மொசக்குட்டி

சாவடிக்கு எதிரே அடி குழாய்க்கு அருகில் சங்கிலியும், அவன் பொண்டாட்டி செல்வியும் நெருப்பு வளர்க்கக் கடப்பாரையால் குழி போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடம் நாற்சந்தியில் அமைந்திருந்தது. சற்று முன்புதான் செல்வி தெருவழியே போய் சப்தம் வைத்துவிட்டு வந்தாள்.

‘பழைய ஈயப் பாத்திரத்துக்கு ஓட்டை அடைக்கிறது….’ … இதை நெடிய இராகத்தில் குரல் இழைய இழுத்துவிட்டு… பாத்திரங்களை வைத்துக்கொண்டு வாசலில் நிற்கும் பெண்களிடம்போய், விசாரணை செய்து, கூலி பேசி ஓட்டைப் பாத்திரங்களைக் கொண்டு வந்து அடுக்கி வைத்திருந்தாள்.

அடுப்புப் பற்ற வைப்பதற்கான ஆயத்த வேலைகளைச் செய்துமுடித்த சங்கிலி… மரப் பெட்டியிலுள்ள தளவாடச் சாமான்களைக் கொட்டிவிட்டான். அப்போது அவன் சலசலவென்று எதையோ பேசிக்கொண்டிருந்தான். அவன் எப்போதும் அப்படித்தான். பேச்சை நிறுத்துவதே இல்லை. செல்வி எதுவும் பேசுவதில்லை. அவன் பேசுவதற்குப் பதில் கூடவா பேசாமல் இருப்பாள்? இருந்தாள். அவளுக்குச் சங்கிலியின் பேரில் சங்கடமுமில்லை. அவன் பேசுவதை இரசிப்பது போலவே மெல்லிய சந்தோஷம் இழையோடுவதான புன்னகையில் மௌனமாக இருந்தாள்.

அடிகுழாய்க்குச் சற்றுத் தள்ளி பிரபு நாய்க் குட்டியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். நேற்றைப் போலவே அந்தப் பூவீட்டுக்காரப் பையன், பிரபுவையும், அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

வெள்ளையும், குங்கும நிறமுமான காகிதப் பூக்கள் குடை பிடித்து நிற்கும்… பெரியதான கம்பிக் கதவு போட்ட வீடு. அந்த வீட்டுக்கு எதிரே தான் நேற்று அப்பன் சங்கிலியும், …அம்மா செல்வியும் ஈயப் பாத்திரங்களுக்கு ஓட்டை அடைத்தார்கள். வேப்ப மரத்தடியில் நாய்க்குட்டியுடன் விளையாடிய பிரபுவை அந்தப் பையன் நேற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

…இன்று இங்கே வந்திருக்கிறான்.

நாய்க்குட்டியின் கழுத்தில் குட்டையான ரிப்பனைக் கட்டி வைத்திருந்தான் பிரபு. பிடியை விட்டுவிட்டு அடிகுழாயைச் சுற்றிச் சுற்றி ஓடிவந்தான். அவனைத் தொடர்ந்து ஓடிவந்த அந்த நாய்க்குட்டியின் காதுகளிரண்டும் விடைத்து எம்பி எம்பிக் குதித்ததில்… முயல் குட்டியின் தோற்றத்தில் தெரிந்தது.

"மொசக்குட்டி…. மொசக்குட்டி…!" என்று கத்தியழைத்தபடி ஓட்டத்தைத் தொடர்ந்தான். நாய்க் குட்டியைவிட முயல் குட்டி உயர்ந்ததா…?… இல்லை. அது வேறு உரு. உரு மாறுபடுகிறபோது அப்படிக் கூப்பிடத் தோணுகிறது. அவ்வளவுதான்.

என்னதான் வளர்த்தாலும் முயல்குட்டி இப்படிப் பின் தொடர்ந்து ஓடிவருமா?

