முகங்கள் (1)

இன்னும் முழுவதுமாய் விழித்துக் கொள்ளாமல் திலோக் ப்ளாங்கா வட்டாரமே அதிகாலைச் செல்லத் தூக்கத்தில் இருந்தது. ஐந்து நிமிடங்களில் பேருந்து நிறுத்ததை அடைந்து விடலாம். மின்தூக்கியை விட்டிறங்கியவளின் மூளையில் மாற்றுடை எடுத்து வைத்திருந்த பையை எடுத்துக் கொள்ள மறந்தது பளிச்சென்று நினைவு வந்தது. அடடா எப்படி மறந்தேன்?

இன்று வழக்கமாகப் பிடிக்கும் நூற்றியிருபத்தி நான்காம் இலக்கப் பேருந்தை இனி பிடிக்க முடியாது, இருந்தும் வேறு வழியும் இல்லையே என்று யோசித்த படியே மீண்டும் மின் தூக்கியின் பொத்தானை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். காலை வேளைகளில் பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் அதிகமென்பதால் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மின்தூக்கி மற்றும் கீழ்த்தளம் அனைத்தையும் பங்களாதேஷ் துப்புரவாளர்கள் சுத்தம் செய்ய ஆரம்பிப்பர். வீடமைப்புப் பேட்டைகள் நாற்றமின்றி சுத்தமாய் இருக்கிறதென்றால் இவர்கள் தயவினால் தானே.

பேசாமல் ஆறு மாடியும் ஏறிவிடலாமே, ஆனால் குளித்து உடுத்திய வெள்ளைச் சீருடை மீண்டும் வியர்வையில் நனையும், காத்திருப்பதே மேல். பொறுமையை அதுகம் சோதிக்கமால் மின் தூக்கி வரவே மின்னலாய் உள்ளே புகுந்து ஆறாம் மாடிக்குரிய பொத்தானை அழுத்தினேன். ஆறாம் தளத்தில் விரைவாய் வெளியேறி, எதிரில் வந்தவருக்கு இயல்பாய் உடலை நெளித்து வழிவிட்டு, தளத்தின் மூலை வீடான எங்கள் ஐந்தறை வீட்டையடைந்தேன்.

அதற்குள் எப்படி அடுக்கு மாடிக்கட்டடத்தின் படிகள் வரை ஒரே வெள்ளம். அடுத்த வீட்டு யீபிங் தான் எங்கள் வீட்டின் முன்பும் தன் வீட்டின் முன்பும் தாராளமாகத் தண்ணீரைக் கொட்டிக் கழுவியிருந்தார். மருத்துவனை வாசனைக்குப் பழக்கப்பட்ட என் மூக்கையே தாக்கியது அவர் உபயோகித்திருந்த செயற்கைக் கிருமி நாசினியின் வாசம். குப்பி முழுவதையும் ஒரே நாளில் தீர்த்து விட்டாரோ.

படீரென்று தன் வீட்டுக் கதவைச் சாத்தி விட்டு உள்ளே நுழையும் முன் வழக்கத்திற்கு மாறாக என் புன்னகையை அலட்சியம் செய்தபடி, என்னை ஒருமுறை வினோதமாகப் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்தபடி வீட்டினுள் போனார். அவரது செயல் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அவருடைய எட்டு வயது மகன் ஜுன்ரோங் வீட்டுச் சன்னல் வழியாக என்னைப் பார்த்து கையசைத்தான். இத்தனை அதிகாலையில் அழுந்து இவன் என்ன தான் செய்கிறான். பதிலுக்குக் கைசைத்த நான் அவசர அவசரமாக வீட்டுக் கதவைத் திறந்தேன்.

வீட்டுக் கதவைத் திறந்து வாயிலருகே கிடந்த தினசரியைக் கையில் எடுத்து ஒரு அவசரப் பார்வை செலுத்தினேன். கொட்டை எழுத்தில் ஈராக் போர், இரண்டாம் பக்கமும் ஈராக் போர். சலிப்புடன் தாளை மேசையில் போட்டுவிட்டு, என் பையை எடுத்துக் கொண்டு நுழைந்த வேகத்தில் வெளியேற நினைத்த என்னைத் தொலைபேசியின் அலறல், சட்டென்று திடுக்கிட வைத்தது.

தம்பி எழுவதற்கு நிச்சயம் இன்னும் நேரம் ஆகும். அண்ணனும் அண்ணியும் எழ இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். அப்பாவும் அம்மாவும் தெம்பனீசிலிருக்கும் அக்கா வீட்டிற்குப் போயிருந்தனர். ஆக, தொலைபேசியை எடுக்க என்னைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. எனக்கிருந்த அவசரத்தில் எரிச்சலுடன் தான் எடுத்தேன். பாண்டிச்சேரியிலிருந்து அண்ணியின் அப்பா தான் அழைத்திருந்தார். எரிச்சலை மறந்து, வழக்கமான குசலம் விசாரித்து விட்டு இரண்டு மணிநேரம் கழித்து அழைக்கும்படி அவரிடம் அன்புடன் மணிந்தும் அவர் விடுவதாய் இல்லை. அவர்களெல்லோரும் தூங்குகிறார்களென்று மறுபடியும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். இந்திய நேரம் பின்னிரவு மூன்றரையிருக்குமே, இரவெல்லாம் தூங்காமல் மகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றனரோ, வீட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பினேன்.

அடுத்த வீட்டு யீபிங் இம்முறை மறுபடியும் ஒரு வாளித் தண்ணீரோடு முகம் நிறைய சலிப்போடும் காத்திருந்தார். என்னைப் பார்த்ததும், "செல்வி, உனக்கு காய்ச்சல் இருக்கா? நீ எங்க வீட்டைக் கடந்து போகும் போதும், வரும் போதும் எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு தெரியுமா? உனக்கு ஏதும் அறிகுறிகள் தோன்றும் முன்னரே நீ ஏன் உன் அக்கா வீட்டுக்குப் போய் விடக் கூடாது? சின்னப் பிள்ளைங்க இருக்கிற இடம் பாரு," என்று பீடிகை ஏதுமின்றி முகத்திலறைந்தாற் போல் கேட்டார். அக்கா வீட்டுப் பக்கத்தில் மட்டும் பிள்ளைகளே இல்லையோ, அக்கவிற்கே இரண்டரை வயது மகளுண்டு என்று யீபிங் அறிவார். "எனக்கு காய்ச்சல் இல்லையே, இருந்தால் நான் வேலைக்குப் போவேனா?" அவருக்கு விளக்கமாய் பதில் சொல்லவோ, வாக்குவாதம் செய்யவோ எனக்கு நேரமிருல்லாதிருந்தால், நீள அகலமான ஒரு சிரிப்பைக் கொடுத்து விட்டு மின் தூக்கியை நோக்கி ஓடினேன்.

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author