அமாவாசையும் அப்துல்காதரும் (1)

ஒரிஜினல் ஹல்வாவுக்கும் அதைவிட ஒரிஜினல் தமிழுக்கும் பேர் போன திருநெல்வேலிச் சீமையிலே சின்னதாய் ஒரு மாஜி சமஸ்தானம். சமஸ்தான மஹாராஜாவுக்கு முத்து முத்தாய் மூணு வாரிசுகள்.

முருகேச பாண்டியன், கணேச பாண்டியன், ஹரிஹரப் பாண்டியன்.

அண்ணன்மார் ரெண்டு பேரையும் ஓரங்கட்டி விட்டு சமஸ்தானத்தை சாதூர்யமாய்க் கைப்பற்றிக் கொண்ட சின்னவர் ஹரிஹரப் பாண்டியன் திடீரென்று காணாமல் போனார். மூத்த பாண்டியர்கள் ரெண்டு பேர் மேலும் சந்தேகம். ஆனால் தடயம் எதுவும் கிடைக்க வில்லை. எதையும் நிரூபிக்க முடியவில்லை.

கண்ணீரோடும் கனத்த நெஞ்சோடும் ஹரிஹரனின் ராணி காயத்ரி தேவி சமஸ்தானப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.
காயத்ரி தேவிக்கு கனம் நெஞ்சில் மட்டுமல்ல, முழு உடம்பும் கனம்தான்.

கணவரை இழந்த சோகம் அடங்கிப் போனபின், உடம்பின் கனத்தை இன்னுங் கொஞ்சம் கூட்டிக் கொண்டாள். ரெண்டே முக்கால் கிலோ தங்க நகைகளைக் கழுத்திலும் கைகளிலும் தன்னந்தனியாய்ச் சுமக்க, அப்படியொரு ஹெவிவெய்ட் சரீரம் தேவையாய்த்தானிருந்தது.

காயத்ரி தேவியின் நாக்குக்கு ருசியாய் சமைத்துப் போட பட்லர் மாணிக்கம். அவனுடைய உதவிக்கு சிவகாமி.
சிவகாமிக்கும் மாணிக்கத்துக்கும் ஒத்துப்போகவில்லை.

காயத்ரி தேவியிடம் சிவகாமியைப் பற்றி வத்தி வைத்து அவளை அரண்மனையிலிருந்து அகற்றி விட்டான் மாணிக்கம். சிவகாமியின் இடத்துக்கு, போன மாசந்தான் ஒரு புது உதவி பட்லர் வந்தான், சிவகாமியைப் போலவே அனாதை, ஆதரவற்றவன் என்கிற தகுதிகளோடு.

அப்துல்காதர்.

அப்துல்காதருக்கும் மாணிக்கத்துக்கும் நன்றாய் ஒத்துப்போனது. ரெண்டுபேரும் சேர்ந்து வகை வகையாய் ஆக்கிப் போட்டு காய்த்ரி தேவியின் சுற்றளவு கொஞ்சமும் குறைந்து விடாமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்கள்.

அன்றைக்கு ராத்திரி, வழக்கம் போல காயத்ரி தேவிக்குச் சப்பாத்தியும் சிக்கனும், இடியாப்பமும் பாயாவும், முட்டை ஆப்பமும் தேங்காய்ப் பாலும் பரிமாறிக் கொண்டிருந்த மாணிக்கத்தைப் பாசத்துடன் பார்த்துப் பக்கத்தில் அழைத்தாள் காயத்ரி தேவி.
"இந்தாடா மாணிக்கம், ஒன்ட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இந்தப் புதுப் பையனுக்குக் கிச்சன்ல ஏதாவது வேல சொல்லி அனுப்பிச்சிட்டு நீ மட்டும் இங்ஙனயே இரு."

ராணியம்மா என்றைக்குமில்லாமல் இன்றைக்குத் தன்னிடம் என்ன முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறாள் என்கிற புதிரோடு மாணிக்கம், அப்துல்காதரை உள்ளே அனுப்பி விட்டு, ராணியம்மாவின் முன்னே வந்து பணிவாய் நின்றான்.
குரலைத் தணித்து காயத்ரி தேவி பேசினாள்.

"புதுப் பையன் உள்ள போய்ட்டானா?"

"போய்ட்டான் ராணியம்மா."

"நம்ம சிவகாமி இங்கயிருந்தாளே, இப்ப அவ எங்க இருக்கான்னு தெரியுமா?"

