மஹாத்மா காந்தி மார்க்கெட் (3)

சான்ராஜா என்னுடைய பால்ய காலத்து சிநேகிதன். எனக்கும் அவனுக்கும் கிட்டத்தட்ட எட்டு வருஷ வயசு வித்தியாசம் இருந்தாலும், அந்த இடைவெளியை இட்டு நிரப்புகிற ஒரு கவர்ச்சி அவனிடம் இருந்தது.

அவனுடைய பதினாறு வயசு விடலைப் பருவத்துக்கே பாத்தியப்பட்ட கில்லாடித்தனம் இந்த எட்டு வயசுச் சிறுவனைக் காந்தமாய்க் கவர்ந்தது.

உருப்படாமப் போனவன், ஊர்சுத்திப் பையன் என்கிற துர்ச்சான்றிதழ்கள் சான்ராஜாவிடம் இருந்தன. அப்படிப் பட்ட ஒரு போக்கிரியோடு, கான்வென்ட்டில் படிக்கிற இந்தக் கள்ளங் கபடமறியாத பாலகன் சேரலாமோ? சேரவே கூடாது என்று பாட்டியின் தடையுத்தரவு அமுலில் இருந்தது. தடையை மீறி, சான்ராஜாவோடு ரகசியச் சந்திப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

சாயங்காலம் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும், ஷாம்க்கா நாஷ்டா என்று அறியப்பட்ட மாலைத் தீனி தயாராயிருக்கும்.

பணியாரம், கொழுக்கட்டை, சத்து உருண்டை, பாலில் ஊறின அவல் என்று நாக்குக்கு ருசியான பலகாரம் பாட்டியால் விநியோகிக்கப்படும்.

மயில் வாகனனின் மந்திரக் குரலில் ரேடியோ சிலோன் கேட்டுக் கொண்டே அந்தப் பதார்த்தங்களைக் கொஞ்சங் கொஞ்சமாய் ரசித்து, ருசித்துச் சாப்பிடுவோம் பிள்ளைக ளெல்லோரும்.

அந்தத் தருணத்தில், வெளி கேட்டுக்கு வெளியே சான்ராஜா காத்திருப்பது மானசீகமாய் எனக்கு உணர்த்தப் பட, என் பங்குப் பண்டங்களில் பாதி, கமுக்கமாய் அவன் வயிற்றுக்குள் போய் விடும்.

அந்த வயதுக்குரிய சாகசங்கள் சான்ராஜாவிடம் தூக்கலாயிருந்தன.

பாட்டி வீட்டுக்கு ஒரு பக்கம் வாய்க்கால், மறு பக்கம் பரந்து விரிந்த குளம். தாமரைப் பூக்கள் மிதக்கிற ரம்யமான குளம்.

குளத்துக்குள்ளே இறங்கிச் சான்ராஜா தாமரைப் பூக்களைத் தண்டோடு கிள்ளிக் கொண்டு வந்து என்னைப் பரவசப்படுத்துவான்.

வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறபோது. படித்துறையின் கூரையிலிருந்து தண்ணீருக்குள் விறால் (= டைவ்) அடித்து என்னைப் பொறாமைப் படுத்துவான்.

அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி ஒரு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தான் எனக்கு.

"எங்கிட்ட ஒரு ஏரோப்ளேன் இருக்கு” என்றான் ஒரு நாள்.

"ஏரோப்ளேனா, நெஜம்மாவா? எனக்குக் காட்ட மாட்டியா?” என்று ஏங்கினேன்.

ஆகாயத்தில் உயரப் பறக்கிற விமானங்களை அண்ணாந்து பார்த்து அதிசயித்ததோடு சரி. சிட்டுக் குருவி சைஸுக்குத்தான் இருக்கும் விமானம்.

