மனிதரில் எத்தனை நிறங்கள்!

‘Well, I never heard it before,’ said the Mock Turtle; ‘but it sounds uncommon nonsense.’"
– Lewis Carroll, Alice in Wonderland,

"ஹலோ"

"ஆகாஷ். நான் லிஸா. பக்கத்துல ஆர்த்தி இருக்காளா?"

"இல்லை ஏன்"

"நீயும் ஆர்த்தியும் கல்யாணம் செய்துக்க தீர்மானம் செய்துகிட்ட இந்த நேரத்துல நான் அங்கே இல்லையேன்னு எனக்கு ஒரே வருத்தமா இருக்கு. நடந்துகிட்டு இருக்கிறதை தெரிஞ்சுக்காட்டி தலை வெடிச்சுடும் போல இருக்கு…. ஆர்த்தி உன்னைப் பத்தி பேசுனாலே வெட்கப்படறா. அதனால தான் உனக்குப் போன் செய்யறேன். … பயப்படாதே நீ என்ன செஞ்சேன்னு கேட்கலை….முதல்ல நீ ‘ஐ லவ் யூ’ன்னு சொன்னப்ப அவ என்ன சொன்னா?"

"நான்…. அவ கிட்ட என்னை கல்யாணம் செஞ்சுக்கிறியான்னு தான் கேட்டேன். காதலிக்கிறேன்னு சொல்லலையே"

"ஏன்?"

"அது தான் அவளுக்குத் தெரியுமே"

"முட்டாள்…. தெரியும்னாலும் ஒரு பொண்ணுக்கு அவள் மனசுக்குப் புடிச்சவன் வாயில் இருந்து எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு வாக்கியம் இருக்கும்னா அது அந்த வாக்கியம் தான். இப்ப மட்டும் இல்லை. எத்தனை வருஷம் கழிச்சும் தான். என்ன ஆள் நீ. அழகு, புத்திசாலித்தனம் எல்லாம் இருந்தாலும் என்ன பிரயோஜனம். இந்த காதல் விஷயத்துல இன்னும் எல்கேஜியிலயே தான் இருக்கிறாய். உன் கல்யாணத்துக்கு முன்னால் வந்து உனக்கு பாடம் நடத்த நிறைய விஷயம் இருக்கு"

"அம்மா மகராசி. போன்லயே உன் டார்ச்சர் தாங்கலை. நேர்ல வேறயா?…. நீ போனை வை. எனக்கு நிறைய வேலை இருக்கு"

*****

பஞ்சவர்ணம் ஆர்த்தியின் கடைசி ஹிப்னாடிச செஷன் சிடியைக் கேட்ட பிறகு நிறைய நேரம் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள். காரணம் மூர்த்தி முகத்தை அவளுக்குப் பார்க்க சகிக்கவில்லை. அவன் முகத்தில் ஒரு வலி தெரிந்தது. சமீப காலமாக விதி அவனிடம் கருணையோடு நடந்து கொள்ள மறுத்திருக்கிறது.

"ஆனந்தி சொன்ன மாதிரி அவங்க பைத்தியம் தானா பாட்டி"

பஞ்சவர்ணம் பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள். "அப்படி எல்லாம் இல்லை…."

"அந்த வேலைக்காரி விஜயாவும் பைத்தியம்னு தான் சொன்னாள் பாட்டி"

"எப்பவுமே அப்படின்னு சொல்ல முடியாதுடா மூர்த்தி. சில நேரங்கள்ல அவ நடந்துக்கறது கொஞ்சம் வினோதமாய் இருக்கும் அவ்வளவு தான்"

மூர்த்தி அது பற்றி மேற்கொண்டு எதையும் பேசாமல் டாக்டர் ப்ரசன்னாவின் குறிப்புகளை சத்தமாகப் படித்தான். "ஆர்த்தி கண்ட காட்சி கொடூரமாக இருந்ததால் அவளுடைய ஆழ்மனம் தற்காலிகமாக அவளுடைய பார்வை சக்தியைத் தடை செய்திருக்க வேண்டும். அபூர்வமான சில கேஸ்களில் அப்படி நடந்திருக்கிறது…………."

