வல்வரவு (1)

ஷண்முகப்ரியா சென்றுவிட்டாள். கணவன் செண்பகராமன் முன்பாகவே, தனக்கு வேண்டிய முக்கியப் பொருட்களான சேலை, ஜாக்கெட், டூத் பிரஷ், என்று போய்ப் போய் எடுத்துப் பெட்டியில் சேர்த்து மூடி, பெட்டியோடு படியிறங்கி போய்விட்டாள்.

அவனும் போகாதே என்று சொல்லவில்லை. சொல்லப்போனால் ஏதோ ஒருவகையில் சுதந்திரம் பெற்றதுபோல, கால்விலங்கு கழன்றதுபோல உணர்ந்தான்.

பெண்டாட்டி என்றால் இப்படியா ஒருத்தி இருப்பாள்? ஆதிக்க உரிமைதான் அன்பா? கல்யாணத்துக்கு முன் தன் கணவனை இப்படியெல்லாம் ஆட்டிப் படைக்க வேண்டும் என்று தீர்மானத்துடன் வந்தவளாகத் தெரிந்தாள்.

கணவன் மனைவியிடையே ஒரு பிணைப்பு என்றால், கணவனுக்குப் பிடித்தது மனைவிக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும். அதேபோல அவளுக்குப் பிடிக்கிறது என்பதால் அது அவனுக்கும் பிடிக்க வேண்டும். காதல் என்பதன் முழுப்பொருள் அதுதான்.

ஷண்முகப்ரியா விலகியவளாக இருந்தாள். நிஜமாகவா அல்லது வேண்டுமென்றேவா என்றே புரிந்துகொள்ள முடியவில்லை.

”ஏங்க, முருங்கைக்காய் இருக்கு, வத்தக்குழம்பு வைக்கவா, சாம்பார் செய்யட்டுமா?”
”உனக்கு எது பிடிக்குமோ அதைப் பண்ணு…” என்றான் அவன்.
”நீங்க சொல்லுங்க…”
”வத்தக்குழம்பே வை.”
”ஏங்க?”
”முருங்கை மணத்தோட குழம்புல சாதத்தை நல்லாப் புரட்டிப் பிசைந்து உருட்டி உருட்டி உள்ள தள்ளறதே தனி சுகம்…”
”பருப்போட முருங்கை சேர்ந்தாலே அந்த ருசியே தனிதாங்க.”
”சரி இப்ப என்னாங்கறே? கேட்டே, சொன்னேன். சாம்பார் வைக்கிறதானா என்னைக் கேட்பானேன்?” என்றான் எரிச்சலுடன்.
”நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டுக்கிட்டு, அப்பறம் செய்யலாம்னிருந்தேன்…”

அப்பறம் ஏறுக்கு மாறாச் செய்யலாம்னு இருந்தியாக்கும்… அவன் சொல்லவில்லை. பார்வையில் உணர்த்தினான்.

இதேபோலத்தான் ஜவுளிக்கடையில். இரண்டு சேலைகளை எடுத்து வைத்துக்கொண்டு எதை வாங்கலாம் என்று கேட்பாள். உனக்குப் பிடித்ததை எடுத்துக் கொள், என்பான். நீங்க சொல்லுங்க, என்பாள், ஏதோ அவன் விருப்பப்படி நடந்து கொள்கிறாப் போல. சொன்னால், மற்ற சேலைதான் வாங்குவாள்.

வெறுத்துப் போய்விட்டது அவனுக்கு.

ருவருமே வேலைக்குப் போகிறார்கள். அவள் சம்பளம் நாற்பதாயிரம். பிடித்தம் எதுவும் கிடையாது. அவனுக்கு அவசரக் கடனுதவி என ஏற்பட்ட பிடித்தங்கள் போக இருபத்தியஞ்சு. அவள் ஊதியம் அப்படியே மாதாமாதம் ரெகரிங் டெபாசிட் என்று வங்கியில். ஆகவே தான் அதிகம் சம்பதிக்கிற ஆணவம். தைரியம். செண்பகராமன் கல்யாணத்துக்கு முன்பே இம்மாதிரி இக்கட்டுகளை எதிர்பார்த்திருந்தான். சற்று அவள் உரத்துப் பேசினாலும் தான் இணக்கமாய்ப் போவதே அறிவுடைமை என ஒரு நினைப்பிருந்தது அவனில்.

அன்றைய விவாதம் மிகப் பெரிதாக வளர்ந்து விட்டது.

அவனிடம் ஸ்கூட்டர் இருந்தது. அவன் மனைவி புதிய ஸ்கூட்டியில் வேலைக்குப் போய் வந்தாள். அவனது வாகனம் பழையது. மறைகள் எல்லாம் தேய்ந்து ஹார்னுக்கு வேலையில்லாமல் இருந்தது. புதிதாய் மோட்டார் பைக் வாங்குவதாக அவளிடம் அவன் அறிவித்தான்.

”வேணாங்க” என்றாள் தீர்மானத்துடன்.
”ஏன்? நடந்தே ஆபிஸ் போ..ன்றியா?”
”கார் வாங்கலாங்க…”
”காரா?”
”ம்”. குரலில் பவ்யத்துக்குக் குறைச்சல் இல்லை!
”சரி, எங்க நிறுத்துவே அதை?”
”ஏன் வீட்டு வாசல்லதான்.”
”இந்தத் தெருவே குறுகல். மனுஷங்க போக வர, மத்த வாகனங்கள் போக, எல்லாமே இடைஞ்சலா இருக்கும்.”
”மத்தவங்களைப் பத்தி நாம ஏன் கவலைப்படணும், அவங்க நம்மளைப் பத்திக் கவலைப்படறாங்களா?”

இந்தக் கேள்வி செண்பகராமனுக்கு அபத்தமாகப் பட்டது. நாகரிகம் கற்றவள், படித்தவள், பண்பாடு தெரிய வேண்டாமா? முகத்தில் ஏன் இத்தனை உக்கிரம்? கணவன்தானே, வளைத்து விடுவேன், என்ற இறுமாப்பு.

பொறுமை! ”கார் வாங்கணும்னா மூணு லட்சம். தர்றியா?” என்றான்.
”நான் ஏன் தரணும்?” என்றாள். ”உங்க சேமிப்புலேர்ந்து எடுத்துக்கங்க…”
அதைச் சொல்ல இவ என்ன அண்ணாவி? – அடக்கிக்கொண்டான். ”என்ட்ட அவ்ள பணம் இல்லை.”
”பாங்க்ல கடன் வாங்கலாம். மாசா மாசம் அடைச்சிறலாம்.”
ஏறிட்டு எரித்து விடுவது போலப் பார்த்தான். ”கார் வாங்கப் போறது இல்லை” என்றான்.
”வாங்கணும்.”
”மாட்டேன். அப்டி வாங்கணும்னா பணம் கொடு.”

இதுதான் பிணக்கு. பிரிவுக்கான காரணம்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author