மாறிவரும் கோணங்கள்

பாரதி வித்யாலயா பள்ளி வரவேற்பறையில் கவலையுடன் அமர்ந்திருந்தனர் கதிரின் பெற்றோர்கள். தன் மகனின் வகுப்பாசிரியர் வரச்சொல்லியிருந்ததால் சீக்கிரமே வந்து அவருக்காகக் காத்திருந்தனர்.

அவர்கள் கவலைப்படுவதற்கும் காரணம் இருந்தது. கொஞ்ச நாட்களாக கதிரின் போக்கு புதிராகவே இருந்தது. சிடுசிடுவென்று இருந்தான். முகம் கொடுத்துப் பேசுவதில்லை. படிப்பிலும் அக்கறை காட்டுவதில்லை. மார்க்குகளும் குறைந்து கொண்டே வந்தன.

ஒருநாள் கதிரின் அப்பாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பக்கத்துக்கடைக்காரர்தான் பேசினார்.

"சார் உங்க பையன் நாலஞ்சு நோட்டுகள் வாங்கினாரு. பணம் நாளைக்குத் தரேன்னாரு; இன்னும் தரலை. கேட்டுக்கோங்க அவரை."

அந்தச்செய்தியைக் கேட்டு அவமானப்பட்டுப் போனார்கள் அப்பாவும் அம்மாவும்.

கதிரைக் கேட்டதற்கு சரியான பதில் வரவில்லை.

"எல்லாம் நான் கொடுத்துருவேன்" என்றான் எரிச்சலுடன்.
 
இன்னொரு நாள் வேலைக்காரி வள்ளி தயங்கித் தயங்கி ஒரு தகவல் சொன்னாள்:

"அம்மா நம்ம கதிர்த் தம்பி, நடேசத் தாத்தா ஜுஸ் கடையில ஜுஸ் குடிச்சுதாம். காசு நாளைக்குக் கொண்டு வர்றேன்னு சொல்லிச்சாம். பிறகு கொடுக்கவேயில்லையாம். சின்னப்பையன் இதைப்போய் அவங்க வீட்டுல ஏன் சொல்லணும்… பக்கத்து வீட்டுக்காரங்க வேற… முன்னேயெல்லாம் கரெக்டா இருக்குமே தம்பி என்னாச்சு வள்ளின்னு என்னைக் கேட்டாரு தாத்தா. எனக்கு ‘பக்’குன்னு ஆயிருச்சு. ஏம்மா கொஞ்ச நாளாவே தம்பி மொகத்திலே களையே காணும். உடம்பு சரியில்லையா? டாக்டர்கிட்ட காமிச்சீங்களா? எனக்கு மனசு கேக்கலை. கேக்காமையும் இருக்க முடியல்ல…"

வள்ளியின் தகவலிலிருந்து மேலும் வேதனையால் தவித்தார்கள் பெற்றோர்கள். டாக்டரிடம் கூட்டிப் போவதற்குள் படாத பாடுபட்டு விட்டார்கள். ஒருவழியாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போயாகிவிட்டது. டாக்டர் பரிசோதித்துவிட்டு, "உடல்நிலையில் எந்தக் கோளாறும் இல்லை. மனதளவில் சோர்ந்திருக்கிறான். ஒரு நல்ல மனோதத்துவரிடம் கூட்டிப் போங்கள் சரியாய்விடும்" என்று கூற குழம்பிப் போனார்கள் அப்பாவும் அம்மாவும்.

எங்காவது பயந்து விட்டானா? நண்பர்களிடம் சண்டையா? ஒன்றுமே புரியவில்லை அவர்களுக்கு.

"ஏன் எழில், நீ எப்போதாவது ஏதாவது சொன்னாயா? நன்றாக யோசித்துப் பாரேன்…" அப்பா, அம்மாவிடம் கேட்க…

"நானும் இதைத்தாங்க உங்களைக் கேக்கணும்னு நெனச்சேன். எனக்குத் தெரிஞ்சு நான் எதுவும் சொல்லலைங்க…" என்று அழ ஆரம்பித்துவிட்டாள் அம்மா.

"சரி… சரி… அழாதே. ஒரு காரணத்துக்காகத் தானே கேட்டேன். நமக்குத் தெரிஞ்சு அவனைக் கலங்க விட்டதில்லையே நாம்… அவன் ஒன்று கேட்டால் உடனே நிறைவேற்றிவிடுவோமே… அவனுக்குப் பிடிச்ச பொம்மைகள்… உடைகள் எதில் குறை வைத்தோம்" யோசித்து யோசித்து ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

கதிர் அவன் வகுப்பாசரியை யாழினி டீச்சர் மேல் அதிக மதிப்பு வைத்திருந்தான். அவரிடம் கதிரைப்பற்றிச் சொல்லலாம் என்று முடிவு எடுத்தார்கள். தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டபோது இன்று நேரில் வரச்சொல்லி இருந்தார் யாழினி.
யாழினி பெயரைப் போன்றே இனிமையாகப் பேசினார். அன்புடன் தைரியம் தந்தார்.