அவன் முழுவதுமாகப் படித்து முடித்த போதும் பஞ்சவர்ணம் கண்களை மூடிச் சிந்தனையில் தான் ஆழ்ந்திருந்தாள். இறுக்கமான மனத்துடன் மூர்த்தி அங்கிருந்து வெளியேறினான்.

பஞ்சவர்ணம் தன் மருமகளைப் பற்றிய நினைவுகளுடன் ஆழ்ந்திருந்தாள். மகளிடமும், மகனிடமும் இல்லாத ஒரு நெருக்கம் அவளுக்கு மருமகளுடன் இருந்தது. மகளும், மகனும் அவளுடைய கணவனின் பலவீனத்தையே பெற்றிருந்தார்கள். அவர்கள் அவளைப் பெரிதாக என்றுமே நேசித்ததில்லை. பெரிய புத்திசாலித்தனம் இல்லாத தைரியமும் இல்லாத அவர்கள் இருவரும் தந்தையின் மறைவுக்குப் பின் தாயைப் பார்த்த விதத்தில் என்றுமே குற்றச்சாட்டு மட்டுமே இருந்தது. ஆனால் லட்சியம் என்ற பெயரில் மகன் மணந்து கொண்ட அனாதைப் பெண் கல்யாணி அவளுடன் வந்த நாள் முதல் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள். அவளுக்கும் பஞ்சவர்ணத்தைப் போலவே பணத்தின் மீதும், படோடாபத்தின் மீதும் நிறைய கனவுகள் இருந்தன. அவள் தன் கனவுகளைப் பற்றி பேசும் போது மட்டும் ஒரு அதீத உணர்வுகளை பஞ்சவர்ணம் கவனித்தாள். அதை பஞ்சவர்ணம் வரவேற்கவே செய்தாள். மாமியாரும் மருமகளும் கோடிக்கணக்கில் பணம் வந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று மணிக்கணக்கில் பேசிக் கனவு காண்பார்கள்.

அந்த நேரத்தில் தான் பக்கத்து வீட்டில் இருந்த டாக்டர் டேவிடின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சந்திரசேகரின் கண்கள் பவானி மேல் விழுந்தன. பஞ்சவர்ணமும், கல்யாணியும் தங்கள் கனவுகள் பலிக்க ஒரு வழியை அவரிடத்தில் கண்டார்கள். கோடிக்கணக்கான சொத்தின் அதிபதியிடம் பவானியைப் பழக ஊக்குவித்தார்கள். திருமணமாயிருந்த அந்த மனிதருடன் பழக பவானிக்கு ஆரம்பத்தில் தயக்கம் அதிகம் இருந்தது. ஆனால் சந்திரசேகர் வீட்டில் வேலை செய்யும் விஜயா மூலம் அவருக்கும், அவர் மனைவிக்கும் இடையே உறவு சரியில்லை என்ற செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் அதை பவானிக்குச் சொல்லி ஊக்கம் கொடுத்தார்கள். பவானிக்கு அவர் அழகும், சொத்தும் பிடித்திருந்ததால் அவருடன் பழக ஆரம்பித்தாள்.

ஆரம்பம் முதலே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவன் இளங்கோ தான். திருமணமான ஒருவருடன் தங்கை பழகுவது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுவும் அவருடைய கம்பெனியில் வேலை செய்து வந்த அவனுக்கு சிவகாமிக்குத் தம்பியிடம் இருந்த செல்வாக்கு தெரிந்திருந்தது. தங்கையிடம் எதிர்ப்பு தெரிவித்தான்.

