விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (21)

4. கடமை என்பது செயலில் திறமை
 
4.5. செயல்கள் பிரார்த்தனையாக! பலன்கள் பிரசாதமாக!

கர்ம யோகம் என்பது அவரவர்கள் தத்தம் கடமையைச் செய்வது என்று பார்த்தோம்.

கொஞ்சம் உயரிய நிலையிலிருந்து பார்த்தோமானால், கடமையைப் பற்றிய கருத்தும் மாறுபடுவதைக் காண்போம். அரிய பெரிய செயல்கள் எந்தவித சுயநல நோக்கமும் இன்றிப் பணியாற்றும்போதே சாதிக்கப்படுகின்றன. ‘இது என் கடமை என்பதற்காக இதைச் செய்ய வேண்டும்’ என்கிற உணர்வின்றிச் செயல்படும் நிலைமை, கடமை உணர்வோடு பணியாற்றும்போதே சாத்தியமாகும். (இது ஒரு முரண்பாடாகத் தோன்றும். சிந்தித்தால் உண்மை தெளிவாகும்). பணியை வழிபாடாக, ஏன் அதை விட உயர்வாகக் கருதிச் செய்யும்போது, வேறெந்த நோக்கமும் இன்றிச் செயலைச் செயலுக்காகவே ஆற்றும் நிலைமை அமையும். அன்பு என்று கொண்டாலும் சரி, அறநெறி என்று கொண்டாலும் சரி, கடமை என்பதன் அடிப்படைத் தத்துவம் எல்லா யோகங்களிலும் ஒன்றேதான்!. மனிதனைக் கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்கு உயர்த்துவதுதான். ஆற்றல்களைக் கீழ்நிலையிலிருந்து விரயம் செய்யாமல், ஆன்மா உயர் நிலையில் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளச் செய்வதுதான். கீழான ஆசைகளைத் தொடர்ந்து மறுதலிப்பதாலேயே இது முடியும். கடமை புரிவதற்கு இந்தப் பயிற்சி தீவிரமாகத் தேவைப்படுகிறது!

கடமை கசப்பானதுதான். அன்பு என்கிற எண்ணெய்ப் பசையே அதை இனிமையாக்க வல்லது என்பதை முன்னமே பார்த்தோம். பெற்றோர் குழந்தைகளுக்காகவும், கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவருக்காகவும் ஆற்றும் கடமைகள் இனிமையாக அமைவது இந்த அன்பினாலேதான் என்கிறார் சுவாமிஜி. அண்மையில் பத்திரிகையில் படித்த ஒரு செய்தித் துணுக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு குழந்தையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போகிறாள் ஒரு சிறுமி. வழியில் பார்த்த ஒருவர் அவளைக் கேட்கிறார், "பாப்பா! உனக்குப் பாரமாக இல்லையா?" சிறுமி சொன்ன பதில், "அதெப்படி இருக்கும்? அவன் என் தம்பியாச்சே!"

கடமை என்பதைப் பற்றிய இன்னொரு கருத்தை சுவாமிஜி முன் வைக்கிறார். கடமை என்பது கூட நம்மைப் பந்தப்படுத்தி விட அனுமதிக்கக் கூடாது. கடமை என்பது பல பேருக்கு ஒரு மன உளைச்சல் தரும் காரியமே ஆகி விடுகிறது. நம்மை அது பிடித்து இழுத்துக் கொண்டு சென்று வாழ்க்கை முழுவதையும் ஒரு தவிப்பாகவே மாற்றி விடுகிறது. கோடைக் கால வெயில் மாதிரி நம்மைச் சுட்டெரிக்கிறது. கடமையின் பாமர அடிமைகளைக் கவனியுங்கள்; குளிக்க நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; எப்பொழுதும் ட்யூட்டிதான்! வெளியே போய் வேலை பார்க்கிறார்கள்! வீட்டுக்கு வந்ததும், அடுத்த நாள் வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்! கடமை அவர்கள் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அமுக்குகிறது! அவர்கள் கடமைக்கு அடிமை! ஓடிக் களைத்த குதிரை, தெருவில் விழுந்து மடிவது போல வேலையிலேயே அவர்கள் மரித்தும் விடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடமை என்பதைப் புரிந்து கொண்டிருப்பது இந்த லட்சணத்தில்தான்!

கர்ம யோகத்தின் அடிப்படை நோக்கம் சுதந்திரமாக இருப்பதே! அதற்குத்தான் கடமை உணர்வு துணைபுரிகிறது. ஆனால், தவறான புரிதலால் பலர் அதற்கு நேர்மாறாக, அடிமைகளாய் மாறி விடுகிறார்கள். அந்தோ பரிதாபம்!

சுவாமிஜி கூறும் சரியான மனோபாவம் என்ன?

உண்மையான கடமை என்பது பற்றற்று, சுதந்திரர்களாய்ச் செயல் புரிவது. அனைத்துச் செயல்களையும் கடவுளுக்குச் சமர்ப்பணமாக்குவது. நமக்கு இந்த வேலையைச் செய்ய வேண்டும் என அவன் பணித்திருப்பது அவன் ஆசியாகும். நம் பணியை நாம் செய்கிறோம். நன்கு செய்கிறோமோ, இல்லையோ, பலன் அவனுக்கே உரியது எனச் சமர்ப்பணம்! அமைதியாக இருங்கள்! சுதந்திரமாக இருங்கள்!

சுவாமிஜி குறிப்பிடுவது போன்ற கடமைக் குடியர்களை இப்போதெல்லாம் நிறையவே பார்க்கிறோம்! இவர்களுக்காக ‘வாழ்க்கை – வேலைச்’ சமநிலை பெறுவது எப்படி எனப் பயிற்சிகள் கூடக் கொடுக்கிறார்கள்!

செய்யும் வேலையைப் பிரார்த்தனை மனோபாவத்துடன் செய்ய வேண்டும்; பலனை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்! இதுதான் கர்ம யோகத்தின் மையக்கருத்து! கவிஞர் கண்ணதாசன் சொல்வது போல ‘கவலைப்படுவது கடவுளின் வேலை!’’

(Ref: C.W 1 – Page 66, 67, 103).

(பிறக்கும்)

About The Author