விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (22)

4. யோகம் என்பது கடமையில் திறமை
 
4.6 அறிவிலே தெளிவு; நெஞ்சிலே உறுதி

சென்ற இயலில் workaholics (வேலை அடிமைகள்) பற்றிச் சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டோம். அதில் சில விளக்கங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. ஓர் இலக்கு (target), கெடு (dead-line) வைத்துக் கொண்டு பணியாற்றும்போது "மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது" உழைக்க வேண்டியதுதான். சுவாமி விவேகானந்தர் உட்படக் கர்ம யோகிகள் பலரும் அவ்வாறு உழைத்தும் இருக்கிறார்கள். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம்மைச் சுதந்திரர்களாக ஆக்கிக் கொள்ள உதவும் கர்ம யோகம்-அதன் அங்கமான உழைப்பு-நம்மை அடிமையாக்கி விடக்கூடாது என்பதுதான். அததற்கு அததற்குள்ள முக்கியத்துவம் உண்டு. மரணப் படுக்கையில், "நான் ஆஃபீசில் இன்னும் அதிக நேரம் செலவழிக்கவில்லையே?" என யாரும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. (எங்கோ படித்த கருத்து!).

கடமை என்பது நம்மில் உள்ள மிருகத்தனத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது எனும் அளவில் நல்லதே. உலகத்துக்குக் கை கொடுக்க வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்வோம்! அதே நேரத்தில் "நான் என் கடமையைச் செய்கிறேன்" எனும் பிரக்ஞை வேண்டாம்! இயல்பாக, நமக்கு அமைந்த காரியங்களைச் செய்து கொண்டே போவோம்.

கடமை ஆற்றுவதில் முக்கியமான இன்னொரு மனோபாவம், ‘நல்லது’, ‘சரி’, ‘செய்ய வேண்டும்’ என நமக்குத் தோன்றுகிற காரியத்தை உடனே செய்து விட வேண்டும்!

சுவாமிஜி சொல்லுகிறார்:

"…எதிர்காலத்தில் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என நினைத்துப் பணி செய்பவன், ஒரு காரியத்தையும் சாதிக்க மாட்டான். இது நல்லது, உண்மையானது என ஒரு காரியத்தைப் புரிந்து கொண்டால் அதை உடனே செய்து விட வேண்டும்! எதிர்காலத்தில் என்ன நடக்கும், என்ன நடக்காது எனக் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? பலனைத் தர வேண்டியவன் கடவுள். அவன் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு நம் காரியத்தை நாம் செய்து கொண்டிருக்க வேண்டும். அவ்வளவே!…"

அடுத்தது, நமக்கு வாய்த்திருக்கிற பணி எதுவாய் இருந்தாலும் அதைச் சிறப்பாய்ச் செய்ய வேண்டும்! மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கிற பணிகள், அவர்கள் திறமை, பெறும் சிறப்புகள் ஆகியவற்றையெல்லாம் நினைத்து கருத்தழியக்கூடாது. ஒப்பு நோக்குப் பயணங்கள் போவது நம்மில் தாழ்வு மனப்பான்மையையும் பொறாமையையும்தான் உண்டாக்கும். அது நம் வளர்ச்சிக்குத் தடையாகும்.

நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், நாம் நல்லதொரு பணியை எடுத்துச் செய்யும்போது, எதிர்மறையாகப் பேசி, நம்மைத் தடுமாற வைக்கும் சக்திகள் சுற்றியே நிறைய இருக்கும்.

"வெட்டி வேலை! உன்னால் முடியுமா? ஆழம் தெரியாமல் காலை விடாதே! உன்னை விடப் பெரிய பெரிய பிரஹஸ்பதிகளெல்லாம் முயன்று தோற்றுப் போன விஷயம்," எனப் பல குரல் மன்னர்களாக இந்த எதிர்மறை உணர்வுகள் வடிவெடுக்கும். முதலில் ஏளனம்; பின்னர் எதிர்ப்பு; காரியம் முடிந்ததும் "செம அதிர்ஷ்டம்" என்று. இதெல்லாம் வெற்றியாளர்கள் பலரும் சந்தித்திருக்கிற விஷயம்தான். சர்ச்சில் சொன்னது போல Never, Never, Never Give up! நாமாக, சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுத்து, ஒரு காரியத்திலிருந்து விடுவித்துக் கொள்வது வேறு விஷயம்.

இத்தகைய பல தடைகளையும் சந்தித்து, எதிர்ப்புகளைக் கடந்து, நெருப்பாறுகளை நீந்தித்தான் சுவாமிஜி அரும்பெரும் பணி ஆற்றியிருக்கிறார்.

அவர் சொல்வது:

"…இவை அனைத்திலிருந்தும் பெறப்படும் ஒரு கருத்து, அனைத்து பலவீனங்களையும் கண்டனம் செய்வது. நமது சாஸ்திரங்கள் அனைத்திலும் உள்ள இந்தக் கருத்து, எனக்குப் பிடித்தது. வேதங்களைப் படித்தால், இந்த வார்த்தை அடிக்கடி வருவதைக் காண்பீர்கள். அச்சமின்மை. எதற்கும் அஞ்சேல்! அச்சம் என்பது பலவீனத்தின் அடையாளம். நாம் உலகத்தின் ஏளனத்துக்கும் கேலிக்கும் அஞ்சாமல் நம் கடமையைச் செய்து கொண்டு போக வேண்டும்."

(Ref: C.W Vol.VI – Page 455; Vol.I – Page 71; Vol.I Page 47).

 — பிறக்கும்

About The Author

1 Comment

Comments are closed.