பூவீட்டுக்காரப் பையன் பார்த்துக்கொண்டு நிற்கிறான் என்பதற்காக… பிரபு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க, நாய்க் குட்டிக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. கால்களை நேராகக் குரைத்தபடி ஓடிவந்த நாய்க்குட்டியைப் பார்த்துச் சிரித்தான். கோபப்படுத்தியதில் பிரபுவுக்கு சந்தோஷம்.

இதெல்லாம் அதன் மீதுள்ள பிரியம்தான்.

ஓடிவர முடியாமல் நின்று கொண்டு குரைத்த நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டான். அவன் இப்படி ஓட்டம் காட்டும்போதெல்லாம் கடையில் பிஸ்கோத்து வாங்கத்தான் ஓடுகிறானென்ற நினைப்பில் வாலை ஆட்டியபடிக் குழைந்துகொண்டு ஓடிவரும். அப்பன் சங்கிலி கொடுத்த கால் ரூபாய்க்கு காலையில்தான் பிஸ்கோத்து வாங்கிப் போட்டான். அது நித்திய வாடிக்கை என்பதனால் அந்த நாய்க்குட்டி அவன் காலைச் சுற்றியே ஓடிவரும்…

சங்கிலி பாத்திரங்களைத் தூக்கிப் பார்த்து ஓட்டை தேடி… ஈயக் குறி போட்டு அடைத்துக் கொண்டிருந்தான். துருத்தி ஊதிக்கொண்டிருந்த செல்வி… எழுந்து, தூக்குப் போணியை எடுத்துவந்து… அடிகுழாயில் தண்ணீர் அடித்துக் கொண்டு போகும்போது, பிரபுவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனாள். இப்படியான வேளைகளில் துருத்தி ஊதப் பிரபுவுக்குப் பிடிக்கும். ஓடிச் சென்று ஊதுவான். சீராக இல்லாமல் தீப்பொறி கிளம்பும்…

…கண்டிப்பைச் செல்லமாகக் காட்டி, அனுமதிக்க மறுத்துவிடுவான் சங்கிலி.

இந்த நாய்க்குட்டி வந்ததிலிருந்து அந்தத் தொந்தரவு இல்லை. பிரபுவிடம் செல்லங் கொஞ்சிக் கொண்டிருந்த நாய்க்குட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பூவீட்டுக்காரப் பையன்… வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த அவனது அம்மாவைக் கண்டதும் ஓடிப் போய்விட்டான்.

***

இப்போதெல்லாம் ஒரு ஓரத்தில் ஒரு பாகம் அளவுக்குக் கழிவு நீரோடு ஆற்றுநீரும் போய்க் கொண்டிருக்கிறது. பாலத்தின் அடியில் தேங்கிய குப்பைகளினூடே கத்திக் கொண்டிருந்த அந்த நாய்க் குட்டியை ஒரு காலை வேளையில் சங்கிலிதான் தூக்கிக்கொண்டு வந்தான்.

பிரபுவுக்குப் பிடித்துப் போகவே பேரும் வைத்துவிட்டான்.

‘மொசக்குட்டி!’

அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்த பூவீட்டுக்காரப் பையன் பிரபுவிடமிருந்த நாய்க் குட்டியைக் கைநீட்டிக் காட்டினான். அவனுடைய அம்மா முகம் முழுக்கப் புன்னகைத்துக்கொண்டு சங்கிலியிடம் போய்…

"அந்தக் குட்டி நாய் என் பையனுக்கு வேணும். காசு தர்றோம்!" என்று சொல்லிக் கேட்டாள். சங்கிலி செலவுக் கணக்குச் சொன்னான். தினமும் பால் வாங்கி ஊற்றுவதாகப் பொய்யைச் சொல்லி… நாய்க் குட்டியை அபூர்வமாக்கிப் பேசினான்.

பத்து ரூபாயிலிருந்து முப்பத்தைந்து ரூபாய் வரை விலை ஏறிக்கொண்டு போனது. பூவீட்டுக்காரப் பையனின் அம்மாவுடன் அப்பன் நடத்திய பேரத்தில் பிரபுவுக்கு உடன் பாடில்லை. அவன் வயிற்றை எக்கி, டிரவுசரை அருணாக்கயிற்றில் செருகிக் கொண்டு, தளவாடச் சாமான்கள் உள்ள பெட்டியைக் காலால் எட்டி உதைத்து எதிர்ப்பைக் காட்டினான்.

