ஸண்டே ஸண்டே ஸீ பாத் (2)

"அடுத்த ஸண்டே நம்ம அலமேலுவை அவொ பொறந்தாத்துக்கு அனுப்பறதா இல்லை."

"வெரிகுட்!"

"நாங்க ரெண்டு பேரும் ஒங்காத்துக்கு வர்றதா யிருக்கோம்."

"வெரி வெரி குட்!"

"இன்னொரு நல்ல ந்யூஸ் நா சொன்னா நீங்க மூணு வெரி போடுவேள்."

"சொல்லுங்க."

"எங்கக் கம்ப்பெனில இப்ப ஒரு ரிஸர்ச் பண்ணிண் டிருக்கோம். இன்னும் ரெண்டு நாள்ல ரிஸல்ட் தெரிஞ்சிடும். ஸண்டே ஒங்க ஆத்துக்கு வர்றச்ச சொல்றேன். அது வரக்யும் ஸஸ்பென்ஸ்!"

****

அடுத்த ஞாயிற்றுக்கிழமைக் காலை, சொன்ன மாதிரியே ரெண்டு பேரும் வந்தார்கள். என்னுடைய உள்துறை மந்திரி கம் உணவு மந்திரி கம் தண்ணீர் மந்திரி கம் மஹாராணியை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

"….ஒரு சொட்டுத் தண்ணி வேஸ்ட் ஆக விடமாட்டா. துணி அலசற தண்ணி டாய்லட் கழுவுறதுக்கு உபயோக மாகும், பாத்திரம் கழுவுற தண்ணி மரங்களுக்கும் செடிகளுக்கும் போகும். நம்மக் குட்டிப்பயல் ஒரு வாட்டர் பிஸ்ட்டல் கேட்டான். அதுகூட வாங்கித்தரக் கூடாதுன்னு உத்தரவு வந்திருச்சுன்னா பாருங்களேன். ரெய்ன் வாட்டர் ஹார்வெஸ்ட்டிங் பண்றதுக்கு அரசாங்க உத்தரவு வர்றதுக்கு முந்தியே நாங்களாவே பண்ணிட்டோம். ஐடியா குடுத்தது நம்ம மஹாராணி தான். தண்ணிய ஸேவ் பண்றது மட்டுமில்ல. எல்லா விஷயத்லயுமே நம்ம ஆள் பெர்ஃபக்ட்" என்று நான் கர்வம் கொண்டதற்கு அடுத்தாத்துக் காரியிடமிருந்து ஒரு முணுமுணுப்பு வெளிப்பட்டது. அது நம்ம ஆள் காதிலும் விழுந்து தொலைத்து விட்டது.

"பெர்ஃபக்ட்னு யாருமே கெடையாது. ஏதாவது ஒரு கொறை இருக்கத் தான் செய்யும், நம்மக் கண்ணுக்குத் தெரியாது, அடுத்தவா கண்ணுக்குத் தெரியும்" என்று எழுந்த முணுமுணுப்புக்கு நம்ம வீட்டுக்காரி புன்னகையோடு விட்ட சவால் பதிலாய் வந்தது.

"ஒங்கக் கண்ல பட்டா சொல்லுங்களேன் பாப்போம்!"

காஃபி பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, கடல் குளிப்புக்குப் போயிருந்த நம்மப் பரிவாரங்கள் திரும்பி வந்தன.

"பசங்கள்ளாம் எங்க போய்ட்டு வர்றா?" என்கிற கேள்விக்கு "ஸீ பாத்க்குப் போய்ட்டு வாறோம் ஆன்ட்டி" என்று பதில் வந்தது.

"பசங்க ஆத்துல குளிக்க மாட்டாளா?"

"மெட்ராஸ்ல ஆறு ஏது ஆன்ட்டி? நாங்க கடல்ல தான் குளிப்போம். ஸண்டே ஸண்டே ஸீ பாத், பே ஆஃப் பெங்கால் எங்க தோஸ்த்!"

"இப்டியெல்லாமா ஒங்காத்ல தண்ணிய ஸேவ் பண்றேள்" என்று ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போனாள் அந்த அம்மா.

"சிறுதுளிப் பெருவெள்ளந்தானேம்மா" என்று அவளைத் தேற்றினாள் நம்ம ஆள்.

"ரெண்டாயிரத்தி இருபத்தஞ்சுல இப்ப இருக்கிற மாதிரி மூணு பங்குத் தண்ணிப் பஞ்சம் இருக்குமாம்" என்று எனக்குத் தெரிந்த ஒரு தகவலை முன்வைத்து விட்டுப் பக்கத்து ஆத்துக்காரருக்கு ஒரு ரிமைண்டர் போட்டேன்.