"அவர் ஆனந்தியை டிவோர்ஸ் செய்துட்டு என்னைக் கல்யாணம் செய்துக்கறதாய் சொல்லியிருக்கார்ண்ணா" என்று பவானி தெரிவித்தாள்.

"அப்புறம் என்ன?" என்று பஞ்சவர்ணம் கேட்டாள்.

"பிரச்சினை அவரோட மனைவி ஆனந்தி அல்ல. அவரோட அக்கா சிவகாமி. அந்தம்மா சம்மதமில்லாமல் அந்த வீட்டில் ஒன்னும் நடக்காது"

"அவ தான் இப்ப நாட்டிலயே இல்லையே. அப்புறம் என்ன?" என்று கல்யாணி கேட்டாள்.

"அந்தம்மா எங்கேயிருந்தாலும் ஆபத்து தான்….."

அன்று பஞ்சவர்ணம் மகனுடைய கருத்தை நம்பவில்லை. ஒரு அழகான பெண்ணால் சாதிக்க முடியாதது எதுவும் இருக்காது என்று நினைத்தவளுக்கு சந்திரசேகரின் ஒரு அக்காவுக்கு அதை தடுத்து நிறுத்தும் சக்தி இருக்கும் என்று நம்ப முடியவில்லை. பவானியும் அப்படியே நினைத்து ஏமாந்து போனாள்.

பவானி சந்திரசேகரைக் கல்யாணம் செய்து கொண்டால் தங்கள் வாழ்க்கை சொர்க்கமயமாகி விடும் என்று பவானியை விட அதிகம் கனவு கண்ட கல்யாணிக்கும், பஞ்சவர்ணத்திற்கும் ஆனந்தியை சந்திரசேகர் விவாகரத்து செய்ய தாமதமாவது பெரும் எரிச்சலைத் தந்தது. மனிதர்களை எடை போடுவதில் வல்லவளான பஞ்சவர்ணம் பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் ஆனந்தியைப் பார்த்தும், வேலைக்காரி விஜயா மூலம் கேள்விப்பட்டும் ஆனந்தியை ரோஷக்காரி, தன்மானம் மிக்கவள் என்பதைக் கணித்திருந்தாள். அதை உபயோகித்து தான் அவளை விவாகரத்துக்குத் தூண்ட முடியும் என்று கணக்குப் போட்டாள்.

அதைக் கேட்ட கல்யாணி "பவானிக்கு சாமர்த்தியம் போதாது அத்தை. ஆனந்தியாவே அந்த ஆளை விட்டுப் போக வைக்கிற வேலை என்னோடது" என்று பஞ்சவர்ணத்திடம் சொல்லி பவானியைத் தனியாகப் பார்க்க முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளை விவாகரத்து செய்யத் தூண்டும் வண்ணம் பேசினாள். கணவன் வேறு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகுகிறான் என்பதைத் தெரிந்த பின் விவாகரத்து செய்து ஒதுங்குவது தான் மானமுள்ள பெண்ணுக்கு அழகு என்கிற ரீதியில் சொல்ல ஆரம்பித்தாள்.

அதை ஒழுங்காகக் கல்யாணி செய்திருந்தால் விவாகரத்து நடந்திருக்கும். ஆனால் கல்யாணி அப்படிச் செய்யவில்லை, தன் இயல்பான கிறுக்குத்தனத்தால் எல்லாவற்றையும் பாழாக்கி விட்டாள் என்பது பின்னாளில் பஞ்சவர்ணத்தின் கணிப்பாக இருந்தது. அந்த மழை நாளில் "இன்று வெற்றியுடன் திரும்புகிறேன், அவளா நானா பார்த்து விடுகிறேன்" என்று மிகுந்த நம்பிக்கையோடு கிளம்பிய மருமகளைப் பின் பஞ்சவர்ணம் பார்க்கவேயில்லை. அவள் போய் சிறிது நேரத்தில் வந்த இளங்கோ கல்யாணி ஆனந்தியைச் சந்திக்கக் கிளம்பியிருக்கிறாள் என்பதை அறிந்து தன் தாயிடம் வெறுப்பைக் கொப்பளித்து வெடித்தான். தன் தந்தையை சாகடித்ததுமல்லாமல், பவானியையும் விபசாரி போல் கல்யாணமான ஒரு நபருடன் சுற்ற விடுவதையும், கல்யாணியையும் வேண்டாததையெல்லாம் செய்ய தூண்டுவதையும் அவன் வன்மையாகக் கண்டித்தான். குடும்ப நிம்மதி ஒட்டு மொத்தமாகப் போக பஞ்சவர்ணம் தான் காரணம் என்று நேரடியாகவே சொல்லி விட்டு மனைவியை திரும்ப அழைத்து வரப் போன இளங்கோவும் வீடு திரும்பவில்லை……

