட்டேன் மூர்த்தி…." சொல்லி விட்டுத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

நீலகண்டன் மனைவியை எரித்து விடுவது போலப் பார்த்தார். ‘நான் சந்தேகப்பட்ட போது நீ நம்பவில்லை. இப்போது பார் பல பேர் அப்படி சொல்கிறார்கள் என்று இந்தம்மா சொல்கிறார்’ என்று பார்வதி அந்தப் பார்வையைப் படித்தாள். பஞ்சவர்ணம் சொன்னதைக் கேட்ட போது ஆர்த்திக்கும் மனம் பதைத்தது. தாத்தா சந்தேகப்பட்டதில் தப்பு இல்லையோ?

பார்வதிக்கு நடப்பது எதுவும் இயல்பான ஒன்றாய்த் தோன்றவில்லை. ஏதோ அபஸ்வரம் இந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்தே ஒலித்துக் கொண்டிருந்தது போல் ஒரு பிரமை.

நீலகண்டன் பஞ்சவர்ணத்திடம் கேட்டார். "அப்படின்னா உங்க கிட்ட மத்தவங்களும் என் ஆனந்தி கொலை தான் செய்யப்பட்டாள்னு சொன்னாங்களா"

"ஆமாங்க. ஆனா லேட்டா சொல்லிட்டாங்க. முதல்லயே சொல்லி இருந்திருந்தா இந்த சம்பந்தத்திற்கு நான் ஒத்துகிட்டுருக்க மாட்டேன்…." என்று பஞ்சவர்ணம் மறுபடி சொல்ல பார்வதி அவளை சமாதானப்படுத்தினாள். "சரி விடுங்க. உங்க பொண்ணு இப்ப வரைக்கும் இங்கே நல்லா தானே இருக்காள்"

பஞ்சவர்ணத்திற்கு பார்வதியின் நாக்கை இழுத்து அறுத்தால் என்ன என்று தோன்றியது. தான் நினைப்பது போல் நடந்து கொள்ளாத மனிதர்களிடம் அவளுக்கு இயல்பாக ஏற்படும் கோபம் அது. ஆனால் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் பார்வதியின் பேச்சை அங்கீகரிக்கவும் செய்யாமல் நீலகண்டனைப் பார்த்துக் கேட்டாள். "அதுசரி உங்க பொண்ணு சாகறதுக்கு முன்னால் உங்க கிட்ட எதுவுமே சொல்லலையா?"

நீலகண்டனுக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கத் தேவை இருக்கவில்லை. மகள் கடைசி மாதங்களில் சந்தோஷம் இல்லாமல் இருந்ததில் இருந்து பிணத்தை அவசர அவசரமாக எரிக்க சிவகாமி ஏற்பாடு செய்தது வரை சொன்னது மட்டுமல்லாமல் சிவகாமி பேத்தியையும் கொன்று விடுவாளோ என்ற பயத்தில் தான் பேத்தியைத் தூக்கிக் கொண்டு போனதையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்தார். பஞ்சவர்ணம், முகத்தில் தேவையான அதிர்ச்சி, கோபம், வருத்தம் ஆகியவற்றை தக்க சமயங்களில் சரியாக வெளிப்படுத்தி அவரை ஊக்குவித்தாள்.

எல்லாவற்றையும் சொன்ன நீலகண்டன் பேத்தியின் கனவு பற்றியும் சொல்ல வாயெடுத்த போது பார்வதி யாருக்கும் தெரியாமல் கணவனை லேசாகக் கிள்ளித் தடுத்தாள். ஆனால் பஞ்சவர்ணத்தின் கண்களுக்கு அது தப்பவில்லை. ‘இந்தக் கிழவி எதைச் சொல்ல விடாமல் தடுக்கிறாள்’ என்று அனுமானிக்க முயன்றாள்.

நீலகண்டனை நிறைய நேரம் கட்டுப்படுத்த முடியாது என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த பார்வதி பேச்சைத் திசை திருப்பினாள். "இன்னொரு விஷயத்தையும் ஒத்துக்காம இருக்க முடியாது. என் மகள் சாகிற வரைக்கும் சிவகாமியைப் பத்தி ஒரு வார்த்தை தப்பாய் சொன்னது கிடையாது. இப்பவும் சிவகாமி உதவி செஞ்சிருக்கலைன்னா நான் பூவும் பொட்டுமா இங்க உட்கார்ந்து பேசிகிட்டு இருக்க முடியாது. ஏன் சொல்றேன்னா சொல்றப்ப எல்லாத்தையும் சொல்றது தானே நியாயம்"

பஞ்சவர்ணத்துக்கு பார்வதி இங்கு வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்ற ஆரம்பித்தது. "நீங்க வர்றதுக்கு முந்தின நடுராத்திரியில் ஆர்த்தியோட அம்மா ரூமுக்குப் போய் சிவகாமி ஏதோ எடுத்துகிட்டு போனதை நான் கண்ணால் பார்த்தேன். எதை எடுத்துட்டு போனாளோ அந்த மகராசி எனக்குத் தெரியலை….."

அடுத்து அரை மணி நேரம் பஞ்சவர்ணம் பேசினாள். பேச்சு முழுவதும் சிவகாமியைப் பற்றியே இருந்தது. எல்லா விதங்களிலும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டு எல்லோரையும் ஆட்டுவிக்கும் அவளது அராஜகப் போக்கு பற்றித் தான் பேசினாள். நீலகண்டன் அதை சீரியஸாகக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டார். ஆர்த்தி அதைக் கேட்டுப் பயப்பட்டாள். பார்வதிக்கு அவள் பேச்சு சலிப்பையே ஏற்படுத்தியது.

கடைசியில் அவர்கள் கிளம்பினார்கள். பஞ்சவர்ணம் சொன்னாள். "நீங்க எல்லாம் வந்து உங்க கிட்ட பேசிகிட்டு இருந்தது எனக்கு ரொம்பவும் ஆறுதலா இருந்துச்சு. இப்படியே அடிக்கடி வாங்க"

அவர்கள் போனவுடன் பஞ்சவர்ணம் பேரனிடம் சொன்னாள். "நாம எதிர்பார்த்ததை அவங்க சொல்லிட்டாங்க. ஆகாஷ் இன்னும் ஆபிஸ் போகலை போலத் தெரியுது. நீ உடனடியா போய் ஆர்த்திக்கு அவங்கம்மா கொலையில சிவகாமி மேல தான் சந்தேகம்கிறதை அவன் கிட்ட தெரிவிச்சுடு"

மூர்த்தி வேகமாகக் கிளம்பினான்.

(தொடரும்)

About The Author