"அவ இப்ப எதுக்கு ராணியம்மா?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுடா."

"தெரியும் ராணியம்மா. திருநவேலி டவுன்ல நெல்லையப்பர் கோவில்ப் பக்கம் பூ வித்துட்டிருக்கப்ப ரெண்டு வாட்டி பாத்திருக்கேன்."

"அவ குடும்பம்?"

"அவளுக்கேது குடும்பம் ராணியம்மா? அனாதிக் கழுத தான அது. புள்ள உண்டாகலன்னு புருஷனும் வெரட்டி விட்டுட்டான். அனாதியாத்தான அவ அரண்மனக்கி வந்தா."

"அப்பாடி, அதான் எனக்குத் தேவ. நீ இப்ப என்ன பண்ற, நாளக்கிக் காலைல திருநவேலிக்கிப் போயி அந்த சிவகாமியப் பாத்துப் பேசி இங்கக் கூட்டிட்டு வாற."

"ஐயைய, என்னத்துக்கு ராணியம்மா?"

"சொன்னதச் செய்டா. இந்தப் புதுப்பையன்ட்ட சொல்லி நாளக்கி லஞ்ச்க்கு ஸ்பெஷல் ஐட்டம் ரெண்டு மூணு செய்யச் சொல்லிட்டு நீ திருநவேலிக்கு போ. சிவகாமிக்கு நாளக்கி இங்க விருந்து."

மாணிக்கத்துக்கு ஒண்ணும் புரியவில்லை. சிவகாமி ஒரு ராங்கிக்காரி. இவனுக்குக் கீழ்ப்படியாதவள். அவளை எதற்கு ராணியம்மா அரண்மனைக்குக் கூப்பிடுகிறாள்? அதுவும் விருந்துச் சாப்பாடாம்! அழுத்திக் கேட்டால் ராணியம்மா எரிந்து விழுவாள். வேண்டாம். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

ராணியம்மா சாப்பிட்டு முடித்துக் கை கழுவும் வரை மாணிக்கம் வாயைத் திறக்கவில்லை. பிறகு மெல்ல வாயைத் திறந்தான்.

"அப்ப ராணியம்மா, நாளக்கிக் காலைல நாம்ப் போய்…" ராணியம்மா கொஞ்சம் கீழே இறங்கி வந்து மாணிக்கத்தை ஆமோதித்தாள்.

"ஆமா, காலைல நீ போய் சிவகாமியக் கூட்டிட்டு வந்துரு. அம்பாஸடர நீயே எடுத்துட்டுப்போ. டிரைவர் வேணாம். இங்க பார், நீ போறதும் வாறதும் அவளக் கூட்டிட்டு வாறதும் யாருக்கும் தெரியக்கூடாது, என்ன?"

அடுத்த நாள் காரைப்போட்டுக் கொண்டு மாணிக்கம் திருநெல்வேலி டவுனுக்குப்போய், சிவகாமியை சமாதானப் படுத்தி அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு வந்தான். சிவகாமியைப் பார்த்ததும் ராணியம்மாவுக்கு சந்தோஷமோ சந்தோஷம், என்னமோ ஒரு புதையல் கிடைத்து விட்ட மாதிரி. அவளை எதிர் கொண்டு வரவேற்றாள்.

‘எப்படி எளச்சுப் போட்டியே சிவகாமி’ என்று வருத்தப் பட்டாள்.

சிவகாமியுடைய ஒட்டுப் போட்ட அழுக்குப் புடவை அந்த அரண்மனைச் சூழலுக்கு ஒவ்வாதிருந்தாலும் ராணியம்மா முகஞ்சுளிக்காமல் அவளைக் கையைப் பிடித்து வாஷ்பேசினுக்கு வழி நடத்திச் சென்றாள்.

முகம், கை அலம்பிக்கொண்டு வந்தவளை சாப்பாட்டு மேஜைக்கு முன் அமர்த்தினாள். மாணிக்கமும் அப்துகாதரும் கொண்டு வந்த ஐட்டங்களைத் தன் கையால் தானே சிவகாமிக்குப் பரிமாறி அனைவரையும் அசத்தினாள். திக்குமுக்காடிப்போன சிவகாமி, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ராணியம்மாவிடமிருந்து ஆறுதல் வார்த்தைகள் வந்தன.

(தொடரும்)

About The Author