விரல் தொட்ட வானம் – வெப்பம் சுமந்து

வெப்பம் சுமந்து

மதுவால் நிரம்பி வழிகிறது
கிண்ணம்.

தடித்தது
மெலிந்தது
மடங்கியது
உள்வாங்கியது
ஈறுகள் தெரிய
வெளி வாங்கியது
கருத்தது, சிவந்ததுமாய்
நகர்வலம் வருகின்றன

கண்களில் போதை தெறிக்கத் தெறிக்க
எண்ணற்ற உதடுகள்
ரசித்து ருசிப்பதற்கு

தெரு முனையில்
மளிகைக் கடையின்
ஒரு ரூபாய்த் தொலைபேசி அருகில்
தேநீர்க் கடை இருக்கையின் விளிம்பில்
தன் சுயம் காட்டி இளிக்கின்றன.

அழுக்கைச் சுமந்தபடி
சுத்தமான உதடுகளுக்காக
தவமிருக்கிறது இன்னும்
அந்தக் கிண்ணம்
எந்தவிதமான உதடுகளின்
அடையாளமும் இன்றி
வெப்பம் சுமந்து.

About The Author