தூக்குப் போணியில் உள்ள தண்ணீரைத் தீயில் தெளித்து விட்டான். புர்ர்ர்ரென்று சாம்பல் கிளம்பியது.

செல்வி, மகனை அடிக்கக் கை ஓங்கினாள். அவளைக் கடுமை காட்டி முறைத்தான் சங்கிலி. விலை திகையாமல் போகவே பூவீட்டுக்காரப் பையனின் அம்மா அவனை இழுத்துக்கொண்டு போனாள். அவன் நாய்க்குட்டி வேண்டும் என்று உதறி அடம் பிடித்தான்.

சங்கிலிக்கு மகன் மீது அப்போதுதான் கோபம் வந்தது.

"நெருப்புல தண்ணி ஊத்துறியே… வேற நாக்குட்டி கெடைக்காதா…?" என்று கத்தினான். இன்னும் மகனின் மீது கோபம் தணியாதிருந்தாள், செல்வி. சங்கிலி ஏதேதோ பேசினான். பற்றவைத்த பீடியை வாயிலிருந்து எடுக்காமல் உதட்டோரம் ஒதுக்கி வைத்தபடிப் பேசினான். அவள் அவனையும் முறைத்தாள்.

பூவீட்டுக்காரப் பையனைக் கூட்டிக்கொண்டு மறுபடியும் அவன் அம்மா வந்தாள். அவள் கையில் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அதைச் சங்கிலியிடம் நீட்டித் திறந்து காட்டினாள்.

…அழகான சூட்டும் சட்டையுமிருந்தது. பழையதுதான் என்றாலும் பிரபு இப்படி உடுப்பைக் கண்டிருக்கமாட்டான். அந்த உடையில் மகனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் அப்பனுக்கு அப்போதே அரும்பிவிட்டது.

அந்த அட்டைப் பெட்டியை வாங்கி சூட்டையும், சட்டையையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தான் சங்கிலி. ஆச்சரியப்பட்டதில் அவனது புருவங்கள் மேலும் வளைந்தன. மகனையும் கையிலுள்ள உடுப்பையும் மாறிமாறிப் பார்த்தான்.

"பிரபு அந்த நாக்குட்டியைத் தூக்கிக் குடு!"

அதைக் காதில் வாங்காதது போல கடுப்பாகிப்போய் இருந்தான் பிரபு. பரமசாது போல் படுத்துக் கிடந்தது நாய்க்குட்டி. செல்வி, அதைத் தூக்கி பூவீட்டுக்காரப் பையனிடம் கொடுத்துவிட்டாள்.

அரைக்கால் சட்டையுடன் அம்ர்ந்திருந்த மகனைச் சமாதானப்படுத்த எண்ணிய சங்கிலி, அட்டைப் பெட்டியிலுள்ள சட்டையை எடுத்து, பொத்தான்களை அவிழ்த்து மகனுக்கு அணிவித்துவிட எத்தனித்தான். செல்விக்குக் கோபம் வந்து விட்டது. விழிகள் சுருங்கிக் கூர்மைப் பட்டன.

"அத வையி!" …சங்கிலியை அதட்டினாள். அவன் அரண்டுதான் போனான்.

"சாக்கடையில பொரண்ட நாய்க்குட்டியத் தூக்கி அடி வயித்துல வச்சிருந்தான்…. அவனக் குளுப்பாட்டி எடுத்த பிறகு அதப் போட்டு அழகுபாரு!"… இப்படிச் சரியான நேரத்தில் பேசி விடுவாள். அதனாலேயே அவளது வார்த்தைகள் முக்கியம் பெற்றுவிடுகின்றன. சங்கிலி மூச்சு விடவில்லை. அவன் மகனைப் பார்க்க… பிரபுவின் பார்வை பூவீட்டுக்காரப் பையன் கொண்டுபோன நாய்க்குட்டியின் மீதே போய்க் கொண்டிருந்தது.