"கவலைப்படாதீர்கள் மிஸ்டர் குணசீலன். கதிரின் அம்மாவுக்கு தைரியம் சொல்லுங்கள். சிறு குழந்தைகள் பலப்பல தாக்குதல்களை சந்திக்கும் சூழல்கள் ஏற்படும். இங்கே சற்று நேரம் அமர்ந்திருங்கள். நான் அவனை அழைத்துப் பேசுகிறேன். பிறகு முடிவு செய்யலாம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

குணசீலன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அம்மா எழில் பல தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தாள்.
அரைமணி நேரம் ஆகி இருக்கும். யாழினி டீச்சர் அதே புன்னகையுடன் வந்தார்… சிறிது வருத்தமும் முகத்தில் தெரிந்தது.
 
"என்ன மேடம்… ஏதாவது சொன்னானா…?"

"பதற்றப்பட வேண்டாம். தயவுசெய்து உட்காருங்கள். உங்கள் இருவரிடமும் பேச வேண்டியதிருக்கிறது. உங்கள் மகன்மேல் உங்களுக்கு கொள்ளைப்பிரியமா… சிறுவயது முதல் ரொம்ப செல்லமோ…?"

"ஆமாம்… ஆமாம். எங்கள் உயிராயிற்றே அவன்."

"அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவீர்களா?"

"ஆமாம்… உடனுக்குடன்…"

"காசு கேட்டால்…?"

"ஆசையாக அடிக்கடி கொடுப்போம்"

" தவறு இங்கேதான்… அவன் மனநிலை மாறியதற்குக் காரணம் நீங்கள் இருவரும் தான்."

"மேடம் என்ன சொல்கிறீர்கள்…?"

அம்மா எழில் தன்னை மீறி சத்தமாகக் கேட்டார்.

"உங்களை மிகவும் நேசிக்கிறானாம் கதிர். சின்ன வயதிலிருந்து அடிக்கடி ஆசையாக அவன் கேட்காமலேயே காசு கொடுப்பீர்களாம். அதை ரசிப்பீர்களாம். இப்போ ஏதோ டூ வீலர் கேட்டானாம். நீங்க சரியா பதில் சொல்லவில்லையாம். ஏதோ ஒரு தொகை கேட்டானாம். கொடுக்க வில்லையாம்…"

"ஐயோ… அதுவா… இந்த வயதில் டூ வீலர் எதுக்கு என்று தயங்கினோம். பெரிய தொகை நண்பனின் அண்ணாவிற்கு என்று கேட்டான். இந்த வயதில் கண்டவர்களுடன் சேர்ந்து பணத்தை அப்படி இப்படி என்று செலவு பண்ணும் பழக்கம் வந்துவிடும் என்றுதான் பதில் சொல்லலை. விசாரிக்கவும் கஷ்டமாக இருந்தது" என்றார் குணசீலன்.

"இது தான் தவறு. சின்ன வயதில் காசு கொடுத்து, அதையும் இதையும் வாங்கிக் கொடுத்து பழக்கி விடுகிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல பல பெற்றோர்கள் செல்லமாக பிள்ளைகளுக்குக் காசு கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். இப்போ கதிருக்கு நல்லதென்று நினைத்து தயங்கினதால் அவனுக்கு மனம் வேறுவிதத்தில் பாதிப்படைந்துவிட்டது."

"பெற்றோர்கள் மாறி விட்டார்களோ? ஏன் தயங்குகிறார்கள்… பணம்தான் குறியா? என்று வெறுப்புடன் உங்களை ஒதுக்கி இருக்கிறான். படித்து என்னாகப் போகிறது என்று படிக்காமல் இருந்திருக்கிறான். உங்களுக்கு வெறுப்பேற்ற வேண்டும் என்று பல காரியங்களைச் செய்திருக்கிறான். இப்போது பேசி உங்கள் உள்ளத்தைப் புரியவைத்திருக்கிறேன். நல்ல பிள்ளை புரிந்து கொள்வான். இப்போதுள்ள குழந்தைகளின் மனம் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பப்படும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லுங்கள். ஆரம்பம் முதலே தேவையான சலுகைகள் கொடுத்து பக்குவமாக எடுத்துக் கூறி வளர்க்கச் சொல்லுங்கள்" என்று டீச்சர் கூறவும் – கண்ணீர் சிந்தினார்கள் இருவரும். தங்கள் தவறை உணர்ந்தார்கள். யாழினி டீச்சருக்கு நன்றி கூறினார்கள்.
 
வேறு அறையிலிருந்த கதிர் அங்கு வரவழைக்கப்பட்டான். அவன் கண்களும் கலங்கி இருந்தன.

அம்மாவும் அப்பாவும் அவனை அணைத்துக் கொண்டனர். கதிரும் அவர்களை புரிந்துகொண்டவிதமாக அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். யாழினி டீச்சர் அதே புன்னகையுடன் கதிரின் தோள்களை தட்டிக்கொடுத்தார்.

******

(‘எட்டாவது அதிசயம்‘ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author