*****

மூர்த்தி ஆர்த்தியின் அறைக்கு வந்து விடை பெற்றுக் கொண்ட போது ஆர்த்தியின் கண்கள் நிரம்பின.

"சாரி மூர்த்தி…."

"பரவாயில்லை ஆர்த்தி. எப்பவோ நாங்க போயிருக்க வேண்டியது…."

"மூர்த்தி. ஒரு நாள் நீங்க என்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டீங்க. ஆனா நான் முதல்லயே ஆகாஷ் கிட்ட என் மனசை பறிகொடுத்திருந்தேன். அப்புறம் என்னை மாதிரியே நீங்களும் அப்பா அம்மா இல்லாம வளர்ந்த விதத்தைப் பார்த்தப்ப என் கூடப் பிறந்தவர் போல ஏதோ ஒரு ஒட்டுதல் எனக்கு வந்துச்சு. இப்பவும் உங்களை அப்படித்தான் என்னால் பார்க்க முடியுது….."

"எனக்குப் புரியுது ஆர்த்தி"

"நீங்க போனதுக்கப்புறம் எந்தக் காரணத்தை வச்சும் என் கல்யாணம் முடியற வரைக்கும் வெளியே உங்களைப் பார்த்தா பேசக்கூடாதுன்னு தாத்தா பேர்ல பெரியத்தை சத்தியம் வாங்கியிருக்காங்க…. ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வர்றேன். உங்களுக்கும் ஒரு நல்ல பொண்ணு மனைவியா வரணும்னு ஆசைப்படறேன்…."

பொங்கி எழுந்த ஆத்திரத்தைக் கவனமாக மறைத்துக் கொண்டு எல்லாவற்றையும் அவனால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற முகபாவனையுடன் தலையாட்டி விட்டு மூர்த்தி கிளம்பினான். பஞ்சவர்ணம் மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். பவானி கண்ணீருடன் தாயையும், மருமகனையும் வழியனுப்பினாள். தனதறை ஜன்னலில் இருந்து அவர்கள் இருவரும் டாக்ஸியில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆர்த்திக்கு வருத்தமாக இருந்தது.

*****

ஆர்த்தி, ஆகாஷ் திருமணம் அடுத்த மாதம் ஏழாம் தேதி என்று முடிவானது. தேதி நிச்சயமானவுடன் டேவிடும், மேரியும் வந்து ஆர்த்தியிடம் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

மேரி ஆர்த்தியிடம் சொன்னாள். "உங்கம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பா. ஆகாஷ் குழந்தையா இருந்தப்ப எப்பவும் ஆனந்தி அவனை தூக்கி கொஞ்சிகிட்டிருப்பா. அவன்னா அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்……."

டேவிட் சொன்னார். "எல்லாரையும் விட அதிகமா சந்தோஷப்பட்டது லிஸா தான். போன்ல பேசினாலே அதே பேச்சு தான். அவள் அவ்வளவு சந்தோஷமா இருந்து நாங்க இது வரைக்கும் பார்த்ததில்லை…"

லிஸாவின் சந்தோஷம் ஆர்த்தியையும் வியக்க வைத்தது. ஒரு காலத்தில் தான் காதலித்தவன் இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஒருத்தி இவ்வளவு சந்தோஷப்பட முடியுமா?

எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஆர்த்தி, மூர்த்தி, பார்த்திபன் மூவரும் சேர்ந்து போன பிக்னிக் பற்றிய பேச்சும் வந்தது. மேரி சொன்னாள். "அந்த நந்தினி பற்றி நானும் நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். எத்தனையோ பெண்கள் பிரச்சினைக்காக அவங்க நிறைய போராடியிருக்காங்கன்னு படிச்சிருக்கேன்……"

பார்வதி சொன்னாள். "அன்னைக்கு அந்தக் காட்டுக்குள்ள மாட்டிகிட்ட இவங்களைக் காப்பாத்துனதும் அந்த மகராசி தான். அது போகிற பாதையே இல்லையாம். ஏதோ கடவுளா பார்த்து அவங்க டிரைவரை வழி மாற வச்சு அங்கே அனுப்பியிருக்காங்க. ஒருவேளை அந்த இடத்துல ஏதாவது காட்டு மிருகம் வந்திருந்தா என்ன ஆயிருந்துருக்கும்…."

டேவிட் சொன்னார். "காட்டு மிருகம் ஆபத்தானதோ இல்லையோ மூர்த்தி ஆபத்தானவன். பார்த்திபன் கூட இருந்திருக்கலைன்னா அவனே என்ன செய்வான்னு சொல்ல முடியாது."

மூர்த்தியை அவ்வளவு மட்டமாகச் சொன்னது ஆர்த்திக்கு வருத்தமாய் இருந்தது. அவனைப் பற்றி லிஸா கூட மோசமாகச் சொல்லியிருக்கிறாள். லிஸா பொய் சொல்ல மாட்டாள், அவனுக்கு சில பெண்களுடன் பழக்கம் இருக்கலாம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட தன் விஷயத்தில் அவன் தவறாக நடந்து கொள்வான் என்பதை இப்போதும் அவளால் நம்ப முடியவில்லை.

நூலகத்திற்குப் புத்தகம் ஒன்றைத் திருப்பித் தர வேண்டியிருக்கிறது என்று அவள் கிளம்பினாள்.

"ஆர்த்தி உன் கல்யாணம் நிச்சயமானதை அந்தம்மா நந்தினிக்கு சொன்னாயா? அவ்வளவு தூரம் உதவி செய்தவங்களை அப்புறமா நாம மறந்துட்டோம்னு இருக்கக்கூடாது. லைப்ரரிக்குப் போகிறதுக்கு முன்னால போன் செஞ்சு சொல்லு. சந்தோஷப்படுவாங்க. நீ பேசிட்டு என் கிட்ட கொடு. நானும் பேசறேன்" பார்வதி சொன்னாள்.

ஆர்த்தி நந்தினிக்குப் போன் செய்து பேசினாள். கேட்டு நந்தினி சந்தோஷப்பட்டாள். பத்திரிக்கை அடித்தவுடன் நேரில் வந்து அழைப்பதாகச் சொன்ன ஆர்த்தி தான் பேசி முடித்தவுடன் "ஆண்ட்டி. உங்க கிட்ட பேசணும்னு ஒருத்தர் ஆவலா இருக்காங்க…. ஒரு நிமிஷம்"

ரிசீவரைப் பாட்டியிடம் கொடுத்து நூலகத்திற்குக் கிளம்பினாள் ஆர்த்தி.

"ஹலோ…."

பார்வதி ஒரு கணம் பேச்சிழந்து போனாள்.

"ஹலோ…யார் பேசறது?" நந்தினியின் குரல் மீண்டும் ஒலித்தது.