ரொம்ப ரொம்ப உயரத்தில் பறக்கிற விமானம் ஒரு புள்ளி மாதிரி இருக்கும். புள்ளிக்குப் பின்னாலொரு புகைக் கோடு ரொம்ப தூரத்துக்கு நீண்டு கிடக்கும்.

ஏரோப்ளேனுக்கும் எனக்குமுள்ள உறவு அநியாயத்துக்கு இப்படி அந்நியப்பட்டுக் கிடக்க, இந்தப் பயலோ சொந்தத்தில் ஒரு ஏரோப்ளேனே வைத்திருப் பதாய்ச் சொன்னால் ஏக்கங்கொள்ளாமல் என்ன செய்ய முடியும்!

அந்த ஏக்கத்தினூடே, மனசின் மூலையில் சின்னதாய் ஒரு சந்தேகம் இருந்தது.

ஏரோப்ளேன் சங்கதியைச் சொன்னவன் கொசுறாய் இன்னொன்றையும் சொன்னான். தன்னிடம் வாட்ச் ஒன்று இருப்பதாய்ச் சொன்னவன், அடுத்த நாளே அட்டகாசமாய் ஒரு வாட்ச்சைக் கையில் கட்டிக் கொண்டும் வந்து
விட்டதைப் பார்த்து அசந்தே போனேன்.

அந்த ஆகாய விமான அதிபரைப் பற்றி எனக்கு இருந்த சொற்ப சந்தேகமும் களையப்பட்டு விட்டது.

விமானமும் வாட்ச்சும் இருப்பதாய்ச் சொன்னவன், வாட்ச்சைக் கட்டிக் கொண்டு வந்து காட்டி ஒரு ஐட்டத்தை நிரூபித்து விட்டான். அப்படியென்றால் மற்ற ஐட்டமான ஏரோப்ளேனும் இருந்து தானே ஆக வேண்டும் என்கிற லாஜிக் என்னை அடித்துப் போட்டது!

அடுத்த நாள் அதிரடியாய் ரெண்டு கைகளிலும் வாட்ச்கள் கட்டிக் கொண்டு வந்து அவன் காட்டின போது எனக்கு இன்னொரு நியாயமான சந்தேகம் உதித்தது.

சந்தேகத்தை அவனிடமே கேட்டேன்.

"வாட்ச் ரெண்டு வச்சிர்க்கியே, அப்ப ப்ளேனும் ரெண்டு வச்சிர்க்கியா?"

"ஆ…ஆமா, ஆமா” என்று உடனடியாய் உண்மையை ஒப்புக் கொண்டவன், அவனுடைய ரெண்டு விமானங் களுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கினான்.

ஒரு விமானம் நார்மலானதாம், மற்றது கூர்மையான மூக்கு உடையதாம்.

நார்மலான விமானம் வானத்தில் வட்டமடித்து, மெது மெதுவாய்த் தரையிறங்குமாம். கூர் மூக்கு விமானம் சதக்கென்று மூக்கினால் தரையில் குத்திக் கொண்டு நிற்குமாம். பின்னது தான் எனக்குப் பிடித்திருந்தது.

"அது எனக்குல” என்று விண்ணப்பம் வைத்தேன். கொஞ்சமும் யோசிக்கவே யோசிக்காமல், "சரி வச்சிக்க” என்று வாரி வழங்கி விட்டுப் போய் விட்டான்.

அன்றைக்குப் போன சான்ராஜா, பல வருஷங்கள் கழித்து, நான் காலேஜுக்குப் போன பின்னால், மஹாத்மா காந்தி மார்க்கெட்டில் தான் கண்ணில் பட்டான், வாழைக் குலைகளோடு மல்லுக்கட்டியபடி.

இன்னும் பலப்பல வருஷங்களுக்குப் பின்னால் அதே மஹாத்மா காந்தி மார்க்கெட்டுக்குள்ளே இதோ நான் பிரவேசிக்கிறேன்.

****
(அடுத்த இதழில் முடியும்)

About The Author