***

மரப்பெட்டியில் தளவாடச் சாமான்களை அள்ளிப் போட்ட செல்வி, தண்ணீரை எடுத்து தீக்குழியில் ஊற்றி அணைத்தாள். சாம்பல் சீறியது. சங்கிலி மகனைத் தூக்கிக் கொள்ளப் போனான். அவன் விலகிக்கொண்டான். ஒவ்வொரு வீடாகச் சென்று பாத்திரங்களைப் பட்டுவாடா செய்துவிட்டுக் காசு வாங்கிக்கொண்டு வந்த செல்வி… மரப்பெட்டியைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு முன்னே நடந்தாள்.

…அப்பனும் மகனும் அவளைத் தொடர்ந்தனர்.

சூட்டும், சட்டையும் இருந்த அட்டைப் பெட்டியைப் பிரபுவிடம் கொடுத்தான், சங்கிலி. அதை வாங்கிய அவன் திறந்து பார்த்தான்.

…மொசக்குட்டியின் இழப்பு வலித்தது.

சமாதானப்படாதது போல் மகனின் முகம் இறுகியிருந்ததை அப்பன் பார்த்தான். அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

"குளிச்சிட்டுப் போடு பிரபு… தொரமாருக மாதிரியே இருப்பெ!" என்று சொன்ன சங்கிலி, திரும்பிய செல்வியைப் பார்த்துக் கண்சிமிட்டினான். அவள் ஒலி வராமல் சிரித்தாள்.

குளத்தங்கரை முக்கு திரும்ப வேண்டும். ஒரு முறை திரும்பி அந்த வீட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது பிரபுவுக்கு. நின்று திரும்பிப் பார்த்தான். வெள்ளையும் குங்கும நிறமுமாய் அடர்த்தியான காகிதப் பூக்களின் முழு வடிவமே மொசக்குட்டியின் வடிவத்தில் தெரிந்தது.

…சங்கிலியும் செல்வியும் மகனை வினோதமாகப் பாத்தபடி நின்றனர்.

பூவீட்டுக்காரப் பையன் கையை நீட்டிக் கத்தியபடி ஏதோ கூறிக்கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தான்.

அவன் கத்துவதுதான் இன்னதென்று புலப்படவில்லை. அவன் சற்று வேகமாகவேதான் ஓடிவந்தான். மறுபடியும்கூட அவன் கத்தினான். ஏனென்று தெரியவில்லை. அவன் ஓடிவந்து கொண்டிருந்தபோது அவனுக்கு முன்னே நாய்க்குட்டி ஓடிவருவது தெரிந்தது.

…ஓங்கி விடைத்த காதுகள் அதிரக் கத்திக்கொண்டே வந்தது, அந்த நாய்க்குட்டி.

"யப்பா… அங்க பாரு மொசக்குட்டிய…!"

அப்பனிடம் பிரபு கை நீட்டிக் காட்டிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாய்க்குட்டி வந்துவிட்டது.

அவன் கால்களைச் சுற்றிச் சுற்றிக் குழைந்தது.

செல்லங் கொஞ்சி முனகியது.

கையில் இரும்புச் சங்கிலியுடன் மூச்சிரைக்க ஓடிவந்து நின்றான் பூவீட்டுக்காரப் பையன். அவன் கையிலுள்ள சங்கிலி ஆடியது.

"சங்கிலி மாட்டணும்னு பாத்தா ஒரே ஓட்டமா ஓடியாந்திருச்சு…!" என்று சொன்னான் அந்தப் பையன்.

…நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்ட பிரபுவின் கீழிமைகளில் நீர் தளும்பி நின்றது.

"மொசக்குட்டி எங்கிட்டயே இருக்கட்டும்ப்பா…!" என்று சொல்லியவாறு, உடுப்புகளடங்கிய அட்டைப் பெட்டியை பூவீட்டுக்காரப் பையனின் கையில் திணித்து விட்டான்.

(குமுதம் ஸ்பெஷல், நவம்பர் 1995)

About The Author