"சார், நீங்க என்னமோ ஒங்கக் கம்ப்பெனில ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறதா, அன்னிக்கி ஒரு ஸஸ்பென்ஸ் வச்சிங்களே."

"ஒங்கக் கொழந்தைங்களப் பாத்த சந்தோஷத்ல அந்த முக்யமான சங்கதியவே மறந்துட்டேன் பாருங்கோ" என்று அவர் ஆரம்பித்தார்.

"ஓவர் ஹெட் டாங்க்ல தண்ணியோட லெவலக் காட்றதுக்கு மீட்டர் ஒண்ணு டெவலப் பண்ணினோம் எங்கக் கம்ப்பெனில. ஸக்ஸஸ். ஆத்துக்குள்ளாரயே அந்த மீட்டரை வெச்சுக்காலம். கிச்சன்ல கூட வெச்சுக்கலாம். டாங்க்ல தண்ணி ஃபுல் ஆகறச்ச மீட்டர்ல அது தெரியும். ஓவர் ஃப்ளோ ஆறதுக்கு முந்தி நாம ஆஃப் பண்ணிரலாம். இந்த மீட்டர் பிரபலமாச்சுன்னா, மெட்ராஸ்ல, தமிழ்நாட்ல, இந்தியால, ஏன் ஒலகத்லேயே தினசரி வேஸ்ட் ஆகற தண்ணி எக்கச்சக்கமா மிச்சப்படும்."
"வெரி வெரி வெரி குட்!" என்றேன் நான்.

****

தம்பதிகள் விடைபெற்றுக் கொண்டு கிளம்புகிற போது, வீட்டுக் கதவின் உட்புறத்தில், கம்ப்யூட்டரில் டைப் பண்ணிக் கொட்டை எழுத்தில் ஒட்டப்பட்டிருந்த பட்டியல் அவர்கள் கண்ணில் பட்டது.

நம்ம தர்ம பத்தினி விளக்கம் தந்தாள்.

"அது வந்துங்க, எங்க வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் வெளிய போவாங்க. கடைசியா வெளிய போறவங்க வீட்டப் பூட்டிக்கிட்டுப் போறப்ப கடைப்பிடிக்க வேண்டியச் செக் லிஸ்ட் இது. பின்னால் பால்கனிக் கதவு மூடியிருக்கிறதா, லைட், ஃபேன், அயண் பாக்ஸ் எல்லாம் ஆஃப் பண்ணியிருக்கிறதா, கிச்சனில் கியாஸ் ஸ்டவ் அணைத்திருக்கிறதா, டிவியும் கம்ப்யூட்டரும் ஆஃப் பண்ணியிருக்கிறதா, ஃபிரிட்ஜ் கதவு மூடியிருக்கிறதா, ஃபோன் ரிஸீவர் சரியாய் வைக்கப்பட்டிருக்கிறதா…."

எல்லாவற்றையும் பொறுமையாய்க் கேட்டு விட்டுப் பக்கத்து வீட்டம்மா, "இதுல ரொம்ப முக்யமான ஒரு ஐட்டம் விட்டுப்போன மாதிரியிருக்கே" என்று சிரித்தாள்.

"?"

"தண்ணிக் குழாய் எல்லாம் மூடியிருக்கிறதான்னு எழுத விட்டுப் போயிருக்கே?"

"அது, வந்து…." என்று மென்று விழுங்கினாள் நம்ம ஆள்.

"தண்ணிக் குழாய் தொறந்திருந்தாத்தான், தண்ணி விழற சத்தம் கேக்குமே…."

"கேக்கும்தான். ஆனா டாங்க்ல தண்ணியில்லாத சமயம் யாராவது குழாயத் தொறந்திருப்பா. தண்ணி வராது. அப்பறம் மூட ஞாபகமில்லாமப் போகும். அப்பறம் டாங்க்ல தண்ணி ஏத்தறச்ச, இங்கே தண்ணி கீழே போயிண்டே இருக்கும். சத்தங்கேட்டு நீங்க குழாய மூடிடுவேள் தான். ஆனாலும் போன தண்ணி போனது தானே. சிறு துளி பெரு வெள்ளமில்லியோ?"
நம்ம மஹாராணி ஓரக் கண்ணால் என்னைப் பார்த்தாள்.

நான், அடுத்த ஆத்துக்கார அலமேலுவைப் பார்த்தேன்.

"வெரி வெரி வெரி வெரி குட்!" என்றேன்.

(முடிந்தது)

About The Author

1 Comment

  1. A. Ravi

    என் இனிய நண்பர் திரு கோரி அவர்களே,

    நல்ல முறையில் எழுத பட்ட கதை. உண்மைதான்…யாருமே பெர்பெக்ட் என்று சொல்லிக் கொள்ள முடியவே முடியாது. எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும்.

    நன்றி நண்பரே!

    ரவி.

Comments are closed.