விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (31)

6.கர்ம யோகத்தின் நிறைநிலை

6.6.எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Vivekanandar

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பராநகர் மடத்தில், உடன் பயிலும் மற்ற சீடர்களுடன் விவேகானந்தர் (இடப்புறமிருந்து மூன்றாமவராக நிற்பவர்) 1887இல் எடுத்துக் கொண்ட படம்.

கர்ம யோகம் சொல்லும் முதல் பாடம், சுயநலம் தலைதூக்கும் போக்கை முதலில் ஒழித்துவிட வேண்டும்! அதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் வந்தவுடன் அதிலே நிலைபெற வேண்டும்! மனதைச் சுயநல வழியில் செல்ல அனுமதிக்கக் கூடாது! இதற்குப் பிறகு, நாம் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். எல்லோருடனும் பழகலாம். தீமை நம்மைத் தொற்றிக் கொள்ளாது. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டிக் கொள்வதில்லையே! இந்த நிலைக்குப் பெயர்தான் வைராக்கியம் -பற்றின்மை- என்பது. பற்றின்மை இல்லாத யோகமே கிடையாது. அனைத்து யோகங்களின் அடிப்படையும் பற்றின்மையே! வீட்டைத் துறந்து, நேர்த்தியான உடை அணியாமல், நல்ல உணவு அருந்தாமல், பாலைவனத்துக்குச் சென்று வசிக்கும் மனிதன் கூட மிகவும் பற்று நிறைந்தவனாக இருக்கலாம். அவனது ஒரே உடைமையான உடம்பே அவனுக்குப் பெரிய பந்தமாக இருக்கலாம். உடம்புக்காகவே அவன் போராடிக் கொண்டிருக்கலாம். பற்றின்மை என்பது நமது புற உடலைப் பற்றியதோ, நாம் செய்யும் எந்தக் காரியத்தையும் பற்றியதோ இல்லை. அது நம் மனது சம்பந்தமான விஷயம். "நான், எனது" என்கிற பிணைப்புச் சங்கிலி மனத்தில் இருக்கிறது. உடலுடனும், புறப்பொருட்களுடனுமான இந்தப் பிணைப்புச் சங்கிலி இல்லாவிட்டால் நாம் சுதந்திரர்களே! எங்கு வேண்டுமானாலும் போகலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!

முதலில், இந்தப் பற்றற்ற நிலையை அடைய வேண்டும்! பின்பு, தொடர்ந்து இடையறாது உழைக்க வேண்டும்! எல்லாப் பற்றுக்களையும் துறப்பது கடினம்தான். அதற்கான வழிவகையைக் கர்ம யோகம் நமக்குச் சொல்லித் தருகிறது. அனைத்துப் பற்றுக்களையும் நீக்க இரண்டு வழிகள் உண்டு. முதல் வழி, கடவுள் மீதோ புற உதவிகளிலோ நம்பிக்கை இல்லாதவர்களுக்கானது. அவர்களுக்கான வழிமுறைகளை அவர்கள் தாங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது மனத்திட்பத்தினால், ஆற்றலினால், விவேகத்தினால், "நான் பற்றற்று இருக்க வேண்டும்" எனும் திட உறுதி பூண வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேறு வழி இருக்கிறது. இந்த வழி சுலபமானது. அவர்கள், பலன்களை 

இறைவனுக்கு அர்ப்பணம் எனச் சொல்லி விட்டு உழைக்கிறார்கள். பலனில் அவர்களுக்குப் பற்று இருப்பதில்லை. அவர்கள் பார்ப்பது, கேட்பது, செய்வது, உணர்வது எல்லாமே இறைவனுக்காகத்தான். நாம் செய்யும் நற்காரியங்களுக்கான பலனுக்கோ, பாராட்டுக்கோ உரிமை கொண்டாட வேண்டாம்! எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒதுங்கி நின்று, "அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. அவர் பணியைத்தான் நாம் செய்கிறோம். ஒவ்வொரு வினாடியும், நமது ஒவ்வொரு செயலுக்குமான உந்துதலும், அவரிடமிருந்தே வருகிறது" எனக் கொள்வோம்! நாம் வணங்குவது, காண்பது, செய்வது அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, மனத்தை ஓய்வாக வைத்திருப்போம்! நம்முள் நாம் பூரண அமைதியாக இருப்போம்! பாரதியின் "சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்" இந்த மனப்பாங்கைத் தெளிவாக எடுத்துச் சொல்லும். வேள்வித் தீயில் நெய் சொரிவதற்குப் பதிலாக, இந்தச் சின்ன "நானை"ச் சமர்ப்பிப்பது மேலானது. இரவும் பகலும் இந்த வேள்வியைச் செய்வோம்! "நல்லது, தீயது, நடுவானது எதுவுமே எனக்கு ஒன்றுமே இல்லை; நான் அதைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது."

நன்றே வரினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயுமில்லை; உனக்கே பரம்; எனக்குள்ளவெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

என்று அபிராமி பட்டர் பாடியது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

எப்போதும் இதை மனத்தில் நினைவு கொண்டு, சின்ன நானைத் துறப்போம்! இதுவே நமக்குப் பழக்கமாகட்டும்! இரத்தத்தில், நரம்புகளில், மூளையில், உடல் முழுதும் அதுவே வியாபித்துத் தன்னல மறுப்பு என்பது நம் இயல்பாக அமையட்டும்! அதன் பிறகு, போர்க்களத்தின் நடுவில், பீரங்கிக் குண்டுகளுக்கு மத்தியில் இருந்தாலும் நாம் சுதந்திரமாக, ஆழ்கடல் அமைதியில் ஆழ்ந்திருப்போம்! போர்க்களத்தே பர ஞான மெய்க்கீதையைக் கண்ணன் புகன்றது கூட இந்த மன நிலையை நமக்கு விளக்கக் கூடும்!

(தொடரும்)

About The Author