திகைப்பிலிருந்து மீண்ட பார்வதி சொன்னாள். "நான் ஆர்த்தியோட பாட்டி பார்வதி பேசறேன்"

மறுமுனை மௌனமாகியது. சில வினாடிகள் பேச்சே இல்லை. பிறகு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பார்வதி சிலை போல ரிசீவரைப் பிடித்துக் கொண்டே நின்றாள். அவள் அப்படி நிற்பதைக் கண்ட நீலகண்டன் ஓடி வந்தார். "பார்வதி என்னாச்சு?"

டேவிடும் மேரியும் கூட விரைந்து வந்தார்கள். "என்னாச்சுங்க?"

நீண்ட நேரம் பார்வதி பேசவில்லை.

*****

"மேடம் கூப்பிடறாங்க" என்று ஆபிஸ் பியூன் வந்து சொன்ன போது பார்த்திபன் இன்று எதைச் சரியாகச் செய்யவில்லை என்று யோசித்துப் பார்த்தான். பல வருடங்களாக எதற்கெல்லாம் சிவகாமி திட்டுவாள் என்று யோசித்து யோசித்து அவன் செயல்பட்டிருந்தாலும் ஏதாவது ஒன்று விடுபட்டிருக்கும். அதற்காக அவளிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வான். இன்று என்ன விஷயமோ என்று பயந்து கொண்டே சிவகாமியின் அறைக்குச் சென்றான்.

"உட்கார்" என்றாள் சிவகாமி. பார்த்திபன் உட்கார்ந்தான்.

சிவகாமி சில டாக்குமெண்ட்களை அவனிடம் நீட்டினாள். "இது இந்தக் கம்பெனியோட 20% ஷேர் பேப்பர்ஸ். இதை நான் உங்கம்மா பேர்ல மாத்தியிருக்கேன்…"

பார்த்திபனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் இதை என்றும் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. தயக்கத்துடன் அந்த டாக்குமெண்ட்களை வாங்கிக் கொண்டான்.

"உங்கப்பா சொல்லி உங்கம்மா இந்த 20% ஷேர்களை விற்கணும்னு ஒத்தைக் காலில் நின்னப்ப நான் அவள் கிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். உங்கப்பா முதல்லயே அவரோட பூர்வீக சொத்தை அழிச்சவர். அவர் இதை அழிக்க நிறைய நாள் ஆகாதுன்னு எதிர்பார்த்தேன். அதே மாதிரி நடந்தது. அவரும் போய் சேர்ந்துட்டார். அவள் கிட்ட இருந்து விலை கொடுத்து வாங்கினாலும் இது என்னைப் பொறுத்த வரைக்கும் அவளோடது தான். இதை எப்பவோ தந்திருக்கணும். ஆனா சுலபமா கிடைக்கறது எதையும் நாம் யாரும் சரியா பாதுகாக்கறதில்லை. உனக்கு ஆரம்பத்துலயே தந்திருந்தா நீயும் உங்கப்பா மாதிரி ஆயிடுவாயோன்னு நினைச்சு தரலை. இப்ப உனக்கும் பக்குவம் வந்திருக்குங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. நானும் சீக்கிரமா லாங் டூர் போகப் போகிறேன். அதான் மாத்திட்டேன்…."

பார்த்திபன் சிலை போல உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இது கனவல்ல என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

"உங்கம்மா ரொம்ப பாவம் பார்த்தி. சின்ன வயசுல அம்மாவை இழந்தவளுக்கு எங்கப்பா பாசம் கிடைக்கலை. நான் அவளையும் சந்துருவையும் நல்லா பார்த்துகிட்டேன். ஆனா பாசமழை பொழியற குணம் என்கிட்ட இருந்ததில்லை. உன் அப்பா காலத்திலும் அவளுக்கு பெருசா சந்தோஷம் கிடைக்கலை. அவர் போன பிறகும் தான். நீயாவது அவளை கடைசி வரைக்கும் நல்லா பார்த்துக்கணும் பார்த்தி. சரி… போய் வேலையைக் கவனி"

பார்த்திபனுக்குப் பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை. தலையாட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகையில் அவன் கண்கள் நிறைந்திருந்தன.

