மிருகத்தைப் போன்று………

‘ஏன் இப்படி மிருகத்தைப் போன்று
கீழ்த்தரமாக நடந்துகொள்கிறாய்?’ என்றுகேட்கப்படுகிறது-பெண்களைக் கண்டதும்
காமவயப்படும் ஆணை நோக்கி!

கேட்கப்படுகிறது-
இரக்கமின்றி பிறர்
இரத்தத்தைக் குடிக்கும் பாவியை நோக்கி!

கேட்கப்படுகிறது-
சுய சிந்தனையோடு
எதையும் அணுகாத அறிவிலியை நோக்கி!

கேட்கப்படுகிறது-
மெத்தப் படித்தும்
நாகரிகமற்ற மேதாவியை நோக்கி!

மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிடுவதை
தயவுசெய்து நிறுத்துங்கள்!
அவற்றின் அருங்குணங்கள் அறியாமல்
அவற்றை அவமதிக்காதீர்கள்!

மிருகங்கள் எவையும்
நம்போல் நடந்து கொள்வதில்லை,
உண்மைதான்!

பாலியல் பலாத்காரங்கள்
அவற்றின் உலகில் அரங்கேறுவதில்லை;
பெட்டையின் ஒப்புதலின்றி,
கிட்ட நெருங்குவதில்லை எந்த ஆணும்!

அழகென்பது அவ்வுலகில்
ஆண்களுக்கே சொந்தம்;
ஆனபோதிலும் அங்கே உண்டு,
அன்பு வாழ்க்கைக்கான உத்திரவாதம்!

எனவே,
காமுறும் ஆணை மிருகமென்று கூறி,
காதற் பறவைகளையும், விலங்குகளையும்
கேவலப்படுத்தாதீர்கள்!

மிருகங்கள் முட்டி மோதும்
காரணம் அறிவீரோ?
தன் இனத்தை வழி நடத்த,
தலைவனாகும் தகுதி தனக்கிருப்பதையுணர்த்த,
சண்டையிட்டு வெல்லுதல் அவசியம்!

அங்கே,
தொண்டர்கள் எவரும் தீக்குளிப்பதில்லை;
வெடிகுண்டு, வெட்டரிவாள்களின் புழக்கமில்லை;
உட்கட்சிப் பூசல்களில்லை;
ஒன்றுபட்டு அத்தனையும்
உளமாற ஏற்கின்றன,
வென்றவனையே தலைவனாக!

எனவே,
கொடுங் குணம் கொண்டவனையெல்லாம்
மிருகமென்று கூறி,
வரையறுக்கப்பட்ட வாழ்க்கை வாழும்
விலங்குகளை இழிவுபடுத்தாதீர்கள்!

உதவாக்கரைகள் என்று
விலங்கினத்தில் எதுவுமில்லை;
எல்லா மிருகங்களும் வாழத் தெரிந்தவையே,
மனிதனைத் தவிர!

அனாதை இல்லங்களோ,
அபலைகள் மறுவாழ்வில்லங்களோ,
முதியோர் இல்லங்களோ
முற்றிலும் இல்லை மிருகங்களுக்கு!
நீதி மன்றமோ, காவல் நிலையமோ
நிச்சயமாய் இல்லை அவைகளுக்கு!

நாகரிகமற்றவைதான் மிருகங்கள்!-அவற்றின்
நற்குணத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்!

தெருவோரம் சிறுநீர் கழிப்பதில் அல்லாது,
நன்றியுணர்ச்சியில் நாயைப் பின்பற்றுங்கள்!
ஏய்த்துப் பிழைப்பதில் அல்லாது,
பகிர்ந்து உண்பதில் காக்கையைப் பின்பற்றுங்கள்!

தனித்த வாழ்வோ, கூட்டு வாழ்க்கையோ
தனக்கென்று, தன் இனத்திற்கென்று,
வரையறைகளைக் கொண்டு,
கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து,
தத்தம் கடமையைச் செய்யும்
மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு
அவற்றின் தரத்தைக் குறைக்காதீர்கள்!

யார் அறிவார்?
ஒருவேளை,
கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்
ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று,
‘ஏன் இப்படி மனிதனைப் போன்று
நடந்துகொள்கிறாய்?’ என்று
கேட்கக் கூடும் அங்கே!

About The Author

2 Comments

  1. P.Balakrishnan

    ஆறறிவு உடைய மனிதர்களைக் காட்டிலும் ஐந்தறிவு உடைய விலங்குகள் பல்வகையில் மேலானவை-அன்பு பாராட்டுவதில், அரவணைப்பதில், நன்றி செலுத்துவதில் இன்னபிறவும்…!.சிந்தனையைத்தூண்டும் கவிதை ! – அரிமா இளங்கண்ணன்

Comments are closed.