*****

நீல்கிரிஸ் நூலகத்தின் நுழைவு வாயிலுக்கருகே நிறைய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன என்பதால் டிரைவர் காரை மிகவும் தள்ளி நிறுத்த வேண்டியதாகி விட்டது. ஆர்த்தி அத்தனை கார்களையும் கடந்து சென்று நூலகத்தினுள் நுழைந்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த டிரைவர் அவள் வருவதற்குள் ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கத் தீர்மானித்தான். சிகரெட் குடித்துக் கொண்டிருந்த அவன் கவனம் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது சென்றது. அவர்கள் சண்டை நீண்ட நேரம் நீடித்துப் பின் முடிந்தது. டிரைவர் கடிகாரத்தைப் பார்த்தான். அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. எப்போதும் கால் மணி நேரத்திற்குள் திரும்பி வரும் ஆர்த்தி இன்னமும் திரும்பி வராதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அங்கிருந்த கார்கள் அனைத்தும் போய் விட்டிருந்தன. டிரைவர் நூலக வாசல் நோக்கி நடந்தான். நூலகம் பூட்டப்பட்டிருந்தது. நூலகத்தை வெளியில் சுற்றிப் பார்த்தான். ஆர்த்தி எங்கும் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த டிரைவர் ஆர்த்தியின் செல் போனிற்குப் போன் செய்து பார்த்தான். "Switched off" மெசேஜ் வந்தது.

பயந்து போன டிரைவர் சிவகாமிக்குப் போன் செய்தான்.

(தொடரும்)

About The Author

6 Comments

 1. suj

  னந்தினி ஆர்த்தியின் அம்மா ஆனந்தி ஆ? கண்டிப்பாக நம்ப முடியவில்லை ! ஆனால் கதை செல்வதை பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது!!உம்

  ஆர்த்தியை தொடர்ந்து சென்று பார்ப்பதும் அவரோ?

 2. kavitha

  கதை மிகவும் அருமை. ஆசிரியர் கதையை மிகவும் அருமையக கொன்டு சென்ரவிதம் அருமை. திகில் மர்மம் காதல் பெரிய அத்தை பத்திரம் மிகமிக அருமை.ரென்டு வருடஙலாக கதை எனிமையக சென்ரது. கதை சிரிதுகுட நம்மால் குரை சொல்லும் விதத்தில் எல்லை. ஆசிரியருகும் கதையை வேல்யிட நிலசரல் மிக மிக நன்ரி

 3. pearl

  ஆமாம்….
  நானும் அப்படித்தான் நினைக்கிறேன்…… சுஜ், நீ சொல்லுவது எனக்கும் தோன்றியது தான்……
  நிறைய்ய சஸ்பென்ஸ்…. எப்ப தான் முடிவை பார்க்க முடியுமோ????????
  பரவாயில்லை…. சுவையான கதை தானே……….. பொறுத்திருந்து பார்ப்போம்………

 4. madhu

  னன்தினி யின் முகத்தை சிவகாமி மாட்ரி விட்டார் என நினைக்கிரென் அர்ஜுன் முகம் மாதிரி அருமையான கதை பல நாட்கல்லுக்கு நம் மனதில் நிர்கும் கதை.

 5. madhu

  னன்தினி யின் முகத்தை சிவகாமி மாட்ரி விட்டார் என நினைக்கிரென் அர்ஜுன் முகம் மாதிரி அருமையான கதை பல நாட்கல்லுக்கு நம் மனதில் நிர்கும் கதை.

 6. madhu

  னன்தினி யின் முகத்தை சிவகாமி மாட்ரி விட்டார் என நினைக்கிரென் அர்ஜுன் முகம் மாதிரி அருமையான கதை பல நாட்கல்லுக்கு நம் மனதில் நிர்கும் கதை.

Comments are closed.